Published : 06 Feb 2020 02:42 PM
Last Updated : 06 Feb 2020 02:42 PM

வானவில் பெண்கள்: துணிந்து நின்றார் துயரம் வென்றார்

சென்னை காசிமேடு என்றாலே பலரது மனக்கண்ணிலும் மீன்பிடி வலைகளும் மீனவக் குப்பங்களும் அடங்கிய சித்திரமே பெரும்பாலும் தோன்றும். ஆனால், கண்ணைக் கவரும் கைவினைப் பொருட்களைச் செய்து அந்தச் சித்திரங்களோடு புதுவிதச் சித்திரத்தை உருவாக்குகிறார் ஸ்டெல்லா.

காசிமேட்டின் காசிமாநகரில் உள்ள வீடுபோன்ற அந்த நிறுவனத்தினுள் பெண்கள் சிலர் அட்டைகளை ஒட்டுவதும் பல வண்ணப் பூக்களைச் செய்வதுமாக இருக்க, சிலர் காகிதங்களையும் மக்கும் பொருட்களையும் மறுசுழற்சி செய்யும் வேலையில் இருந்தனர். ஆர்டர் கொடுத்தவர்களுக்குப் பொருட்கள் சரியாகச் சென்றுவிட்டதா என்பதை சரிபார்த்துக்கொண்டிருந்தார் ஸ்டெல்லா. தான் கடந்துவந்த பாதையைப் பணியாளர்கள் கேட்கிற சந்தேகங்களுக்குப் பதில் சொல்லியவாறு பகிர்ந்துகொண்டார்.

சென்னை கிண்டியைச் சேர்ந்த ஸ்டெல்லா எம்.காம். பட்டதாரி. திருமணத்துக்குப் பின் புகுந்த வீடு, கணவன், குழந்தைகள் என்று தனக்கான உலகத்தை வடிவமைத்துக்கொண்டார். தான் எதற்காகப் படித்திருக்கிறோம் என்பது பற்றிய சிந்தனையெல்லாம் இல்லாமல் வாழ்க்கையை அதன் போக்கில் வாழ்ந்துகொண்டிருந்தவரைப் பேரிடியாகத் தாக்கியது அந்தச் செய்தி. கணவர் சுந்தர் வேலைசெய்துவந்த நிறுவனம், பொருளாதாரச் சரிவால் மூடப்பட்டது. வேறு எங்கும் வேலை கிடைக்கவில்லை.

அதைத் தொடர்ந்து சுந்தரின் உடல்நலமும் பாதிக்கப்பட்டது. எல்லாத் திசைகளில் இருந்தும் வாழ்க்கை ஸ்டெல்லா மீது போர்த்தொடுக்க ஆரம்பித்தது. ஆரம்பத்தில் கொஞ்சம் கலங்கியவர், அதன் பின் உறுதியையும் மன திடத்தையும் கேடயமாக உயர்த்திப் பிடித்தார். “இப்படியே வீட்டில் முடங்கிக் கிடந்தால் எதுவும் மாறாதுன்னு தோணுச்சு” என்று சொன்னவர், தான் பயிற்சிபெற்ற ஸ்கிரீன் பிரிண்டிங் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார். மட்கும் பொருட்களை மறுசுழற்சி செய்து மீண்டும் பயன்படுத்தி புதிய பொருட்களைச் செய்யும் வேலை அது.

தன் கையே தனக்கு உதவி

சில காலம் அங்கே பணிபுரிந்தவர், 2003-ல் சுயமாகத் தொழில் தொடங்க முடிவெடுத்தார். ஆனால், முதலீட்டுக்கு எங்கே போவது என்ற யோசனை அடுத்த கட்டத்துக்கு நகர விடாமல் அவரைத் தடுத்தது. எவ்வளவோ துயரை எதிர்கொண்டு சமாளித்திருந்த ஸ்டெல்லா, இதையும் வெல்வோம் என்ற உறுதியுடன் துணிந்து வீட்டை அடமானம் வைத்தார். சிறுதொழில் செய்வோருக்கான பிரதம மந்திரியின் ரோஜர் யோஜனா திட்டத்தின்மூலம் இரண்டு லட்சம் ரூபாய் பெற்று, தொழிலைத் தொடங்கினார்.

பொருட்களை உற்பத்தி செய்வதைவிட அவற்றைச் சந்தைப்படுத்துவதுதான் நம் வெற்றியை உறுதிப்படுத்தும் என்பதையும் ஸ்டெல்லா உணர்ந்திருந்தார். அதனால், மாதம்தோறும் கணிசமான அளவுக்கு வருமானம் வரும் வகையில் வாடிக்கையாளர்களை உறுதிசெய்துகொண்ட பின்னரே தொழிலில் ஆழக்கால் வைத்தார். பொருட்களின் தரமும் நேர்த்தியும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகரித்தன. உதவிக்கு ஆட்கள் வைத்து வேலைசெய்யும் அளவுக்குத் தொழில் சில மாதங்களிலேயே விரிவடைந்தது.

“எல்லாரையும் போல் நானும் ஆரம்பத்தில் வங்கிக் கடனைப் பத்தி பயந்தேன். ஆனால், முயன்றுதான் பார்க்கலாமேன்னு நம்பிக்கையோடு இதில் இறங்கினேன்” என்று புன்னகைக்கும் ஸ்டெல்லா, உற்பத்திப் பொருட்களின் எண்ணிக்கையைப் படிப்படியாக உயர்த்தினார். ஆரம்பத்தில் இவரது நிறுவனம் சார்பில் ஒன்றிரண்டு பொருட்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டன. தற்போது புத்தகம், புத்தகப்பை, எழுத உதவும் அட்டை உள்ளிட்ட 85 வகையான பொருட்களைத் தயாரிக்கின்றனர். மக்கும் குப்பைகளை மறுசுழற்சி செய்து அவற்றிலிருந்து இவை தயாரிக்கப்படுவதால் சூழலுக்குக் கேடு விளைவிக்காத வகையில் செயல்படுகிறோம் என்ற பெருமிதமும் ஸ்டெல்லாவுக்கு இருக்கிறது.

விரிவடைந்த தொழில்

மறு சுழற்சி தொடர்பாகக் கல்லூரி நாட்களில் கற்றுக் கொண்ட தொழில்நுட்ப அறிவைத் தொடர்ச்சியான கற்றல் மூலம் மேம்படுத்திக்கொண்டார். SSI (small scale industry), entrepreneurship development institute, MSME (micro small scale industry medium entrepreneurship) போன்ற நிறுவனங்களிலும் பயிற்சிபெற்றிருக்கிறார். சென்னையில் சில பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் அலுவலகங்களுக்கும் தனது நிறுவனப் பொருட்களை விநியோகிக்கிறார். “எவ்வளவு சிக்கல் வந்தாலும் இந்தத் தொழிலைக் கைவிடக் கூடாதுன்னு நினைத்தேன். நான் விரும்பிப் படித்த படிப்பு இது. எனக்குத் தெரிந்த வேலையும் இதுதான்” என்று சொல்லும் ஸ்டெல்லா, எந்தத் துறையாக இருந்தாலும் அதன் ஆழ அகலங்களைத் தெரிந்துகொண்டால் சாதிக்கலாம் என்கிறார்.

ஓரளவு பொருளாதார தன்னிறைவை நோக்கி நகர்ந்தபோது கணவர் இறந்துவிட, மகள்கள் இருவரையும் வளர்த்து ஆளாக்கும் முழுப் பொறுப்பும் ஸ்டெல்லாவுக்கு மட்டும் என்றாகிவிட்டது. தொழிலை விரிவுபடுத்த நினைத்தார். அதற்குப் பணம் தேவை என்பதால் ‘முத்ரா’ திட்டத்தின்மூலம் வங்கியில் ஐந்து லட்சம் கடன் பெற்றார். “இந்தக் கடன்தான் இன்னும் அதிகமாக உழைக்கத் தூண்டியது. எப்படியும் அதை அடைத்துவிட வேண்டும் என அயராமல் ஓடினேன்” என்று சொல்லும் ஸ்டெல்லா தான் நினைத்ததைப் போலவே தாமதம் ஏதுமின்றி வங்கிக் கடனை அடைத்து முடித்தார்.

கடனை அடைத்துவிட்டோம் என்ற நம்பிக்கை, ஸ்டெல்லாவைப் பயிற்றுநர் அவதாரம் எடுக்கச் செய்தது. தான் கற்றுக்கொண்ட வேலையை, வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் மற்றவருக்குக் கற்றுத்தரத் தொடங்கினார். பெண்களின் முன்னேற்றத்துக்காகச் செயல்படும் அமைப்புகளோடு இணைந்து பெண்களுக்குச் சுயதொழில் பயிற்சி வழங்கிவருகிறார்.

நிறைவு தரும் பயிற்சி

சுயதொழிலால் எந்த அளவுக்கு முன்னேற முடியும் என்பதைத் தன் கதையை வைத்தே பெண்களுக்கு எடுத்துச்சொல்கிறார். பெண்கள் சொந்தக் காலில் நிற்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும் மறக்காமல் குறிப்பிடுகிறார். “குடிசை மாற்று வாரியம், கொருக்குப்பேட்டை, வியாசர்பாடின்னு நான் பயிற்சியளித்த இடங்களில் பெண்கள் சுயதொழிலில் ஈடுபடத் தொடங்கிவிட்டனர்” என்கிறார் நிறைவுடன். ராயபுரம், பனையூர், பழவேற்காடு, மரக்காணம் போன்ற பகுதிகளிலும் இவரிடம் பயிற்சிபெற்றவர்கள் தற்போது சுயதொழிலில் ஈடுபட்டுவருகின்றனர்.

குறிப்பாக, திருச்சி பெரம்பலூரில் உப்பளத்தில் வேலைசெய்யும் தொழிலாளர்களுக்குப் பயிற்சியளித்ததை நெகிழ்ச்சி யுடன் குறிப்பிடுகிறார். “அவங்களுக்கு நான்கு மாதங்களுக்கு வேலை இருக்காது. அந்த நேரத்தில் கைவினைத் தொழிலைச் செய்யலாமேன்னு நான் பயிற்சி கொடுத்தேன். இப்ப அவங்க உப்பள வேலை இல்லாத மாதங்களில் கைவினைப் பொருட்களைச் செய்யறாங்க” என்று சொல்லும் ஸ்டெல்லா தையல் பயிற்சியையும் அளித்துவருகிறார்.

தற்போது இவரிடம் பத்துப் பேர் வேலை செய்கின்றனர். அவர்களுக்கு மாதம் கணிசமான தொகையை ஊதியமாக வழங்கும் அளவுக்கு ஸ்டெல்லா முன்னேறியிருக்கிறார். “இந்த நிறுவனத்தை நான்தான் தொடங்கினேன். பெண்ணுக்குப் பொருளாதார பலம் எவ்வளவு அவசியம் என்பதை உணர்ந்திருக்கிறேன். அதனால்தான் எங்கள் நிறுவனத்தில் பெண்களை மட்டும் வேலைக்கு அமர்த்துகிறேன்.

வீட்டில் இருந்த படியே வேலைசெய்ய விரும்பும் பெண்களுக்கும் பயிற்சியளிக்கிறேன். என் பெற்றோர் பக்கபலமாக இருந்தனர். நான் படித்த படிப்பும் எனக்குக் கைகொடுத்தது. கணவர் இல்லாமல் இந்தப் பெண்ணின் வாழ்க்கை என்னவாகுமோ எனப் பலரும் நினைத்தனர். நான் இன்று அடைந்திருக்கும் நிலைதான் அவர்களுக்கு என்னுடைய பதில்” என்று சொல்லும் ஸ்டெல்லா, வாழ்க்கையில் சோதனைகளை நினைத்து சோர்ந்துபோகிறவர்களுக்கும் பதில் வைத்திருக்கிறார்.

கட்டுரை, படங்கள்:
வி.சாமுவேல்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x