Published : 27 Jan 2020 12:19 PM
Last Updated : 27 Jan 2020 12:19 PM

எண்ணித் துணிக: காசில்லாமல் கல்லா கட்டும் கலை!

சதீஷ் கிருஷ்ணமூர்த்தி
satheeshkrishnamurthy@gmail.com

வெறுங்கையில் முழம் போடும் வழி பற்றி அலசுவோம். நோகாமல் நோன்பு கும்பிடும் நேக்கை பார்ப்போம். என்ன புரியவில்லையா? சென்ற வாரம் விட்ட இடத்திலிருந்து தொடர்வோம். விற்பனை மேம்பட விளம்பரம் இல்லாமல் பிராண்ட் வளர்க்கும் விதம் பற்றி இன்று பேசுவோம்!

என்ன தான் சிறந்த ஸ்டார்ட் அப்பாக இருந்தாலும், சூப்பர் பிராண்டாய் அமைந்தாலும் வாடிக்கையாளருக்கு தெரிந்தால் மட்டுமே தேடி வந்து வாங்குவார். பிராண்ட் பற்றிய விழிப்புணர்வை, அதை பற்றி ஒரு உயர்வான எண்ணத்தை வாடிக்கையாளர் மனதில் படைக்க விளம்பரம் அல்லாத வழிகள் உண்டு. இருந்தும் மார்க்கெட்டிங் என்றாலே ஏகப்பட்ட செலவு என்ற எண்ணம் ஏனோ தோன்றி வளர்ந்துவிட்டது.

விற்பனை மேம்பாடு என்றாலே விளம்பரம் மட்டும்தான் என்ற எண்ணமே இதற்குக் காரணம். பணம் இருந்தால் பரிமளிக்கலாம்தான். அதற்காக பணம் இல்லார்க்கு வியாபார உலகில் இடமில்லாமல் இல்லை. சின்ன கல்லை போட்டு பெரிய மீனை பிடிக்கும் வழிகள் இருக்கவே செய்கின்றன.

பிராண்ட் செய்தியை வாடிக்கையாளரிடம் கொண்டு சேர்க்கத் தேவை பணம் என்று பலர் நினைக்கின்றனர். அது தப்பாட்டம். பிராண்ட் விற்பனையின் ஆரம்பப் படி அதன் பொசிஷனிங். பிராண்டின் ஆதார தன்மைகளைக் கொண்டுதான் விற்பனை மேம்பாட்டு உத்திகள் அமைக்க வேண்டும்.

நீண்ட பாரம்பரியமும் மரபும் நிறைந்த ‘சுந்தரம் ஃபைனான்ஸ்’ பெரியதாக விளம்பரம் செய்வதில்லை. ஆனால் தன் தன்மைகளுக்கும் பண்புகளுக்கும் ஏற்றவாறு ‘சாஸ்த்ரிய இசை நிகழ்ச்சிகள்’, ‘பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள்’, ‘மைலாப்பூர் திருவிழா’ போன்ற கலாச்சார நிகழ்ச்சிகளை ஸ்பான்சர் செய்கிறது. இது போன்ற ஸ்பான்சர்ஷிப் பிராண்டின் தன்மை விளம்பரங்களை விடவும் நேர்த்தியாக வாடிக்கையாளர்களுக்கு கொண்டு சேர்ப்பதோடு பிராண்டோடு நீண்ட உறவு மலர செய்யவும் உதவுகிறது.

தெளிவான பிரமோஷனேசரியான விமோசனம்!

பளிச்சென்று பிராண்டு கண்ணில் படவேண்டும் என்று மட்டுமே பிரமோஷன் செய்யக் கூடாது. தெளிவான பிரமோஷனை சரியாக செய்தால் பிராண்ட்தானாகவே பளிச்சென்று தெரியும். அதிகம் செலவழிக்கவும் தேவையிருக்காது.

‘ஏசியன் பெயின்ட்ஸ்’ ‘உத்சவ்’ என்ற பெயின்டை அறிமுகப்படுத்தியபோது அதை விளம்பரங்களால் பிரபலப்படுத்தாமல் கிராமங்களிலுள்ள பெரியவர்களைக் கொண்டு பிராண்ட் பற்றி பேச வைக்க முடிவு செய்தது. ஊர் மக்கள்தங்கள் சந்தேகங்களை, பிரச்சினைகளைத் தீர்க்க ஊர் பஞ்சாயத்து தலைவரை தான் நாடுவார்கள் என்று அத்தகைய தலைவர்கள் வீடுகளுக்கு இலவசமாக உத்சவ் பெயின்ட் அடித்துத் தந்தது. அவர்களும் தங்கள் பங்குக்கு ஊர் மக்களிடம் உத்சவ் பற்றி சிலாகித்துக் கூற, ஊர் தலைவரே கூறினால் சரியாய் தான் இருக்கும். உத்சவையே வாங்க அதன் விற்பனை பெயின்டை விட பிரகாசித்தது!

பொதுஜன தொடர்பு

‘சவுண்ட்ஸ் குட்’ என்பது தமிழகத்தின் பல ஊர்களில் கடை திறந்து ஹியரிங் எய்ட் விற்று வரும் கம்பெனி. அதிக இரைச்சலான இடங்களில் பணிபுரிபவர்களின் காதுகள் பாதிப்புக்குள்ளாகும் என்பதை உணர்ந்து அதுபோன்ற இடங்களில் வேலை செய்யும் ட்ராஃபிக் போலீஸ்காரர்கள், பஸ் டிரைவர்கள் போன்றவர்களுக்கு இலவச காது சிகிச்சை முகாம்கள் நடத்துகிறது.

இதைப் பற்றி பத்திரிக்கைகள் எழுத, டீவி சேனல்கள் ஒளிபரப்புகின்றன. இதை பார்க்கும் படிக்கும் மக்களுக்கு சவுண்ட்ஸ் குட் பற்றி தெரிவதோடு அந்த பிராண்டைப் பற்றிய ஒரு உயர்வான எண்ணம் ஏற்படுகிறது. அவர்களில் சிலர் தங்களுக்கென்று தேவைப்படும் போது சவுன்ட்ஸ் குட் கடைகளை நாடி வருகிறார்கள் என்று நான் சொல்லவும் வேண்டுமா!

படித்தால் சிலருக்குப் புரியும், கற்றுத் தந்தால் மற்றவர்க்கு புரியும், செய்து பார்த்தால் அனைவருக்கும் புரியும் என்பார்கள். பிரமோஷனில் வாடிக்கையாளரும் பங்கேற்கும்படி வடிவமைத்தால் வாடிக்கையாளருக்கு இனிய பிராண்ட் அனுபவம் கிடைக்கிறது. ப்ராண்ட் மீது நம்பிக்கை பிறக்கிறது.

‘ஹாட்மெயில்’, ‘யாஹூ’ என்று பல இலவச ஈமெயில் பிராண்டுகள் ஏகப்பட்டது இருந்த காலத்தில் புதியதாய் நுழைந்தது ‘ஜிமெயில்’. தன்னை பிரபலப்படுத்த இந்த பிராண்ட் நாடியது விளம்பரத்தை அல்ல, சமயோஜிதத்தை. ‘ஸ்பெஷல் அழைப்பின் பேரில் மட்டுமே ஜிமெயில் அளிக்கப்படும்’ என்று முதலில் சிலஆயிரக்கணக்கானவர்களுக்கு மட்டுமேவழங்கியது.

அவர்கள் ஒவ்வொருவருக்கும் நூறு பேருக்கு ஜிமெயில் கிடைக்க அழைப்பு அனுப்பும் வசதியையும் அளித்தது. ஓசியில் சல்லிசாய் கிடைக்கும் ஒரு சாதாரண ஈமெயிலை ஏதோ காணக் கிடைக்காத ஸ்பெஷல் சேவையாக மக்களைப் பேச வைத்தது. மக்களும் இந்த ஜாலத்தில் மயங்கி ஜிமெயில் யாரிடம் இருக்கிறது என்று தேடி அவர்களிடம் ஜிமெயில் பவதி பிட்சாந்தேகி என்று நிற்க வைத்து, ஊரையே பேச வைத்து வெகுவிரைவில் ஈமெயில் பிரிவின் நம்பர் ஒன் ப்ராண்டாய் மாறியது.

வாடிக்கையாளர் மூலம் வாடிக்கையாளர்களைப் பெறுங்கள்

மாஸ் மீடியா மூலம் புதிய வாடிக்கையாளர்களை பெற அதிகம் செலவழிக்க வேண்டி வரும். இருக்கும் வாடிக்கையாளர்களைக் கொண்டு புதிய வாடிக்கையாளர்களை பெறுவது சாமர்த்தியம் மட்டுமல்ல, சீப் அண்ட் பெஸ்ட்டும் கூட.

இந்த விஷயத்தில் ஆங்கில பத்திரிக்கையான ‘ரீடர்ஸ் டைஜஸ்ட்’ ஒரு கில்லாடி கிருஷ்ணன். இந்த பத்திரிக்கை விளம்பரம் செய்து யாரும்பார்த்ததில்லை. மாறாக, தன் இதழ்களில் வாடிக்கையாளர்களிடம் அவர்களுக்கு தெரிந்தவர்கள் பத்து பேரின் பெயரையும் விலாசத்தையும் கேட்டுப் பெறுகிறது.

அப்படி தருபவர்களுக்கு சிறிய புத்தகத்தை பரிசாக அளிக்கிறது. பரிசுக்கு ஆசைப்பட்டாவது பலர் கர்ம சிரத்தையாக பத்து பேரின் விவரங்களை சந்தோஷமாக அளிக்கிறார்கள். ரீடர்ஸ் டைஜஸ்ட் அந்த விலாசங்களுக்கு தொடர்பு கொண்டு ‘உங்கள் நண்பரானஇன்னார் இப்பத்திரிக்கை உங்களுக்குபயனளிக்கும் என்று ரெஃபர் செய்திருக்கிறார். குறைந்த விலையில் ரீடர்ஸ்டைஜஸ்ட் பெற இதோ ஸ்பெஷல் ஆஃபர்’ என்று கடிதம் அனுப்புகிறது. இதன் மூலம் புதிய வாடிக்கையாளர்களை குறைந்த செலவில் பெற்று கொடி கட்டிப் பறக்கிறது!

கையில் சம்திங் இருப்பவர்கள் விளம்பரம் செய்யலாம். சாமர்த்தியம் இருப்பவர்கள் விளம்பரம் இல்லாமலே கூட வெற்றி பெறலாம். மேலே நாம் பார்த்த பிராண்டுகள் யாவும் விளம்பர செலவு இல்லாமல் வெறும் கையில் முழம் போட்டு வெற்றியை மடக்கி பையில் வைத்தவர்கள் என்பதை நினைவில் கொள்க!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x