Published : 02 Feb 2020 10:35 AM
Last Updated : 02 Feb 2020 10:35 AM

பெண்கள் 360: புத்தகங்களே வரதட்சணை

தொகுப்பு: ரேணுகா

கருக்கலைப்புச் சட்டத் திருத்தம்

கருக்கலைப்பு செய்வதற்கான காலவரம்பைத் தற்போதுள்ள 20 வாரங்களிருந்து 24 வாரங்களாக உயர்த்துவதற்கான சட்டத் திருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

கருக்கலைப்பு செய்வதற்காகத் திருத்தி அமைக்கப்பட்டுள்ள இந்த மசோதா நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படவுள்ளது. 1971-ல் கொண்டுவரப்பட்ட மருத்துவரீதியிலான கருக்கலைப்புச் சட்டத்தில் 20 வாரமுள்ள கருவைக் கலைக்க இரண்டு மருத்துவர்களின் ஒப்புதல் கட்டாயம். தற்போது கொண்டுவரப்படவுள்ள கருக்கலைப்பு திருத்தச் சட்டத்தில் 20 வாரமுள்ள கருவைக் கலைக்க ஒரு மருத்துவரின் ஒப்புதலே போதுமானது. மேலும், 20 முதல் 24 வாரமுள்ள கருவைக் கலைப்பதற்கான புதிய பிரிவும் அதற்கு ஒப்புதல் அளிப்பதற்கு இரண்டு மருத்துவர்களின் கருத்தும் தேவை என்பதும் சேர்க்கப்பட்டுள்ளது. தாயின் உடல்நிலை அல்லது சிசுவின் வளர்ச்சியைக் கருத்தில்கொண்டு மனிதாபிமான முறையில் சட்டப்படியான, பாதுகாப்பான கருக்கலைப்பு பெண்களுக்குக் கிடைக்கும் வகையில் இந்தக் கருக்கலைப்பு திருத்த மசோதா தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும், கருக்கலைப்பு செய்து கொண்ட பெண்ணின் பெயர், இதர விவரங்களைச் சட்டப்படி அங்கீகாரம் பெற்ற நபரைத் தவிர வேறுயாரிடமும் தெரிவிக்கக் கூடாது என்பது இதில் குறிப்பிடத் தகுந்தது. பொதுநல அமைப்புகளிடம் நடத்தப்பட்ட விரிவான ஆலோசனைக்குப் பிறகே இந்தச் சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ்

சீனாவை அச்சுறுத்திவரும் கரோனா வைரஸ் பாதிப்பால் இதுவரை 170-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களைத் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இந்நிலையில் வூகான் பல்கலைக்கழகத்தில் படித்துவந்த இந்திய மாணவி சில நாட்களுக்கு முன் தன் சொந்த மாநிலமான கேரளத்துக்கு வந்தார்.

உடல்நிலை பாதிக்கப்பட்ட மாணவியைப் பரிசோதனை செய்தபோது அவருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதை மத்திய, கேரள சுகாதாரத்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்ட மாணவி தனிமைப் படுத்தப்பட்டு, அவருக்கு திருச்சூர் மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. சளி, காய்ச்சல், இருமல், தொண்டை வலி, நெஞ்சுவலி உள்ளிட்டவை இந்த வைரஸ் தொற்றின் அறிகுறிகள். லேசான காய்ச்சலில் தொடங்கும் இந்த வைரஸ் பாதிப்பைத் தொடக்கத்திலேயே கண்டறிவது நல்லது. தற்போதுவரை இதற்கு மாற்று மருந்து கண்டுபிடிக்கவில்லை. இதனால், கரோனா வைரஸ் பாதிப்பு அறிகுறிகள் இருப்பவர்கள் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்குச் சென்று பரிசோதனை செய்துகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

பார்ப்போமே, நாம் பார்ப்போமே

குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. இந்தப் போராட்டத்தில் கலந்துகொள்பவர்கள் புகழ்பெற்ற உருது கவிஞர் ‘பைஸ் அகமது பைஸ்’ 1979-ல் எழுதிய ‘Hum dekhenge’ பாடலைப் பாடியபடியும் கோஷங்களாகச் சொல்லியும் தங்கள் எதிர்ப்பைப் பதிவுசெய்தனர். மக்களின் ஒற்றுமையை உணர்த்தும் இப்பாடலை எழுத்தாளர் பொன்னி, மங்கை இருவரும் தமிழில் மொழிபெயர்க்க, பாடகி அஞ்சனா பாடியுள்ளார். இது சமூக வலைத்தளங்களில் வைரலானது.

‘விடியலாய் மலரும் அந்நாள்
அதனை நாம் பார்ப்போமே
உள்ளுறை இறையை உணர்ந்துவிட்டால்
இனி பிரிவும் வெறுப்பும் கரைந்திடுமோ
ஒன்றாய் நிற்க அனுமதியற்ற நாம்
அன்பின் முற்றம் சேர்வோமே’

என்று தொடரும் இந்தப் பாடல் மதங்களைக் கடந்து மனிதநேயத்தை முன்வைக்கிறது.

புத்தகங்களே வரதட்சணை

கேரளத்தைச் சேர்ந்த அஜ்னா நிஜாம் என்ற பெண் தன் திருமணத்துக்கு வரதட்சணையாக மாப்பிள்ளையிடமிருந்து புத்தகங்களைக் கேட்டு ஆச்சரியப்படுத்தியுள்ளார்.

கொல்லம் பகுதியைச் சேர்ந்த அஜ்னா நிஜாம், பொறியியல் பட்டதாரி. இவருக்கும் கட்டிடப் பெறியியல் பட்டதாரியான இஜாஸ் ஹக்கிமுக்கும் சில நாட்களுக்கு முன் நிச்சயதார்தம் நடைபெற்றது. அப்போது இஸ்லாமிய முறைப்படி மணப்பெண் மாப்பிள்ளையிடம் தான் விரும்பும் எதை வேண்டுமானாலும் வரதட்சணையாகக் கேட்கலாம். பொதுவாக தங்க நகைகள், வீடு, கார், இருசக்கர வாகனம் போன்றவற்றைத்தான் மணப்பெண்களில் பலரும் கேட்பார்கள். ஆனால், அஜ்னாவோ தனக்கு 80 புத்தகங்கள் வேண்டும் எனக் கேட்டார். அஜ்னாவின் இந்த முற்போக்கான சிந்தனை அனைவரது பாராட்டையும் பெற்றது. அஜ்னா விரும்பியபடி மாப்பிள்ளை இஜாஸ் திருமணத்தின்போது கூடுதலாக 20 புத்தகங்களைச் சேர்த்து மொத்தம் 100 புத்தகங்களை வரதட்சணையாகக் கொடுத்தார். தனக்குக் கிடைத்த புத்தகங்களுடன் அஜ்னா வெளியிட்ட ஒளிப்படம் சமூக வலைத்தளங்களில் கவனம்பெற்றது.

பெண்களால் பெண்களுக்காக

டெல்லியில் உள்ள இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் பெண் பயணிகளுக்காகப் பெண் ஓட்டுநர்களுடன் இயங்கும் வாடகை கார் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தப் புதிய முயற்சி ‘ஷாகா’ (Sakha) வாடகை கார் நிறுவனத்தின் மூலம் தொடங்கப்பட்டுள்ளது. பெண்களின் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு பெண் ஓட்டுநர்களுடன் இயங்கும் இந்த நிறுவனத்தின் கார்களில் பெண்கள் மட்டுமே பயணம் செய்ய முடியும். இது குறித்துப் பேசிய ஷாகா நிறுவனர் அரவிந்த் வத்ரா, “பத்தாண்டுகளாக இத்துறையில் செயல்பட்டு வருகிறோம். பெண்களின் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு இந்தத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளோம். பெண் ஓட்டுநர்களுக்கு முறையான ஓட்டுநர் பயிற்சி மட்டுமல்லாமல் தற்காப்புக் கலைகள், ஆளுமைத்திறன் போன்ற பயிற்சிகளையும் அளித்துள்ளோம். ஆபத்தான சூழ்நிலையில் முன்யோசனையுடன் செயல்படவே அவர்களுக்கு இதுபோன்ற பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன” என்றார். பெண்களுக்குப் பாதுகாப்பற்ற நகரங்களில் ஒன்றான டெல்லியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இத்திட்டத்தைப் பெண்கள் வரவேற்றுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x