Published : 27 Jan 2020 12:29 PM
Last Updated : 27 Jan 2020 12:29 PM

அலசல்: பொறுப்பு அரசுக்கு மட்டுமல்ல!

மூன்றாம் வகுப்பு மாணவிகளை குடியரசு தின விழா குறித்த கடிதம் ஒன்றை மாநில முதல்வருக்கு எழுதுமாறு ஆசிரியர் ஒருவர் கூறினார். ஒரு மாணவி மட்டும் ``எனது தந்தை ஒரு விவசாயி, விவசாயம் பொய்த்துப் போனதால் தற்கொலை செய்துகொள்வதாகக் கூறுகிறார் அவரைக் காப்பாற்றுங்கள்,’’ என எழுதிய கடிதம் வகுப்பு ஆசிரியரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

கடிதம் எழுதிய மாணவியின் பெயர் தனஸ்ரீ பிகாட். சம்பவம் நிகழ்ந்தது மகாராஷ்டிர மாநிலம் உஸ்மனாபாத் மாவட்டத்தில் உள்ள ஜில்லா பரிஷத் பள்ளியில். மூன்றாம் வகுப்பு மாணவியை பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாக்கிய சம்பவம், நாட்டின் முதுகெலும்பாகத் திகழும் விவசாயியின் தற்கொலையுடன் இணைந்தது என்று நாம் பார்க்கும்போது நிச்சயம் இது மிகப் பெரும் அதிர்வலையைத்தான் கிளப்ப வேண்டும்.

ஆனால், வெறுமனே செய்தியாகத்தான் இந்தக் கடிதம், அதை எழுதிய மாணவி, அவர் பயிலும் பள்ளி பற்றிய விவரங்களோடு வெளியாகியுள்ளது. தொடர்ந்து விவசாயம் பொய்த்துப் போன நிலையில் கோழிப் பண்ணை வைக்கலாம் என்ற ஆலோசனையை ஏற்று அதிலும் ஈடுபட்டுள்ளார் தனஸ்ரீயின் தந்தை. இவரைப் போலவே மாவட்டத்தில் உள்ள 10 ஆயிரம் விவசாயிகளும் கோழிப் பண்ணை வைக்க ஒரு நிறுவனம் ஆலோசனை கூறியுள்ளது. ஆனால், பிறகுதான் இவர்கள் அனைவருமே ஏமாற்றப்பட்டதை உணர்ந்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து அதிகரித்துவரும் கடன் சுமையிலிருந்து தப்பிக்க தற்கொலையைத் தவிர வேறு வழியில்லை என தினசரி தனது தந்தை புலம்புவதைக் கேட்டு அதற்கு தீர்வு காண வழிதேடிய சிறுமியின் மன வெளிப்பாடுதான் இந்தக் கடிதம். அதிக எண்ணிக்கையிலான விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் மாநிலங்களில் முதலாவதாக மகாராஷ்டிரா உள்ளது. அதிலும் குறிப்பாக மாரத்வாடா மாவட்டத்தில் இத்தகைய சோக முடிவை மேற்கொள்வோர் எண்ணிக்கை அதிகம்.

அதிலும் குறிப்பாக இந்த மாவட்டத்தில் உள்ள பெண்கள், சிறுமிகளின் உளைச்சலுக்கு அளவே கிடையாது. மகளுக்கு திருமணம் செய்துவைக்க போதிய பணம் இல்லாத சூழலில் தற்கொலை முடிவை எடுத்த விவசாயிகளும் இங்கு அதிகம். அதேபோல பெற்றோருக்கு சுமையாக இருக்க விரும்பாமல் தற்கொலை செய்து கொண்ட இளம் பெண்களும் இப்பகுதியில் அதிகம். 2018-ம் ஆண்டில் இந்தியாவில் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை 10,349 என்கிறது தேசிய குற்ற பதிவேடு.

நாட்டில் தற்கொலை செய்து கொண்ட மற்ற பிரிவினரைக் காட்டிலும் விவசாயிகளின் எண்ணிக்கைதான் இதில் அதிகம் என்பதுதான் சோகத்திலும் பெரும் சோகம். விவசாயிகள் பயிர் கடன் ரத்து, பயிர் காப்பீடு திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களை அரசுகள் தீவிரமாக எடுத்து வருகின்றன. ஆனாலும் இத்தகைய மரணங்களை தடுக்க முடியாதது அரசு செயல்பாட்டிலுள்ள மெத்தனத்
தன்மையைக் காட்டுகிறது.

எந்தப் பிரச்சினைக்கும் தற்கொலை தீர்வல்ல என்பதை வலியுறுத்தும் அரசு, அதை விவசாயிகளிடம் வலியுறுத்தத் தவறுகிறதோ என்ற எண்ணம் மேலோங்கி நிற்கிறது. கடன் சுமை மட்டும் காரணமா என்பதைத் தாண்டி இது மன ரீதியான பிரச்சினை என்பதையும் உணர்ந்து, மனவள பயிற்சி வகுப்புகளை விவசாயிகளுக்கு நடத்த வேண்டும். அவர்களிடம் தன்னம்பிக்கையை வளர்க்க வேண்டும்.

தற்கொலையைத் தடுக்க வேண்டியது சமூகக் கடமை. அதிலும் குறிப்பாக விவசாயிகள் மரணத்தை முற்றிலுமாக தடுக்க வேண்டியதில் அனைவருக்கும் பொறுப்புள்ளது. அரசுடன் தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் ஒன்றிணைந்து இதற்கு தீர்வு காண வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x