Published : 04 Feb 2020 01:08 PM
Last Updated : 04 Feb 2020 01:08 PM

பெண்களின் ‘டாம்பாய்’ அவதாரம்!

எல். ரேணுகாதேவி

பசங்களுக்கு ‘புள்ளிங்கோ’ லுக் அடையாளமாகிவிட்டது. அந்தப் புள்ளிங்கோக்களுக்கே கடும் போட்டி கொடுக்கும் இளம் பெண்களும் இருக்கிறார்கள். அந்தப் பெண்கள் ‘டாம்பாய்’ என்ற திருநாமத்துடன் அழைக்கப்படுகிறார்கள். முன்பைவிட ‘டாம்பாய்’ பெண்கள் இப்போது அதிகரித்திருக்கிறார்கள். இளம் பெண்களின் இந்த ‘டாம்பாய்’ அவதாரத்துக்கு என்ன காரணம்?

நீண்ட தலைமுடி என்பது பெண்களின் அடையாளமாகவே மாறிவிட்டது. குட்டை முடியுடன் வலம் வரும் மகள்களைப் பார்த்தாலே வீட்டில் சாமியாடும் அம்மாக்களும் இருக்கிறார்கள். ஆனால், இன்றோ ஆண்களைப் போலவே முடியை வெட்டிக்கொள்ளும் போக்கு இளம் பெண்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

‘டாம்பாய்’ லுக் என்ற டிரெண்ட் இன்று பெருநகரங்களைத் தாண்டி சிறு நகரங்கள்வரை இளம் பெண்களிடம் ஊடுருவிக்கொண்டிருக்கிறது. இந்த ‘டாம்பாய்’ ஸ்டைலின் பின்னணியில் கல்வி அறிவு, சமூக மாற்றம், ஆண்-பெண் சமத்துவம் போன்ற விஷயங்கள் இருப்பதாகச் சொல்கிறார்கள்.

ஸ்டைல் மட்டுமல்ல

‘டாம்பாய்’கள் என்று அழைக்கப்படுவோரெல்லாம் ஸ்டைலுக்காக மட்டும் சிகை அலங்காரத்தை மாற்றிக்கொள்வதில்லை. ‘டாம்பாய்கள்’ என்போர், ஆண்களைப் போல் தலைமுடிவைத்துக்கொள்ளவும் உடையணியவும் எந்தவித தயக்கமோ அச்சமோ இல்லாமல் தன்னுடைய கருத்துகளை வெளிப்படுத்தவே என்கிறார்கள் ‘டாம்பாய்’ ஸ்டைலை விரும்பும் பெண்கள். இன்னும் சொல்லப்போனால், மாற்றத்தை விரும்பும் பெண்களால் உருவானதுதான் ‘டாம்பாய்’ லுக் என்றும் சொல்கிறார்கள்.

பெண்ணுடைய சுதந்திரம் என்பது உருவத் தோற்றத்தால் மட்டும் தீர்மானிக்கப்படக் கூடாது என்பதுதான் ‘டாம்பாய்’ பெண்களின் நோக்கம். ஆண்களுக்கு உள்ள அதே சுதந்திரம் பெண்களுக்கு இருக்க வேண்டும் என்கிறார்கள் ‘டாம்பாய்’கள். அதன் முதல் படிதான் ஆண்களைப் போல் சிகை அலங்காரம் செய்துகொள்வது. ஆண்களைப் போலவே சட்டை, பேண்ட், ஷூ எனப் பெண்ணின் வெளிபுறத் தோற்றத்தை மாற்றிக்கொள்வதும்.

இப்படிச் சிகை அலங்காரம், உடை மாற்றம் செய்துகொள்வது தன்னம்பிக்கையை அளிக்கிறது என்கிறார் மதுரையைச் சேர்ந்த ‘டாம்பாய்’ சுரேகா.

கெத்தா ஃபீல்

“எனக்குச் சின்ன வயசு லேர்ந்து அண்ணனுடைய சட்டை, பேண்டு போட்டுக்கொள்ளப் பிடிக்கும். சுடிதார், புடவை அணிவதென்றால் அசௌகரியமா உணருவேன். இந்த உடையை அணிந்தால், அதன் மீதே நம் கவனம் இருந்து கொண்டேயிருக்கும். ஆனால் சட்டை, பேண்ட் அணியும்போது அந்தப் பிரச்சினையே இல்ல.

உடை மீதே கவனம் செலுத்த வேண்டிய தேவையே இருக்காது” என்கிறார் சுரேகா. மதுரை சட்டக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்துவரும் சுரேகா பேண்ட், சட்டை மட்டுமல்லாமல் வேட்டி, சட்டை அணிந்துகொண்டு கல்லூரிக்குச் செல்வதையும் வழக்கமாகக் கொண்டுள்ளார்.

“இந்த மாதிரி டிரஸ் போடுவதே தைரியத்தையும் துணிச்சலையும் கொடுக்குது. ரோட்டுல நடந்துபோகும் போதே கெத்தா உணர்வேன். தவறான எண்ணம் கொண்ட ஆண்கள்கூடத் தோற்றத்தைப் பார்த்து விலகிப் போறாங்க. மகள், மகன் என்ற பாகுபாடுயெல்லாம் எங்க வீட்டுல கிடையாது.

அதனால் என்னுடைய விருப்பப்படி இருக்க முடியுது. ஆண்களைப் போல் டிரஸ் போடும்போது என்னோட தலைமுடி கொஞ்சம் இடைஞ்சலா இருந்தது. இந்த முடியை என்ன பண்ணலாம்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன், அப்போதுதான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தானம் கொடுக்கலாம்னு முடிவு பண்ணி முடியை வெட்டிட்டேன்” என்கிறார் சுரேகா.

சுதந்திர உணர்வு

பெண்களின் வெளித்தோற்றம் ஆணாதிக்கச் சிந்தனைகளாலேயே நிர்ணயிக்கப்படுகிறது என்பதும் டாம்பாய்கள் வைக்கும் புகாரில் ஒன்று. “பள்ளியில் படித்த காலத்தில் ரெட்டை ஜடையுடன் தான் செல்வேன். முழங்கால் அளவு எனக்குத் தலைமுடி இருந்துச்சு. எப்போது நான் வெளியே போனாலும் ‘நீ ஒரு பெண்’ என்ற வார்த்தை எனக்குள் கேட்டுக்கிட்டே இருக்கும். அது என்னை மனதளவில் பாதிச்சது. பிறகுதான் என் தலைமுடியை வெட்டிக்கொண்டேன், சுடிதார்களை விட்டுவிட்டு பேண்ட், சட்டைக்கு மாறினேன்.

இந்தத் தோற்றம் எனக்குச் சுதந்திர உணர்வைக் கொடுத்தது. பிறகு பைக் ஓட்ட கற்றுக்கொண்டேன். ஆண்கள் என்னை எளிதாக அணுக முடியாது என்ற நம்பிக்கையை அது விதைச்சது. இந்த லுக்கில் நான் ரொம்ப மகிழ்ச்சியாக உணர்கிறேன்” என்கிறார் ஷாமிலி. ஒளிப்படக் கலைஞராக உள்ள ஷாமிலி தென்னிந்தியாவின் சிறந்த பெண் ஒளிப்படக் கலைஞர் என்ற தொழில்முனைவோர் விருதைப் பெற்றவர்.

‘டாம்பாய்’ தோற்றத்தில் உள்ள பல பெண்கள் தங்களுடைய இந்தத் தோற்றம் தன்னம்பிக்கையை அளிக்கிறது என்று கூறினாலும், அதைப் பற்றிச் சமூகத்தில் சரியான புரிதல் இல்லாத நிலை இருப்பதையும் பார்க்க முடிகிறது. ”ஒரு பொன்ணு பையன் மாதிரி டிரஸ் பண்ணினா அவங்களைத் தன்பாலினத்தவர் எனத் தவறாகப் புரிந்துகொள்கிறார்கள்.

இந்த எண்ணம் மாறணும். ஆணும் பெண்ணும் சமம் என்பதை வலியுறுத்துவதுதான் ‘டாம்பாய்’ தோற்றத்தின் அம்சம். நாம் உடுத்தும் உடை சவுகரியமாக இருக்கிறதா அல்லது நம்மைக் காட்சிப் பொருளாக்குகிறதா என்ற தெளிவு அனைவருக்கும் இருக்கணும். அதற்கு உதவியாக இந்த ‘டாம்பாய்’ லுக் இருக்கிறது” என்கிறார் ஷாமிலி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x