Published : 02 Feb 2020 09:59 AM
Last Updated : 02 Feb 2020 09:59 AM

பத்ம விருதுகள் 2020: சாதனை படைத்த சாமானியர்கள்

நாட்டின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம விருது குடியரசு தினத்தையொட்டி அறிவிக்கப்பட்டது. 1954-ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டுவரும் பத்ம விருதுகளின் வரலாற்றில் முதன்முறையாக இந்த ஆண்டுதான் அதிகபட்சமாக 34 பெண்களுக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

சமூகப் பணி, ஆட்சிப் பணி, இலக்கியம், கல்வி, மருத்துவம், பொறியியல், தொழில், விளையாட்டு உள்ளிட்ட எட்டுப் பிரிவுகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு பத்ம பூஷண், பத்ம விபூஷன், பத்மஸ்ரீ ஆகிய மூன்று பிரிவுகளில் ஒவ்வோர் ஆண்டும் விருதுகள் வழங்கப்படுகின்றன.

பெண்களின் மணிமகுடம்

1954-ம் ஆண்டு பத்ம விருதுகள் முதன்முறையாக வழங்கப்பட்டபோது, அவ்விருது பெற்ற பெண்களின் எண்ணிக்கை ஆறு மட்டும்தான். ஆனால், மாறிவரும் சமூகச் சூழ்நிலையில் சமையலறைகளில் பூட்டப்பட்டிருந்த பெண்கள் அனைத்துத் துறைகளிலும் கால்பதித்துள்ளனர். அதனால் ஒவ்வோர் ஆண்டும் பத்ம விருதுப் பட்டியலில் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. 2013-ம் ஆண்டில்தான் அதிகபட்சமாக 24 பெண்களுக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டன. அதற்கு அடுத்தடுத்த ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை சரிந்தது. பிறகு 2017-ம் ஆண்டு 19 பெண்களுக்கு வழங்கப்பட்ட பத்ம விருதுகள்

அதற்கடுத்த ஆண்டு 14-ஆகக் குறைந்தது. பின்னர் கடந்த ஆண்டு 21- ஆக அதிகரித்தது. இந்த ஆண்டு விருதுபெறும் 141 நபர்களில் 34 பேர் பெண்களாக இருப்பது வரலாற்று முக்கியத்துவம் பெற்றுள்ளது.

‘காடுகளின் களஞ்சியம்’ துளசி கௌடா

பொதுவாக, விருதுகள் என்றாலே பிரபலமானவர் களுக்குத் தான் வழங்கப்படும் அல்லது பிரபலமானவர்கள் பெறும் விருதுகளுக்குத்தான் முக்கியத்துவம் அளிக்கப்படும் என்ற எண்ணம் உள்ளது. ஆனால், இந்த ஆண்டு பத்ம விருதுகளைப் பெறும் 34 பெண்களில் பிரபலமானவர்கள் இடம்பெற்றிருந்தாலும் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் சாமானிய மக்களுக்காக, சமூகத்துக்காக, சுற்றுச் சூழலுக்காக, மொழிக்காகத் தங்களுடைய வாழ்நாள் முழுவதும் உழைத்த பெண்களும் இடம்பெற்றிருப்பது கவனிக்கத்தக்கது. அவர்கள்தாம் அடுத்த தலைமுறைப் பெண்களுக்கு வழிகாட்டும் கலங்கரைவிளக்கமாக உள்ளனர்.

போர்களால் ஏற்படும் அழிவைவிட உலகம் இன்றைக்குச் சந்தித்துக்கொண்டிருக்கும் சுற்றுச்சூழல் அபாயத்தை அறுபது ஆண்டுகளுக்கு முன்னரே உணர்ந்தவர் கர்நாடகத்தைச் சேர்ந்த 72 வயதான துளசி கௌடா. பழங்குடிச் சமூகத்தைச் சேர்ந்த துளசி கௌடா ஹொன்னாலி என்ற கிராமத்தில் பிறந்தவர். சிறுவயதிலேயே தந்தையை இழந்த அவர் தாயுடன் சேர்ந்து கூலி வேலைகளுக்குச் சென்றார். இளம் பருவத்திலேயே திருமணம் செய்துகொடுக்கப்பட்ட துளசி கௌடா தன்னுடைய கணவரை இளமையிலேயே இழந்தவர். வாழ்க்கையில் துன்பங்களை மட்டுமே எதிர்கொண்ட அவருக்கு மகிழ்ச்சி தரும் விஷயமாக இருந்தது அவர் வாழ்ந்துவந்த காடுதான். அதனால்தான் 1960-களில் மரங்களை நட்டு வளர்ப்பதைத் தன்னுடைய கடமையாக நினைத்தார். அழிந்துவரும் காடுகளைப் பாதுகாப்பதுதான் துளசி கௌடாவின் நோக்கம். அறுபது ஆண்டுகளாக ஹொன்னாலி முதல் அங்கோலா தாலுக்காவரை மொத்தம் நாற்பதாயிரம் மரங்களை வளர்த்துள்ளார். மழைக்குக்கூடப் பள்ளிக்கூடம் பக்கம் ஒதுங்காத துளசி கௌடாவுக்குக் காட்டில் உள்ள மரங்கள், செடிகள் ஆகியவற்றின் பெயர்கள் அத்துப்படி. எந்த விதையை எப்போது போட்டால் எப்படி வளரும், என்ன பயன்தரும் என்பதை விரல் நுனியில் வைத்துள்ளார். அதனால்தான் அவரை மக்கள் ‘காடுகளின் கட்டற்ற களஞ்சியம்’ என அன்பாக அழைக்கிறார்கள். எதையும் எதிர்பார்க்காமல் சுற்றுச்சூழலைப் பாதுகாத்தால் சுற்றம் நலம்பெறும் எனச் செயல்பட்ட துளசி கௌடாவைத் தேடி வந்துள்ளது பத்மஸ்ரீ விருது.

உழைப்பவனுக்கே நிலம் சொந்தம்

தமிழகத்தில் நிலமில்லா ஏழைகளுக்குப் பூமிதான இயக்கத்தின் மூலம் நிலம் வழங்கப் பாடுபட்டவர் 94 வயது கிருஷ்ணம்மாள் ஜெகநாதன். அவரது இந்த சேவையைப் பாராட்டி பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பூமிதான இயக்கத்தின் முன்னோடி விநோபாவின் வழிகாட்டுதலில் தமிழகத்தில் கிருஷ்ணம்மாளும் அவருடைய கணவர் ஜெகநாதனும் பல நிலச்சுவான்தார்களிடமிருந்து தானமாகப் பெற்ற நிலங்களை ஆயிரக்கணக்கான ஏழைகளுக்கு இலவசமாக வழங்கினார்கள். அதேபோல் வங்கிகளில் கடன்பெற்று நிலச்சுவான்தார்களிடம் பெற்ற நிலத்தைத் தங்களுடைய ‘லாஃப்டி’ அமைப்பின் மூலம் ஏழைகளுக்கு வழங்கினார்கள். காந்திய வழியில் அறப்போராட்டங்களைத் தொடங்கிய கிருஷ்ணம்மாள் உழைப்பவனுக்கே நிலம் சொந்தம் என்பதில் உறுதியாக இருக்கிறார்.

தடைகளை உடைத்த உஷா

சமூகத்தில் மிகவும் பின்தங்கிய குடும்பத்தில் பிறந்த உஷா சௌமார் (usha chaumar) ராஜஸ்தானைச் சேர்ந்தவர். கல்வி மறுக்கப்பட்ட உஷா ஏழு வயதிலேயே குடும்பத்தினருடன் துப்புரவுத் தொழிலாளியாகப் பணியைத் தொடங்கினார். மனிதக் கழிவை மனிதனே சுமக்கும் கொடுமையை அனுபவித்தவர் உஷா. பத்து வயதில் திருமணம் நடந்தது. திருமணத்துக்குப் பிறகும் உஷாவால் துப்புரவுத் தொழிலிருந்து விடுபட முடிய வில்லை. துப்புரவுத் தொழிலாளியாகவே தன்னுடைய வாழ்க்கை முடிந்துவிடுமோ என வருந்தியவரது வாழ்வை மருத்துவர் பிந்தேஷ்வர் பதக் தொடங்கிய ‘சுலப்’ என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனம் மாற்றியமைத்தது. துப்புரவுத் தொழிலிருந்து வெளியேறி, இந்தத் தொண்டு நிறுவனத்தில் இணைந்த உஷா ஊறுகாய், அப்பளம், நூடுல்ஸ் போன்ற உணவுப் பொருட்களைச் செய்யும் தொழிலில் ஈடுபட்டார். மாதம் ரூ. 2 ஆயிரத்தை ஊதியமாகப் பெற்றார். தொண்டு நிறுவனத்தில் சுயதொழிலை மட்டும் கற்றுக்கொள்ளாமல் தன்னுடைய ஆளுமைத் திறனையும் வளர்த்துக்கொண்டார். பள்ளிக்கே செல்லாத உஷா ஆங்கிலத்தில் சரளமாகப் பேசக் கற்றுக்கொண்டார். சுய தொழிலை நிர்வகிக்க கற்றுக்கொண்டது மட்டுமல்லாமல் தன்னைப் போல் உள்ள பல பெண்களுக்கு சுயதொழில் வழிகாட்டியாகவும் மாறினார். விளிம்புநிலையில் உள்ள பெண்களுக்கு பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக உஷா வழிகாட்டியாக உள்ளார். “பொருளாதாரச் சுதந்திரம் மட்டுமல்லாமல் மனிதத் தன்மையற்ற கொடுமையான தொழிலிலிருந்து நான் விடுபட்டுள்ளேன். என்னைப் போல் துப்புரவுப் பணியில் உள்ள பெண் தொழிலாளர்களை மீட்டு அவர்களுக்குக் கௌரவமான தொழிலைக் கற்றுக்கொடுக்க வேண்டும் என்பதுதான் என் லட்சியம்” எனக் கூறும் உஷாவின் சேவைக்கான பாராட்டாகவே பத்மஸ்ரீ அறிவிக்கப்பட்டுள்ளது.

அன்னை மொழியை அச்சில் ஏற்றியவர்

ஒடிஷாவைச் சேர்ந்த முனைவர் தமயந்தி பேஷ்ரா (damayanti beshra) 1990-கள் வரை இந்திய இலக்கியங்களில் அறியப்படாத மொழியாக இருந்த ‘சந்தாலி’ (Santali) மொழியை இலக்கியத் துறைக்கு அறிமுகப்படுத்திய பெருமைக்குச் சொந்தக்காரர். அம்மாநிலத்தில் பெரும்பாலும் ஒடியா மொழிதான் அதிகமாகப் பேசப்படுகிறது. முனைவர் தமயந்தி பேஷ்ரா போன்ற குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்தோர்தான் ‘சந்தாலி’ மொழியைத் தாய்மொழியாகக் கொண்டுள்ளனர். மிகவும் பின்தங்கிய குடும்பச் சூழ்நிலையிலிருந்த வந்த தமயந்தி கல்லூரிக் காலத்தில் விடுதிக் கட்டணத்தைச் செலுத்தக்கூடச் சிரமப்பட்டுள்ளார். உடுத்த இரண்டு உடைகளை மட்டுமே வைத்திருந்த தமயந்தி கல்விதான் விடுதலையின் திறவுகோல் என்பதை உணர்ந்தார். அதனால்தான் அச்சில் ஏற்றப்படாத தன்னுடைய தாய்மொழி ‘சந்தாலி’ மொழியில் ‘jiwi jharna’ என்ற முதல் கவிதைத் தொகுப்பை 1994-ம் ஆண்டு வெளியிட்டார். 2010-ம் ஆண்டு அவர் எழுதிய ‘Say Sehed’ என்ற கவிதைத் தொகுப்புக்கு சாகித்திய அகாடெமி விருது வழங்கப்பட்டது. பிறகு சந்தாலி மொழியில் ‘Karama Dar’ என்ற பெண்களுக்கான முதல் இதழைக் கொண்டுவந்தார். அறியப்படாத மொழியாக இருந்த தன் தாய்மொழியில் தற்போதுவரை 11 புத்தகங்களை அச்சில் ஏற்றிய பெருமைக்காக அவருக்கு பத்ம வழங்கப்படவுள்ளது.

‘விதைத் தாய்’

ரசாயனத் தெளிப்பான்களால் விதைகளே விஷமாக மாறிவிட்டன. இந்நிலையில் மகாராஷ்டிரத்தில் உள்ள கொம்பால்னே என்ற கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியான ரஹி பாய் சோமா போபெரே இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க நினைத்தார். தன்னுடைய நிலத்தில் பாரம்பரிய விதைகளைப் பயிரிடத் தொடங்கினார். அதேநேரம் மண்ணை விஷமாக்கும் மரபணு மாற்றப்பட்ட விதைகளுக்கு மாற்றாகச் செயல்படத் தொடங்கினார். மகாராஷ்டிர இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி மையத்தில் விவசாயத்தைப் பெருக்கும் தொழில்நுட்ப முறைகளைக் கற்றுக்கொண்டார். பாரம்பரிய பீன்ஸ் விதைகளைப் பயிரிட்டு விளைச்சலைப் பெருக்கினார். மக்களின் நம்பிக்கையை பெற்றார். இதைத் தொடர்ந்து பாரம்பரிய விதைகளைத் தேடி மகாராஷ்டிரம் முழுவதும் பயணித்து 15 வகையான நெல் விதைகள், 9 வகையான துவரை விதைகள், 60 வகையான காய்கறி விதைகள் ஆகியவற்றைச் சேகரித்தார். இதற்காக ‘கல்சுபாய் பரிசார் பியானி சம்வர்தன் சமிதி’ என்ற அமைப்பை நிறுவினார். இதன் மூலம் பாரம்பரிய விதைகளைச் சேகரித்துவருகிறார். வீடுகள் முழுவதும் பாரம்பரிய விதைகளுடன் காணப்படும் ரஹிபாய் இன்றைய தலைமுறையின் நம்பிக்கை விதை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x