Published : 29 Jan 2020 11:50 AM
Last Updated : 29 Jan 2020 11:50 AM

டிங்குவிடம் கேளுங்கள்: தாவரமும் ஒளிருமா?

வரலாறு பாடத்தில் படிக்கும் போர்கள் எல்லாம் உண்மையாக நடந்திருக்கின்றனவா, டிங்கு?

- கு. ஷாலினி, 8-ம் வகுப்பு, அரசு மேல்நிலைப் பள்ளி, அருங்குளம், திருவள்ளூர்.

உண்மையான நிகழ்வுகள் தானே வரலாறாக மாறும். கதைகளில் வரக்கூடிய போர்கள்தான் கற்பனையானவை. வரலாற்றுப் பாடங்களில் நாம் படிக்கும் போர்கள் எல்லாம் நிஜத்தில் நிகழ்ந்தவைதான், ஷாலினி.

கொசு நம் காதுக்கு அருகில் வந்து ரீங்காரம் செய்வது ஏன், டிங்கு?

- ஜே.எம்.ஆர். ரிபா நபிஹா, 10-ம் வகுப்பு, அவர் லேடி மேல்நிலைப் பள்ளி, பிராட்வே, சென்னை.

நம் மூக்கிலிருந்தும் வாயிலிருந்தும் வெளியேறும் கார்பன்டை ஆக்ஸைடால் கவரப்பட்டு நம் தலைக்கு அருகில் வருகிறது கொசு. எந்த இடத்தில் இறங்கி ரத்தத்தை உறிஞ்சலாம் என்று வட்டமிட்டபடி யோசித்து, சட்டென்று கடித்துவிட்டுப் பறக்கிறது.

கொசு பறக்கும்போது ரீங்காரம் வந்துகொண்டேதான் இருக்கும். தலைக்கு அருகில் வரும்போது ரீங்காரச் சத்தம் நமக்கு நன்றாகக் கேட்கிறது. அதனால் நம் காதில் பாடுவதுபோல் தெரிகிறது, ரிபா நபிஹா.

கன்று போட்ட மாட்டின் பால் மஞ்சள் நிறமாக இருப்பது ஏன், டிங்கு?

- ஏ.மதுமிதா, 8-ம் வகுப்பு, எஸ்.ஆர்.வி. பப்ளிக் பள்ளி, சமயபுரம்.

மாடு கன்று போடுவதற்குச் சற்று முன்பாகவோ கன்று போட்ட பிறகோ சுரக்கும் பாலை, சீம்பால் என்று அழைக்கிறார்கள். இது வழக்கமான பாலின் நிறம்போல் இல்லாமல், சற்று மஞ்சளாக இருக்கும். இதில் மாவுச் சத்து, புரதம், நோய் எதிர்ப்பு ஆற்றல் எல்லாம் அதிகமாக இருக்கிறன. அதனால் பாலின் நிறத்தில் மாற்றம் ஏற்படுகிறது, மதுமிதா. பிறந்த குட்டிக்குச் செரிமானம் ஆக வேண்டும் என்பதால். இந்தப் பாலில் கொழுப்புச் சத்து குறைவாக இருக்கும்.

முடி வெட்டும்போது வலிப்ப தில்லையே ஏன், டிங்கு?

- எஸ். விஷால், 6-ம் வகுப்பு, வித்யாசாகர் குளோபல் பள்ளி, செங்ல்பட்டு.

தோலின் மீதுள்ள மயிர்க் கால்களில் இருந்து முடி வளரத் தொடங்குகிறது. தோலில் உள்ள நுண்குமிழிகளில் இருக்கும் முடிக்கே உயிர் இருக்கிறது. அதனால் முடியைப் பிடித்து இழுக்கும்போது தோலில் வலி உண்டாகிறது. தோலைவிட்டு வெளியே வந்த முடி இறந்துவிட்டதாகக் கருதப்படுகிறது. அதனால் அந்த முடிகளை வெட்டினாலும் நமக்கு வலிப்பதில்லை, விஷால்.

மின்மினியைப் போல் தாவரமும் உமிழுமா, டிங்கு?

- இனியன், 10-ம் வகுப்பு, கார்மல் மேல்நிலைப் பள்ளி, நாகர்கோவில், குமரி.

ஃபாக்ஸ்ஃபையர் (Foxfire) என்ற பூஞ்சை ஒளிரும் தன்மையைப் பெற்றிருக்கிறது. மட்கும் மரங்களில் இருந்து உருவாகும் பூஞ்சைகளில் இரவு நேரத்தில் ஒளி வருகிறது.

இந்த உயிர் ஒளிக்கு வெப்பம் கிடையாது. பூச்சிகளைக் கவர்ந்து இனப்பெருக்கம் செய்யவோ எதிரிகளுக்கு எச்சரிக்கை விடுக்கவோ ஒளியை உமிழ்வதாகச் சொல்லப்படுகிறது. பொதுவாகப் பூஞ்சைகளில் இருந்து வரும் ஒளியில் வெளிச்சம் குறைவாகவே இருக்கும்.

புத்தகத்தைப் படிக்கக்கூடிய அளவுக்கு வெளிச்சம் அரிதாகக் கிடைப்பதும் உண்டு. அரிஸ்டாட்டில் ஒளி உமிழும் பூஞ்சைகளைப் பற்றி ஆவணப்படுத்தியிருக்கிறார். பிரெஞ்சு மொழியில் false fire என்பதுதான் மருவி, ஃபாக்ஸ்ஃபயர் ஆகிவிட்டதாகச் சொல்கிறார்கள். மற்றபடி நரிக்கும் இந்தப் பூஞ்சைக்கும் தொடர்பில்லை, இனியன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x