Published : 29 Jan 2020 11:00 AM
Last Updated : 29 Jan 2020 11:00 AM

அறிவியல் மேஜிக்: பாட்டிலைத் தூக்கும் பென்சில்!

மிது கார்த்தி

ஒரு பென்சிலைக் கொண்டு பாட்டிலைத் தூக்க முடியுமா? ஒரு சோதனையைச் செய்து பார்த்துவிடலாம்.

என்னென்ன தேவை?

அரை லிட்டர் பிளாஸ்டிக் பாட்டில்
அரிசி
பென்சில்
புனல்

எப்படிச் செய்வது?

* பிளாஸ்டிக் பாட்டிலில் புனலை வைத்து, முக்கால் பாகத்துக்கு அரிசியைக் கொட்டுங்கள்.
* பாட்டிலில் அரிசியைக் கொட்டும்போது, பாட்டிலைத் தட்டித் தட்டி கொட்டவும். இது அரிசியால் ஏற்படும் இடைவெளியைக் குறைக்கவும் அரிசியை சற்றுக் கூடுதலாகக் கொட்டவும் உதவும்.
* முக்கால் பாகத்துக்கு மேல் அரிசியைக் கொட்டியவுடன், மீண்டும் ஒரு முறை பாட்டிலைத் தரையில் தட்டிக்கொள்ளுங்கள்.
* இப்போது பென்சிலை அரிசிக்குள் செலுத்துங்கள். பென்சிலைச் செலுத்த சிரமமாக இருந்தால், பாட்டிலைத் தரையில் தட்டிக்கொள்ளுங்கள்.
* ஓரளவுக்கு பென்சில் அரிசிக்குள் சென்றவுடன், பென்சிலைப் பிடித்து பாட்டிலை மேலே தூக்குங்கள்.
* இப்போது அரிசியோடு உள்ள பிளாஸ்டிக் பாட்டில் பென்சில் மூலம் அந்தரத்தில் நிற்பதைக் காணலாம். என்ன காரணம்?

காரணம்

அரிசியை பிளாஸ்டிக் பாட்டிலுக்குள் தட்டித் தட்டி கொட்டும்போது, அரிசி மிகவும் நெருக்கமாக சேர்ந்து விடுகிறது. ஒவ்வோர் அரிசிக்கும் இடையே சிறுசிறு இடைவெளி இருக்கும். அந்தச் சிறிய இடைவெளியானது காற்று பாக்கெட்டுகளைப் போலச் செயல்படும். பென்சிலை பாட்டிலுக்குள் செலுத்தும்போது ஒவ்வோர் அரிசியும் தள்ளப்பட்டு, பென்சிலுக்கு இடத்தைத் தருகிறது.

தொடர்ந்து பென்சிலை உள்ளே செலுத்தும்போது அரிசி மணிகள் ஒன்றுக்கொன்று மிகவும் நெருக்கமாக ஒன்றிணைகின்றன. இதனால் உராய்வு ஏற்படுகிறது. இந்த உராய்வானது அரிசிக்கும் பென்சிலுக்கும் இடையே செயல்பட்டு, பாட்டிலைத் தூக்க உதவுகிறது.

சோதனைக்குப் பின்னர் பாட்டிலைச் சற்று ஆட்டிவிட்டு, பென்சிலை எடுக்க முயற்சி செய்யுங்கள். எளிதாக பென்சிலை வெளியே எடுக்க முடியும். பாட்டிலை ஆட்டும்போது அரிசியின் இடைவெளிகள் அதிகமாவதால், உராய்வு குறைந்துவிடுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x