Published : 02 Feb 2020 10:18 AM
Last Updated : 02 Feb 2020 10:18 AM

வட்டத்துக்கு வெளியே: சாதிக்க வயது தடையில்லை

ஒய்.ஆண்டனி செல்வராஜ்/ச.கார்த்திகேயன்

சாதிப்பதற்கு வயது, திருமணம், வேலைப்பளு என எவையுமே தடையில்லை என நிரூபித்திருக்கின்றனர் உமா கிருஷ்ணா,
சப்னா துகார் இருவரும்.

உமா கிருஷ்ணாவைப் பொறுத்தவரை வயது என்பது வெறும் எண் மட்டுமே. ஐம்பது வயதைக் கடந்தாலே பலரும் இல்லறக் கடமைகளை முடித்துவிட்டு ஓய்வெடுக்க நினைப்பார்கள். ஆனால், 51 வயதில் சி.ஏ. தேர்வில் தேர்ச்சிபெற்றுச் சாதித்திருக்கிறார் உமா கிருஷ்ணா. மதுரை மகாத்மா காந்தி நகரைச் சேர்ந்த இவருடைய மகன் அபிமன்யு, மகள் மானசி இருவருமே கல்லூரியில் படிக்கின்றனர். கேரள மாநிலம் கொல்லத்தில் பிறந்து வளர்ந்தவர் உமா கிருஷ்ணா. மதுரை மகாத்மா பள்ளியில் ஆங்கில ஆசிரியராகப் பணிபுரிந்து வந்தார். பொதுவாக பி.காம்., படித்தவர்களே சி.ஏ. படிப்பார்கள். ஆனால், இவரோ இளங்கலை படிப்பில் பி.எஸ்சி. வேதியியல் படித்துவிட்டு மதுரை கல்லூரியில் எம்.ஏ., ஆங்கிலம் படித்துள்ளார். கல்லூரியில் படித்த படிப்புக்கும் 25 ஆண்டுகள் இவர் பார்த்த வேலைக்கும் துளியும் சம்பந்தமில்லாத சி.ஏ. தேர்வில் சாதித்திருக்கிறார்.

சென்னையில் நடந்த பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெற்ற கையோடு ஆடிட்டர் பணிக்கான ஆணையையும் பெற்றார். கல்லூரி மாணவர்களுக்கு சி.ஏ. வகுப்பெடுக்கவும் ஆரம்பித்துவிட்டார்.

‘‘இந்தியாவில் சி.ஏ., படித்தவர்கள் 10 லட்சம் பேர் தேவை. தற்போது 1.65 லட்சம் பேர் மட்டுமே உள்ளனர். மிகப் பெரிய இடைவெளி இருப்பதால் இந்தத் துறையில் வேலைவாய்ப்புகள் குவிந்துள்ளன. ஆனால், சி.ஏ., படிப்போரது எண்ணிக்கை குறைவாக உள்ளது. ஆர்வமும் சரியான தயாரிப்பும் இருந்தால் சி.ஏ., படிப்பில் தேர்ச்சி பெறலாம். அதற்கு நானே நல்ல உதாரணம்” என்று சொல்லும் உமா, தொழிற்படிப்புகளில் சேர முடியாத தன் வருத்தத்தை இந்த வெற்றியின் மூலம் சரிசெய்துவிட்டதாகச் சொல்கிறார்.

உமா கிருஷ்ணா

“ஆசிரியர் பணிக்கு ஓய்வு கொடுத்துவிட்டு 2012-ல் சி.எஸ்., படிப்பில் சேர்ந்தேன். அப்போதுதான், சி.ஏ., பற்றியும் அதைப் படிக்க வயது வரம்பு இல்லை என்பதையும் தெரிந்துகொண்டேன். உடனே அதில் சேர்ந்தேன். தினமும் பத்து மணி நேரம் படித்தேன். நான் படித்த மையத்தில் என்னுடன் படித்தவர்கள் அனைவரும் என் மகள், மகன் வயதுடையவர்கள். ஆனாலும், என்னை அவர்களுடைய தோழியைப் போலவே நடத்தினர். அக்கவுன்ட்ஸ், காஸ்டிங் பாடங்கள் நான் படித்த படிப்புக்குத் தொடர்பு இல்லாததால் அவற்றுக்காகத் தனியாகப் பயிற்சி பெற்றேன். 2014-ல் சி.ஏ., இன்டரில் 2 குரூப்பைச் சேர்த்து எழுதி எட்டுப் பாடங்களை ஒரே மூச்சாக முடித்தேன். இத்தனை பாடங்களில் ஒரே முயற்சியில் தேர்ச்சிபெறுவது கடினம். அந்த நேரத்தில் என் தந்தை இறந்துவிட்டார். அம்மாவுக்கு உடல்நலக் குறைவு. அவரைக் கவனிக்க வேண்டியிருந்ததால் சி.ஏ., கனவு சிறிது காலம் தடைபட்டது. ஆனால், நான் முயற்சியைக் கைவிடவில்லை. இரண்டு ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு முழுமூச்சாகப் படிக்க ஆரம்பித்தேன், வென்றேன். இதுவொரு இனிய விபத்தாக நடந்துமுடிந்துவிட்டது. தற்போது ஆடிட்டராக இருப்பது பெருமையாக உள்ளது. சி.ஏ., படிப்பு கஷ்டம் என்ற மாயையை உடைக்க வேண்டும். மதுரை போன்ற நகரங்களில் சி.ஏ., தேர்வுக்குச் சரியான பயிற்சி மையங்கள் இல்லை. விழிப்புணர்வோ வழிகாட்டுவதற்கு ஆட்களோ இல்லை. இளைஞர்களுக்கு வழிகாட்டவும் ஆர்வமுள்ளவர்கள் சி.ஏ., தேர்வெழுத உதவுவதுமே என் கனவு” என்கிறார் உமா கிருஷ்ணா.

சென்னை அண்ணாநகரைச் சேர்ந்தவர்

என்.சப்னா துகார்

. நடுத்தரக் குடும்பத்தை சேர்ந்த இவர், பள்ளிப் படிப்பில் சிறந்து விளங்கியுள்ளார். படிப்பை முடித்தவுடன், வழக்கமான பெற்றோரைப் போல இவர்ருடைய பெற்றோரும் திருமணத்துக்கு ஏற்பாடு செய்தனர். பெற்றோரின் விருப்பத்தை ஏற்று, சப்னாவும் இல்லற வாழ்க்கையில் நுழைந்தார்.

உமாவைப் போலத்தான் சப்னாவும் சாதித்திருக்கிறார். இல்லற வாழ்க்கையில் நுழைந்து, இரு குழந்தைகளுக்குத் தாயாகி 15 ஆண்டுகள் கடந்த பின்னர் சி.ஏ., படிக்கத் தொடங்கி, முதல் முயற்சியிலேயே வெற்றியும் பெற்றுள்ளார்.

சப்னா துகார், பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வில் பள்ளி அளவில் முதலிடம் பிடித்தவர். மேல்நிலைக் கல்வியை முடிக்கும் முன்பே திருமணம் நிச்சயிக்கப்பட்டது. படிப்பை முடித்ததும் திருமணம். பிறகு லக்ஷயா, ஜயேஷ் என இரு குழந்தைகள் பிறந்தனர். தற்போது மகள் 11-ம் வகுப்பும் மகன் ஆறாம் வகுப்பும் படித்துவருகின்றனர்.

அவர்கள் பள்ளிக்குச் சென்ற பிறகு கிடைத்த ஓய்வு நேரத்தை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்த நினைத்தார் சப்னா. இந்திராகாந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் பி.சி.ஏ., முடித்தார்.

இதனிடையே சி.ஏ., படிப்பை முடித்த உறவினர் ஒருவரைச் சந்திக்க நேர்ந்தது. சப்னாவுக்கும் சி.ஏ., படிப்பு மீது ஆர்வம் ஏற்பட்டது. அவருடைய கணவர் நவீனும் ஊக்கப்படுத்த, படிப்புப் பயணம் தொடங்கியது.

“சி.ஏ., படிப்பது மிகவும் கடினம், அதில் தேர்ச்சி பெறுவது எளிதில்லை என்ற கருத்து நிலவிவருகிறது. எனக்குச் சிறுவயது முதலே கணிதத்தில் ஆர்வம் அதிகம். அதனால், தைரியமாக 2016-ல் சி.ஏ., படிப்பில் சேர்ந்தேன். 2017-ல் இரண்டாம் நிலைத் தேர்வில் முதல் முயற்சியிலேயே வெற்றிபெற்றேன். தொடர்ந்து இறுதித் தேர்வை எழுதி அதிலும் வெற்றிபெற்றுவிட்டேன். எனது வெற்றிக்கு இல்லற வாழ்க்கை ஒருபோதும் தடையாக இருந்தது இல்லை. சிறு சிறு இடையூறுகள் இருந்தாலும், அதைப் பொருட்படுத்தாது, எனது இலக்கை நோக்கி முன்னேறுவதில் உறுதியாக இருந்தேன். தற்போது நல்ல வேலைவாய்ப்பைப் பெறுவதற்காக வளாகத் தேர்வுக்குத் தயாராகிவருகிறேன்” என்கிறார் சப்னா.

படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x