Published : 06 Feb 2020 01:46 PM
Last Updated : 06 Feb 2020 01:46 PM

உயிர் வளர்க்கும் திருமந்திரம் 100: எச்சரிக்கையாகக் கற்றுக்கொள்ளுங்கள்

கரு.ஆறுமுகத்தமிழன்

பூழ் என்றொரு பறவை. உருவத் தால் சிறியதாகையால் குறும்பூழ். காடை என்பது அதன் இப்போதைய பெயர். கோழியும் கோழி முட்டையும் போலவே காடையும் காடை முட்டையும் சமைத்துண்ணத் தக்கவை என்பதிருக்க, கோழிச் சண்டை போலவே காடைச் சண்டையும் உண்டு. இதைக் கவனியுங்கள்:

தலைவன் பரத்தை வீட்டில் இன்பம் பெற்றுத் திரும்புகிறான். தலைவி கேட்கிறாள்: ‘பரத்தை வீட்டுக்கு வழிதெரியாமல் பிழையாக இங்கு வந்துவிட்டாயோ?’ தலைவன் பதறுகிறான்: ‘ஐயோ! நீ நினைப்பதுபோல் இல்லை; நான் காடைச் சண்டைதான் பார்த்துவிட்டு வருகிறேன்.’ தலைவி சீறுகிறாள்: ‘நீ பார்த்த காடைச் சண்டை என்னவென்று எனக்குத் தெரியும்! காடை வளர்க்கிறவன் தடவிக் கொடுத்தும் மந்திரம் சொல்லியும் பயிற்றுவித்திருக்கும் புதிய காடைகளின் சண்டைதானே அது?’ (கலித்தொகை, 95)

மந்திரம் சொல்லிப் பழக்குதல்

காடை விடுதலைப் போக்குள்ளது. ‘கலக் கம்பைக் (கம்பு என்ற தானியத்தை ஒரு கலம் அளவுக்குத் தீனியாகக்) கொட்டினாலும் காடை காட்டைத்தான் நோக்கும்’ என்று ஒரு பழமொழி. இவ்வளவு விடுதலைப் போக்குள்ள காடையை வளர்ப்பவரின் நோக்கத்துக்குச் சண்டையிடப் பழக்கியது எப்படி? மந்திரம் சொல்லித்தான்.

சொல்வார் யார்? காடை வளர்ப்பவர்கள்தாம். கற்றறியாத காடை வளர்ப்பாளர்கள் எந்த நூலிலிருந்து இந்த மந்திரங்களைக் கற்றார்கள்? எல்லாம் அவர்களாகவே உருவேற்றிக்கொண்டவைதாம். எந்த மொழியின் மந்திரங்கள் அவை? காடை வளர்ப்பாளர்க்கு எம்மொழி தாய்மொழியோ அம்மொழிதான்; அல்லது எந்த ஒலிக்குக் காடை எதிர்வினை செய்கிறதோ அந்த ஒலிதான்.

இப்படியாக வகுத்துக்கொண்ட எளிய மந்திரங்களைக் காடைக்கு அரிசி கொடுக்கும்போதும், பச்சிலை பிசைந்து தடவும்போதும் சொல்வார்களாம். ‘இந்தக் காடைதான் வெற்றிக்கான இலக்கணங்களைக் கொண்ட காடை’ என்று நூல் கற்ற புலவர்கள் அடையாளம் காட்டினாலும், கற்றறியாத காடை வளர்ப்பாளர் மனித மொழியிலோ அல்லது காடை மொழியிலோ மந்திரங்கள் சொல்லி உருவேற்றினால்தான் காடை சண்டையில் வெல்லுமாம்:

சொல்லும் சுவட்டுஅவர் சொல்லுக; சொல்லுங்கால்

சொல்லும் பலஉள; சொன்னபின் – வெல்லும்,

நலம்வர நாடி நடுங்காது நூற்கண்

புலவரால் ஆய்ந்துஅமைந்த பூழ்.

(புறப்பொருள் வெண்பா மாலை, 9, பூழ் வென்றி)

பூழ் வென்றி என்ற தலைப்பில் காடையின் வெற்றியைப் பாடும் புறப்பொருள் வெண்பா மாலை, பூவை வென்றி என்ற தலைப்பில் மற்றொன்றையும் பாடுகிறது. பூவை என்பது நாகணவாய்ப்புள்; இப்போது மைனா எனப்படுகிறது. கிளியைப் போலவே மைனாவும் மனிதக்குரலில் பேசும். நன்கு பயிற்றுவிக்கப்பட்ட மைனா, சொற்களைக் கோவையாகப் பேசிக் கிளியையே வென்றுவிடுமாம். (புறப்பொருள் வெண்பா மாலை, 12, பூவை வென்றி).

குறும்பூழ், நாகணவாய்ப்புள் இவற்றையெல்லாம் திருமூலர் கீழ்வரும் திருமந்திரத்தில் குறிக்கிறார்:

கூகையும் பாம்பும் கிளியொடு பூஞையும்

நாகையும் பூழும் நடுவில் உறைவன;

நாகையைக் கூகை நணுகல் உறுதலும்,

கூகையைக் கண்டுஎலி கூப்பிடு மாறே.

(திருமந்திரம் 2891)

கூகை (ஆந்தை), பாம்பு, கிளி, பூனை, நாகணவாய்ப்புள் (மைனா), குறும்பூழ் (காடை) ஆகியன அனைவர்க்கும் நடுவிலேயே வாழ்ந்தாலும் ஒன்றுக்கு ஒன்று பகை. கூகைக்கும் பாம்புக்கும் பகை; கிளிக்கும் பூனைக்கும் பகை; கிளிக்கும் மைனாவுக்கும் பேச்சிலே போட்டி; காடையோ மந்திரத்துக்குக் கட்டுப்பட்டுச் சண்டையிடுவது; கூகைக்கும் பாம்புக்கும் பூனைக்கும் எலி பகை; நாகணவாய்ப்புள்ளின் மரப் பொந்தைக் கூகை தனதாக்கிக்கொள்ள முயல்வதால் கூகைக்கும் நாகணவாய்ப்புள்ளுக்கும் பகை.

எலி அழைக்கலாமா?

குருமார்கள் எல்லோரும் இப்படித்தான் இருக்கிறார்கள். இரவிலே தாக்கும் கூகையைப்போல, புல்லிலே மறைந்து கொத்தும் பாம்பைப்போல, சொன்னதையே சொல்லுகின்ற கிளியைப்போல, இந்தப் பூனையும் பால் குடிக்குமா என்பதுபோல அமைதி காட்டி அனைவரும் உறங்கிய பின்னால் பானையை உருட்டிப் பாலைக் குடிக்கும் பூனையைப்போல, பயிற்சி பெற்றுப் பேசிக் கேட்பவரை ஏய்க்கும் நாகணவாய்ப்புள்ளைப்போல, மந்திரத்துக்குக் கட்டுப்பட்டுச் சண்டையிடும் காடையைப்போல, திருடிச் சேகரிக்கும் எலியைப்போல. ஒருவரோடு ஒருவர் போட்டியிட்டுத் தங்கள் வணிகத்தைப் பெருக்க நினைக்கிறார்கள் இவர்கள். பேச்சிலே பயிற்சி பெற்ற நாகணவாய்ப்புள்ளைத் தன்னிடம் கற்றுக்கொள்ளுமாறு கூக்குரலிடும் கூகை அழைக்க, கூகையைத் தன்னிடம் கற்றுக்கொள்ளுமாறு எலி கூப்பிடுகிறது.

என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள் என்று ஏசு அழைக்கலாம்; எலி அழைக்கலாமா? ஆவியிலே தாழ்மை உள்ளவர்களே! எச்சரிக்கையாகக் கற்றுக்கொள்ளுங்கள்.

(தெளிவுறக் கற்போம்) கட்டுரையாளர், தொடர்புக்கு : arumugatamilan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x