Published : 04 Feb 2020 12:58 PM
Last Updated : 04 Feb 2020 12:58 PM

இணைய உலா: மதுரையின் ராப் சோல்ஜர்!

வி.சாமுவேல்

சென்னை போன்ற பெரு நகரங்களில் மட்டுமே உருவாகிக்கொண்டிருந்த ராப் பாடகர்கள், தற்போது சென்னைக்கு வெளியேயும் பெயர்பெறத் தொடங்கியிருக்கிறார்கள். அந்த வகையில் ‘மதுரை சோல்ஜர்’ என்ற இசை குழுவிலிருந்து உருவாகியிருக்கும் ராப் பாடகர் செந்தூழன். அண்மையில் செந்தூழன் பாடி யூடியூபில் வெளியான ‘எப்படி பாடினாரோ…’ என்ற பாடல் ஹிட் அடித்தது. இதன்மூலம் செந்தூழன் கவனம் ஈர்த்திருக்கிறார்.

செந்தூழனின் சொந்த ஊர் தூத்துக்குடி. 13 வயதில் இவருடைய குடும்பம் மதுரைக்கு குடியேறியது. சிறு வயது முதலே இசையின் மீது ஆர்வம் கொண்ட செந்தூழன், எப்போதும் வீட்டில் பாடுவதை பொழுதுபோக்காக வைத்திருந்தார். கல்லூரி படிப்புக்கு பிறகு படிப்பு சார்ந்த வேலைக்கு செல்வதில் செந்தூழனுக்கு நாட்டம் ஏற்படவில்லை. இசை சார்ந்து இயங்க வேண்டும் என்று மனதில் மணி அடித்தது. இசையிலும் ராப் மீது அவருக்கு காதல் ஏற்பட்டது. அந்தத் தீராக் காதல்தான் தற்போது அவரை ஊர் அறிந்த ராப் பாடகராக அறிய வைத்திருக்கிறது.

“ராப் சிங்கர் யோகிதான் என்னுடைய ரோல்மாடல், அவரைப்போல ஆக வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை. ‘பொல்லாதவன்’ படத்தில் வந்த ‘ மடை திறந்து..’ என்ற பாடலை ராப் வடிவில் ரீமிக்ஸ் செய்து அவர் பாடியது எனக்கு ரொம்பப் பிடிக்கும். இந்தப் பாடல் என் ஆர்வத்தை மேலும் தூண்டியது.

தனியாக ராப் பாடிக்கொண்டிருக்காமல் குழுவாக இயங்குவது என்ற முடிவையும் அப்போதுதான் எடுத்தேன். அதன் அடிப்படையில் ஆர்வமுள்ள நண்பர்களுடன் சேர்ந்து ‘கைசர் பேஸ்’ (kaiser base) என்று ஒரு குழுவை உருவாக்கி ராப் பாடல்கள் பாடி வீடியோக்களாகப் பதிவுசெய்து யூடியூப் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் பதிவிடத் தொடங்கினோம்” என்று தான் ராப் பாடகராக உருவெடுத்தது பற்றி கூறுகிறார் செந்தூழன்.

செந்தூழன்

மதுரையில் ராப் குழு இயங்கிவருவதை அறிந்த யோகி, மகிழ்ச்சி அடைந்தார். பிறகு யோகியின் யோசனைப்படி ‘கைசர் பேஸ்’ என்ற குழுவின் பெயரை ‘மதுரை சோல்ஜர்’ என்று ஊர் பெயருடன் மாற்றினார்கள். மதுரையில் செயல்பட்டாலும் ராப் பாடல் நிகழ்ச்சிகளுக்காக செந்தூழன் குழுவினர் சென்னைக்கு வருவதும் போவதுமான இருந்திருக்கிறார்கள். எதிர்பார்த்த அளவு குழுவினருக்கு வருவாய் கிடைக்காததால், ஒவ்வொருவரும் பிரியும் நிலைக்கு தள்ளப்பட்டனர் என்று சோகத்துடன் சொல்கிறார் செந்தூழன்.

“குழுவில் வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டதால், அவரவர் வேலையைப் பார்க்க முடிவுசெய்தோம். அப்போதுதான் ‘எப்படி பாடினாரோ…’ என்ற பாடல் வெளியாகும் நேரம். அந்தப் பாடலை வெளியிட்ட பிறகு விருப்பப்படி பிரிய நேரம் குறித்திருந்தோம். ஆனால், அந்தப் பாடல்தான் எங்கள் தலையெழுத்தையே மாற்றியது. அந்தப் பாடல் சமூக ஊடகங்களில் ஹிட் அடித்து வைரலானது. பல லட்சம் பார்வையாளர்கள் அந்தப் பாடல் ரசிக்கப்பட்டது. அதன்பின்பே ‘சென்னை 28’ படத்தில் ஒரு பாடல் அமைக்கும் எங்கள் குழுவுக்கு அழைப்பு வந்தது. இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் இசையில் ‘வீ ஆர் த பாய்ஸ்’ பாடல் வெளியானது.” என்கிறார் செந்தூழன்.

செந்தூழன் குழு அடுத்தடுத்து உயரங்களைத் தொட்டபோதும், குழுவில் உள்ள ஒவ்வொருவரும் தங்கள் விரும்பிய வாழ்க்கையைத் தேடி சென்றுவிட்டார்கள். ஆனால், செந்தூழனோ தனக்கென ஒரு ஆல்பம் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அந்த ஆல்பத்துக்கு ‘சிங்கப்பாதை’ என்று பெயரிட்டார். அந்த ஆல்பத்துக்க்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. எந்தச் சமயத்திலும் இசையை விட்டுவிடக் கூடாது என்ற வைராக்கியத்துடன் இருக்கும் செந்தூழன், ராப் இசையில் வெற்றிக்கொடியை உயர பறக்கவிடும் முயற்சியில் முன்னேறி வருகிறார்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x