Published : 26 Jan 2020 10:28 AM
Last Updated : 26 Jan 2020 10:28 AM

நிகரெனக் கொள்வோம்: பெண்ணாகப் பிறப்பது அவமானமல்ல

சாலை செல்வம்

ஒன்பதாம் வகுப்பு மாணவர்களிடம் பேசிக்கொண்டிருந்தேன். ஆண்கள் பள்ளி என்பதால் அந்த வகுப்பில் மாணவர்கள் மட்டுமே இருந்தனர். பெண்ணாகப் பிறந்திருக்கலாம் என்று நினைப்பவர்களைக் கை உயர்த்தச் சொன்னேன். அவர்களுக்குப் புரியவில்லை. அவர்களிடம் என் கேள்வியை விளக்கினேன்.

பல நேரம் சிறுமிகளும் பெண்களும், “ஏன்தான் பெண்ணாகப் பிறந்தேனோ” என்று அலுத்துக்கொள்கிறார்கள். அப்படியென்றால் அவர்கள் ஆணாய்ப் பிறந்திருக்கலாம் என நினைக்கிறார்கள் எனவும் பொருள்கொள்ளலாம். அப்படி, “ஏன்தான் ஆணாகப் பிறந்தேனோ, நான் பெண்ணாகப் பிறந்திருக்கலாம்” என்று நினைப்பவர்களைக் கை உயர்த்தச் சொன்னேன். ஒரே ஒரு கை மட்டும் அரையளவு உயர்ந்தது. பின் அதையே எழுதக் கொடுத்தேன். ‘நீங்கள் பெண்ணாக இருக்க விரும்புகிறீர்களா? ஆம் என்றால் ஏன், இல்லை என்றால் ஏன்?’ என்பதுதான் தலைப்பு.

மாணவர்கள் எழுதியவற்றில் சில உதாரணங்களை மட்டும் பார்க்கலாம்.

1. பெண்ணாகப் பிறக்க எனக்கு விருப்பமில்லை. ஏனென்றால், எனக்குப் பெண்களைப் பிடிக்காது.

2. பெண்ணாகப் பிறந்தால் ஆணுக்கு அடிமையாக இருக்க வேண்டும், அதனால்தான்.

3. வீட்டுக்குள் இருக்க வேண்டும். வெளியே செல்ல முடியாது. அடிவாங்க வேண்டும். அடுப்பங்கரையில் இருக்க வேண்டும். ஜாலியா இருக்க முடியாது.

4. பெண்ணாகப் பிறந்தால் தியாகியாக இருக்க வேண்டும்.

- மாணவர்களின் இது போன்ற பதில்கள் வியப்பாக இருந்ததுடன் யோசிக்கவும் வைத்தன. ஆண் பிள்ளையாக இருப்பதன் சவுகர்யம், சுதந்திரம், பெண்ணைப் பார்க்கும் விதம் அவ்வளவு ஏன் பெண்களின் நிலையை அவர்கள் புரிந்துவைத்துள்ள விதம் எனப் பலவற்றை உற்றுப்பார்க்க முடிந்தது. இப்படியான ஒரு நிலையை ஆண்கள் தங்களுக்கானதாகக் கொண்டாடப் பழக்கியிருக்கும் உண்மை புரிந்தது. குழந்தைகளின் நாசூக்கான இவ்வார்த்தைகளை கீழ்க்காணும் அர்த்தங்களுடன் பொருந்துகிறதா எனப் பார்த்தேன்.

1. எனக்குப் பெண் என்ற ஒரு அடிமை வேண்டும்; அதனால் நான் ஆணாக இருக்க ஆசைப்படுகிறேன்.

2. என்னால் அடிவாங்க முடியாது. ஆனால், நான் யாரையாவது அடிக்க வேண்டும்.

3. உடம்பு வளைந்து என்னால் எனக்கான வேலையைக்கூடச் செய்ய முடியாது, அதனால் நான் ஆணாக இருக்க வேண்டும்.

4. எனக்கே எனக்காக தியாகம்செய்ய ஒரு பெண் வேண்டும்.

- பெண்ணென்றால் தியாகம்செய்ய, ஆணுக்காக வாழ, அடி வாங்க, வீட்டுக்குள்ளே இருக்க எனப் பல வார்த்தைகளில் அவ்வாக்கியங்களின் பொருளை உணர முடிந்தது. அந்தக் குறிப்பிட்ட மாணவர்களின் கருத்தாக மட்டுமல்ல, நம் சமூகத்தின் பெரும்பான்மை ஆண்களின் சிந்தனைச் செயல்பாடுகளுக்கான சாட்சியமாகவும் அவை இருந்தன. அத்துடன் அவற்றைப் பெரும்பான்மைப் பெண்கள் ஏற்றுக்கொண்டிருப்பதையும் சேர்த்து யோசிப்பது நல்லது.

ஆணுக்கு ஏன் சொல்லவில்லை?

மாணவர்களைக் குறைகூறுவதைக் கடந்து நம் நாட்டில், நமது வாழ்வில், நமது குடும்பங்களில் நடந்துள்ள மாற்றங்கள் என்ன என்பதை நாம் கேள்விக்குட்படுத்த வேண்டியதும் அவசியம். நாம் பாடிய, பேசிய, பாடமாகப் படித்த சமத்துவம், சகோதரத்துவம், பகிர்வு போன்றவை பெண் குழந்தைகளை எட்டிய அளவு ஆண் குழந்தைகளை ஏன் சென்றுசேரவில்லை? பெண் குழந்தைகளுக்கு அவர்களுடைய வளர்ச்சியைப் பற்றிக் குறிப்பிடும்போது ‘ஆணைப் போல்’ என்று குறிப்பிட்டுப் பல செய்திகளைக் கடத்துகிறோம். ஆனால், ஆண்களிடம் ‘பெண்களைப் போல் பொறுமையாக இருக்க வேண்டும், உழைக்க வேண்டும், பராமரிப்பு வேலைகளில் ஈடுபட வேண்டும், கடுமையாக உழைக்க வேண்டும்’ என்றெல்லாம் சொல்லித்தரவில்லை.

பெண்களுக்கான விஷயங்களை முக்கியமானதாகக் குறிப்பிட்டு, பாராட்டி, அங்கீகரித்து நாம் பொதுவெளியில் பேசுவதில்லை. அவற்றை எடுத்துக்காட்டாக்கி குழந்தைகளுக்கு எடுத்துச்சொல்லத் தவறிவிடுகிறோம்.

பெண்களை மையப்படுத்தி குழந்தைப்பேறு, குழந்தை வளர்ப்பு, குழந்தைகளுடைய தேவைகள் போன்றவை இருந்தாலும் அது பற்றி மதிப்பற்றுப் போவதற்குக் காரணமாக ‘ஆணாகப் பிறந்திருப்பது’ என்று இருப்பதை மாற்றும் வழிகளைப் பற்றி யோசிக்க வேண்டும். பெண்களிடம் மதிப்பும் மரியாதையும் வைத்துள்ள ஆண்கள் நம்மிடையே ஆங்காங்கே இருக்கின்றனர். அடுப்படியைப் பகிர்ந்துகொள்ளும் ஆண்கள், குழந்தைகளைப் பராமரிக்கும் ஆண்கள் என இருக்கும் இவர்கள் எல்லோருடைய கண்களுக்கும் படும்படி இல்லை. “ஆண்பிள்ளை பொம்பள மாதிரி இதையெல்லாம் செய்யலாமா?” என்பது போன்ற பெண்களின் குரல்களும் அதற்குக் காரணமாக இருக்கின்றன. தனக்கு எதிரான பல விஷயங்களைத் தானே விரும்பிச் செய்யும் மனநிலை பெண்களிடம் பரவலாக்கப்பட்டுள்ளது. அவற்றைப் பற்றியும் யோசிக்க வேண்டும்.

வீட்டு வேலையில் ஈடுபடும் சிறுவன், அம்மாவைப் போன்ற மகன் போன்றவற்றை உணர்த்தும் பாடங்கள் வர வேண்டும். குடிகார அப்பாவை மறுக்கும் மகன் என்பது போன்ற முன்னுதாரணங்களை எடுத்துரைக்க வேண்டும்.

இவையெல்லாம் சிறுசிறு செயல்கள்தாம். ஆனால், இவையெல்லாம் ஆண்களும் பெண்களும் இணைந்துவாழும் மகிழ்ச்சியான வாழ்க்கையை நோக்கி நம்மை அழைத்துச் செல்லும். அதற்கு நாம் கடக்க வேண்டிய தொலைவு மிச்சமிருக்கிறது. வாருங்கள், சேர்ந்து நடப்போம்!

(சேர்ந்தே கடப்போம்)

கட்டுரையாளர்,

கல்விச் செயற்பாட்டாளர்.

தொடர்புக்கு: saalaiselvam@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x