Published : 29 Jan 2020 11:14 AM
Last Updated : 29 Jan 2020 11:14 AM

‘குட்டி ஆகாயம்’ காட்டும் புது வண்ணங்கள்

ஆதி

வானம் பிடிக்காதவர்கள் உண்டா. நாம் தினசரி பார்க்கும் முடிவற்ற பிரம்மாண்டம் வானம். ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணி நேரமும், ஏன் ஒவ்வொரு நிமிடமுமேகூட புதுப்புது உருவங்களை, ஓவியங்களை வரைந்து காட்டும் வானத்தைக் குழந்தைகளுக்குப் பெரிதும் பிடிக்கும்.

இந்த வானத்தைப் போலவே, ‘குட்டி ஆகாயம்’ என்ற பெயரில் கோவையைச் சேர்ந்த பதிப்பகம் குழந்தைகளுக்கான வண்ண வண்ண நூல்களை வெளியிட்டுவருகிறது. அத்துடன் ‘குட்டி ஆகாயம்’ என்ற குழந்தைகளே எழுதக்கூடிய கதைகள், படைப்புகள், ஓவியங்களைக் கொண்ட இதழையும் வெளியிட்டுவருகிறது.

2016-ல் ‘குட்டி ஆகாயம்’ முதல் இதழ் வெளியானது. தாமிரபரணி ஆறு, ஒளிப்படக் கலை, பயண அனுபவம், கடித இலக்கியம், இயற்கை போன்ற மையக்கருக்களில் இதழ்கள் வெளியாகியுள்ளன. இந்த இதழ் முழுவதும் பள்ளி மாணவ, மாணவிகளின் பல்வேறு படைப்புகள் அலங்கரிக்கின்றன. சில நேரம் பெரியவர்கள் எழுதும் படைப்புகளும் இடம்பெறுகின்றன.

புகழ்பெற்ற படைப்புகள்

கோவை சுற்றுவட்டாரப் பகுதிகளில் எளிய குழந்தைகளுக்குக் கதை சொல்வதற்காக ‘வானம்’ என்ற அமைப்பை வெங்கடேஷ், காந்தி ஆகியோர் தொடங்கினார்கள். அந்தச் செயல்பாடுகள் தற்போது சிறார் இதழ், சிறார் நூல்கள் என்று விரிவடைந்துள்ளன.

‘குட்டி ஆகாயம்’ வெளியிட்டுள்ள நூல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம். பெரியவர்கள் எழுதியுள்ள ஒவ்வொரு நூலும் புகழ்பெற்ற ஓவியர்கள், நாடறிந்த எழுத்தாளர்களின் சிறந்த படைப்புகளை குழந்தைகளிடம் எடுத்துச் செல்கின்றன.

சிறார் இலக்கியப் படைப்பாளியும் மொழிபெயர்ப்பாளருமான சாலை செல்வம் மொழிபெயர்த்த கிரண் கஸ்தூரியாவின் ‘சிவப்பு மழைக்கோட்’, ஜுனுகா தேஷ்பாண்டேவின் ‘இரவு’, கமலா பாசினின் ‘யாரேனும் இந்த மௌனத்தைத் தகர்த்திருந்தால்’, வூ டெய்செங்கின் ‘பறவைகளின் வீடுகள்’ ஆகிய நூல்களை ‘குட்டி ஆகாயம்’ வெளியிட்டுள்ளது.

சிறார் சொன்ன கதைகள்

‘கதை சொல்லப் போறோம்’ என்ற நூல் உலகப் புகழ்பெற்ற வின்சென்ட் வான்கா, டெபி ஹப்ஸ், டியூகோ ரிவேரா, ஜென்னி மெலிஹோவ், ராபர்ட் கோன்டோ, கிளாடியா டிரம்ப்ளே ஆகியோருடைய ஓவியங்களைத் தாங்கியுள்ளது. இந்த ஓவியங்களைப் பார்த்து ரசிப்பதுடன், இந்த ஓவியங்களுக்கு ஏற்றாற்போல் குழந்தைகளே கதைகளையும் சொல்லலாம், எழுதலாம் என்பதே இந்த நூலின் சிறப்பம்சம்.

இந்த ஓவியங்களுக்கு ராசிபுரத்தைச் சேர்ந்த சிறுமி ஓவியநிலா எழுதிய கதைகள், கவிதைகள், கடிதம் ஆகியவை தொகுக்கப்பட்டு ‘அன்பில் விளைந்த மாதுளை’ என்ற தனி நூலாக வெளியாகியுள்ளது.

கோவை காமராஜ் நகர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியைச் சேர்ந்த ஐந்தாம் வகுப்பு மாணவன் ஹரி எழுதிய ‘பேசும் புத்தகம்’, ‘வண்ண மரம்’ ஆகிய குறுநூல்களோ இன்னொரு வகை. சௌமியா இயலின் வண்ண ஓவியங்களுடன் இந்த எளிமையான கதைகள் வசீகரிக்கின்றன.

எல்லோரும் நட்சத்திரம்

குழந்தைகளிடம் கதை சொல்ல வேண்டும் என்ற நோக்கத்துடன் தொடங்கப்பட்ட இந்த அமைப்பு, குழந்தைகள் சொல்லும் கதைகளைப் பெரியவர்கள் கேட்க வேண்டும், குழந்தைகள் வரையும் ஓவியங்களை பிரசுரிக்க வேண்டும், ஒவ்வொரு குழந்தையும் ஒரு படைப்பாளி என்பதை அங்கீகரிக்க வேண்டும் என்பதை நோக்கமாகக்கொண்டு செயல்பட்டுவருகிறது.

ஒவ்வொரு குழந்தையும் நட்சத்திரம் என்பது ‘குட்டி ஆகாய’த்தின் தாரக மந்திரம். அதைச் செயல்படுத்துவதற்கான தளங்களை சிறிதுசிறிதாக அந்த அமைப்பு விரிவுபடுத்திக்கொண்டே வருகிறது. ஒரு நாள் குழந்தைகள் வானம் தொடுவார்கள்.

‘குட்டி ஆகாயம்’
தொடர்புக்கு: 98434 72092, 96054 17123

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x