Published : 26 Jan 2020 10:04 AM
Last Updated : 26 Jan 2020 10:04 AM

பாடல் சொல்லும் பாடு: மன்னரின் வெற்றி மகளிரைச் சேருமா?

கவிதா நல்லதம்பி

‘அன்று வந்ததும் அதே நிலா’ என்ற கவிஞர் கண்ணதாசனின் பாடல் வரியும் ‘அற்றைத்திங்கள் அவ்வெண்ணிலவில்’ என வரும் கவிஞர் வைரமுத்துவின் வரியும் பாரி மகளிர் பாடிய ‘அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவின்’ எனத் தொடங்கும் சங்கக் கவிதையின் தாக்கத்திலிருந்தே பிறந்திருக்க வேண்டும். ஆனால், பாரி மகளிரின் அற்றைத் திங்கள் உணர்த்துவது கையறுநிலை. அத்தொடரைத் திரைக்கவிஞர்கள் கையாண்டதோ காதலுணர்வைச் சொல்ல. இருப்பினும் நினைவுகூர்தலே இக்கவிதைகளின் அடிநாதம்.

அற்றைத் திங்கள் அவ் வெண்ணிலவின்,

எந்தையும்உடையேம்; எம்குன்றும் பிறர் கொளார்

இற்றைத் திங்கள் இவ் வெண்ணிலவின்

வென்று எறி முரசின் வேந்தர் எம்

குன்றும் கொண்டார்; யாம் எந்தையும் இலமே!

- என்னும் பாடல்தான் பாரி மகளிர் பாடியதாக சங்க இலக்கியத்தில் இடம்பெற்றுள்ளது.

‘அன்று அழகிய முழுநிலவு நாள். எங்கள் தந்தை எங்களுடன் இருந்தார். பறம்பு மலையும் எங்களுடையதாகவே இருந்தது. பிறர் அதைக் கைப்பற்றியிருக்கவில்லை. இன்று இந்த அழகிய நிலவொளியில் முழங்கும் முரசைக்கொண்ட வேந்தர்கள் சூழ்ச்சியால் எம்மலையை வென்று விட்டார்கள். எம் தந்தையையும் நாங்கள் இழந்துநிற்கிறோம்’ என்ற பொருள்கொண்ட இப்பாடல் காட்டும் கையறுநிலை, வீரத்தைக் கொண்டாடிய சங்கக் கவிதைகளில் இருந்து வேறுபட்டது. இக்கவிதை சிற்றரசுகள், குறுநில மன்னர்கள், வேளிர்கள் என அழைக்கப்பட்ட இனக்குழுத் தலைவர்களை அழித்துப் பேரரசுகள் உருவாகிக்கொண்டிருந்த காலத்தைக் காட்டுகிறது. எல்லாக் காலத்துக்குமான இழப்பையும் கையறுநிலையையும் பேசுகிறது.

பெண்ணை வீழ்த்தும் ஆயுதம்

காலந்தோறும் போரால் தம் வீட்டு ஆண்களை இழந்து நிற்பதுடன், வளத்தை இழந்து, வாழ்விடம் மறுக்கப்பட்டு, பகை மன்னன் என்ன விரும்புகிறானோ அதற் கேற்பத் தம்மை வலிந்து மாற்றிக் கொண்டு வதைபட்டவர்களாய் வாழ நேர்கிற பெண்ணின் வலியைத்தான் இந்தப் பாடலும் உணர்த்துகிறது. பாரி மகளிரின் இக்கவிதை எல்லா காலத்துக்குமான போர்மறுப்புக் குரலாய், இழப்புகளின் வாதையைச் சொல்லும் கவிதைக் குரலாய் நம் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. பாரி மகளிரின் வாழ்க்கையை அறிந்துகொண்டால் வெண்ணிலவு கூட்டும் வேதனையை நாம் புரிந்துகொள்ளலாம்.

வானளவுக்கு உயர்ந்த மலைகள், வெள்ளிய அருவிகள், அவை பாய்ந்தோடுவதற்குக் காரண மான சுனைகள், உழவர்கள் பெரிதும் முயலாமலேயே அவர்களுக்கு வேண்டிய உணவுப் பொருட்களைத் தரும் வளம் கொண்டது பாரியின் பறம்புமலை. மூங்கில்கழியிலிருந்து விளையும் நெல்லும், இன்சுவை கொண்ட பலாவின் சுளைகளும், பருத்த கிழங்குகளைத் தரும் வள்ளிக்கொடிகளும், வழிந்து வரும் தேனும் கொண்ட குன்றுகள் பாரியினுடையவை.

இவ்வாறு வளமும் வீரம் செறிந்த படையும் கொண்ட பாரியின் நிலத்தை அடைய மூவேந்தர்கள் ஏந்திய ஆயுதம் பெண் கேட்டல். பாரி மகளிரை மணம் முடித்துத்தர மூவேந்தர்களும் கோரினார்கள். பாரி மறுக்கவே, விளைவு போராயிற்று. ஆனால், வேந்தர்கள் சூழ்ச்சியினாலே, கலைஞர்களைப் போல் வேடமிட்டு வந்து பாரியை வீழ்த்தினார்கள்.

பலியாகும் பெண்களின் வாழ்க்கை

அங்கவை, சங்கவை என்னும் பெயர் கொண்ட பாரியின் இரு பெண் மக்களைப் பாண்டிய மன்னனிடம் அழைத்துச் சென்று, அவர்களைத் திருமணம் செய்துகொள்ளுமாறு ஔவையார் கேட்பதாக இடம்பெறும் காட்சியை நாம் திரைப்படத்தில் பார்த்திருப்போம். இவை பிற்காலத்தில் சேர்க்கப்பட்ட தகவல்கள். சங்க இலக்கியத்தில் இவ்விரு பெண்களின் பெயர்கள் குறிப்பிடப்படவில்லை. அதோடு அவர்களுக்கு மணம்முடித்து வைக்கும் பொறுப்பை பாரியின் உற்ற நண்பரும் புலவருமாகிய கபிலர் ஏற்றுக்கொண்டதாகவே பாடல் குறிப்புகள் காட்டுகின்றன.

பாரி மகளிர், சுரைக்கொடி படர்ந்தி ருக்கும் தம்வீட்டுக் கூரையின் மீதேறி, தொலைவிலே வரும் உப்பு வண்டிகளை எண்ணிக்கொண்டிருந்த விளையாட்டுச் சிறுமிகள். மூவேந்தர்கள் தம் மலையை முற்றுகையிட்டிருந்தபோதும் அங்கிருந்த குதிரைகளை எண்ணி விளையாடிக் கொண்டிருந்தார்கள். அப்படிப்பட்ட சிறுமிகள், தந்தையை இழந்தார்கள், நிலத்தை இழந்தார்கள், யார் தம்மை மணந்துகொள்ள வேண்டினார்களோ அவர்களாலும் புறக்கணிக்கப்பட்டார்கள். நிர்கதியாய் விடப்பட்ட பெண்களைப் பற்றி யாருமே பேசவில்லை. சங்க இலக்கியத்தில் இடம் பெறும் புறப்பாடல்கள் எல்லாம் வீரத்தைக் கொண்டாடுகின்றன; மன்னனின் வெற்றியைப் போற்றுகின்றன; வெற்றிக்குப் பிந்தைய கொண்டாட்ட மனநிலையைப் பேசுகின்றன.

வெற்றிபெற்ற மன்னன் தன் பகை நாட்டு மன்னனின் நிலத்தை எப்படிப் பாழ்படுத்தினான் என்றும் அந்நாட்டுப் பெண்களை இங்கே அழைத்துவந்து ஏவலாட்களாகப் பணித்ததையும் சொல் கின்றன. கூடவே, அப்பெண்கள் எப்படி அழைத்துவரப்பட்டார்கள் என்பதையும் சொல்கின்றன. கணவனை இழந்த பெண்கள் கைம்மை நோம்பை ஏற்றதையும், சிலர் உடன்கட்டை ஏறியதையும் காட்டுகின்றன.

பெண்கள் மீது நிகழும் போர்

தோற்றுவிட்ட பகை மன்னனுக்கு உரிமையுடையவர்களாக இருந்த பெண்களை, அவர்களின் கூந்தலை மழித்து கூந்தலாலே கயிறு திரித்து அவர் நாட்டு யானைகளைக் கட்டி இழுத்துச் சென்ற காட்சியையும் அப்பாடல்கள் காட்டுகின்றன. பகை மன்னனின் மீதிருந்த கோபத்தை, பெண் களை அவமதித்து மன்னர்கள் தீர்த்துக் கொண்டனர். வேட்டைச் சமூகத்தில் போரில் பங்கேற்ற பெண்கள், உடைமைச் சமூகத்தில் ஒதுக்கப்பட்டார்கள். போருக்கான வீரர்களைப் பெற்றுத் தருவதோடு அவர்களின் கடமை முடிந்துவிட்டதெனக் கருதினார்கள். ஆனால், போரில் நேரடியாகக் களமாடவில்லை என்றாலும் போரின் தாக்கத்தைப் பெரிதும் அனுபவிப்பவர்களாகப் பெண்களே இருந்தார்கள், இருக்கிறார்கள். போருக்குப் பின் கைம்பெண்களாக, மனம்பிறழ்ந்தவர்களாக, பாலியல் தொழிலுக்குத் தள்ளப்பட்டவர்களாக, அடையாளமிழந்தவர்களாக, முகாம்களிலே வதைபடுபவர்களாகப் பெண்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.

தான் கைப்பற்றிய நாட்டின் வளத்தை எப்படிச் சூறையாடுகிறார்களோ, அந்நிலத்தை எவ்வாறு அவமதித்தார்களோ அதே போன்று அந்நாட்டுப் பெண்களையும் மன்னர்கள் அவமதித்தார்கள்; அவர்களின் நலத்தைச் சிதைத்தார்கள்.

போரிலும் பகையிலும்

முதல் பொருளாய்

அவளையே சூறையாடினாய்

அவளுக்கே துயரிழைத்தாய்

உன்னால் அனாதையாக்கப்பட்ட

குழந்தைகளை எல்லாம்

அவளிடமே ஒப்படைத்தாய்

தலைவனாகவும்

தேவனாகவும் நீ

தலைநிமிர்ந்து நடந்தாய்

- ஃபஹீமா ஜஹான் எழுதிய ‘பேறுகள் உனக்கு மட்டுமல்ல’ என்ற கவிதையை நாம் இச்சூழலோடு பொருத்திக் காணலாம்.

நிலத்தைப் பெண் என்பதும் பெண்ணை நிலமகள் என்பதும் தற்செயலாகச் சொல்லப்பட்டதல்ல. இன்றும் நிகழ்கிற போர்கள் அதைத்தானே உணர்த்துகின்றன.

(பெண் வரலாறு அறிவோம்)

கட்டுரையாளர் உதவிப் பேராசிரியர்

தொடர்புக்கு: janagapriya84@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x