Published : 28 Jan 2020 12:48 PM
Last Updated : 28 Jan 2020 12:48 PM

இணைய உலா: ஃபுட்டீகளின் உணவு உலகம்!

ஒரு பக்கம் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடங்களில் சமைக்கும் கிச்சன் வீடியோக்கள் நாளொருவண்ணமும் பொழுதொருமேனியுமாகப் பெருகிவருகின்றன. இன்னொரு பக்கம் அதே அளவுக்கு உணவை ருசிபார்த்து வீடியோக்களை அப்லோடு செய்யும் ‘ஃபுட்டீ’களும் பெருகிவிட்டார்கள். கையேந்தி பவன் தொடங்கி ஸ்டார் ஹோட்டல்கள்வரை செல்லும் இந்த ஃபுட்டீகள் உணவைப் பிரிந்து மேய்ந்து கருத்துச் சொல்லிவிடுகிறார்கள். இதில் பெரும்பாலான ‘ஃபுட்டீகள்’ இளைஞர்களாக இருப்பதுதான் சிறப்பு.

அண்மைக் காலமாக இந்த ஃபுட்டீகள் மூலம் ஹோட்டல்களின் பதார்த்த ருசிகளை அறிந்துகொள்ள முடிகிறது. சமூக ஊடகங்களில் இயங்கிவரும் இந்த ஃபுட்டீகள், ஹோட்டல் ஹோட்டலாகச் சென்று ஹோட்டல்களின் சிறப்பையும் அங்கு பரிமாறப்படும் உணவின் தரத்தையும் குறிப்பாக உணவின் ருசியையும் புட்டுப் புட்டு வைக்கிறார்கள்.

பெருகும் பார்வையாளர்கள்

‘கிச்சன் மேக்கிங்’ வீடியோக்களுக்கு எந்த அளவுக்கு வரவேற்பு இருக்கிறதோ, அதே அளவுக்கு ஃபுட்டீஸ் வீடியோக்களுக்கும் சமூக ஊடகங்களில் வரவேற்பு இருப்பதைக் காண முடிகிறது. புட்டீஸ் வீடியோக்களின் சந்தாதாரர்கள் எண்ணிக்கைக் கூடிக்கொண்டே செல்வதன் மூலம் இதை அறிந்துகொள்ள முடிகிறது. ஃபுட்டீகளின் வீடியோ நோட்டிபிகேஷனுக்காகக் காத்திருந்து வீடியோவைப் பார்வையிடும் அளவுக்கு மக்கள் ஈர்க்கப்பட்டுள்ளார்கள்.

சராசரியாக ஒவ்வொரு ஃபுட்டீயும் 2 முதல் 5 லட்சம் சந்தாதாரர்களைக் கொண்டிருக்கிறார்கள். சென்னைக்குள்ளேயே பல ஹோட்டல்களுக்குச் சென்றுகொண்டிருந்த ஃபுட்டீகள், இன்று வெளிநாட்டு ஹோட்டல்களுக்கும் சென்று, அங்குள்ள உணவைப் பற்றியும் கருத்துச் சொல்கிறார்கள். உணவு மட்டுமில்லாமல் குளிர்பானங்கள், நொறுக்குத் தீனிகள் என எதையும் விட்டு வைக்காமல் எல்லா உணவையும் ருசி பார்த்து விடுகிறார்கள் இவர்கள்.

இர்பான்

வெளிநாடுகளில் ஃபுட்டீஸ்

“தமிழகத்தில் சென்னை, மதுரை, திருநெல்வேலி, கோயம்புத்தூர் எனப் பெரிய நகரங்கள் தொடங்கி சிறு நகரங்கள்வரை போகிறோம். பிரபலமான ஹோட்டல்கள் என்றில்லை. எந்த ஹோட்டலாக இருந்தாலும், ருசியுள்ள உணவு கிடைக்கும் என்றால், அங்கே ஆஜராகிவிடுவோம். இப்போல்லாம் தாய்லாந்து, மலேசியா, பாங்காக் என வெளி நாடுகளுக்கும் சென்றுவருகிறோம். அங்குள்ள உணவையும் ருசிபார்த்து வீடியோக்களைப் பதிவேற்றுகிறோம். வெளிநாடு செல்வோர் சாப்பாட்டுக்காக அலையாமல் இருக்க, இது உதவியாக இருக்கும்” என்கிறார் சென்னையைச் சேர்ந்த ஃபுட்டீ இர்பான்.

எந்த ஹோட்டலுக்குச் சென்றாலும், வித்தியாசமான பல உணவு வகைகளை ருசித்துப் பார்த்தும், அதன் விலையைப் பற்றியும் குறிப்பிடுகிறார்கள். ஆனால், ஹோட்டலுக்கு விளம்பரம் தரும் வகையில் ஃபுட்டீகள் நடந்து கொள்கிறார்கள் என்ற விமர்சனமும் பொதுவெளியில் உண்டு. “ஹோட்டல்களில் போய்ச் சாப்பிட்டு பார்த்துக் கூறுவதால், அதைப் பற்றி நல்லவிதமாகச் சொல்ல வேண்டும் என்றெல்லாம் நினைப்பது கிடையாது.

பல சந்தர்ப்பங்களில் காசு கொடுத்து வாங்கிச் சாப்பிடுவதால் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட கருத்து என்றே வீடியோக்களைத் தயார்செய்கிறோம். உணவு சரியாக இல்லையென்றாலும் அதனை அப்படியே சொல்லிவிடுவோம்” என்கிறார் இர்பான்.

உணவை ருசிபார்த்து வீடியோக்களை யூடியூப்பில் பதிவேற்றி வருமானமும் பார்க்கும் ஃபுட்டீகளுக்கு இன்று அதுவே தொழிலாகிவிட்டது. வருமானத்துக்கு வழி காட்டும் வகையில் ஃபுட்டீகளின் எண்ணிக்கை வருங்காலத்தில் இரட்டிப்பாகும் என்று நம்பலாம்!

- வி. சாமுவேல்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x