Published : 29 Jan 2020 11:57 AM
Last Updated : 29 Jan 2020 11:57 AM

மாய உலகம்: சார்லி சாப்ளினாக மாறுவது எப்படி?

மருதன்

என்னை எல்லோரும் நடிகன் என்கிறார்கள். எத்தனை பெரிய தவறு! நான் நடித்து நீங்கள் எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா? ஒரு நடிகன் என்றால் விதவிதமான பாத்திரங்களில் தோன்றியிருக்க வேண்டும். என்னை அப்படி எத்தனை வேடங்களில் இதுவரை நீங்கள் கண்டிருக்கிறீர்கள்? நீங்கள் எத்தனை யோசித்தாலும் ஒரே ஒரு வேடம்தான் நினைவுக்கு வரும். சார்லின் சாப்ளின் என்னும் வேடம்.

கிட்டத்தட்ட எல்லாப் படங்களிலும் ஆரம்பம் முதல் இறுதிக் காட்சிவரை அந்த ஒரு வேடத்தில்தான் நான் தோன்றுவேன். ஒரே மாதிரி நடப்பேன். ஒரே மாதிரி ஊன்றுகோலைச் சுழற்றுவேன். ஒரே மாதிரி கண்களை உருட்டுவேன். ஒரே மாதிரி ஆடுவேன். ஒரே மாதிரி அழுவேன். ஒரே இடத்தில் ஒரே மாதிரி தடுக்கி விழுவேன்.

ஒரே மாதிரி தட்டிவிட்டுக்கொண்டு உற்சாகமாக நடைபோடுவேன். தோற்றத்திலாவது புதுமை இருக்குமா என்று கேட்டால் அதுவும் இல்லை. அதே தொளதொளவென்ற கால் சட்டை. அதே இறுக்கமான மேல் சட்டை. அதே பெரிய காலணி. அதே சிறிய தொப்பி. குறைந்தபட்சம் மீசையின் அளவாவது ஏதாவது ஒரு படத்தில் மாறியிருக்கிறதா என்று பாருங்கள். ஓரங்குலம் கூடியிருக்காது, ஓரங்குலம் குறைந்திருக்காது.

அதே சார்லி சாப்ளின். அந்த சாப்ளினின் வாழ்க்கை எளிமையானது. அவனிடம் ஒரு நாளும் பணமிருக்காது. அவன் ஒருபோதும் நல்ல வீட்டில் வசித்ததில்லை. ஒருபோதும் நிறைவாக உண்பதில்லை. ஒரு நாளும் நிம்மதியாக உறங்குவதில்லை. சரியான அளவுகளோடு நல்ல ஆடைகளை ஒரே ஒரு முறைகூட வாங்க முடிந்ததில்லை என்பதால் அகப்பட்டதையே அணிந்துகொள்கிறான்.

அதனாலேயே அவன் தனித்துத் தெரிகிறான். அதனாலேயே எல்லோரும் அவனைப் பரிகசிக்கிறார்கள். நான் சாப்ளினாக நடிப்பதில்லை. நான்தான் சாப்ளின். என் கதையைத்தான் நான் உங்களிடம் மீண்டும் மீண்டும் வெவ்வேறு படங்களின் மூலம் சொல்லிக்கொண்டிருக்கிறேன். என்னிடமுள்ள ஒரே கதை என் கதை மட்டும்தான்.

என் இடுப்பில் கை வைத்து

தூக்கி முதல் முறையாக என்னை மேடையில் ஏற்றிவிட்டபோது என் வயது ஐந்து. என்னையே பார்த்துக்கொண்டிருந்த அத்தனை கண்களையும் கண்டு எனக்கு வியர்க்க ஆரம்பித்துவிட்டது. கையை, காலை அசைக்கக்கூட முடியவில்லை. அரங்கத்தில் இருந்தவர்களோ நிதானமிழந்து கத்தத் தொடங்கினார்கள்.

‘‘ஏய், சாப்ளின், என்ன செய்யப் போகிறாய்? ஏன் சும்மா நின்றுகொண்டிருக்கிறாய்? எதற்காக இங்கே வந்திருக்கிறாய்?”
அடுத்த சில நிமிடங்களில் கீழே இறங்கிவிட்டேன். ஆடு, பாடு, நடி. என்னவோ செய். ஆனால் மேடையை மட்டும் விட்டுவிடாதே என்றார் அம்மா. என் கண் முன்னால் அம்மாவின் உடலும் மனமும் அடுத்தடுத்து பாதிப்படைந்தன. என்ன, ஏது என்று விளங்கிக்கொள்வதற்கு முன்னால் அப்பாவும் அம்மாவும் மறைந்து போனார்கள். வறுமை எங்கள் வீட்டைக் கவ்விப் பிடித்தது. ஒரு நாள் எங்கள் வீட்டையும் அது விழுங்கியது.

படிப்பதை நிறுத்திக்கொண்டு சின்னச் சின்ன வேலைகள் செய்யத் தொடங்கினேன். பலனில்லை. சாலையிலும் பூங்காவிலும் படுத்து உறங்கினேன். பசி என்னைத் துரத்திக்கொண்டே இருந்தது. தனிமை என்னை வாட்டியது. ‘‘ஏய், சாப்ளின், என்ன செய்யப் போகிறாய்? ஏன் சும்மா நின்றுகொண்டிருக்கிறாய்? எதற்காக இங்கே வந்திருக்கிறாய்?’’
தெரியவில்லை.

என்னையும் என் குடும்பத்தையும் வதைத்த வறுமையை என்ன செய்வது? என்னால் அணிய முடியாத ஆடையை, என் கைக்கு எட்டாத சுவையான உணவை, என்னை ஏக்கத்தில் தள்ளும் புதிய தொப்பியை என்ன செய்வது? என்னைக் கண்டுகொள்ளாத சமூகத்தையும் என் உடையையும் உருவத்தையும் கேலி செய்பவர்களையும் என்ன செய்வது?
உடைந்து அழலாம். பலமுறை அழுதிருக்கிறேன். ஆனால், அதனால் என்ன ஆகிவிடப் போகிறது? கோபப்படலாம். ஆனால், யார் மீது, எதற்காகக் கோபப்பட முடியும்? யோசித்து, யோசித்து இறுதியில் ஒரு முடிவுக்கு வந்தேன்.

என்னிடம் என்ன மிஞ்சியிருக்கிறது? என் கதை மட்டும்தான். அதை ஏன் நான் மேடைக்குப் பதில் திரைக்குக் கொண்டு செல்லக் கூடாது? என் கதை வலி மிகுந்தது. அந்த வலியைச் சொல்ல என்னிடம் சொற்கள் இல்லை. அதனால் என்ன? என் படத்துக்குச் சொற்களே தேவைப்படாது.

எனக்கு நடிக்கத் தெரியாது. நான் நடிக்கப் போவதும் இல்லை. நான் நானாகவே தோன்றப் போகிறேன், அவ்வளவுதான். என்னிடம் புதிய ஆடைகள் இல்லை. ஆனால், புதிய ஆடைகள் எப்படியும் தேவைப்படப் போவதில்லை. நிஜ வாழ்வில் எல்லோரும் என்னைக் கண்டு சிரிப்பது வாடிக்கை. எனவே, திரையிலும் நான் எல்லோரும் சிரிக்கும்படி நடந்துகொள்வேன்.

சார்லி சாப்ளின் திரைக்கு வந்தது இப்படித்தான். என்னைக் காண அலைஅலையாக மக்கள் திரண்டு வந்தார்கள். கண்ணில் நீர் வர வர அனைவரும் சிரித்ததைக் கண்டேன். நானும் அவர்களுடன் இணைந்து சிரிக்கத் தொடங்கினேன். அப்படிச் சிரிக்கும்போது என் வலி, என் துயரம், என் தோல்வி அனைத்தையும் நேருக்கு நேராகப் பார்த்துச் சிரிப்பதுபோல் இருந்தது. அந்தத் தருணத்தில் நான் முழுமையான சாப்ளினாக மாறினேன்.

உங்களுக்கு எல்லாம் அளிக்க என்னிடம் இருப்பது என் சிரிப்பு மட்டும்தான். எது உங்களை அழுத்துகிறதோ, எது உங்களைத் தடுமாற வைக்கிறதோ, எது உங்களை அச்சுறுத்துகிறதோ, எது உங்கள் மனதை உடைத்துப் போடுகிறதோ அதைக் கண்டு சிரியுங்கள். உங்கள் குறைகள், பலவீனங்கள், தடைகள், தயக்கங்கள், அச்சங்கள் அனைத்தையும் கண்டு சிரியுங்கள். அப்போது நீங்களும் ஒரு சாப்ளினாக மாறுவீர்கள். முழு உலகையும் உங்கள் சிரிப்பால் வெல்வீர்கள்.

கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு: marudhan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x