Published : 27 Jan 2020 12:07 PM
Last Updated : 27 Jan 2020 12:07 PM

பாதுகாப்பில் அசத்தும் டாடா ‘அல்ட்ரோஸ்’

டாடாவின் முதல் பிரிமீயம் ஹேட்ச்பேக் மாடலாக ‘அல்ட்ரோஸ்’ அறிமுகமாகியுள்ளது. அல்ட்ரோஸ் முதன்முதலாக கான்செப்ட் மாடலாக 2018-ம் ஆண்டின் வாகனக் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டது. இந்நிலையில் தற்போது இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் நேரடி அறிமுகம் கண்டுள்ளது.

வரும் ஏப்ரல் முதல் இந்தியாவில் விற்பனையாகும் வாகனங்கள் பிஎஸ்6 விதிகளைப் பின்பற்றி தயாரிக்கப்பட்டு இருக்க வேண்டும். அந்த வகையில் அல்ட்ரோஸ் பிஎஸ்6 வாகனமாக உருவாக்கப்பட்டு இருக்கிறது. பாதுகாப்பு அம்சங்களும், தொழில்நுட்ப வசதிகளும் அல்ட்ரோஸின் முக்கிய அம்சங்களாக முன்வைக்கப்படுகின்றன.

பாதுகாப்பு, வடிவமைப்பு, தொழில்நுட்பம், செயல்பாடு, சிறப்பான பயண அனுபவம் ஆகியவற்றில் கோல்ட் ஸ்டாண்டர்டுகளை அடிப்படையாகக் கொண்டுள்ளதால் டாடா நிறுவனம் தி கோல்ட் ஸ்டாண்டர்ட் என்ற வார்த்தைகளையே இதற்கான டேக்லைனாக வைத்துள்ளது. வாகனம் அறிமுகமாகும் முன்னரே இதற்கு பாதுகாப்பு டெஸ்ட் சோதனை முடிவுகள் வெளியாகின. கிராஷ் டெஸ்டில் 5 நட்சத்திரங்களைப் பெற்றுள்ளது.

இதற்கு முன் இந்திய கார்களில் டாடாவின் நெக்சான் 5 நட்சத்திரங்களைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. அப்படி என்ன பாதுகாப்பு அம்சம் இந்த அல்ட்ரோஸில்? பாதுகாப்பை பொறுத்தவரை மேம்படுத்தப்படுத்தப்பட்ட ஆல்ஃபா கட்டமைப்பின் அடிப்படையில் ‘அல்ட்ரோஸ்’ உருவாக்கப்பட்டிருக்கிறது.

ஏபிஸ், இபிடி, சிஎஸ்சி, டூயல் ஏர்பேக் ஆகிய வசதிகளைக் கொண்டு இருக்கிறது. வேகம் அதிகரிப்பதை தெரிவிக்கும் எச்சரிக்கை அமைப்பு, 30 விநாடிக்குள் யாரும் வாகனத்துக்குள் ஏறாவிட்டால், அதன் கதவுகள் தானாகவே மூடிக்கொள்ளும் வகையிலான ஆட்டோமெடிக் டோர் ரீ-லாக்கிங் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களை அல்ட்ரோஸ் கொண்டிருக்கிறது. மேலும் காரின் கட்டுமானம் அதிகபட்ச எடையைத் தாங்கக்கூடியதாகவும் இருக்கிறது.

வடிவமைப்பைப் பொறுத்தவரை ‘அல்ட்ரோஸ்’ புதிய சாத்தியங்களை முயன்றுள்ளது. குறிப்பாக, இதன் கதவுகள் 90 டிகிரி அளவில் விரியக் கூடியதாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. இதனால் எவ்வித சிரமமுமின்றி காரின் உள்ளே செல்ல முடியும். நீளம் 3,990 மிமீ, அகலம் 1,755 மிமீ, உயரம் 1,523 மிமீ, வீல்பேஸ் 2,501 மிமீ ஆகிய வடிவ அளவுகளில் ‘ஆல்ட்ரோஸ்’ உருவாக்கப்பட்டிருக்கிறது.

தொழில்நுட்பத்தைப் பொருத்தவரை தானியங்கி முகப்பு விளக்கு, ரெயின் சென்சிங் வைப்பர்ஸ், 7 இன்ச் டிஜிட்டல் கிளஸ்டர் ஆகியவை சிறப்பு அம்சங்களாக உள்ளன.

செயல்பாட்டைப் பொறுத்தவரை மல்டி டிரைவ் ஆப்ஷன்களைக் கொண்டிருக்கிறது. பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய இரு இன்ஜின் மாடல்களில் வெளிவருகிறது. இதன் 1199 சிசி பெட்ரோல் இன்ஜின் 86 பிஎஸ் பவரை 6,000 ஆர்பிஎம்-ல் உற்பத்தி செய்யக் கூடியது. இதன் 1497 சிசி டீசல் இன்ஜின் 90 பிஎஸ் பவரை 4000 ஆர்பிஎம்-ல் உற்பத்தி செய்யக் கூடியது.

சிறப்பான பயண அனுபவத்தை தருவதற்கென்று புளூ மூட் லைட்டிங், பிளாட் ரியர் புளோர்ஆகிய அம்சங்களைக் கொண்டிருக்கிறது. ஐந்து பேருக்கான இருக்கை வசதி உள்ளது. 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸைக் கொண்டுள்ளது. 37 லிட்டர் வரையில் எரிபொருள் நிரப்பும் வகையில்கொள்ளளவைக் கொண்டுள்ளது.

ஐந்து வேரியன்ட்களில் வெளிவரும் அல்ட்ரோஸின் பெட்ரோல் இன்ஜின் ரூ.5.29 லட்சத்திலிருந்தும், டீசல் இன்ஜின் ரூ.6.99 லட்சத்திலிருந்தும் ஆரம்பமாகிறது. 5 பேருக்கான இருக்கை வசதி உள்ளது. 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸைக் கொண்டுள்ளது. 37 லிட்டர் வரையில் எரிபொருள் நிரப்பும் வகையில் கொள்ளளவைக் கொண்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x