Published : 07 Feb 2020 01:45 PM
Last Updated : 07 Feb 2020 01:45 PM

ஆயிரம் காதுகளுடன் காத்திருக்கிறேன்! - தமன் நேர்காணல்

கடந்த 2009-ல் வெளியான ‘சிந்தனை செய்’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுக மானவர் எஸ்.தமன். இதுவரை 118 படங்களுக்கு இசை அமைத்திருக்கிறார்; 40 இசை ஆல்பங்கள் வெற்றிபெற்றவை. ‘பின்னணி இசையிலும் வலுவானவர்’ என்று பெயர் பெற்றிருக்கும் தமன், தற்போது தமிழ்ப் படங்களைவிட அதிகமாகத் தெலுங்குப் படங்களுக்கு இசையமைத்துக் கொண்டிருப்பவர்.

எப்போதும் இசை வேலைகள் என்று இருக்காமல், இசை வேலைகளுக்கு நடுவே, தன் நட்சத்திர நண்பர்களுடனும் உற்சாகமாக கிரிக்கெட் விளையாடும் மனது கொண்டவர் என தமனைப் பற்றிப் பேசுவதற்கு நிறையவே இருக்கிறது... தெலுங்குப் படவுல கில் ‘பாகுபலி’ படத்துக்குப் பின் அதிக வசூல் குவித்த படம் என்று கொண்டாடப்பட்டுவரும் ‘அலா வைகுந்தபுரம்லோ’ படத்துக்கும் தமன்தான் இசை. அவரிடம் உடையாடியதிலிருந்து ஒரு பகுதி..

‘அலா வைகுந்தபுரம்லோ’ படம் போன்ற ஒரு ஹிட்டைத் தமிழில் தரவில்லை என்ற வருத்தமுள்ளதா?

தமிழில் யாருமே நம்ப மாட்டேன் என்கிறார்கள். விஜய், அஜித் தொடங்கி அனைத்துப் பெரிய கதாநாயகர்களையும் சந்தித்து விட்டேன். சிம்பு, ஆர்யா இருவரையும் தவிர என்னை யாருமே நம்புவதில்லை. ‘ஈரம்’, ‘மகாமுனி’, ‘வாலு’, ‘ஒஸ்தி’ எனப் படத்தின் பாடல்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

யுவன், இமான், அனிருத் என அனைவருமே கடும் போட்டி நிறைந்த உலகத்தில் ஓடிக்கொண்டிருக்கி றார்கள். எனக்கும் இந்த மாதிரியான போட்டிக் களத்தில் ஓடத்தான் ஆசை. தமிழில் நல்ல வாய்ப்புக்காகக் காத்திருக்கிறேன். விஜய், அஜித் எல்லாம் எப்போது போன் பண்ணுவார்கள் என ஆயிரம் காதுகளுடன் காத்திருக்கிறேன். நான் இசையமைத்த தமிழ்ப் படங்கள் யாவும், ரசிகர்கள், விமர்சகர்கள் மத்தியில் வரவேற்புப் பெற்றவைதாம். ஆனால், பெரிய நடிகர்கள் அளவுக்குப் போய்ச் சேரவில்லை.

தெலுங்கில் அதிகப் படங்களுக்கு இசையமைப்பதால், தமிழில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்று சொல்லலாமா?

இல்லை. என் ஸ்டுடியோவே சென்னை யில்தான் இருக்கிறது. சிவகார்த்திகேயன், கலையரசன், அசோக் செல்வன், சாந்தனு, காந்த் இவர்களுடன் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கிறேன். அனைத்துத் தமிழ் தயாரிப்பாளர்களையும் தெரியும். ஜீவா, ஆர்யா, அதர்வா, சந்தானம் ஆகிய நடிகர்களுடைய படம் பண்ணிட்டேன். பெரிய நடிகர்களுடைய படம் ஏன் அமையவில்லை எனத் தெரியவில்லை. விஷால் - ஆர்யா இணைந்து ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் நடிக்கும் படத்துக்கு இசையமைக்கிறேன். அதற்குப் பிறகு நிறைய வாய்ப்புகள் வரும் என நம்புகிறேன்.

உங்களுடைய பாடல்களுக்காக இப்போது தெலுங்கு இயக்குநர்கள் காத்திருப்பதாகச் சொல்கிறார்களே?

அப்படியெல்லாம் இல்லை. ‘அலா வைகுந்தபுரம்லோ’ படம் வெளியாவதற்கு முன்பே மகேஷ் பாபு படம், ரவிதேஜா படம் ஆகியவற்றை ஒப்புக்கொண்டேன். இந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறகு வந்த படங்கள் அல்ல அவை. நானியுடன் ஒரு படம் மட்டுமே ஒப்பந்தமானேன். அந்தப் படம் பெரிய வெற்றியடைந்ததால் அதன் இயக்குநர் ஷிவ் நிர்வாணா - நானி இணையும் படத்துக்கு இசையமைக் கிறேன். முன்பு மாதிரி தெலுங்குப் படங்களின் இசை இப்போது இல்லை. அனைத்திலுமே பெரிய ரசனை மாற்றம் வந்துவிட்டது.

ஒரே நேரத்தில் பல படங்களுக்கு எப்படி இசையமைக்கிறீர்கள்?

இந்தத் துறைக்கு வந்து 25 ஆண்டு களாகிவிட்டன. அப்பா இறந்தவுடன் 9 வயதில் வந்தேன். எஸ்.பி.பி., கங்கை அமரன், சிவமணி ஆகியோருடன் கச்சேரியில் வாசிக்கத் தொடங்கினேன். இசை என்றால் அவ்வளவு பைத்தியம். இசை மீதிருக்கும் ஆர்வத்தைப் பார்த்துத் தான் ஷங்கர்கூட ‘பாய்ஸ்’ படத்தில் வாய்ப்பு கொடுத்தார். நிறைய இசை யமைப்பாளர்களுடன் இணைந்து 900 படம் வரை பணிபுரிந்திருக்கிறேன். 7,000 மேடை கச்சேரி செய்துள்ளேன். இவை அனைத்திலும் கிடைத்த அனுபவத்தால் மட்டுமே, இப்போதும் எத்தனை படங்கள் வந்தாலும் இசையமைக்க முடிகிறது.

யுவன், அனிருத் தொடங்கி அனை வருமே கச்சேரியில் வாசித்ததால் மட்டுமே இப்போதுவரை நீடிக்க முடிகிறது. மக்களுக்கு என்ன பாட்டுப் பிடிக்கும் என அவர்களுக்குத் தெரியும். ஏ.ஆர்.ரஹ்மானால் ‘சின்ன சின்ன ஆசை’ பாடலும் பண்ண முடிகிறது, ‘ஆளப்போறான் தமிழன்’ பாடலும் பண்ண முடிகிறது. அதற்குக் காரணம் கச்சேரியில் வாசித்தது தான். அப்படி வாசித்தால் மட்டுமே வித்தியாசமான களங்களில் பாடல்களைக் கொடுக்க முடியும். இசையமைப்பாளராக ஆவதற்கு முன் சென்னையில் நடைபெற்ற பல கச்சேரிகளில் வாசித்திருக்கிறேன். அந்தக் கச்சேரிகள் தாம் எங்களைக் காப்பாற்றுகின்றன.

தமிழ் - தெலுங்கு என இரண்டு மொழித் திரையுலகிலும் பணிபுரிகிறீர்கள். என்ன மாற்றத்தைப் பார்க்கிறீர்கள்?

நான் எப்போதுமே நாயகனின் இமேஜுக்குள் போவதில்லை. கதைக்கு என்ன தேவையோ அதற்கேற்ப செய்துவிடுவேன். ஆகையால், எனக்குத் திரையுலக வித்தியாசம் தெரிவதில்லை. கமர்ஷியல் படங்கள் எல்லாம் இப்போது கிடையாது. அனைத்து நாயகர்களுமே தற்போது நல்ல கதைகளோடுதாம் படம் பண்ணுகிறார்கள். ஏனென்றால், முழுக்கவும் கமர்ஷியல் படங்களை மக்கள் தற்போது ஏற்றுக்கொள்வதில்லை.

திரையுலகில் அவமானங்களைச் சந்தித்துள்ளீர்களா?

நிறைய இருக்கிறது. அவமானங்கள் தாம் வெற்றிக்கான படி. அதை ஏற்றுக் கொள்ள வேண்டும். அதை அவமானங்கள் என்று சொல்ல முடியாது. எப்போதுமே சின்ன ஈகோ ஒன்று இருக்கும். அதை எச்சரிக்கையுடன் கையாள வேண்டும்.

நீங்கள் ஆடும் கிரிக்கெட்டைப் பல திரையுலகப் பிரபலங்கள் பாராட்டுகிறார்களாமே?

கிரிக்கெட் எனக்கு மன அமைதி யைத் தருகிறது. குடி, புகை போன்ற பழக்கமில்லை. டிஸ்கோதேவுக்கும் போகமாட்டேன். எனக்கு 22 நண்பர்கள் இருக்கிறார்கள்.

சனிக்கிழமை ஒரு டீமுடனும், ஞாயிறு ஒரு டீமுடனும் ஆடுவேன். அனைவருமே திரையுலக நண்பர்கள்தாம். சென்னையைப் போலவே ஹைதராபாத்திலும் சாய் தரம் தேஜ், வருண் தேவ், அகில் என நிறையப் பேருடன் கிரிக்கெட் ஆடுவேன். இசையமைக்கும் பணிகள் 9 மணிக்கு முடிந்துவிட்டால், குளித்துவிட்டு கிரிக்கெட் ஆடக் கிளம்பிவிடுவேன்.

இரவு 1 மணி வரை விளையாடிவிட்டு வந்து தூங்குவது தான் பொழுதுபோக்கு. மறுபடியும் காலை 9 மணிக்கு இசையமைக்கும் வேலையைப் புத்துணர்வாகத் தொடங்கிவிடுவேன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x