Published : 27 Jan 2020 12:43 PM
Last Updated : 27 Jan 2020 12:43 PM

இணையத் துண்டிப்பின் தலைநகர்...

உலகின் அனைத்து செயல்பாடுகளும் தற்போது இணையத்தை அடிப்படையாகக் கொண்டே நிகழ்த்தப்படுகின்றன. அன்றாடத் தகவல் பரிமாற்றம், பணப் பரிவர்த்தனை, கல்வி, மருத்துவம், தொழில்கள் என உலகமே இணையத்தின் வழியேபிணைக்கப்பட்டு இருக்கிறது. இந்தச் சூழலில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் இணையத் தொடர்பை துண்டித்துவிட்டால் என்ன ஆகும்? அந்தப் பகுதி உலகத்தை விட்டே துண்டித்துவிட்டதாக மாறிவிடும். இந்தச் சூழலில்தான் இணையம் தனி மனித உரிமை என்று ஐநா கடந்த 2016-ம் ஆண்டு அறிவித்தது.

மக்கள் புரட்சியை எதிர்கொள்ளும் நாடுகள்,மக்களின் தகவல் பரிமாற்றத்தை தடுக்கும்விதமாக இணையத்தை முடக்குவதை வழக்கமாக்கி வருகின்றன. அந்தவகையில் இந்தியா இணைய சேவை முடக்கத்தின் தலைமையிடமாகவே மாறியுள்ளது எனலாம்.

கடந்த ஓராண்டில் மட்டும் இந்தியாவில் 106 முறை இணையத் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இணையத் தொடர்பு துண்டிப்பு என்பது நவீன காலத்தில் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது. இந்தச் சூழலில் ஒரு மாநிலத்தில் இணையத்தை முடக்குவது என்பது, அம்மக்களை சிறை வைப்பதற்கு ஒப்பாகும். இதனால் பலரின் வாழ்வாதாரம் பாதிப்படைகிறது; பொருளாதாரமும் பெரும் சரிவைச் சந்திக்கிறது.

கடந்த ஓராண்டில் இந்தியா 106 முறை இணைய சேவையை துண்டித்த காரணத்தினால் பொருளாதார ரீதியாக ரூ.9,100 கோடி (1.3 பில்லியன் டாலர் ) நஷ்டம் ஏற்பட்டுள்ளது. உலகஅளவில், ஈராக், சூடானுக்கு அடுத்தபடியாக இணையத் துண்டிப்பால் பொருளாதார இழப்பைச்சந்தித்த நாடாக இந்தியா அடையாளப்படுத்தப்படுகிறது. 2019-ம் ஆண்டில் மட்டும் உலகளாவிய அளவில் மேற்கொள்ளப்பட்ட இணைய சேவை துண்டிப்பால் ரூ.56,350 கோடி (8.05 பில்லியன் டாலர்) இழப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தியா பொருளாதாரத்தில் முன்னேறுகிறதோ இல்லையோ, இணையத் தொடர்பு துண்டிப்பில் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது. 2012 ஜனவரி முதல் 2020 ஜனவரி வரையில் இந்தியா 381 முறை இணைய சேவையை துண்டித்துள்ளது. 2012-ல் 3 முறை, 2013-ல் 5 முறை என ஆரம்பித்து, 2018-ல் உட்சபட்சமாக 134 முறை இணைய சேவையை துண்டித்துள்ளது. அவ்வகையாக, உலக அளவில் இணைய சேவை துண்டிப்பில் இந்தியாவின் பங்கு 67 சதவீதம்.

இந்த ஆண்டில் ஜம்மு, காஷ்மீரில் மட்டும் 5 மாதங்களுக்கும் மேலாக இணைய சேவை துண்டிக்கப்பட்டது. ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பந்தஸ்து ரத்தை ஒட்டி 2019 ஆகஸ்ட் 4-ம் தேதி ஜம்மு, காஷ்மீர் பகுதிகளில் இணைய சேவை முற்றிலும் துண்டிக்கப்பட்டது. கடந்த வாரத்தில்தான் அந்தத் தடை சற்று தளர்த்தப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீருக்கு அடுத்தபடியாக ராஜஸ்தான், மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், மேகாலயா, பீகார், ஒடிசா, அஸ்ஸாம், அருணாச்சலப் பிரதேசம், மேற்குவங்காளம், மணிப்பூர், திரிபுரா ஆகிய மாநிலங்களிலும் கடந்த ஆண்டு இணைய சேவை துண்டிக்கப்பட்டது.

இந்தச் சூழலில் கடந்த வாரம், பொருளாதாரப் புலனாய்வுப் பிரிவு வெளியிட்ட, ஜனநாயகம் பேணப்படும் நாடுகளின் வரிசையில் இந்தியா 51-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. 2018-ல் இந்தியா இந்தப் பட்டியலில் 41-வது இடத்தில் இருந்தது. தற்போது ஒரே ஆண்டில் 10 இடங்கள் பின்னே தள்ளப்பட்டு இருக்கிறது!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x