Published : 09 Feb 2020 12:19 PM
Last Updated : 09 Feb 2020 12:19 PM

வானவில் பெண்கள்: ‘ஊறுகாய்’ ராணி

எஸ்.கே. ரமேஷ்

உலக அளவில் ஊறுகாய் பயன்படுத்தப் பட்டாலும் தமிழ்நாட்டு ஊறுகாயின் சுவைக்கு இணையாக ஒன்றைச் சொல்ல முடியாது. ஒரு துண்டு ஊறுகாய் இருந்தால் போதும், வேகமாகச் சாப்பிட்டு முடித்துவிடலாம். ஊறுகாயின் மகத்துவத்தை அறிந்துகொண்ட உமாராணி, தன் கடின உழைப்பால் ஊறுகாய் சாம்ராஜ்யத்தையே உருவாக்கியிருக்கிறார்!

கிருஷ்ணகிரி மாவட்டத்தின் கோட்டப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த உமாராணிக்கு, போலியோ பாதிப்பின் காரணமாக ஒரு கால் செயலிழந்துவிட்டது. அதை ஒரு குறையாக நினைத்து முடங்கிவிடாமல் மன உறுதியுடன் வளர்ந்தார். “பத்தாம் வகுப்புவரை படித்தேன். பிறகு தமிழ்நாடு அரசு தையல் பயிற்சி மையத்தில் சேர்ந்து தையல் தொழிலைக் கற்றுக்கொண்டேன். பாரூர் அரசுப் பள்ளியில் 150 ரூபாய் மாதச் சம்பளத்துக்கு தையல் ஆசிரியராக வேலை செய்தேன்.

பணி நிரந்தரம் இல்லாததால், ஏதாவது சுயதொழில் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் நாளுக்குநாள் வளர்ந்துகொண்டே இருந்தது. என் விருப்பத்தை அம்மாவிடம் சொன்னேன். அவரும் அங்கீகரித்தார். தெரியாத தொழிலைச் செய்வதைவிட, பாரம்பரிய முறையில் பிரமாதமாக ஊறுகாய் செய்யும் முறையை அம்மாவிடமே கற்றுக்கொண்டு, ஊறுகாய் வியாபாரம் செய்ய முடிவெடுத்தேன்” என்று தொழில் ஆரம்பித்த காலத்தை நினைவுகூர்கிறார் உமாராணி.

ஊறுகாய் பயிற்சியுடன் வியாபார உத்திகளையும் கற்றுக்கொண்ட பிறகு உமாராணிக்குத் தொழில் ஆரம்பிப்பதில் இருந்த தயக்கம் விலகியது. நம்பிக்கையுடன் தன் பயணத்தை ஆரம்பித்தார். “தொழிலை ஆரம்பித்துவிட்டாலும் வெற்றி அவ்வளவு எளிதாகக் கிடைக்கவில்லை. எத்தனையோ தடைகள் வந்தன. எதைக் கண்டும் அஞ்சாமல், சோர்ந்து போகாமல் என் பயணத்தைத் தொடர்ந்தேன். குழந்தைகள் பிறந்தனர்.

வீட்டையும் தொழிலையும் கவனிக்க அதிக ஆற்றல் தேவைப்பட்டது. பெரிய அளவில் தொழிலை எடுத்துச் செல்ல, வங்கிக் கடனுக்கு விண்ணப்பித்தேன். ஆனால், கிடைக்கவில்லை. 2002-ம் ஆண்டு மாற்றுத்திறனாளிகளுக்கும் கடன் வழங்கலாம் என அரசு உத்தரவு வெளியானது. 1 லட்சம் ரூபாயைக் கடனாகப் பெற்று, தொழிலை முன்னேற்றத்துக்குக் கொண்டு சென்றேன்” என்று உமாராணி சொல்லும்போது குரலில் நம்பிக்கை மிளிர்கிறது.

பதப்படுத்தும் நுட்பம்

இயற்கை முறையில் தயாரிக்கப்படுவதால் உமாராணியின் ஊறுகாய் தனிச் சுவையாகவும் மணமாகவும் இருக்கிறது. எலுமிச்சை, நார்த்தங்காய், மாங்காய், தக்காளி, பூண்டு, இஞ்சி, வாழைப்பூ, வெங்காயம், வாழைத்தண்டு, பச்சை மிளகாய் என்று விதவிதமாக ஊறுகாய்களைச் செய்து அசத்துகிறார்.

“எலுமிச்சை, நார்த்தங்காய் போன்றவை ஆண்டுக்கு இரண்டு பருவங்கள் கொண்டவை. மாங்காய்க்கு ஒரே ஒரு பருவம்தான். பருவத்துக்கு ஏற்ப கிடைக்கும் காய்களைக் குறைந்த விலைக்கு வாங்கி, உப்பு சேர்த்து, சூரிய ஒளியில் இயற்கையாகவே பதப்படுத்தி, பேரல்களில் அடைத்துவிடுவேன்.

இவற்றை ஓராண்டு வரை பயன்படுத்த முடியும். பதப்படுத்திய காய்களில், கடுகு, வெந்தயம், பெருங்காயம், சீரகம், எண்ணெய் போன்றவற்றைச் சரியான அளவில் கலந்து தயாரிப்பதால் எங்கள் ஊறுகாயைச் சுவைப்பவர்கள் ருசிக்கு அடிமையாகிவிடுவார்கள். நிறத்தை வைத்தே ஊறுகாயின் சுவையைக் கணித்துவிடலாம். அதனால் வீட்டிலேயே மிளகாய்ப் பொடியைத் தயாரித்துக்கொள்கிறோம்.”

உமாராணி

விற்பனை...

‘உமா சிவா’ ஊறுகாய் மகளிர் சுய உதவிக் குழுக்கள், அரசு அலுவலக ஊழியர்கள், சுற்றுவட்டாரக் கிராமங்களில் விற்பனை செய்யப்படுகிறது. ஊறுகாயைச் சந்தைப்படுத்தும் பொறுப்பை இவரது மகன்கள் எடுத்துக்கொண்டுள்ளனர். வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால் புகழும் லாபமும் பெற்றுவருகிறார் உமாராணி.

“நான் மாற்றுத்திறனாளி என்பதால் எப்படி வாழப் போறேன் என்ற கவலை என் அம்மா வுக்கு இருந்தது. நான் தொழில் தொடங்கப் போறேன் என்றதும் உன்னைப் போல பல பெண்களுக்கும் வேலை கொடுக்க வேண்டும் என்பதற்காகவே ஊறுகாய் செய்முறையைக் கற்றுக் கொடுக்கிறேன் என்றார் அம்மா.

அவர் நம்பிக்கை வீண் போகவில்லை. நானும் உயர்ந்து, என்னைப் போன்ற 30 பெண்களின் வாழ்க்கையையும் உயர்த்தி வருகிறேன் என்பதில் நிறைவாக இருக்கிறேன். எனக்கு உதவியாக குடும்பமே இருக்கிறது. மகன்கள் உணவு பதப்படுத்தும் கல்வியைப் படித்திருப்பதால், ஊறுகாய் தயாரிப்பில் பெரிய அளவில் உதவியாக இருக்கிறது.

தற்போது முன்னனி நிறுவனங்களிடமிருந்தும் ஆர்டர்கள் கிடைத்துவருகின்றன. இது என்னை ஊக்கப்படுத்தியுள்ளது. எங்கள் பகுதியில் தேங்காய் விளைச்சல் அதிகமாக இருப்பதால், தேங்காய் ஊறுகாய் தயாரித்தேன். வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் தேங்காய் ஊறுகாய்க்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.

நீண்ட காலம் வைத்துப் பயன்படுத்தும் விதத்தில் தக்காளி, வத்தல் குழம்பு, புளித் தொக்கு போன்ற புதிய முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளேன். நம்பிக்கையும் துணிச்சலும் உழைப்பும் இருந்தால் என்னைப் போல் தொழில்முனைவோராக ஆகலாம்” என்று சொல்கிறார் 60 வயது உமாராணி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x