Published : 26 Jan 2020 10:01 AM
Last Updated : 26 Jan 2020 10:01 AM

அன்றொரு நாள் இதே நிலவில் 42: அருவக்கொடியும் அய்யனாரும் எங்கே போயினர்?

பாரத தேவி

வனத்துக்குள் இருந்த இலுப்பை மரத்தில் கயிற்றை வீசி, தொட்டிலைக் கட்டினாள் அருவக்கொடி. தரையில் கை, கால்களை உதறிக்கொண்டு கிடந்த பிள்ளையைத் தூக்கி அதனுள் போட்டு ஆட்டினாள். நேற்றுவரை வெக்கையில் கிடந்த பூமியில் இன்று குளிர்காற்று வீச, அய்யனார் சுகமாய்த் தூங்கினான்.

அருவக்கொடி புளியம்பழத்தையும் நெல்லிக்காய்களையும் பெறக்க ஆரம்பித்தாள். அப்படியே பெறக்கி, பெறக்கி குமிகுமியாய்க் குவித்துக்கொண்டே போனாள். நெல்லிக்காயையும் புளியம் பழத்தையும் அவளுக்குத் தனித்தனியாய்ப் பெறக்க நேரமில்லை. வீட்டுக்குப் போன பெறவு புருசனோடு சேர்ந்து ராத்திரி நேரம் விளக்கு வெளிச்சத்தில் அவற்றை வகைப்படுத்திக்கொள்ளலாம் என்ற நினைப் போடு கூட்டி குமித்துக்கொண்டே வந்தாள்.

அய்யனாரைக் காணோம்

ரொம்ப நேரம்வரை புளியம்பழங்களைக் குமித்தவளுக்கு மார்பு கனத்தது. அப்போதுதான் அவளுக்குப் பிள்ளை ஞாபகமே வந்தது. ‘அச்சச்சோ, எந்நேரம் தொட்டியில போட்ட புள்ளை. இப்ப முழிச்சிக்கிட்டுப் பாலுக்கு அழுதாலும் அழுவானே. அது மட்டுமில்லாம சாக்க வேற புள்ளைக்குத் தொட்டிலு கட்டுனரக்குலேயே போட்டுட்டு வந்துட்டோமே. அதைக் கொண்டாந்தாத்தானே இம்புட்டுப் பழத்தவும் அள்ளலாம் என்று நினைத்தவள் தொட்டில் கட்டிய இடத்தை நோக்கி ஓடினாள். ஆனால், நெருக்கமான வனமாக மரங்கள் சூழ்ந்த இடத்தில் தொட்டில் கட்டிய இடத்தை அவளால் கண்டுபிடிக்க முடியவில்லை. புளியம்பழத்தைக் கூட்டும் ஆவலில் வனத்துக்குள் அவளுக்கும் தெரியாமல் நெடுந்தூரம் வந்துவிட்டிருந்தாள்.

இப்போது எங்கு பார்த்தாலும் கொப்புகளை வீசி வீசி வானத்தை முட்டும் மரங்களாகத் தெரிந்ததே தவிர அவள் தொட்டில் கட்டிய இலுப்பை மரம் தெரியவே இல்லை. ஒவ்வொரு இலுப்பை மரமாக, “ராசா, எங்கண்ணு, எங்கனய்யா இருக்க நீ. இந்த ஆத்தாவக் கூப்பிடு தாயி. உங்கொரலு கேக்கவும் நானு ஓடி வந்துருதேன்” என்று கதறிக்கொண்டே வனம் முழுக்க ஓடினாள்.

மண் சாலையிலிருந்து வனத்துக்குள் எப்படி நுழைந்தோம் என்று அதைக் கணக்கு வைத்து வந்தால், எப்படியும் என் புள்ளையக் கண்டுபிடிச்சிருவேன் என்றும் வனத்தை விட்டு வெளியேற முயன்றாள். ஆனால், முடியவில்லை. ‘அய்யோ ராசா' என்று அழுதுகொண்டே ஓடினாள். இவள் காலடிச் சத்தம் கேட்டு வனத்துக்குள் பதுங்கியிருந்த முயல்களும் காட்டுக்கோழிகளும் தங்கள் குஞ்சுகளோடு பதறி ஓடினவே தவிர தொட்டிலுக்குள் கிடந்த அய்யனாரைக் காணோம்.

மாயமான தாயும் சேயும்

“அய்யனாரப்பா என் குலதெய்வமே. உம் பேரைத்தான எம்மவனுக்கு வச்சிருக்கேன். உன்ன நம்பித்தானே என் புள்ளைய இந்த வனத்தில விட்டுட்டு வந்தேன். என் புள்ளைய என் கண்ணுக்குக் காட்டிக்கொடுத்துரு. உன் சன்னிதிக்கு வந்து எங்க குடும்பத்தோட மொட்டையெடுக்கோம். மணி அடிச்சி வைக்கேன்” என்று இன்னும் மனத்துக்குள் நினைத்ததையெல்லாம் வேண்டினாள்.

கண்ணீர் அவள் கன்னத்தின் வழியே வாய்க்கால் கொண்டு ஓடியது. அவளுடைய நீளமான கூந்தல் அவிழ்ந்து புரண்டு மரங்களிலும் முள்ளிலும் சிக்கியது. சேலை அவள் தோளில் நிற்காமல் அவள் போகுமிடமெல்லாம் இழுபட்டவாறே அவளைப் பின்தொடர்ந்தது. “அய்யோ ராசா என் மவனே” என்று நெஞ்சிலும் முகத்திலும் அறைந்துகொண்டதோடு வாய்விட்டு அழுதுகொண்டே அந்த வனம் மொத்தமும் அலைய ஏதோவொரு பெரிய மரத்தின் கீழே விழுந்தவள் பிறகு எழவே இல்லை. தூரத்தில் காட்டு நரியின் ஓலம் கேட்டது. இப்போதுகூட வனத்துக்குள் இருக்கும் தெய்வத்தைக் கும்பிடப் போகிறவர்கள் அடர்ந்த மரங்களின் சலப்பினூடே ஒரு தாயும் மகனும் அழுகிற சத்தம் கேட்பதாய்ச் சொல்கிறார்கள்.

பறவைகளின் மங்கல முழக்கம்

மழைபெய்த பிறகு ஊருக்குள் யாருக்கும் நிற்க நேரமிருக்காது. நெற்பயிர்கள் பாலடைக்கும் முன்பே இந்த அரிசிக் குருவிகளுக்கு எப்படித்தான் தெரியுமோ? மம்மலும் கும்பலுமாகச் சிறு சிறகடிப்பும் கிறீச்சிட்ட குரலுமாக வயலுக்குள் வந்து நிறைந்துவிடும். விவசாயிகள் சிலருக்கு இந்த அரிசிக் குருவிகள் வந்த பின்புதான் நெற்கதிர்கள் பாலடைத்துக்கொண்டுவருவதே தெரியும். கேப்பை, சோளமென்று மற்ற பயிர்கள் பூத்துச் சரமிடும் முன்பே மைனாக்களும் தவிட்டுக்குருவிகளும் கிளிகளும் வந்து சேர்ந்துவிடும். இவற்றின் கெச்சட்டம் தாங்க முடியாது. விடியும் கருக்கலில் வயலுக்கும் பிஞ்சைக்கும் வரும் விவசாயிகளுக்கு இவை மங்கல முழக்கங்கள், மணியடி ஓசைகள்.

நாம் என்னதான் இரவும் பகலும் வியர்வை சிந்தி உழைத்தாலும் இந்தப் பறவைகளுக்கு, அணில்களுக்கு, எலிகளுக்கு மிச்சம்தான் நமக்கு. அதுவும்கூட விளைந்த தானியங்களை அறுக்க ஆள் கிடைக்காது. அப்படியே கிடைத்தாலும் கருதைக் காயபோட களம் கிடைக்காது. ஒருவழியாய்க் கருதைக் கொண்டுவந்து காயப்போட்டுவிட்டால் கருதை அடிக்கக் காளைகளோ ஆட்களோ கிடைக்காது. இதுதான் சமயமென்று வானத்தில் மேகங்கள் கருக்கூடி கருக்கூடி மழை வந்துவிடுமோ என்ற பயம் கலந்த தீப்பொறியை விவசாயிகளின் நெஞ்சில் அவ்வப்போது எழுப்பிவிட்டுக்கொண்டிருக்கும். இது எப்போதும் நடப்பதுதான். விவசாயிகளுக்கு வெயிலும் மழையும் நண்பனுக்கு நண்பன். விரோதிக்கு விரோதி.

அறுவடையால் பெருகும் சந்தோசம்

இப்படி அறுப்பு வேலை வந்தவுடன் கருதறுப்பு வேலையும் களத்து வேலையுமாய் இருப்பார்கள் விவசாயிகள். வரப்பு, வாய்க்கால் தவிர கண்ணுக் கெட்டும் தூரம் வரை பச்சைகள் குமுறிக் கொண்டிருக்கும். மிளகாய், தக்காளி, பருத்தி அனைத்தும் நகை காய்ச்சியாகத் தொங்கும். எவ்வளவு வேலைகள் மனிதர்களுக்கு இருந்தாலும்கூட அவர்களின் முகமெல்லாம் சூரிய வெளிச்சம் தான். விளைந்து முற்றிவிட்ட கருதுகளைக் கோத்துக் கைப்பிடித்துப் பார்ப்பதிலிருந்து வரப்புகளை உள்மறைத்தவாறு தங்கப்பொடி சேர்த்து விளைந்திருக்கும் நெல்கருது களைக் கொடங்கை அணைவில் தூக்கிப் பார்ப்பதிலிருந்து விவசாயிகளுக்குத் தாங்க முடியாத சந்தோசம்தான்.

தங்களின் வாரிசாகக் குடும்பத்தில் குழந்தைகள் பிறந்தால் எப்படிப் பெருமையும் கர்வமும் கொள்வார்களோ அப்படியொரு பெருமையைத்தான் விவசாயிகள் தங்கள் அறுவடையில் கண்டு பூரித்துப் போவார்கள். காட்டில் இப்படி வேலைகள் நடந்து கொண்டிருந்தது என்றால் ஊருக்குள் பெண்கள் அரிசி சேர்த்து வைக்க முற்றங்களிலும் வாசல்களிலும் தானியங் களைக் காயப்போட்டுக் குத்தினார்கள். உரல்கள் குலுங்கின. இரவும் பகலுமாய்த் திருவைகள் முனங்கியவாறு சுற்றின. காயும் தானியங்களைத் தின்னவரும் கோழிகளைச் சிறுவர்கள் குனிந்து கல்லெடுத்துக்கொண்டு விரட்டியவாறு ஓடினார்கள். கோழிகளும் சேவல்களும் சிறுவர்களோடு கண்ணாமூச்சி ஆடியபடி தானியங்களைக் கொழுக்கத் தின்றன. எந்த நேரமும் பானைகளில் சோறும் குழம்பும் எண்ணெய்யை மிதக்கவிட்டவாறு இருக்க, ஆப்பைகள் புறமுதுகிட்டபடி குழம்புச் சட்டிகளின் மேல் கிடந்தன.

ஊரெல்லாம் மகிழ்ச்சி

வியாபாரிகள் வெள்ளாமை அறுத்த தரிசு வழியே தானியங்களை வாங்கிப்போக ஒற்றையடிப் பாதையை உண்டாக்கியவாறு வந்தார்கள். தானியங்களும் தவசங்களும் விலையாகிப்போக, அடவு வைத்த அண்டா, குண்டாக்கள் பெண்களின் கழுத்தில் இல்லாத தாலிகள் எல்லாம் திரும்பிவந்தன. வெறும் துளையிட்ட நீண்ட காதோடு இருந்த பெண்களின் காதுகளில் தண்டட்டி, பாம்படம், முடிச்சி என்று மினுக்கம் காட்டின. வயசுப் பெண்கள் இருந்த வீட்டில் கல்யாணம் பேசினார்கள். பக்கத்தூர்களில் இருந்த மாமன்களெல்லாம் புதிதாக லாடம் அடித்த காளை வண்டிகளில் பட்டுப்புடவைகளோடு பழம், தேங்காய், வெற்றிலைக் கட்டோடு வந்து இறங்கினார்கள். புதுத் தானியம், புதுக் கூரை, புதுப் படப்பு என்று நெஞ்சைக் கிறக்கும் வாசனைகள் ஊருக்குள் மேக்காற்றோடு வீசின. காளைக்குக்கூட அதிக வேலை இல்லாததால் அவற்றின் தோலில் மினுமினுப்பு ஏறியது. ஆண்கள் வேட்டியைத் தார்பாய்ச்சிக் கட்டிக்கொண்டு ஒருவருக்கொருவர் மல்லுக்கட்டினார்கள். ஆடு புலி ஆட்டங்களும் தாயக்கட்டங்களும் ஜெயிப்பதிலும் தோற்பதிலுமாக வந்து நின்றது. மறுவருசத்துக்கான விதைக்குள்ள தானியத்தைப் பத்திரமாகக் காயப்போட்டு அடுக்குப் பானைகளில் பத்திரப் படுத்தினார்கள்.

(நிலா உதிக்கும்)

கட்டுரையாளர், எழுத்தாளர்.

தொடர்புக்கு: arunskr@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x