Last Updated : 08 Aug, 2015 12:27 PM

 

Published : 08 Aug 2015 12:27 PM
Last Updated : 08 Aug 2015 12:27 PM

மாற்றுக் கட்டுமானப் பொருள்: தானாக வளரும் செங்கல்

ஒரு ஆண்டுக்கு உலகம் முழுவதும் ஒரு லட்சம் கோடிக்கும் அதிகமான செங்கற்கள் உற்பத்தி செய்யப் படுகின்றன. இந்தச் செங்கற்கள் தயாரிக்கப்படுவதால் ஒரு ஆண்டில் வெளியேறும் கார்பன் டை ஆக்ஸைடின் அளவு எவ்வளவு தெரியுமா? 80 கோடி டன். இதனால் நம் சுற்றுச்சூழல் எவ்வளவு மாசுபடும் என நினைத்துப் பார்க்கவே முடியாத அளவுக்கு மலைப்பாக இருக்கிறது.

இம்மாதிரி கட்டுமானப் பொருள்கள் ஒவ்வொன்றையும் தயாரிக்கும் பொருட்டு சுற்றுச்சூழலைத் தொடர்ந்து மாசுபடுத்தப்போகிறோமோ, என்ற கேள்விக்கான பதிலாகத்தான் இப்போது மாற்றுக் கட்டுமானப் பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. அம்மாதிரியான மாற்றுக் கட்டுமானப் பொருள்களில் ஒன்றுதான் ‘பயோ செங்கல்’.

பொதுவாக செங்கல் எப்படி உற்பத்தியாகிறது? உலகெங்கிலும் பல லட்சக்கணக்கான மனிதர்களின் உழைப்பால் உருவாகிறது. அதேபோல இந்த பயோ செங்கலும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான பாக்டீரியாக்களால் உருவாக்கப்படுகிறது. ஆனால் ஒரு செங்கலை உருவாக்க ஒரு கோடி லட்சம் பாக்டீரியாக்கள் உழைக்கின்றன.

பாக்டீரியாவால் வளரும் செங்கல்

இந்த வகைச் செங்கல் தயாரிப்பில் மண் அடிப்படை மூலக்கூறாகப் பயன்படுத்தப்படுகிறது. அத்துடன் பாக்டீரியாவுடனான சிமெண்ட் கரைசலும் சேர்த்துக்கொள்ளப்படும். பாக்டீரியாவுக்கான உணவாக நைட்ரஜனும் சேர்த்துக்கொள்ளப்படும். இவையில்லாமல் கால்சியமும் நீரும் இந்தக் கலவையில் சேர்க்கப்படுகிறது. இந்தக் கலவை மணல் படுக்கை மீது வைக்கப்படுகிறது. ஐந்து நாட்களுக்கு இப்படியே விடப்படும். இந்தக் கலவை ஐந்து நாட்களுக்குப் பிறகு இறுகித் திடமாகிவிடும். பாக்டீரியாவுக்கான உணவு தீர்ந்து, நீரும் உலர்ந்துவிட கலவையில் உள்ள பாக்டீரியா இறந்துவிடும். இப்போது பயோ செங்கல் உருவாகிவிடும். இதை பயோமேசன் செங்கல் என அழைக்கிறார்கள்.

டோசியரின் கண்டுபிடிப்பு

இந்த வளரும் அபூர்வ வகை செங்கலைக் கண்டுபிடித்தவர் ஜிஞ்சர் கிரிய்க் டோசியர். அமெரிக்காவில் அபூர்ன் கட்டிடத் துறைப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர். இவர் ஷார்ஜா அமெரிக்கன் பல்கலைக்கழகத்தில் இணைப் பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார். மேலும் கட்டிடத் துறை வடிவமைப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.

ஆனால் இவருடைய முக்கியமான பணி சுற்றுச்சூழலுக்கு உகந்த கட்டுமானப் பொருளைக் கண்டுபிடிப்பதே. உயிர் ஆற்றலைப் பயன்படுத்திக் கட்டுமானப் பொருள்களைக் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சிகளில் கடந்த பத்து ஆண்டுகளாக ஈடுபட்டிருந்தார். “நான் சிறு குழந்தையாக இருந்தபோதே எனக்கு பொம்மைகள் மீது அவ்வளவு விருப்பம் இல்லை. என இந்தக் கைகள் கொண்டு உருவாக்கும் மணல் பொம்மைகள் மீதே விருப்பம் இருந்தது. அதனால்தான் நான் பெரியவள் ஆனதும் இந்தக் கட்டிடக் கலையைப் படிப்பதற்காகத் தேர்ந்தெடுத்தேன்” என்கிறார் டோசியர். இந்த அரிய பொருளை அமெரிக்க, ஐக்கிய அரபு நாடுகளைச் சேர்ந்த தொழில் நுட்ப உதவியாளர்களைக் கொண்டு கண்டுபிடித்துள்ளார் டோசியர். இந்தக் கண்டுபிடிப்பு, சிறந்த பசுமைச் சவால் பொருளாகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இது மட்டுமல்லாது புதிய கட்டுமானப் பொருளுக்கான பல விருதுகளையும் வாங்கிக் குவித்துள்ளது. மெட்ரோபோலிஸ் பத்திரிகையின் அடுத்த தலைமுறைக்கான விருதையும் பெற்றுள்ளது.

இந்தச் செங்கல் விரைவில் உலகம் முழுவதும் பயன்பாட்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வகை செங்கல் பயன்பாட்டுக்கு வரும் பட்சத்தில் கட்டுமானத் துறையில் மிகப் பெரிய புரட்சியை விளைவிக்கும். சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x