Published : 27 Jan 2020 12:35 PM
Last Updated : 27 Jan 2020 12:35 PM

கடன் கழுத்தை நெறிக்காமல் காப்பது எப்படி?

ஸ்ரீகுமரன் நெடாத்

பண்டைய காலத்திலிருந்தே கடன் என்றாலே பிரச்சினையாகத்தான் பார்க்கப்பட்டுவருகிறது. அதற்கும் காரணம் இல்லாமல் இல்லை. அந்தக் காலங்களில் கடன் வழங்குதல் ஒருதுறையாக இல்லாமல் முறைப்படுத்தப்படாமல் இருந்தது. கடன் கொடுப்பவர் வைப்பதுதான் வட்டி. இதனால் வட்டிக்கு விடுபவர்களின் ஆட்டம் அதிகமாகவே இருந்தது.

காலப்போக்கில் தனிநபர் வருமானம் உயர, கடன் வழங்குவதும் வாங்குவதும் எளிமையானது. கடன் வாங்குவதுபரவலாக அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. கடன் பெறுவதன் மூலம் பலரது வாழ்க்கை மேம்பட்டிருக்கிறது. பலர் சொத்துகளைச் சேர்த்திருக்கிறார்கள். இப்போது கடன் தேவைப்படாத நபரைப் பார்ப்பதே அரிதாக மாறிவிட்டது.

ஆனால், நம்முடைய பொருளாதாரம் மோசமாக இருக்கும்போது, வேலை இழப்பு என்பது எப்போது வரும் என்பது தெரியாத நிலை உள்ளது. இதனால் வருமானம் பாதிக்கப்படுகிறது. கடன் வாங்கியவர்கள் தவணை தொகையைத் திருப்பிச் செலுத்த முடியாத நெருக்கடிக்கு ஆளாகிறார்கள். பணவீக்க உயர்வு மேலும் கவலையை அதிகரிப்பதாக இருக்கிறது. நவம்பரில் நுகர்வோர் பணவீக்கம் 10.01 சதவீதத்தை எட்டியிருக்கிறது. வங்கி சேமிப்பு போன்ற பாரம்பரிய சேமிப்பு திட்டங்களின் மீதான வருமானம் மிகவும் குறைவான வளர்ச்சியில் உள்ளன.

இதன் விளைவு, ஊதியம் வாங்கும் தனிநபரின் நிதிநிலை பெரிதும் பாதிக்கப்படுகிறது. சிலருக்கு முதலீடு செய்வதே கனவாக மாறியிருக்கிறது. சிலர் தங்களின் மாத தவணையோடு போராடிக்கொண்டிருக்கிறார்கள். சிலர் தீவிர கடன் நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறார்கள். எல்லோரும் தாங்கள் வாங்கிய கடன் மீதே மொத்த பழியையும் சுமத்திவிடுகிறார்கள். இதில் எந்த ஆச்சரியமும் இல்லை. கடன் குறித்த போதுமான தெளிவு இல்லாததே இதற்கெல்லாம் காரணம். ஆனால், இப்போதுகூட கடன் நெருக்கடியிலிருந்து தப்பிக்கும் வழிகள் உள்ளன.

சிஎஃப்ஏ இன்ஸ்டியூட்டின் இயக்குநர் ஸ்ரீனிவாஸ் குந்தே “கடன் இருபக்க கத்தி போன்றது” என்கிறார். கடன் நம்முடைய செல்வத்தைப் பெருக்க உதவியாக இருந்தாலும், அடுத்தடுத்து வரும் கடன் சுழற்சி பேரழிவாக மாறிவிடலாம். கடன் வாங்குவதற்கான அடிப்படைகொள்கை உங்களால் திருப்பிச் செலுத்தமுடிந்த அளவுக்கு மட்டுமே கடன் வாங்க வேண்டும்.

அதேபோல் கடனைத் திருப்பிச் செலுத்துவதில் நேர்மையாக இருக்க வேண்டும் என்கிறார் டாடா கேபிடல்நிறுவனத்தின் வெல்த் மேனேஜ்மென்ட் பிரிவின் தலைவர் சவுரவ் பாசு.

கடன் வாங்குவது பிரச்சினை இல்லாமல் இருக்கலாம் ஆனால், சில கடன்கள்விஷமாக மாறிவிட வாய்ப்புள்ளது. அதில் ஒன்று கிரெடிட் கார்ட் நிலுவை; கட்டுப்பாடில்லாத பல கிரெடிட் கார்டுகளின் பயன்பாட்டினால் நிச்சயமாக ஒருவர் பெரும் பிரச்சினையைச் சந்திக்க நேரலாம். இண்டியாலெண்ட்ஸ் நிறுவனத்தின் சிஇஓ கவுரவ் சோப்ரா, ஒருவருடைய மோசமான கடன் பழக்கம், கடனைத் திருப்பி செலுத்துவதிலும் மோசமானதாக மாறலாம் என்கிறார்.

சொகுசுக்காகவும், ஆடம்பரத்துக்காகவும் அதிகமாக செலவு செய்யும் போக்கு மோசமான கடன் நெருக்கடியை உண்டாக்கிவிடும் என்று எச்சரிக்கிறார். கிரெடிட் கார்டில் குறைந்தபட்ச நிலுவை தொகையைச் செலுத்துவதும் மீண்டும் மீண்டும் கடன்களைச் சேர்த்துக்கொண்டே போவதும் பிரச்சினையைக் கொண்டுவரும். இதனால் ஒருகட்டத்தில் அதிக வட்டியைச் செலுத்த வேண்டிய சூழல் ஏற்படலாம்.

“செலுத்தப்படாத கடன் நிலுவை அதிக வட்டியைக் கொண்டிருக்கும். மாதத்துக்கு 3 சதவீதம் என்ற அளவில் அதிகமாக இருக்கும்,” என்கிறார் குந்தே. மேலும் மொபைல் போன் போன்ற மதிப்பிழக்கும் பொருட்களுக்காக கடன் வாங்குவது சரியான போக்கு அல்ல என்றும் அவர் கூறுகிறார்.

தனிநபர் கடன் மற்றொரு மோசமான கடனுக்கு எடுத்துக்காட்டு. எந்தவிதஉத்தரவாதமும் இல்லாமல் வழங்கப்படும் இந்தக் கடன் மூலம் பெறப்படும் பணம் முறையாகச் செலவு செய்யும்பழக்கத்தை வழக்கமாக ஏற்படுத்துவதில்லை. இதனால் தேவையில்லாதவற்றுக்கு செலவிடும் போக்கு உள்ளது.ஆனால் நிதி ஆலோசகர்கள் கூறுவதுபோல் விடுமுறைக் கொண்டாட்டங்களுக்காக அதிக வட்டியில் கடன் வாங்க கூடாது. இதுபோன்ற செலவுகளுக்காக முன்கூட்டியே திட்டமிட்டு செயல்பட வேண்டும். முதலீடுகளை கவனமாக மேற்கொள்ள வேண்டும்.

பெயர் குறிப்பிட விரும்பாத கடன்வாங்கிய நபர் ஒருவர் கடன் நிறுவனங்களின் தொடர்ச்சியான ஆதிக்கத்தால் கடனில் சிக்கிக்கொள்வதாகக் கூறுகிறார். கடன் முகவர்கள் தொடர்ச்சியாக போன் செய்து கடன் வாங்கும் எண்ணத்தைத் தூண்டுகிறார்கள். இதனால் நீண்டகாலமாக திட்டமிட்டிருந்த குடும்ப சுற்றுலாவுக்கு கடன் வாங்கி சென்றோம். தற்போது அந்தக் கடன் கழுத்தை நெரிக்கும் அளவுக்கு மாறியிருக்கிறது. மூன்று வருடத்துக்கு 15 சதவீத வட்டி அளவில் சிக்கியிருக்கிறேன் என்கிறார்.

மருத்துவ சிகிச்சைக்காக அவசர நேரத்தில் தனிநபர் கடன் வாங்குவது ஏற்றுக்கொள்ளக்கூடிய காரணம்தான். இன்று,காப்பீடு திட்டங்களும் தீவிர, கொடிய நோய்களுக்கென்று உருவாக்கப்பட்டுள்ளது. அவற்றை முன்கூட்டியே எடுத்திருந்தால் இதையும் தவிர்க்க முடியும். நீங்கள் எடுக்கும் காப்பீடு திட்டங்கள் சரியான நேரத்தில் உங்களுடைய நிதிநிலையை பாதிக்காத வகையில் உதவியாக மாறும். இதன்மூலம் கடனில் சிக்குவதை தவிர்க்கலாம். அதேபோல் எவ்வளவு சீக்கிரமாக காப்பீடு திட்டத்தை எடுக்கிறோமோ குறைவான பிரீமியம் இருக்கும்.

கிரெடிட் கார்ட் நிலுவை, வீட்டுக் கடன்மாத தவணை செலுத்த தவறுவது கடன் நெருக்கடியில் சிக்குவதற்கான ஆரம்பஅறிகுறி ஆகும். ஒருமுறை தவறிவிட்டால், அதை சரிசெய்வது என்பது கடினமான காரியமாகிவிடும். கடனைத் திருப்பி செலுத்துவது தவறுவதற்கான காரணங்கள் பல. முக்கியமான ஒன்று வேலை இழப்பு, ஊதியம் தாமதமாதல். இதைவிட மோசமான காரணம், கடன் பெற்றவர் செலவு செய்வதில் கட்டுப்பாடில்லாமல் இருப்பது. குந்தே கூறுவதுபோல் கடன் நெருக்கடி வங்கியில் உள்ள நிதி ஆதாரங்களை காலி செய்வதோடு, வேறு இடங்களிலிருந்து நிதியைப் பெறுவதற்கான கட்டாயத்தையும் ஏற்படுத்தும்.

எனவே இரண்டு விஷயங்களில் கடன் பெறுபவர்கள் கவனமாக இருக்கவேண்டும். “முதலாவது பணம் இருக்கும்ஆனால் அலட்சியமாக கையாள்வார்கள். இரண்டாவது பணம் இருக்காது... இரண்டாவது நிலை கடன் நெருக்கடியில் சிக்குவதற்கு அதிக வாய்ப்புகளைக் கொண்டிருக்கும்.

மாத தவணை வருமானத்தில் பாதியைத் தாண்டிய நிலையில் இருந்தால் எப்போது வேண்டுமானாலும் கடன் நெருக்கடியில் சிக்கலாம் என்கிறார் இண்டியாலெண்ட்ஸ் சிஇஓ சோப்ரா.

திட்டமிடாமல் இருப்பது கடன் நெருக்கடிக்கு வழிவகுக்கும். கடன் நெருக்கடியிலிருந்து தப்பிக்க கடன் குறித்த தெளிவும், அது எப்படி செயல்படுகிறது, அதை திட்டமிட்டு செலுத்துவது எப்படி என்பதையெல்லாம் தெரிந்துகொள்ள வேண்டும்.

ஆரோக்கியமான கடன்களும் உள்ளன. உதாரணமாக வீட்டுக்கடன். கடனில் சொத்துகள் வாங்குவது என்றாலும், அதற்கு எதிர்காலத்தில் ஒரு மதிப்பும், பணமாக்கக்கூடிய வாய்ப்பும் இருக்கிறது. மாத ஊதியக்காரர் வீடு வாங்க திட்டமிட்டால், வருமானத்துக்கு ஏற்றவாறு திட்டமிட்டு கடனைத் திருப்பிச் செலுத்துவது குறித்தும் தெளிவாக இருந்தால் கடன் வாங்கி சொத்து வாங்குவது சிறந்த முடிவாக இருக்கும் என்கிறார் டாடா கேபிடலின் பாசு. சொத்தின் மதிப்பு உயரும்போது அது கூடுதல் பலன் தருவதாகவும் இருக்கும்.

“இறுதியாக கடன் என்பது எப்போது நம்முடைய அறைக்குள் யானை இருப்பது போலத்தான். ஆரோக்கியமான கடனும் சில நேரங்களில் நெருக்கடியை உண்டாக்கக் கூடும். கவனமாக கடனைக் கையாள வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x