Published : 03 Feb 2020 12:09 PM
Last Updated : 03 Feb 2020 12:09 PM

பேட்டரி கார்களில் களம் காணும் டாடா

அறிமுகமானது ‘நெக்ஸான் இவி’

டாடா நிறுவனம் தொடர்ச்சியாக புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்துவருகிறது. மிக சமீபத்திய அறிமுகம் நெக்ஸான் இவி. வாகன நிறுவனங்கள் மின்சார வாகனத் தயாரிப்பில் தீவிர கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளன. அந்த வகையில் டாடா நிறுவனம் டிகோரை கடந்த ஆண்டு அறிமுகம் செய்தது. இந்நிலையில் அந்நிறுவனத்தின் இரண்டாவது மின்சார வாகனமாக நெக்ஸான் அறிமுகம் கண்டுள்ளது.

புத்தாண்டு பிறந்து ஒரு மாதத்துக்குள்ளாகவே 5 தயாரிப்புகளை டாடா அறிமுகம் செய்துள்ளது. அல்ட்ரோஸ், 2020 நெக்ஸான், 2020 டிகோர், 2020 டியாகோ, இறுதியாக நெக்ஸான் இவி.

இந்தப் புதிய மாடல் எக்ஸ்எம், எக்ஸ்இசட்பிளஸ், எக்ஸ்இசட்பிளஸ் லக்ஸ் ஆகிய மூன்று வேரியண்டுகளில் வெளிவருகிறது.

ஆட்டோமெடிக் கிளைமேட் கன்ட்ரோல், பவர் விண்டோஸ், சாவி இல்லாமல் பொத்தான் மூலம் வாகனத்தை இயக்கச் செய்யும் வசதி, இரண்டு ஏர்பேக், ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல், ஏபிஎஸ் மற்றும் இபிடி பிரேக்கிங் சிஸ்டம் ஆகிய வசதிகளை பேஸ் வேரியன்டான எக்ஸ்எம் கொண்டிருக்கிறது.

இவ்வசதிகள் அனைத்தையும் உள்ளடக்கி கூடுதலாக, 7 அங்குல தொடுதிரை, 16 அங்குல டைமண்ட் கட் அலாய் வீல்ஸ், பனி விளக்குகள், கேமரா உதவியுடன் கூடிய ரிவர்ஸ் பார்க் அசிஸ்ட் ஆகிய நவீன வசதிகளைக் கொண்டிருக்கிறது எக்ஸ்இசட்பிளஸ். டாப் வேரியன்டான எக்ஸ்இசட்பிளஸ் லக்ஸ், முந்தைய வேரியண்ட்களின் அனைத்து அம்சங்களையும் உள்ளிடக்கி கூடுதலாக, தானியங்கி முகப்பு விளக்குகள், சன்ரூஃப், மழையின் போது தானாகவே இயங்கும் வைப்பர் ஆகிய வசதிகளைக் கொண்டுள்ளது.

நெக்ஸான் இவி 30.2 கிலோவாட்ஸ்ஹவர் திறன் கொண்ட லித்தியம் அயன் பேட்டரியை கொண்டிருக்கிறது. இதன் எலக்ட்ரிக் மோட்டார் 129 பிஎஸ் பவரை 245 என்எம் டார்க்கில் உற்பத்தி செய்யும். பாஸ்ட் சார்ஜிங்கில் 1 மணி நேரத்தில் 80 சார்ஜ் நிரம்பிவிடும். ரெகுலர் சார்ஜிங்கில் 100 சதவீதம் சார்ஜ் செய்ய 8 மணி நேரங்கள் ஆகும். முழுவதுமாக நிரப்பப்பட்ட பேட்டரியைக் கொண்டு 312 கிமீ வரை பயணிக்க முடியும். இதன் பேட்டரிக்கு 8 ஆண்டுகள் வரை வாரண்டி தரப்படுகிறது.

டிரைவ் மற்றும் ஸ்போர்ட் என்ற இருவகை ஒட்டுத் தேர்வு முறைகள் இதில் உள்ளன. சிக்னேச்சர் டீல் புளூ, கிளாசியர் ஒயிட் மற்றும் மூன்லைட் சில்வர் ஆகிய மூன்று வண்ணங்களில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹூண்டாயின் கோனா மற்றும் எம்ஜி-யின் இசட் எஸ் ஆகிய மாடல்களுக்குப் போட்டியாக டாடாவின் இந்தப் புதிய அறிமுகம் திகழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பேஸ் வேரியன்டான எக்ஸ்எம் விலை ரூ.13.99 லட்சம், மிட் வேரியன்டான எக்ஸ்இசட்பிளஸ் ரூ.14.99 லட்சம், எக்ஸ் இசட்பிளஸ் லக்ஸ் ரூ.15.99 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த வருடத்தில் மேலும் 4 மின்சார வாகனங்களை டாடா அறிமுகப்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெக்ஸான் இவிக்கான முன்பதிவு இவ்வருட இறுதியில் டிசம்பர் மாதம் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூ.21,000 செலுத்தி முன்பதிவு செய்துகொள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x