Published : 01 Feb 2020 11:51 AM
Last Updated : 01 Feb 2020 11:51 AM

காலநிலை நெருக்கடி: எதிர்காலம் என்ற ஒன்று இருக்கிறதா?

சு. அருண் பிரசாத்

காலநிலை மாற்றம்: புரிதலுக்கு ஓர் வழிகாட்டி

“முழுமையான பேரழிவை நோக்கி நாம் சென்று கொண்டிருக்கிறோம் என்பதை அறிவிக்கும் விதமான தலைப்புச் செய்திகளை ஒவ்வொரு செய்தித்தாளும் அன்றாடம் வெளியிட வேண்டும். இன்னும் இரண்டு தலைமுறைகளில், ஒருங்கிணைந்த மனித சமுதாயம் நீடித்திருக்கப் போவதில்லை. இது மக்களின் அறிவில் ஆழமாகப் பதிவுசெய்யப்பட வேண்டும்.

ஒட்டுமொத்த மனிதகுல வரலாற்றில் இதுபோன்று முன்பு நிகழ்ந்ததில்லை. ஒருங்கிணைந்த மனித சமுதாயம் மேலும் இரண்டு தலைமுறைகளுக்குத் தாக்குப்பிடிக்குமா என்பது தற்போதைய தலைமுறை எடுக்கும் முடிவில்தான் இருக்கிறது. அந்த முடிவு விரைந்து எடுக்கப்பட வேண்டும்; காலம் குறைவாகவே இருக்கிறது. பாரிஸ் காலநிலை உடன்படிக்கையை நிறைவேற்றத் தவறுவது, அதிலிருந்து வெளியேறுவது ஆகியவை வரலாற்றில் மிகப் பெரிய குற்றங்களாகக் கருதப்படும்.”

- அறிஞர் நோம் சாம்ஸ்கி

ஹாலிவுட்டின் புகழ்பெற்ற இயக்குநர்களில் ஒருவரான கிறிஸ்டோபர் நோலனின் ‘இன்டர்ஸ்டெல்லார்’ திரைப்படத்தில், 21-ம் நூற்றாண்டின் மத்தியில் தீவிர காலநிலை மாறுபாட்டால் மனிதகுல வாழ்க்கை அச்சுறுத்தலுக்கு உள்ளாவதைப்போல் காட்சிகள் சித்தரிக்கப்பட்டிருக்கும். புவியின் எதிர்காலத்தைக் கற்பனைத் துயருலகாகச் (dystopia) சித்தரிக்கும் அறிவியல் புனைவு நூல்களும் திரைப்படங்களும் காலம்காலமாக வெளியாகிக்கொண்டிருக்கின்றன.

ஆஸ்திரேலியாவில் ஏற்பட்டிருக்கும் காட்டுத்தீயால் எழுந்த பெரும் புகை மண்டலம், ‘இன்டர்ஸ்டெல்லார்' திரைப்படத்தில் வரும் தூசுப் புயலுடன் துல்லியமாகப் பொருந்திப்போவது, இப்போது நாம் வாழ்ந்துகொண்டிருப்பதே கற்பனைத் துயருலகின் நிஜ வடிவில்தான் என்பதை அழுத்தமாக உணர்த்துகிறது!

18-ம் நூற்றாண்டில் ஏற்பட்ட தொழிற்புரட்சியின் விளைவால், புதைபடிவ எரிபொருட்களை மையப்படுத்திய முதலாளித்துவப் பொருளாதார முறையை மேற்கத்திய நாடுகள் பின்பற்றத் தொடங்கின.

பின்னர் அது உலகெங்கும் விரிந்தது. அதனால் விளைந்த முறைப்படுத்தப்படாத வளர்ச்சி, புவியின் காலநிலையில் தீவிர தாக்கத்தைச் செலுத்தத் தொடங்கியது. 19-ம் நூற்றாண்டின் இறுதி ஆண்டுகளிலேயே இதற்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கிவிட்டாலும், 1970-களில்தான் இதன் தீவிரம் உணரப்பட்டது.

முப்பது ஆண்டுகளுக்கும் மேலாகக் காலநிலை மாற்றம் குறித்த துல்லியமான தரவுகளை அறிவியல் தொடர்ந்து வழங்கிவருகிறது; ஆனால், அதைக் கிஞ்சித்தும் பொருட்படுத்தாமல் புதைபடிவ எரிபொருட்களின் பயன்பாட்டை உலக நாடுகள் துரிதப்படுத்திக்கொண்டே இருக்கின்றன. அதன் பின்விளைவுகள் இன்றைக்கு மோசமாக வெளிப்படத் தொடங்கி விட்டபோதிலும், ‘புதைபடிவ எரிபொருளை மையமாகக் கொண்ட முதலாளித்துவ முறை’யில் இருந்து வெளியேற, தேவையற்ற தயக்கம் காட்டப்படுகிறது.

புவி வெப்பமாதல், ஆர்க்டிக்-அண்டார்க்டி-கிரீன்லாந்து-ஐஸ்லாந்து பனிப்பாறைகள் கட்டுப்பாடின்றி உருகுதல், கணிக்க முடியாத அதிதீவிரத் தட்பவெப்பநிலை, தவறும் பருவமழை ஆகியவற்றை உள்ளடக்கிய காலநிலை மாற்றத்தால் தூண்டப்பட்ட நிகழ்வுகள் கடல்மட்ட உயர்வு, மக்களின் பெரும் இடப்பெயர்வு, காலநிலை சார்ந்த இனவெறி (climate apartheid), மக்களுடைய மனநலத்தில் தாக்கம், உயிரினப் பேரழிவு ஆகிய மிக மோசமான, மீள முடியாத சிக்கல்களுக்கு மனித குலத்தை இட்டுச் செல்லத் தொடங்கிவிட்டன.

இயற்கை நிகழ்வுகள், புவியியல் ஆதாரங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் புவியின் காலத்தை இதுவரை நிர்ணயித்துவந்த அறிவியலாளர்கள், புவியின் காலநிலை-சுற்றுச்சூழல் ஆகியவற்றில் மனிதர்களின் ஆதிக்கம் கட்டுமீறி மேலோங்கியதால், அவற்றின் இயல்பு குலைந்துவிட்ட தற்போதைய காலகட்டத்துக்கு ‘ஆந்த்ரோபொசீன்’ (Anthropocene: ஆந்த்ரோ - மனிதன்; பொசீன் - காலம்) என்னும் ‘மனித ஆதிக்க யுகம்’ எனப் பெயரிடுவது குறித்துப் பரிசீலித்துவருகிறார்கள்.

சூழலியலில் நாம் ஏற்படுத்திய தாக்கத்தின் விளைவுகள், நம்மைத் திருப்பித் தாக்கும்போது, அதை எதிர்கொண்டு தகவமைத்துக் கொள்வதற்கான மனோதிடத்துடன், அறிவியல் வழங்கியுள்ள சாத்தியங்களைக்கொண்டு செயல்படுத்த வேண்டும். இளம் காலநிலைப் போராளி கிரெட்டா துன்பர்க் சொல்வதைப் போல், ‘அறிவியலுக்கு நாம் காதுகொடுக்க வேண்டும்’. பிரச்சினைக்கான தீர்வு என்பது, பிரச்சினையின் அடிப்படைகளைப் புரிந்துகொள்வதில் இருந்தே தொடங்குகிறது.

இந்தப் பின்னணியில் காலநிலை மாற்றத்துக்கு முன்பைவிடக் கூடுதல் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் சீரான இடைவெளியில் காலநிலை மாற்றம் குறித்த செய்திகளைத் தர 'உயிர் மூச்சு' இதழ் திட்டமிட்டுள்ளது. காலநிலை மாற்றத்தின் தீவிரத்தை உணர்த்தும் சொல்லாடல்களைத் தமிழில் மிகப் பெரிய அளவில் மேற்கொள்ள வேண்டிய தேவை உள்ளது. இதுகுறித்து வாசகர்களின் எதிர்பார்ப்புகள், கேள்விகள் வரவேற்கப்படுகின்றன.

திகைக்க வைக்கும் காலநிலை அறிக்கைகள்

கடந்த ஒன்றரை ஆண்டுகளில் வெளியான காலநிலை அறிக்கைகளில் சில 2018 அக்டோபர், காலநிலை மாற்றம் குறித்த பன்னாட்டு அரசுக் குழு: 1.5 டிகிரி செல்சியஸ் புவி வெப்பமாதல் சிறப்பு அறிக்கை. டிசம்பர் 2018, உலகச் சுகாதார நிறுவனம், காப்24 சிறப்பு அறிக்கை: சுகாதாரமும் காலநிலை மாற்றமும். டிசம்பர் 2018, உலகளாவிய கார்பன் திட்டம்: கார்பன் பட்ஜெட் 2018.
ஏப்ரல் 2019, தேசிய அறிவியல் அகாடமியின் நடவடிக்கைகள், நோவா எஸ். டிஃபென்பா, மார்ஷல் பர்க்: “உலகளாவிய பொருளாதார ஏற்றத்தாழ்வைக் காலநிலை மாற்றம் அதிகப்படுத்தியிருக்கிறது.”

மே 2019, உயிர்ப்பன்மை - சூழலியல் சேவைகளுக்கான ஐ.நா. பன்னாட்டு அரசு அறிவியல்-கொள்கைக் குழு: உயிர்ப்பன்மை - சூழலியல் குறித்த உலகளாவிய மதிப்பீட்டு அறிக்கை.
ஆகஸ்ட் 2019, தி வாஷிங்டன் போஸ்ட், ஆண்ட்ரூ ஃபிரீட்மன் - ஜேசன் சேம்னவ்: “(2019) ஜூலை மாதத்தில் மட்டும் கிரீன்லாண்டின் பனிப்பாளங்கள் உருகி, 1,97,00 கோடி டன் அளவு நீர் வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் சேர்ந்துள்ளது.”

ஆகஸ்ட் 2019, காலநிலை மாற்றம் குறித்த பன்னாட்டு அரசுக் குழு: நிலம் - காலநிலை மாற்றம் குறித்த சிறப்பு அறிக்கை. செப்டம்பர் 2019, உலக வானிலை அமைப்பு, ஐ.நா. காலநிலை செயல்பாட்டுக் கூட்டம் 2019-க்கான அறிவியல் ஆலோசனைக் குழு: அறிவியலுடன் கைகோப்போம்.

செப்டம்பர் 2019, காலநிலை மாற்றம் குறித்த பன்னாட்டு அரசுக் குழு: மாறிவரும் காலநிலையில் பெருங்கடல், பனிக்கோளம் ஆகியவற்றின் நிலை குறித்த சிறப்பு அறிக்கை. நவம்பர் 2019, ஐ.நா. சுற்றுச்சூழல் திட்டம்: கார்பன் உமிழ்வு இடைவெளி அறிக்கை.

கட்டுரையாளர் தொடர்புக்கு: arunprasath.s@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x