Published : 02 Feb 2020 10:16 AM
Last Updated : 02 Feb 2020 10:16 AM

நாயகி 02: சந்தியாவின் ஒரு கோப்பை தேநீர்

ஸ்ரீதேவி மோகன்

ஒரு பெண்ணுக்கு நேர்கிற அவலங்களிலேயே பெரிய அவலம், தன்னை நிரூபிக்க வேண்டி இருப்பதுதான். எழுத்தாளர் பிரபஞ்சனின் ‘ஈரம்’ கதையின் நாயகி சந்தியாவும் இதைச் சொல்லித்தான் இந்தச் சமூகத்தின் முகத்தில் ஓங்கி அறைகிறாள்.

சந்தியாவுக்குச் சிட்டுக்குருவி, பட்டாம்பூச்சி என்று பல பெயர்கள். எங்கும் இருப்பாள், இறகு போல தன் மனம் போன வழியில் பறப்பாள். ஆனால், அவளைக் கூண்டுக்கிளியாக ஆக்குகிறது சிறுவயதில் அவளுக்கு நிகழும் ஒரு நிழல் சம்பவம்.

வீட்டின் இருண்ட மூலையில் அம்மாவின் கால்களைக் கட்டிக்கொண்டு கிடந்தவளை உயிர்ப்பித்து, வெளியுலகத்துக்குக் கொண்டு வருகிறாள் அவளுடைய சித்தி. எல்லா ஆண்களும் மோசமானவர்கள் அல்ல என்று புரிந்துகொள்ள சந்தியாவுக்கு எட்டாண்டுகள் ஆகின்றன. பிறகும்கூடப் புதிய ஆண்கள் அவளைப் பயமுறுத்துபவர்களாகவே இருக்கிறார்கள். அதையும் மீறி, அவள் பின்னாலேயே சுற்றி அவள் மனத்தைப் பலவீன மாக்குகிறான் சதா. பல நாட்கள் அவளுடன் சுற்றித் திரிந்த பின் ஒருநாள் திருமணம் செய்வதற்காகக் கோயிலுக்கு அவளை வரச்சொல்லிச் சென்றவன் வரவே இல்லை.

பழைய வலியும் புதிய துரோகமும் சேர்ந்து ஈர மனத்துடன் பழகும் மூர்த்தியின் அன்பையும் கேள்விக்குள்ளாக்குகின்றன. அதனால்தான் அவனிடமே கேட்டுவிடுகிறாள், “நீ எப்படி…?” என்று. தனி மனுஷி என்பதாலேயே அவளை ஆக்கிரமிக்கத் துடிக்கும் இந்தச் சமுதாயத்தில் பாவம் அவள் யாரைத்தான் நம்புவாள்? “பெண்கள் என்பதாலேயே பலருக்குப் பிரச்சினை ஏற்பட்டிருக்கிறது. அதற்காக ஆண்கள் எல்லோரும் அயோக்கியர்களா?” என்ற மூர்த்தியின் கேள்விக்கு, “யாரோ ஒன்றிரண்டு பெண்களைக் கொண்டு பெண் இனத்தைப் பேசுவது எப்படித் தவறோ அப்படித்தான் இதுவும். எல்லாமே பொம்பளைக்கு எதிராத்தானே இருக்கு, அப்புறம் எப்படி நம்பிக்கை வரும்?” என்று அவள் கேட்கும் கேள்விகள் மூர்த்தியிடம் மட்டும் கேட்கப்பட்டவை அல்ல.

பலமில்லாத முட்டாள்கள்

சுதந்திர மனுஷியாக இருக்கும் அவள் மூர்த்தியுடன் பழகுவதை வீடும் அலுவலகமும் ஒரு மாதிரியாகப் பார்க்கின்றன. அவளைச் சுற்றி இயங்கும் அத்தனை பேருக்கும் அவளின் அந்தரங்கத்தைத் தெரிந்துகொள்ள ஆசை. “ஆண்களும் பெண்களும் பெண்கள் மேல் மோசமான அபிப்ராயம் கொண்ட சமூகத்தின் தயாரிப்புகள்தானே? இது எனக்கு அளிக்கப்பட்ட ஒரு கோப்பைத் தேநீர். இதை நான் உட்கார்ந்தும் சாப்பிடுவேன். நடந்துகொண்டும் ஆடிக்கொண்டும் கூடச் சாப்பிடுவேன்” என்பது அவள் இந்தச் சமூகத்துக்குச் சொல்ல விரும்பும் பதில்.

“கணவர்கள்… புத்திசாலியை, நுணுக்க உணர்வுள்ளவர்களை, நல்ல மனம் உள்ளவர்களையோ முக்கியமாக சுயமரியாதை உள்ள
வளையோ மனைவியாக அடைய விரும்புவதில்லை. வீட்டோட இருந்து சமைச்சுப்போட்டு, பிள்ளைப் பெற்றுக்கொடுத்து டாட்டா காட்டி, புருஷனை வேலைக்கு அனுப்பும் பாவப்பட்ட பெண்களைத்தான் ஆண்கள் தேடுகிறார்கள்” என்பது சந்தியாவின் ஆதங்கம்.
“பெண்ணை ஆக்கிரமிப்பவர்கள் எல்லோரும் அப்பா, அண்ணன், கணவன் என்ற உரிமையில்தான் அதைச் செய்கிறார்கள். அவர்களது இடத்தை அவர்களுக்கு ஆரம்பத்திலேயே உணர்த்திவிடுவதுதான் நல்லது. பெண்களுக்குப் பலமில்லை என்று பலமில்லாத முட்டாள்களே சொல்கிறார்கள். பலமும் வீரமும் மனசில்” என்பதுதான் சந்தியாவிடமிருந்து தற்காலப் பெண்கள் கற்றுக்கொள்ள வேண்டியவை. அவளின் மன உணர்வுகளைப் புரிந்துகொள்ளும் மூர்த்தியிடம் அவள் உணரும் ஈரம் அவளது சூழலை இனிமையாக்குகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x