Published : 05 Feb 2020 11:14 AM
Last Updated : 05 Feb 2020 11:14 AM

டிங்குவிடம் கேளுங்கள்: நட்சத்திரத்துக்குச் செல்ல முடியுமா?

பூனைகளுக்கு ஏன் நூல்கண்டு பிடிக்கிறது, டிங்கு?

- செ. உமாரஞ்சனி, 8-ம்வகுப்பு, எஸ்.ஆர்.வி. பப்ளிக் பள்ளி, சமயபுரம், திருச்சி.

பூனைகள் ஒரு காலத்தில் காட்டு விலங்குகளாக இருந்தன. காட்டில் எதிரிகளால் ஏற்படும் ஆபத்து அதிகம் என்பதால், எப்போதும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம். ஏதாவது அசைந்தால் அது பாம்பாகவும் இருக்கலாம், சாதாரண ஓணானாகவும் இருக்கலாம் என்பதால், அந்த அசைவுகளைக் கவனித்து எச்சரிக்கையுடன் பூனைகள் செயல்பட வேண்டும். எலி, சிறு பறவைகள் போன்றவற்றை வேட்டையாடி உண்ண வேண்டும்.

இரையின் வேகத்தைக் கணித்து, பாய்ந்து சென்று, துல்லியமாகப் பிடிக்க வேண்டும். நீண்ட காலத்துக்கு முன்பே காட்டை விட்டு வந்து, மனிதர்களுடன் பூனைகள் வசித்து வந்தாலும் அவற்றின் சில பண்புகள் இன்றுவரை மாறவே இல்லை. அதில் வேட்டையும் எச்சரிக்கை உணர்வும் அப்படியே இருக்கின்றன. பூனைகளுக்கு விளையாட்டிலும் ஆர்வம் உண்டு. விளையாடும்போது நூல்கண்டு இப்படியும் அப்படியும் ஓடுவதைப் பார்த்து இரையைத் துரத்துவதற்கான பயிற்சியை எடுத்துக்கொள்கிறது, உமாரஞ்சனி.

என் அப்பாவுக்கு நீரிழிவு குறைபாடு இருக்கிறது. தினமும் 10 ஆயிரம் அடிகள் நடக்கச் சொல்லியிருக்கிறார் மருத்துவர். எந்த நேரத்தில் நடக்க வேண்டும், டிங்கு?

- கே. கெளசல்யா, 10-ம் வகுப்பு, அரசு மேல்நிலைப் பள்ளி, நெகமம், கோவை.

பொதுவாகவே காலையில் நடந்தால் நல்லது. காலையில் நடக்க இயலாவிட்டால் மாலையில் நடக்கலாம், கெளசல்யா.

வளரி கருவியைப் பற்றிக் கொஞ்சம் சொல்ல முடியுமா, டிங்கு?

- ஜெ.சா. யங்கேஷ்வர், 8-ம் வகுப்பு, அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, குமாரபாளையம், நாமக்கல்.

பண்டைய தமிழர்களின் கருவிகளில் ஒன்று வளரி. தடியை வளைத்தது போல் இருப்பதால் ‘வளைதடி’ என்றும் அழைக்கப்பட்டது. தப்பி ஓடும் விலங்குகள், மனிதர்களை வீழ்த்துவதற்காகப் பயன்பட்டது. வளரி வீசுவதில் பல்வேறு விதங்கள் இருக்கின்றன. அவற்றில் சுழற்றி வீசும் முறையே பெரும்பாலும் பயன்பாட்டில் இருந்தது. பொதுவாகக் கால்களைக் குறிவைத்தே வளரியை எறிவார்கள். தேவைப்படும்போது கழுத்தைக் குறிவைத்தும் எறியப்பட்டது.

வளரியின் எடை அதிகம் இருந்தால் இலக்கை நோக்கி வேகமாக வீச முடியாது. எடை குறைவாக இருந்தால், இலக்கைத் தாக்க முடியாது. வளரிக்கு எடையும் வீச்சும் முக்கியம். சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம் போன்ற பகுதிகளில் வளரி ஆயுதத்தை அதிகம் பயன்படுத்தியிருக்கிறார்கள். மருது சகோதர்கள் வளரியையே முக்கிய ஆயுதமாகக்கொண்டு ஆங்கிலேயர்களிடம் போரிட்டதாகச் சொல்கிறார்கள், யங்கேஷ்வர்.

மற்ற கோள்களுக்குச் சென்று வருவதுபோல் நட்சத்திரங்களுக்கும் சென்று வர முடியுமா, டிங்கு?

- சி. கார்த்திக், 5-ம் வகுப்பு, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, சுல்தான்பேட்டை, திருப்பூர்.

மற்ற கோள்களுக்கு யார், எப்போது சென்று வந்திருக்கிறார்கள்? இதுவரை பூமியின் துணைக் கோளான நிலவில் மட்டுமே மனிதர்கள் இறங்கி, திரும்பி வந்திருக்கிறார்கள். வேறு எந்தக் கோளுக்கும் மனிதர்கள் சென்றதில்லை. செவ்வாய் கோளுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தில்கூட, அவர்களால் பூமிக்குத் திரும்பி வர முடியாது. நமக்கு மிக அருகில் இருக்கும் நட்சத்திரம் என்றால் அது நமது சூரியன்தான்.

இது தவிர்த்து அருகில் இருக்கும் நட்சத்திரங்கள் என்றால் பிராக்ஸிமா செண்ட்டாரி, ஆல்ஃபா செண்ட்டாரி. பூமியிலிருந்து சுமார் 4.24 ஒளி ஆண்டு தூரத்தில் இருக்கிறது பிராக்ஸிமா செண்ட்டாரி. ஓர் ஒளி ஆண்டு என்பது ஒளி ஓர் ஆண்டு பயணிக்கும் தூரத்தைக் குறிக்கிறது. நாம் இன்று கிளம்பினால் 81 ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகுதான் பிராக்ஸிமா செண்ட்டாரி நட்சத்திரத்தை அடைய முடியும், கார்த்திக்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x