Published : 03 Feb 2020 01:22 PM
Last Updated : 03 Feb 2020 01:22 PM

நவீனத்தின் நாயகன் 12: இரண்டு கைகள் நான்கானால்…

எஸ்.எல்.வி. மூர்த்தி
slvmoorthy@gmail.com

ஈலானுக்கும், கிம்பலுக்கும் எதிர்பாராத இடத்திலிருந்து கேட்காமலே உதவி வந்தது. அப்பா 28,000 டாலர்கள் தந்து உதவினார். மகன்கள் கலிபோர்னியா மாநிலம் பாலா ஆல்ட்டோ (Palo Alto) பகுதியில் 20 அடிக்கு 30 அடியில் சிறிய அறை ஒன்று வாடகைக்கு எடுத்தார்கள். மூன்று மாடி பழைய கட்டிடம். லிஃப்ட் கிடையாது. அந்தக் கட்டிடத்திலேயே இருந்த இன்டர்நெட் சேவைமையத்திலிருந்து இணைப்பு. அண்ணனும், தம்பியும் எந்த வேலைகளை யார் செய்யவேண்டு மென்று தெளிவாக வரையறுத்துக்கொண்டார்கள் – தொழில்நுட்பம் தொடர்பான அலுவலக வேலைகள் முழுக்க ஈலான்; வெளியுலகத் தொடர்பு, மார்க்கெட்டிங், கிம்பல்.

பிசினஸ் என்பது இன்று போட்டியல்ல, போர். எதிரியை எப்படியாவது வீழ்த்தவேண்டும். அதற்கு முதல் ஆயுதம், தயாரிப்புப் பொருள். உங்கள் தயாரிப்பு, கஸ்டமர்கள் கனவில்கூட நினைத்துப் பார்த்திராத, ஆனால் அவர்களுக்குப் பெருமளவில் உதவக்கூடிய அம்சங்கள் நிறைந்து ஆனந்த அதிர்ச்சி தரவேண்டும். போட்டியாளர்கள் எப்போதுமே செம்மறியாட்டுக் கூட்டம். என்ன செய்வார்கள்? உங்கள் அம்சங்களைக் காப்பி அடிப்பார்கள். ஆகவே, நீங்கள் அறிமுகம் செய்யும் புதுமைகள் பிறர் சுலபத்தில் பின்பற்ற முடியாதபடி இருக்கவேண்டும். இதை மேனேஜ்மென்டில், Entry Barriers என்று சொல்லுவோம்.

``எதிரிகள் (போட்டியாளர்கள்) நுழைவதை மறிக்கும் தடுப்புச் சுவர்” என்று அர்த்தம். புத்தக வடிவில் இருக்கும் Yellow Pages –க்கு இணைய வடிவம் மட்டுமே கொடுத்தால், பிசினஸ் அதிகநாள் தாக்குப்பிடிக்காது என்பதை ஈலான் உணர்ந்தார். வித்தியாசமாக என்ன செய்யலாம்? கஸ்டமர் கண்ணோட்டத்திலிருந்து ஆலோசித்தார்.

ஒருவர் ஐஸ்கிரீம் சாப்பிட விரும்புகிறார். தன் வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் ஐஸ்கிரீம் கடைகளைத் தேடுகிறார். கடையின் பெயர், விலாசம், திறக்கும் நேரம், மூடும் நேரம், மெனு, விலைப் பட்டியல் ஆகியவை கிடைக்கின்றன. அடுத்து என்ன செய்வார்? கடைக்குப் போகும் வழியைத் தேடுவார். நகரத்தின் முக்கிய பகுதிகளிலிருந்து கடைக்குப் போகும் வழியை வரைபடமாகக் (Map) காட்டிவிட்டால்…..

# இன்று கூகுள் மேப்ஸ் (Google Maps) இந்த வசதியை நமக்கு மொபைலில் தருகிறது. கூகுள் மேப்ஸ் அறிமுகமானது 2005–ம் ஆண்டில். ஈலான் இதைத் திட்டமிட்டது 1995 –ல்
– அதாவது கூகுள் மேப்ஸுக்குப் பத்து வருடங்களுக்கு முன்!

தன் இணையதள டைரக்டரியில் மேப்ஸ் தர ஈலான் ஆசைப்பட்டது சரி. எல்லா ஸ்டார்ட் அப் கம்பெனிகளுக்கும் இருக்கும் பிரச்சினைதான் – காசு இல்லை. நினைத்ததை முடிப்பவர் ஈலான். எந்தத் தடை வந்தாலும், அதை முறியடிக்க வழி கண்டுபிடிப்பார். இத்தகைய வரைபடங்கள் யார் தயாரிக்கிறார்கள் என்று தேடினார். மாட்டியது பட்சி.

சிக்காகோ மாநிலத்தில் ``நாவ்டெக்” (NAVTEQ) என்னும் கம்பெனி இருந்தது. 1985 முதல் மேப்ஸ் தயாரித்துவந்தார்கள். ஈலான் இவர்களைச் சந்தித்தார். என்ன பேசிச் சொக்குப்பொடி போட்டாரோ தெரியவில்லை. அல்லது, வந்தவர் சுண்டைக்காய் ஸ்டார்ட் அப் கம்பெனி நிறுவனர் தானே, நம் மேப்ஸை வைத்து என்ன கிழித்து விடுவார் என்னும் அசால்ட்டான நினைப்பாக இருக்கலாம். தங்கள் மேப்ஸைப் பயன்படுத்தும் உரிமையை ஈலானுக்கு இலவசமாகத் தந்தார்கள். ஈலான் தன் டைரக்டரியில் இந்த வரைபடங்களை இணைத்தார்.

தொழில்நுட்பத்துக்கு ஈலான் கனகச்சிதமாகத் திட்டம் போட்டது போல், மார்க்கெட்டிங்கிலும், கிம்பலின் நுணுக்கமான அணுகுமுறை. சிலிக்கான் பள்ளத்தாக்கில் இருந்த பாலா ஆல்ட்டோ, க்யூப்பர்ட்டினோ (Cupertino), ஸான் ஹோஸே (San Jose) ஆகிய நகரங்களைத் தேர்ந்தெடுத்தார். சிறிய உணவுவிடுதிகள், பீட்சா கடைகள், சலூன்கள், ரெடிமேட் துணிக்கடைகள் ஆகியவற்றின் மீது குறி. இவர்களின் உரிமையாளர்களை நேரடியாகச் சந்தித்தார்.

பெர்சனல் கம்ப்யூட்டரை மரப்பெட்டிக்குள் வைத்தார். சக்கரங்கள் வைத்த தள்ளுவண்டியின் மேல் இந்தப் பெட்டி. ஒவ்வொரு கடையாகப் போய் இதில் அண்ணன் செய்திருந்த டைரக்டரியின் டெமோ காட்டினார். கடைக்காரர்களுக்கு இணையத்தின் மதிப்பு புரியவில்லை. கிம்பலின் முகத்தைப் பார்த்தவுடனேயே “கெட் அவுட்” சொன்னார்கள். விடாக்கொண்டன் கிம்பல் மறுபடி, மறுபடி கதவுகளைத் தட்டினார். மெள்ள, மெள்ள விளம்பரங்கள் வரத் தொடங்கின. செலவுகளை ஓரளவு சமாளிக்கும் வருமானம்.

அண்ணனுக்கும், தம்பிக்கும் விசித்திரமான உறவு. ஒருவருக்கொருவர் ஈகோ பாராமல் உழைத்தார்கள். எல்லா பிசினஸ் விஷயங்களையும் தீவிரமாக விவாதிப்பார்கள். எத்தனை தீவிரம் தெரியுமா? அடிக்கடி வாக்கு வாதம் எல்லை மீறும். கைகள் நீளும். கட்டிப் பிடித்து, உருண்டு, புரண்டு சண்டை போடுவார்கள். அடிக்கிற கைதான் அணைக்கும் என்பதுபோல், கொஞ்ச நேரத்திலேயே பாசம் பொங்கி வழியும்.

முதல் மூன்று மாதங்கள். ஈலானும், கிம்பலும் வீட்டுக்கே போகவில்லை. 24 மணிநேரமும் அலுவலகம் தான். எப்போதாவது தூக்கம். மற்றபடி, உழைப்பு, உழைப்பு. ஆனாலும், சமாளிக்க முடியாத வேலைச்சுமை. நான்கு உதவியாளர்கள் அப்பாயிண்ட்டெட். படிப்புத் தகுதி வேண்டாம். கடுமையாக உழைக்கத் தயாராக இருந்தால் போதும். முதல் ஊழியர், தென்கொரியர்.

அப்போது தான் கல்லூரிப் படிப்பை முடித்திருந்தார். அவருக்கு ஈலான் தந்த ஊதியம் – ஆபீசில் இலவசத் தங்கும் வசதி, மூன்றுவேளைச் சாப்பாடு, வேண்டும்போதெல்லாம் காஃபி. சம்பளம்? கிடையாது என்று முதலிலேயே ஈலான் தெளிவாகச் சொல்லிவிட்டார்.

பிசினஸ் சூடு பிடிக்கத் தாமதமானாலும், ஈலானும், கிம்பலும் வருங்காலம் பற்றி முழு நம்பிக்கையோடு இருந்தார்கள். ஈலான் அடிக்கடி சொல்லுவார்,‘‘நான் ஒரு சாமுராய்.” இவர்கள், பன்னிரெண்டாம் நூற்றாண்டு முதல், 1870 வரை ஜப்பானிய ராணுவத்தில் இருந்தவர்கள். இவர்களின் கொள்கை, “வெற்றி அல்லது வீர மரணம்.” போரில் தோற்றுப்போய்விட்டால் எதிரியிடம் சரணடைய மாட்டார்கள். தற்கொலை செய்துகொள்வார்கள்; அல்லது சகவீரர்களின் கைகளால் மரணத்தைக் கேட்டுப் பெறுவார்கள். ஆமாம், சாமுராய்கள் போல், ஈலான் அகராதியில் தோல்வி என்பதே கிடையாது.

தன்னம்பிக்கை தான் மனிதனின் மிகப் பெரும் பலம். முகம், உடல் மொழி ஆகியவற்றில் அனிச்சைச்செயலாக வெளிப்படும். குடும்பம், உறவு, ஊர், உலகம் கவனிக்கும், மதிப்புதரும். வந்தது முதல் அங்கீகாரம். க்ரெக் கவுரி (Greg Kouri) என்னும் கனடா நாட்டு பிசினஸ்மேன் இருவரையும் சந்தித்தார். பிசினஸில் 6,000 டாலர்கள் முதலீடு செய்தார். மூன்றாவது பார்ட்னராகச் சேர்ந்துகொண்டார்.

வரும் கொஞ்சப் பணத்தையும் பிசினஸ் விழுங்கிக்கொண்டிருந்தது. முதலீட்டுக்கு வழி செய்யாவிட்டால், கப்பல் முழுகிவிடும் என்று க்ரெக் கவுரி உணர்ந்தார். பல துணிகர முதலீட்டாளர்களை ஈலான் சந்தித்தார். அவர் கேட்டது 10,000 டாலர்கள். ஒருவருக்கும் இந்த 25 வயது இளைஞரிடமும், அவர் பிசினஸ் திட்டத்திலும் நம்பிக்கை வரவில்லை. 1996. கம்பெனி தொடங்கி ஒரு வருடமாகிவிட்டது.

கஜானா காலியாகிக்கொண்டிருந்தது. நிறுவனர்கள் மூவர் மனங்களிலும் கேள்விக்குறிகள். அப்போது ஒரு ஆச்சரியம் – கும்பிடப்போன தெய்வம் குறுக்கே வந்தது. ``மோர் டேவிடோ வென்ச்சர்ஸ்” (Mohr Davidow Ventures) கலிபோர்னியா மாநிலம், சான் மாட்டியோ (San Mateo) நகரத்தில், துணிகர முதலீட்டு பிசினஸ் தொடங்கியிருந்தார்கள்.

புதிய வாய்ப்புகளைத் தேடிக்கொண்டிருந்தார்கள். ஈலானின் ஐடியா அவர்களுக்கு வித்தியாசமானதாக இருந்தது. அவர்களுக்கும், “க்ளோபல் லின்க் இன்ஃபர்மேஷன் நெட்வொர்க்”கின் மூன்று நிறுவனர்களுக்குமிடையே பல சந்திப்புகள், பேச்சுவார்த்தைகள், பேரங்கள். ஈலான் எதிர்பார்த்தது 10,000 டாலர்கள். ஈலான் குழுவுக்கு ஆனந்த அதிர்ச்சி. MDW தந்தது 3 மில்லியன் டாலர்கள்!
ஒரு நிபந்தனை – கம்பெனி பெயரை ``ஜிப் 2” (Zip 2 ) என்று மாற்றவேண்டும். பல காரணங்கள்.

``ஜிப்” என்றால், “மிக வேகமாகச் செயல்படுவது” என்று அர்த்தம். நம் ஊரின் விலாசங்களில் ``பின்கோட்” (Pincode) பயன்படுத்துகிறோம். இதைப்போல், அமெரிக்க அஞ்சல் துறை ‘‘ஜிப்கோட்” (Zipcode) உபயோகிக்கிறார்கள். முகவரியில் இந்தக் குறியீட்டை இடுவதன் மூலம் விரைவாகச் செல்லும் என்னும் சங்கேதம். கம்ப்யூட்டர் மொழியில், ‘‘ஜிப் கோப்பு” (Zip File) என்பது, பல ஆவணங்களைத் தனக்குள் உள்ளடக்கிய இறுக்கக் கோப்பை (Compressed File) குறிக்கும்.

ஏகப்பட்ட விவரங்களைச் சுருக்கமாக, விரைவாகத் தரும் நிறுவனம் என்று அர்த்தம். பெயரில் ஏன் ‘‘2”? கடைகளுடன் தொடர்பு (To) என்றோ, இருவழித் தொடர்பு (Two-way) என்றோ இருக்கலாம். கம்பெனிக்குப் பெயர் வைப்பதில் இத்தனை சூட்சுமச் சிந்தனை. பெயரில் மட்டுமல்ல, கம்பெனியின் செயல் பாட்டிலும் வந்தன மாற்றங்கள் – சாதாரண மாற்றங்களல்ல, ஈலானுக்கு ஒளிமயமான எதிர்காலம் தந்த திருப்புமுனைகள்.

(புதியதோர் உலகம் செய்வோம்!)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x