Published : 07 Feb 2020 12:26 PM
Last Updated : 07 Feb 2020 12:26 PM

பாம்பே வெல்வெட் 21: ரேகா என்றொரு ராணித் தேனீ

எஸ்.எஸ்.லெனின்

மெஹ்பூப் ஸ்டுடியோவின் படப்பிடிப்புத் தளம். அன்றைய உருக்கமான காதல் காட்சி படமாகிக்கொண்டிருந்ததால் அமைதியில் ஆழ்ந்திருந்தது.

அந்தப் புதுமுக நாயகியின் முகத்தைக் கையிலேந்தி வசனம் பேசிக்கொண்டிருந்த அந்த நாயகன் பிஸ்வஜித். எதிர்பாரா தருணத்தில் நீண்ட முத்தம் ஒன்றைப் பதித்தார். இயக்குநர் ராஜா நவாதே கட் சொன்னதும், படப்பிடிப்புக் குழுவினர் கைக்கொட்டி, விசிலடித்து ஆரவாரம் செய்தனர்.

அத்துமீறலான அந்த முத்தக் காட்சியைத் தன்னைத் தவிர எல்லோரும் முன்கூட்டியே அறிந்திருப்பதை உணர்ந்ததும், அந்த 16 வயது சிறுமியின் மூடிய விழிகளிலிருந்து தாரைத் தாரையாக கண்ணீர் கொட்டியது. அதுவரை கெக்கலித்த படக்குழுவினர் உச்சுக்கொட்டினார்கள்.

அவர்கள் உட்பட பம்பாய் படவுலகில் எவருமே எதிர்பாரா விதமாய், அந்த நாயகி அடுத்த சில ஆண்டுகளில் விஸ்ரூபம் எடுத்தார். சர்ச்சையும் சவாலும் மிக்க துணிச்சலான கதாப்பாத்திரங்களில் நடித்தார். பெண்ணியம், சாகசம், பாலியல் என வித்தியாசமான கதைக்களன்களில், மாற்று, கலைத் திரைப்படங்களையும் வெற்றிகரமாக்கினார். அவர் பாலிவுட் தாரகையரில் தனித்தடம் பதித்த ரேகா.

குழந்தைத் தொழிலாளி

ரேகாவின் தாயார் தெலுங்கு நடிகை புஷ்பவல்லி. தந்தை தமிழ் சினிமாவின் காதல் மன்னனான ஜெமினி கணேசன். நான்கு வயதிலேயே தனது பானுரேகா கணேசன் என்ற இயற்பெயருடன் குழந்தை நட்சத்திரமாக நடிக்கத் தொடங்கி விட்டார் ரேகா. பெயரின் பின்னொட்டிலிருக்கும் கணேசன் தனது தந்தைமையை மறுத்ததில், ரேகாவின் பால்ய காலம் தடுமாற்றத்துக்குள்ளானது. அது புரியும் வயது வந்தபோது ஏற்காடு கான்வென்ட் படிப்பை அவருடைய தாய் பாதியில் நிறுத்தினார்.

13 வயதில் தெலுங்குப் படவுலகில் நாயகியாக சினிமாவுக்குள் திணிக்கப்பட்டார். ‘ஆபரேஷன் ஜாக்பாட் நல்லி சிஐடி 999’ கன்னடத் திரைப்படத்தில் ராஜ்குமாருக்கு ஜோடியானது ரேகாவுக்கான பாலிவுட் கதவுகளை திறந்து வைத்தது. மேற்குறிப்பிட்ட முத்தக்காட்சி இடம்பெற்ற அவரது முதல் இந்தித் திரைப்படமான ‘அஞ்சனா சஃபர்’ உட்படப் பல்வேறு தணிக்கைப் பிரச்சினைகளில் சிக்கி பல ஆண்டுகள் தாமதமாகவே வெளியானது.

தனியொருத்தி

‘அடர் வனத்தில் தனியே அலையும் சிறுமியாக எனது தொடக்க கால பாலிவுட் நாட்களில் அவதிப்பட்டேன். பள்ளிக்கூடமும், மரத்தடி விளையாட்டும், ஐஸ்கிரீம் சுவையும் நினைவில் உறைந்திருக்க, அரைகுறை ஆடைகளுடன் அலைக்கழிப்புக்கு ஆளானேன்’ என்று தனது இக்கட்டான சூழலைப் பின்னர் பேட்டியொன்றில் விவரித்தார் ரேகா. உடல்நலம் குன்றிய தாய்க்காக சினிமாவில் நடிக்க துணிந்திருந்த சின்னப் பெண்ணின் மனத்தை அந்தக் கால நெருக்கடிகள் புடம் போட்டன. அவற்றுடன், அறிமுகமான புதிதில் தென்னிந்திய மண்ணுக்கே உரிய அவரது அடர் நிறமும், பருமனான உடல்வாகும் விமர்சனத்துக்கு ஆளாயின.

அழகின் புதிய அவதாரம்

‘ஸ்வான் பதான்’ படத்தின் பிரத்யேகக் காட்சியில் ரேகாவைப் பார்த்ததும், ‘இந்தப் பெண் எப்படி நாயகியானாள்?’ என்று சசிகபூர் சத்தமாகவே கேட்டுவிட்டார். அதற்கு ‘அவளது பேசும் கண்களைப் பாருங்கள். இந்தப் பெண் இந்தி சினிமாவை சீக்கிரமே வளைக்கப்போகிறாள்’ என்ற சசிகபூரின் மனைவியின் ஆரூடம் பலித்தது. அடுத்த இரண்டு தலைமுறை ரசிகர்களை ரேகா தனது அழகாலும், நடிப்பாலும் ஆட்டுவித்தது நடந்தது. யோகா, ரேகாவின் உடலை உருக்கி அழகில் வார்த்தது. உணவு, யோகா, உடலோம்பல் என அழகுக்கான ரேகாவின் அனுபவப் பயணம் தனி நூலாகவும் பின்னர் வெளியானது.

புருவத்தில் வில் வரைந்த பெண்கள் மத்தியில், தனது அதரங்களிலும் அபாயகர வில் வாய்த்திருந்த ரேகாவிடம் ரசிகர்கள் மாய்ந்தனர். பெரிய விழிகளில் கிறக்கமாய் மிதக்கும் பார்வை, அலட்சியமும் அப்பாவித்தனமும் கூடிய சிரிப்பு, தேவதை தேகம் என அக்காலத்திய இளசுகளை ரேகா ஆட்டுவித்தார்.

இறுக்கிச் சுற்றிய பாந்தமான சேலையும், புருவங்களின் மத்தியை நிறைத்த குங்குமமுமாக ரேகாவின் பவ்யமான தோற்றம், பெண்களைத் தலைமுறைகள் தாண்டியும் ஈர்த்தது. ‘ராம்பூர் கா லக்ஷ்மன்’, ‘கஹானி கிஸ்மத் கி’ போன்ற எழுபதுகளின் தொடக்கப் படங்கள் ரேகாவின் இளமைக்காகவே ஓடின. ‘படப்பிடிப்பைப் பார்க்க நூறு பேர் குழுமினால், அவர்களில் 99 பேர் ரேகாவைப் பார்த்துக் கொண்டிருப்பார்கள்’ என்றெல்லாம் புகழ் சேர்த்தது.

காதலுக்கு மரியாதை

பாலிவுட்டில் படமாகும் காதல் கதைகளைவிடத் திரைக்கு வெளியே பற்றிப்படரும் காதல்கள் மகத்துவமானவை. அமிதாப் – ரேகா காதலும் அப்படியானது. இருவரும் இணைந்து நடித்த முதல் திரைப்படம் ‘தோ அஞ்சானே’. அமிதாப்பின் பெரும் வெற்றிப்படமான ‘தீவார்’ அப்போதுதான் வெளியாகியிருந்தது. திரையுலகில் அமிதாப்பைவிட ரேகா சீனியர். மேலும், நடிகை ஜெயா பாதுரியை அமிதாப் காதல் மணம் புரிந்திருந்தார்.

இதனால் அமிதாப் ரேகா இருவருமே மரியாதையுடன் பரஸ்பர உறவைப் பேணினார்கள். ஆனால், படத்தில் கணவன் மனைவியாக இழைந்த ஜோடிக்குள் எங்கேயோ பற்றிக்கொண்டது. இருவருக்கும் இடையிலான ‘இயற்பியல் மற்றும் வேதியியலை’ ரசிகர்கள் வெகுவாய்க் கொண்டாடினார்கள். இயக்குநர்களும் அந்த அந்நியோன்யம் அவசியமாக, தொடர்ந்து பல திரைப்படங்களின் ராசியான ஜோடியாக அமிதாப்- ரேகா வளர்ந்தனர்.

‘முகாதர் கா சிக்கந்தர்’ (1978) ஆண்டின் அதிகம் வசூலித்த திரைப்படமானது. சினிமா பத்திரிகைகளில் இந்த ஜோடி செய்திகளில் தொடர்ந்து இடம்பிடிக்க, அமிதாப் குடும்பத்தில் குழப்பம் வெடித்தது. ‘சில்சிலா’ திரைப்படத்தில் கணவராக அமிதாப், காதலியாக ரேகா, மனைவியாக ஜெயா என்று ரசிக எதிர்பார்ப்புக்கான புனைவை, உண்மையில் தோய்த்திருந்தார் இயக்குநர் யாஷ் சோப்ரா. தத்தம் காதல்களுக்கு மரியாதை தந்ததில் மூவருக்கும் அது கடைசி திரைப்படமானது.

மாற்றுப் பாதையில் பயணம்

அதற்குள் ரேகாவின் கவனம் அழகுப் பதுமையிலிருந்து ஆழமான கதைகளுக்குத் தாவியிருந்தது. எதையோ பறிகொடுத்ததன், ஏதோவொரு முழுமையை நோக்கிய பயணமாக, அக்காலகட்டத்தை ரேகாவின் சுயசரிதை பின்னர் வர்ணித்தது. கூட்டுப் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண், பாலியல் தொழிலாளி எனத் துணிச்சல் காட்டினார்.

ரேகாவை முன்னிறுத்திய ‘உம்ரோ ஜான்’ (1981) திரைப்படம் அமர காவியமானது. அப்படத்துக்காகச் சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றார். தொடர்ந்து கலை மாற்று சினிமாக்களில் கவனம் பதித்தார். ஷ்யாம் பெனகலின் கல்யுக், கோவிந்த் நிஹலானியின் விஜீதா, கிரீஷ் கர்நாட்டின் உத்சவ் என எண்பதுகளில் பேர் சொல்லும் படங்களில் நடித்து ஆசுவாசமடைந்தார்.

சாகசமும் சர்ச்சையும்

வெகுஜன திரைப்பட நாயகி கலைப்படங்களில் நடிப்பதே சாகச முயற்சி என்றால், உண்மையிலேயே சாகசத் திரைப்படங்களில் இறங்கினார் ரேகா. நாயகியின் பிம்பத்தை உயர்த்திப் பிடிக்கும் ‘கூன் பாரி மாங்’ போன்ற திரைப்படங்கள் வெற்றி பெற்றதுடன் அதுபோன்ற படங்களுக்கான தாக்கத்தையும் உருவாக்கியது. ரமேஷ் தல்வாரின் ‘பசோரா’, ஜிதேந்திரா ஜோடியான ‘ஏக் ஹை பூல்’ போன்றவை ரேகா ஏற்ற வித்தியாசமான வேடங்களுக்காகப் பேசப்பட்டன.

90-களில் ரேகாவின் சமகாலத்திய நடிகையரான ஹேமமாலினி, ராக்கி போன்றோர் அம்மா வேடங்களுக்கு நகர, ரேகா மட்டும் புதிய வரவுகளான மாதுரி தீட்ஷித், ரவீனா டண்டன் போன்றோருடன் மல்லுக்கட்டினார். அவை எடுபடாததில், மீரா நாயரின் ‘காமசூத்ரா’, பாசு பட்டாச்சாரியாவின் ‘ஆஸ்தா’ போன்ற சர்ச்சைக்குரிய திரைப்படங்களில் தோன்றினார். புத்தாயிரத்தில் நகைச்சுவை, எதிர்மறை வேடங்கள் எனப் பன்முக வேடங்களில் தன்னை நிலைநிறுத்தி வருகிறார்.

ராணித் தேனீ

காதல் மன்னனின் வாரிசான ரேகாவின் வாழ்க்கையில் வந்துபோன காதல்கள் ஏராளம். ஆனால், தந்தையின் பால்யத்து புறக்கணிப்பு போலவே அந்தக் காதல்களும் கைக்குக் கிட்டாது நழுவின. தயாரிப்பாளர் யாஷ் கோலி, நடிகர்கள் வினோத் மெஹ்ரா, ஜிதேந்திரா, அமிதாப் பச்சன், கிரண்குமார், சஞ்சய் தத் என அவரது காதல் வாழ்க்கை, ரகசியத் திருமணம் என்றெல்லாம் ஊடகங்கள் வரிந்துகொண்டு எழுதின.

ரேகாவை ‘ராணித் தேனீ ’என்ற அடைமொழியுடனே அப்போது வர்ணித்தார்கள். காதலுடன் தேங்காது டெல்லி தொழிலதிபர் முகேஷ் அகர்வாலை மணந்துகொண்டார் ரேகா. ஆனால், வெளிநாட்டிலிருந்த மனைவியின் துப்பட்டாவில் இங்கே தனது உயிரை மாய்த்துக்கொண்டார் முகேஷ். ஏழு மாதமே நீடித்த மணவாழ்வின் சோகம் ரேகாவைப் பெரிதும் பாதித்ததில் தனது கலகலப்பான சுபாவத்தைப் பல ஆண்டுகளுக்குத் தொலைத்தார்.

‘தேவதாஸைக் காதலிக்கும் பார்வதி, சந்திரமுகியின் விசித்திரக் கலவையாகவே பெண்கள் தங்கள் வாழ்வில் முழுமையடைகிறார்கள். விகிதங்களில் வேண்டுமானால் அவர்கள் வேறுபட்டிருக்கலாம். அப்பெண்களில் நானும் ஒருத்தி’ என்கிறார் ரேகா. 16-ல் பாலிவுட் திரைவாழ்க்கையைத் தொடங்கி அக்டோபரில் 66 வயதாகும் ரேகாவின் அடர்வனப் பயணம் தொடர்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x