Published : 28 Jan 2020 12:54 PM
Last Updated : 28 Jan 2020 12:54 PM

ரஷ்யக் கலை விழா: 28 கால்களின் சங்கீதம்!

படம்: ஆர்.ஜெயஸ்ரீ

ஜெயந்தன்

தமிழகத்தின் குட்டி ஜப்பான் என்றழைக்கப்படும் சிவகாசி, கடந்த 20-ம் தேதி மறக்க முடியாத மாலைப்பொழுதைச் சந்தித்தது. அங்குள்ள உயர்கல்வி நிறுவனங்களில் ஒன்றான ‘ஏஏஏ’ பொறியியல் கல்லூரியின் திறந்தவெளிக் கலையரங்கம் ஐந்தாயிரம் மாணவர்கள், பொதுமக்களால் நிரம்பி வழிந்தது.

ரஷ்ய நாட்டின் பாரம்பரிய பாலே தொடங்கி அங்கே புகழ்பெற்ற நாட்டுப்புற நடனம்வரை பாரம்பரியம், நவீனம் இரண்டும் இணைந்த சர்வதேச நடன நிகழ்ச்சியை நிகழ்த்துவதற்காக ரஷ்யாவின் புகழ்பெற்ற ‘டயமண்ட்’ கலைக் குழுவைச் சேர்ந்த 14 இளம் நடன மணிகள் வந்திருந்தார்கள். எதற்காக இந்த வருகை?

இரண்டாம் உலகப்போரில் 2.67 கோடி ரஷ்ய மக்கள் உயிரிழந்தார்கள். ராணுவ வீரர்கள் மட்டுமே நாற்பதாயிரம் பேர் மாண்டுபோனார்கள். மக்களும் ராணுவமும் இணைந்து போரிட்டு, ஜெர்மனியின் நாஜி ராணுவத்தைத் தோற்கடித்தார்கள். போரில் தங்களுக்குக் கிடைத்த வெற்றியின் 75-ம் ஆண்டு விழாவைத் தற்போது கொண்டாடிவருகிறது ரஷ்யா.

இந்தியா போன்ற நட்பு நாடுகளில் கலை, பண்பாட்டு நிகழ்வுகளை நடத்தி, தங்களுடைய உலகப் போர் வெற்றியின் நினைவைப் பகிர்ந்துகொள்ளவும், இந்திய – ரஷ்ய தொழில் வர்த்தக சபையின் வெள்ளி விழாவை இதனுடன் இணைத்துக் கொண்டாடும் நோக்குடனும் ‘டயமண்ட்’ நடனக் குழுவைத் தமிழகத்துக்கு அனுப்பிவைத்திருக்கிறது ரஷ்யா.

சிவகாசியில் மேடையில் அமைக்கப்பட்டிருந்த பிரம்மாண்ட எல்.இ.டி. திரையில் நடனமாடும் பாடல், இசை, நடன அசைவுகளுக்கு ஏற்ப கிராஃபிக்ஸ் டிசைன்கள் ஒளிர, ‘டயமண்ட்’ நடனக் குழுவினர் 21 தலைப்புகளில் அடுத்தடுத்து நடனமாடி அசத்தினார்கள்.

ஒவ்வொன்றும் ஒருவிதம்

கால்களின் கட்டைவிரலை முதன்மையாக வைத்து, மற்ற விரல்களின் துணையுடன் ஆடும் நுனிக்கால் உத்திதான் பாலே நடனத்தின் இதயம் போன்றது. ரஷ்யாவின் பாரம்பரிய இசை வடிவங்களில் ஒன்றான ரஷ்ய ஓபராவின் இயல்புக்கு ஏற்ப, மெல்லத் தொடங்கி வேகமெடுக்கும் பாலே நடனத்தின் பாரம்பரியம் கெடாமல், அதேநேரம் நவீன பாப் நடனத்தை இணைத்தும் 14 கலைஞர்களும் ஆடிய தொடக்க நடனம் 28 கால்களின் சங்கீதமோ என எண்ண வைத்தது.

நுனிக்கால் நடனம் ஆடுவதற்காக விதவிதமான பாய்ண்ட் ஷூக்கள் (Pointe shoes) அணிந்தும், பாடலின் உள்ளடக்கம் சார்ந்தும் ஒவ்வொரு பாடலுக்கும் உடை அணிந்து வந்தனர். கலைஞர்களின் அசைவுகளுக்கும் இசைக்கும் பெரும் ஒத்திசைவாக இருந்தது பார்வையாளர்களை இரண்டு மணிநேரம் மயக்கியது.

இரண்டாம் உலகப் போரில் கிடைத்த வெற்றியைக் கூறும் ‘ரஷ்யன் ஆர்மி’ என்ற தலைப்பிலான நடனத்தில் ‘பிக்கா’ என்ற ஆயுதத்தை வைத்து ஆடிய ஆட்டத்துக்கு அரங்கம் அதிர்ந்தது. ஜார்ஜிய நடனமான ‘நார்நாரி’, பாலேவின் அடிப்படையைக் கைவிடாமல் அதேநேரம், மலைப்பகுதிகளில் வாழும் மக்களின் கலாச்சாரப் பாரம்பரியத்தை உள்வாங்கிக்கொண்டு அசைவுகளுக்கு இணையாக ஆடைக்கும் முக்கியத்துவம் அளிக்கும் ‘புர்கா’, ரஷ்யாவின் முதன்மை சமயமாகிய ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ மதத்தைப் போற்றும் ‘டூம்ஸ்’, போரில் வெற்றி கிடைத்த மாதத்தைப் போற்றும் விதமாக உருவாக்கப்பட்டிருந்த ‘த மந்த் ஆஃப் மே’ என ஒவ்வொன்றும் ஒருவிதத்தில் கவர்ந்தன.

இறுதியில் தமிழ்ப் பெண்களைப் போல் பாவாடை தாவணி அணிந்து விஜய் நடித்து வெளியான ‘பிகில்’ படத்தில் இடம்பெற்ற ‘சிங்கப்பெண்ணே’ பாடலுக்குக் கச்சிதமான ஒத்திசைவுடன் நடனமாடினார்கள். ரஷ்யக் கலைஞர்களின் நடனம் தொடங்கும்முன் ஏஏஏ கல்லூரி மாணவர்கள், பரதநாட்டியம், தப்பாட்டம், சிலம்பாட்டம், கரகாட்டம், பங்க்ரா ஆகிய நடனங்களை ஆடி அசத்த, அதை ‘டயமண்ட’ குழுவினர் ஆர்வமுடன் கண்டு களித்தார்கள்.

மெப்கோ சிலங் கல்லூரியில்...

மறுநாள் சிவகாசியின் மற்றொரு முக்கியப் பொறியியல் கல்லூரியான மெப்கோ சிலங்கில் காலையும் மாலையும் ரஷ்யக் கலைஞர்களின் நடனம் களைகட்டியது. இதைக் காண, சிவகாசியில் பல்வேறு பள்ளி, கல்லூரிகளில் பயிலும் ஐயாயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் வந்திருந்தார்கள். இதன் பின்னர், சென்னை மியூசிக் அகாடமியில் நடந்த ‘டயமண்ட்’ குழுவின் நடனத்துக்கும் அரங்கம் நிரம்பி வழிந்தது.

அதேபோல் குடியரசு தினத்தன்று மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் கூட்டம் அலைமோதியது. இன்று (ஜனவரி 28) அரியலூர் ராம்கோ சிமெண்ட் வளாகத்திலும் நாளை (ஜனவரி 29) கோவை பொங்கலூர் கே.கே.கல்லூரியிலும் ஜனவரி 30, 31 தேதிகளில் கோவை எஸ்.எஸ்.வி.எம் பள்ளியிலும் இறுதி நிகழ்ச்சி பிப்ரவரி 2 அன்று சென்னை ரஷ்ய பண்பாட்டு மையத்திலும் நடக்க இருப்பதால் தவறவிட்டவர்கள், இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

டான் நதிக்கரையில் இருந்து...

‘டயமண்ட்’ கலைக் குழுவை அமைத்து, அதை உலகப் புகழ் பெற்ற நடனக் குழுவாக மாற்றியிருக்கும் அதன் ஆசிரியர், நடனக் கலைஞர் மரியாவிடம் ‘மாஸ்கோவிலிருந்து வருகிறீர்களா?’ என்றால் “இல்லை மாஸ்கோவிலிருந்து 1,500 கிலோ மீட்டர் தூரத்தில் டான் நதிக்கரையில் அமைந்திருக்கிறது ரஸ்டோவ் நகரம் (Rostov on Don).

நாங்கள் 14 பேருமே அந்த நகரில் பிறந்து வளர்ந்தவர்கள். ரஷ்யாவில் நூற்றுக்கணக்கான நடன வகைகள் இருந்தாலும் எல்லாவற்றையும் பாலே இணைத்துவிடுகிறது” என்றவர், ஒவ்வொரு மேடையிலும் ‘ட்ரீ’ என்ற தனிநபர் நடனத்தையும் ஆடி அசத்துகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x