Published : 02 Feb 2020 10:28 AM
Last Updated : 02 Feb 2020 10:28 AM

அன்றொரு நாள் இதே நிலவில் 43: ஊருக்காரக வேதனை சங்கிலியாண்டிக்குப் புரியுமா?

பாரத தேவி

நிலாக் காலங்களில் கொழுத்த கிடாயோடு வனத்துக்குள்ளிருக்கும் குலதெய்வத்தின் கோயிலுக்குச் சொந்த பந்தங்களை அழைத்துக்கொண்டு, ஏழெட்டு மாட்டு வண்டிகளோடு போய் நுரை சுழியிட்டுப் பொங்கி ஓடும் ஆற்றில் குளித்துக் கிடா வெட்டி, அங்கிருக்கும் பளியர்களுக்கும் கொடுத்து தாங்களும் விருந்துண்டு வந்தார்கள். சந்தோசமும் நிறைவும் மனிதர்களின் முகங்களில் மட்டுமல்ல ஊருக்குள்ளும் தவழ்ந்து விளையாடின.

மறு வருசம் ஆனி போய் ஆடி பிறந்துவிட்டது. வானம் தான் உடுத்தியிருந்த நீல நிறச் சேலையைக் கழற்றாமல் வேடிக்கை காட்டிக் கொண்டிருந்தது. விடியற்காலை வெயிலில்கூடச் சிறு ஈரப்பதமில்லை. வெயில் வேறு வெள்ளை நிறத்தில் மாறி அனல்வீசத் தொடங்கியிருந்தது. விவசாயிகளுக்கெல்லாம் கவலை இருந்தாலும் எண்ணெய் குறைந்த தீபமாய், கொஞ்சம் நம்பிக்கை சுடர் விட்டுக்கொண்டிருந்தது.

கண்களில் பசியின் வேட்கை

அடுக்குப் பானைகளிலும் குலுக்கை களிலும் தானியங்களை எடுப்பதற்காகக் கைவிடும்போது நெஞ்சுக்குள் திடுக்கென்றது. வெறும் பானைகளைத்தான் கைகள் துழாவின. பெரிய பெரிய விவசாயிகள்தாம் இரண்டு மூடை, மூன்று மூடை என்று அதிகமாகத் தானியத்தைச் சேமித்து வைத்திருப்பார்கள். மற்றவர்கள் எல்லோரும் அடுத்த வருச மழையையும் தங்கள் உழைப்பையும் நம்பி எல்லாவற்றையும் விற்றுவிடுவார்கள். அதற்கான தேவையும் அவர்களுக்கு இருந்தது. இப்போது ஆடி போய் ஐப்பசி, கார்த்திகை மாதங்கள்கூடப் பிறந்துவிட்டன. ஆனால், வானத்தில் சிறு மேகத்துணுக்கைகூடக் காணோம். வானம் எப்போதும்போல் அடம்பிடிக்காமல் சிறு குழந்தையாகவே இருந்தது. விவசாயிகளைக் கவலை ஆழமாக துளைத்தது. விடியும் முன்பே காடுகளுக்கு மேயப்போகும் ஆடு, மாடுகள் கண்களில் பசியின் வேட்கையோடு வயிறு பள்ளம் வாங்கத் திரும்பிவந்தன. வரப்புகளிலிருந்த காய்ந்த புற்கள்கூட நிறம் மாறி வெறும் தூசி ஏறிய மண்ணாகவே தெரிந்தன. பசுமை என்பது மருந்துக்குக்கூட இல்லை.

நான்கு படி, ஐந்து படி என்று மரக்காய் நிறைய அள்ளி வெயிலில் காயப்போட்டுக் குத்திய தானியங்கள் இப்போது வெறும் இரண்டு படியாகவும் ஒரு படியாகவும் மாறிப்போயின. செழிப்பான காலத்தில் சாப்பிட வரச்சொல்லி கூப்பிடும்போது வருவதற்கு அடம்பிடித்து வர மறுத்த சிறுவர்கள் எல்லாம் இப்போது, “கஞ்சி வேணும், வயிறு பசிக்கு” என்று அம்மாக்களோடு ஒட்டிக்கொண்டு திரிந்தார்கள். அவர்களின் கண்களில் உயிரின் ஓட்டம் தெரியவில்லை. பசியின் கொடுமைதான் தெரிந்தது. அந்தக் குழந்தைகளைப் பசியும் கண்ணீரும் வாடகைக்கு எடுத்துக்கொண்டன. ஒருவரின் அதிலும் சிறுபிள்ளைகளின் பசியைப் போக்கினால் தெய்வத்தையே நேரில் தரிசித்த புண்ணியம் உண்டாகுமென்று புராணங்களில் சொல்லப்பட்டு இருக்கிறது. ஆனால், நம் நாட்டிலோ தெய்வங்கள் பாலிலும் பழத்திலும் தேனிலுமாகக் குளிப்பதை நாள்தோறும் பார்க்கிறோம். இங்கே எத்தனையோ குழந்தைகள் தங்கள் வயிற்றுக்குள் பொங்கும் பசியைச் சொல்லத் தெரியாமல் குரலெடுத்து அழவும் தெரியாமல் சுருண்டுகிடக்கின்றன.

தண்ணீர் தானம்

பெரிய ஆட்கள் எல்லாம் எப்படியோ தங்கள் பசியை அடக்கிக்கொள்ள பழகினார்களே தவிர தங்கள் பிள்ளைகளின் பசியை அடக்கத் தெரியாமல் தவித்தார்கள். கிணறுகளிலும் தண்ணீர் வறண்டுபோனது. கிணற்றுக்குள் குடியிருந்த தவளைகள் ஈரவாசனையறிந்து வேறு கிணறுகளைத் தேடி ஓடின. சிறு சிறு ஊற்றடித்த கிணறுகளை இரவு நேரத்தில் இளவட்டங்கள் தோண்ட, குமரிகள் மண் சுமந்தார்கள். ஆனால், அவர்கள் வயிற்றுக்குள் இருந்த பசி அவர்களை அந்த வேலையைக்கூடச் செய்யவிடாமல் தடுத்தது.

வனங்களில், மலை உச்சிகளில், கடல்களில் வாழும் அனைத்து உயிரனங்களுக்கும் செய்யும் கொடுமைகள் கொஞ்சம் நஞ்சமல்ல. அவை எங்கே போய்ப் பதுங்கினாலும் பிடித்து இழுத்துவந்து உணவாக்கிவிடுவார்கள். அப்படித்தான் இந்தப் பஞ்சம் வந்ததும் வனங்களைத் தேடி ஓடினார்கள். வனங்கள் பசுமை இழந்து பல்போன பொக்கை வாயாக வெறும் கிளைகளாக நின்றன. மலை உச்சிக்குத் தாவினார்கள். அங்கே புல், பூண்டிலிருந்து அனைத்தும் கறுத்துக் கிடந்தன. இந்தப் பஞ்சத்திலிருந்து விடுவித்துக்கொள்ள வழிதெரியாமல் திகைத்து நின்றார்கள்.

ஊருக்குள் சங்கிலியாண்டி ஒருவரின் கிணற்றில்தான் கொஞ்சம் தண்ணீர் இருந்தது. கிராமங்களில் சில நேரம் இப்படித் தண்ணீர் கஷ்டம் வருவது சகஜம்தான். அப்போதெல்லாம் தண்ணீர் உள்ள கிணற்றுக்காரர்கள் யாரையும் குளிக்கவிடாமல் படிகளில் வேலிகளை அடைத்துவிட்டு அந்த தண்ணியையே மனிதர்கள், ஆடு, மாடுகள் உபயோகித்துக்கொள்ள மனமிரங்கி தானம் பண்ணுவார்கள். ஒரு வாய்க்கா கத்தரி நடுகிறேன், ஒரு வாய்க்கா தக்காளி நடுகிறேன் என்று வெள்ளாமை வைக்கக் கூடாது. ஏனென்றால், அதற்குத் தண்ணீர் இறைக்கிறேன் என்று இறைத்துவிட்டால் அந்தக் கடுமையான கோடைக்காலத்தில் கிணற்றில் தண்ணீர் ஊறாது என்பது எல்லோருக்கும் தெரியும்.

அன்னத்தாயின் எகத்தாளம்

இது பற்றி ஊர்க்கூட்டம் போட்டு, சங்கிலியாண்டியிடம் கேட்க வேண்டுமென்று ஊர் முடிவெடுத்தது. இரவு வந்த உடனே ஊர்ச்சாட்டுகிறவன், “இன்னைக்கு ஊர்க்கூட்டம். எல்லோரும் வந்துருங்கப்பச்சி” என்று சாட்டிவிட்டுப்போனான். அவன் சாட்டுவதைக் கேட்ட சங்கிலியாண்டிக்கும் அவன் பொண்டாட்டி அன்னத்தாயிக்கும் பவுசென்றால் பவுசு பொறுக்க முடியவில்லை. சதை பிதுங்கிய கழுத்தில் சிவப்புக் கல்லில் அட்டியல் போட்டிருந்த அன்னத்தாயி, பனைநார்க் கட்டிலில் உட்கார்ந்திருந்த புருசன் காலடியில் சம்மணம் போட்டு உட்கார்ந்திருந்தாள். வெற்றிலையின் காம்பைக் கிள்ளியவாறே “நம்ம கெணத்துத் தண்ணியக் கேக்கத்தேன் இந்த ஊரு நாயுக கூட்டம் போடுதுக. நீரு கூட்டத்துக்குப் போரும். ஆனால், வாயத்தொறவாதரும். அவுகளே பேசிக்கிட்டுக் கிடக்கட்டும்” என்றாள் கர்வத்தோடு.

மடித்த வெற்றிலைக்காக வாயைத் திறந்த சங்கிலியாண்டி, “என்னத்தா உம்பாட்டுக்குக் கூறுல்லாம பேசுத. நம்மகிட்ட தண்ணி கேக்கத்தேன் ஊர்க்கூட்டமே போடுதாக. இதுல நானு வாயத் தொறக்காம எப்படி இருக்க?” என்றார் எரிச்சலோடு. “வாயத் தொறந்தீருன்னா எப்படியாவது உம்மவாயப் புடுங்கி அத இதப் பேசி உம்மகிட்டருந்து எப்படியும் கெணத்துத் தண்ணிய வாங்கிருவாக. இப்ப கொடுக்க வெத்தலய கீழத்துப்பாம மென்னுக்கிட்டே போயி பேசாம மேடையில ஒரு மூலயில உக்காந்திரும். அவுகளா பேசி முடிக்கட்டும். கடசியாதேன் உம்மகிட்ட என்னப்பா உன் கிணத்துல தண்ணி எடுத்துக்கலாமான்னு கேப்பாக. நீரு என் வீட்டுக் செலவுக்குப் பணமில்ல. இரண்டு வாய்க்கா கத்தரி நடப்போறேன்னு சொல்லிட்டு எந்திருச்சி விறு விறுன்னு நடந்து வீடு வந்து சேரும். களுதைக தண்ணியில்லாம அலையட்டும்” என்றாள் எத்தலும் எகத்தாளமுமாக.

கூட்டம் கூடியிருந்தது. ஊர்க்காரர்களுக்கு ஏற்கெனவே சங்கிலியாண்டியையும் அவர் பொண்டாட்டியையும் தெரியுமாகையால் பொம்பளைகள், “அடுத்தவக நல்லா வாழ பொறுக்க மாட்டாகளே சங்கிலியாண்டியும் அவன் பொண்டாட்டியும். இப்ப என்னத்த நமக்குத் தண்ணி தரப்போறாக” என்று பொறணி பேசினார்கள். நாட்டாமையும் அவரைச் சேர்ந்த பெரிய ஆட்களும் கூட்டத்தில் நிம்மதியாக உட்கார முடியாமல் தவித்தார்கள். ‘ஊருக்குள்ள தொண்டய நனைக்க தண்ணியில்ல. பச்சப் புள்ளைகள்ல இருந்து பெரிய ஆளுவரைக்கும் பரிதவிச்சிப் பஞ்சமாடிக் கெடக்கோம். ஊருக்காரக வேதனைய இந்த சங்கிலியாண்டிப் புரிஞ்சிக்கிடுவானா? அப்படியே அவன் புரிஞ்சாலும் அவன் பொண்டாட்டி தண்ணி கொடுக்க மாட்டேன்னு நட்டுக்குத்தலா பேசுவா’ என்று எல்லோருடைய மனத்திலும் வேதனை மென்றுகொண்டிருந்தது.

(நிலா உதிக்கும்)

கட்டுரையாளர், எழுத்தாளர்.
தொடர்புக்கு: arunskr@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x