Published : 06 Feb 2020 12:33 PM
Last Updated : 06 Feb 2020 12:33 PM

81 ரத்தினங்கள் 32: குடை, முதலானது ஆனேனோ அனந்தாழ்வான் போலே

உஷாதேவி

எல்லாவற்றுக்கும் காரணனும் காரணியுமான ஆதிமூல பகவானுக்கு ஒவ்வொரு ஜீவாத்மாவும் எப்படித் தனது கடமைகளை ஆற்றவேண்டுமென்பதற்கு உதாரணமாகத் திகழ்பவர் ஆதிசேஷன் ஆவார்.

சென்றால் குடையாம் இருந்தால் சிங்காசனமாம்

நின்றால் மறவடியாம் நீள் கடலுள் என்றும்

புணையாம் மணிவிளக்காம் பூம்பட்டாம் புல்கும்

அணையாம் திருமாற் கரவு.

என்று பொய்கையாழ்வார் ஆதிசேஷனின் மகிமையைப் பாடியுள்ளார்.

இறைவன் பக்தர்களைக் காக்கச் செல்லும்போது, வெயிலோ, மழையோ தாக்காதவாறு குடையாக ஆதிசேஷன் திகழ்கிறார். நடந்து களைத்து அமரும்போது ஆசனமாகவும் நின்ற கோலத்தில் பாதுகையாகவும் திருப்பாற்கடல் சயனத்தில் சுகமான படுக்கையாகவும் இருக்கிறார். தன் தலையிலுள்ள ரத்ன மணிகளின் பிரகாசத்தால் திருவிளக்காக ஆதிசேஷன் ஜொலிப்பவர்.

இந்த ஆதிசேஷனின் அவதாரம் தான் திரேதா யுகத்தில் ராமனின் தம்பியான லக்ஷ்மணனாகப் பிறப்பெடுத்தார். அவரும் ராமனுக்கு அனைத்து உதவிகளையும் செய்தார். ராமன் குழந்தையாக இருந்தபோது, என்ன காரணமென்று புரியாமல் வீல் வீலென்று அழுதார். தாயும் சேடிகளும் என்னென்னவோ செய்தும் அழுகை நிற்கவில்லை. குலகுரு வசிஷ்டர் தான் தம்பி லக்ஷ்மணனை உடன் உறங்க வையுங்கள் என்று ஆலோசனை கூறினார். குழந்தை ராமன், தனது அணையான லக்ஷ்மணனின் உடல் ஸ்பரிசத்தைப் பெற்றதும் அழுகையை நிறுத்திவிட்டார்.

ஆதிசேஷன் தான் கலியுகத்தில் ராமானுஜராக அவதாரமெடுத்து 120 ஆண்டுகள் வாழ்ந்தார். தொண்டனூரில் ஆயிரம் சமணர்களுடன் ஒரே சமயத்தில் ஆயிரம் முகங்களுடன் ஆதிசேஷனாக மாறி வாதிட்டார் என்றும் கூறப்படுகிறது. அப்படியான எந்த கைங்கரியத்தையும் தான் பகவானுக்கு நிறைவேற்றவில்லையே என்று துயர் உற்றாள் திருக்கோளூர் பெண்பிள்ளை.

(ரகசியங்கள் தொடரும்) கட்டுரையாளர், தொடர்புக்கு: uyirullavaraiusha@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x