Published : 09 Feb 2020 12:19 PM
Last Updated : 09 Feb 2020 12:19 PM

நிகரெனக் கொள்வோம் 03: மாலாவின் கேள்விகள்

சாலை செல்வம்

பிரசித்திபெற்ற தனியார் பள்ளியில் படிக்கும் ஒன்பதாம் வகுப்பு மாணவி மாலா. தேசிய விளையாட்டில் கலந்துகொள்ள சென்னை செல்கிறாள். அவள் விளையாடும் மேசைப்பந்து விளையாட்டில் கலந்துகொள்ள இருவர் தேவை. துணை ஆட்டக்காரருடன் சேர்த்து மூவர் கட்டாயம். மாலாவின் பெற்றோர் தனிப்பயிற்சிக்கு அனுப்புகின்றனர்.

பள்ளியின் மூலம் நடக்கும் போட்டியில் கலந்துகொள்வது என்பது முக்கியம். பள்ளியில் மேசைப்பந்துக்கான உபகரணங்கள் இருந்தாலும் பயிற்சி அளிப்பதில்லை. மாணவியின் பிரச்சினை, தன்னைத் தவிர தனிப்பயிற்சிக்குச் செல்லும் மாணவிகள் யாரும் இல்லை என்பது. அதைக் கடக்க மாணவிகளிடம் தனித்தனியாகப் பேசுகிறாள். ஆர்வமுள்ள மாணவிகளைக் கண்டறிந்து சிலருக்குப் பயிற்சியளிக்கிறாள். ஆசிரியர்களும் தலைமையாசிரியரும் அதை ஊக்குவிக்கின்றனர். மாலா என்னிடம் பகிர்ந்துகொன்டதை இங்கே குறிப்பிடுகிறேன்.

“அத்தை, ஒவ்வொரு பெண்ணிடமும் போய் ‘நீ விளையாட வருகிறாயா’ என்று கேட்பேன். விளையாடினால் கறுத்துவிடுவேனாம், என் அம்மா அனுப்ப மாட்டார், அப்பா அனுப்ப மாட்டார், ஆண் பிள்ளைகளுடனா விளையாடுவது என்று ஒவ்வொருவரும் ஒரு காரணத்தைச் சொன்னார்கள். அம்மாவிடம் கேட்டேன்; வயசுக்கு வந்துவிட்டால் என்ன செய்வதென்று சொன்னார்களாம் ஒரு வீட்டில். படிக்கத்தான் பள்ளிக்கூடம் விளையாட அல்ல என்றும் சொல்லியிருக்கிறார்கள். எப்படித்தான் இப்படியெல்லாம் சொல்கிறார்களோ? எல்லோருமே படித்தவர்கள். ஆனால், என் விடாமுயற்சியால் மூவருக்குப் பயிற்சியளித்தேன். அப்படியும் ஒருவரை மட்டுமே அழைத்துச்செல்ல முடிந்தது.

அதற்காகக் கெஞ்சி, சிறப்பு அனுமதி பெற்றோம்” என்று மூச்சுவிட்டாள். விளையாட விரும்பும் மாணவியின் அனுபவத்தின் ஒரு சிறு பகுதிதான் இது. தன் நியாயமான வேண்டுதல்களைக் காதுகொடுத்துக் கேட்கும் நபரிடம் எல்லாவற்றையும் சொல்லிவிட வேண்டும் என்ற உணர்வு இயல்பானதுதானே! சொல்லும்போதே நியாயத்தையும் சேர்த்து எதிர்பார்த்தாள். தனக்கான நியாயங்கள் அடுத்த நிலையில் ஆண், பெண் என்பதாக மாறுகிறது. “அத்தை இன்னொன்றைச் சொல்லட்டுமா?” என்று தொடர்ந்தாள்.

“நாங்கள் சென்னை செல்லும் நாள் வந்தது. எங்கள் ஆசிரியருடன்தான் சென்றோம். எங்களுடன் வந்த ஆண் மாணவர்கள் நாங்கள் ஆசிரியருடன் செல்கிறோம் என்பதையெல்லாம் மறந்துவிட்டனர். எந்த ஹோட்டலில் தங்கலாம், என்ன சாப்பிடலாம் எனத் திட்டமிட்டனர். தோற்றுவிட்டால் டக்குன்னு வெளியே கிளம்பி அதைக் கொண்டாடலாம் என பேசிக்கொண்டனர்.

ஆண் பிள்ளைகள் என்பதால் ஒரு பள்ளிக்கட்டுப்பாடுகூட அவர்களுக்குத் தெரியாதா? ஹோட்டலில் தங்குவது, தின்பது என்றால் எவ்வளவு பணம் வேண்டும்? ஏது அவர்களுக்கு?” என்று பேசிக்கொண்டே வந்தவள், கடைசியாக, “இவர்களையெல்லாம் பத்து ஆண்டுகள் வீட்டுக்குள் இரு என்று வைக்க வேண்டும்” என்று கூறி ஆறுதலடைந்தாள்.

இது சாதாரண நிகழ்வையொட்டிய உரையாடலின் ஒரு பகுதிதான். படித்த பெற்றோரைக் கொண்ட, பொருளாதாரச் சிக்கல்கள் இல்லாத குடும்பப் பின்னணியில் வளரும் பெண் குழந்தையின் அனுபவமும் கேள்வியும்தான் இவை. மாலாவின் கேள்விகளுக்குப் பொறுப்பெடுக்க வேண்டிய அவசியம் நம் ஒவ்வொருவருக்கும் உள்ளது. நாம் ஆணாகவோ ஆசிரியராகவோ பக்கத்து வீட்டுக்காரராகவோ இருக்கலாம். ஆனால், நமக்கும் பொறுப்பு இருக்கிறது.

நாம் உணர வேண்டியவை

பெண் குழந்தை பருவமடையும் வயதில் இருக்கலாம், செக்கச்செவேல் என்ற தோலைக் கொண்டிருக்கலாம், படிப்பில் முதல் இடத்தைப் பெறுபவளாக இருக்கலாம், படிப்பே வராதவளாக இருக்கலாம். ஆனால், இதையெல்லாம் காரணமாக வைத்து பெண் குழந்தைகளுக்கு விளையாட்டை நாம் மறுக்கலாமா? அப்படி மறுப்பதற்கான நியாயங்களை மறுபரிசீலனைக்கு உட்படுத்த வேண்டாமா? விளையாட வேண்டும் என்பது பெண் குழந்தைகளின் இயல்பான உணர்வு. விளையாட்டு அவர்களுக்குக் கூட்டு வாழ்க்கை அனுபவத்தை வழங்குகிறது. வலிமையான உடல், மனநிலையை உருவாக்க உதவுகிறது.

ஆரோக்கியத்தைத் தருகிறது. எல்லாவற்றையும்விட அவர்களைத் திறனுடையவர்களாக்குகிறது. ஆண் குழந்தைகள் விஷயத்துக்கு வருவோம். அவர்களுக்கு நாம் வழங்கியுள்ள இந்தச் சுதந்திர மன நிலை எப்படிப்பட்டதாக இருக்கிறது? ஆண் குழந்தைகளின் செயல்பாடுகள் எப்படி இருக்க வேண்டும், எதனால் இப்படி இருக்கிறது? ஆசிரியர்களாக, அண்ணன்களாக, நடிகராக, அம்மாவாக, அப்பாவாக அவர்களுக்கு நாம் செய்ய வேண்டியது என்ன என்பதைப் பற்றி யோசிப்பதும் செயல்படுவதும் அவசியமானதுதானே? “இதையெல்லாம் நாம என்ன செய்ய முடியும்? பெற்றோர் அப்படி வளர்க்கிறார்கள்” என்ற பதில் ஆண் குழந்தைகள் மேல் நமக்குள்ள பொறுப்பற்றதனத்தையே காட்டுகிறது. அது நமக்கும் தெரியும். பதிலைக் கடப்பது என்றால் என்ன? ஆண் குழந்தை என்றாலும் பொதுவிதிகளுக்கு உட்பட வேண்டும். சக பெண் விளையாட்டுத் தோழமைகளுடன் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்ன உரையாடுவது, முன்மாதிரியாக இருந்து காட்டுவது என்றெல்லாம் செயல்பட வேண்டும்.

மாற்று முயற்சிகள்

எனக்குத் தெரிந்த விளையாட்டு ஆசிரியர் ஆண், பெண் குழந்தைகளை இணைத்து விளையாடவைக்கிறார். இருபாலரும் இணைந்து விளையாடுவது ஆரோக்கியமான உடல், மன வளர்ச்சிக்கு உதவுகிறது எனப் பெற்றோரிடம் எடுத்துரைப்பார். அதற்கான பொறுப்பையும் அவர் எற்றுக்கொள்கிறார். உடை, உணவுப் பழக்கம், நட்பு, மாதவிடாய் போன்றவை பற்றித் தொடர்ந்து பேசிவருகிறார். அது வகுப்பறைப் பாடமாக இல்லாமல் வாழ்வியலாக இருக்க உதவுகிறார்.

சென்னையில் உள்ள ‘சாவித்ரிபாய் பெண்கள் குழு’வினர் தொடர்ந்து மைதானத்துக்குச் செல்வதையும் இணைந்து மாரத்தான் ஓடுவதையும் வழக்கமாக வைத்துள்ளனர். மைதானங்களில் ஆண்களுக்கு இணையாகப் பெண்களின் எண்ணிக்கை உயர உரையாடலில் ஈடுபடுகின்றனர். இது போன்ற பழக்கங்களும் முயற்சிகளும் பரவலாக ஆக்கப்படும்போது பெண்கள் நம்மைப் போன்றவர்கள் என்பதை ஆண் குழந்தைகள் உணர முடியும். மாலாவின் கேள்வியை முறையான பதிலுடன் எதிர்கொள்ள முடியும்.

(சேர்ந்தே கடப்போம்)
கட்டுரையாளர், கல்விச் செயற்பாட்டாளர்.
தொடர்புக்கு: saalaiselvam@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x