Published : 24 Jan 2020 01:43 PM
Last Updated : 24 Jan 2020 01:43 PM

அம்மாவின் குரலாக ஒலிக்கிறேன்! - சித் ஸ்ரீராம் நேர்காணல்

ஆர்.சி.ஜெயந்தன்

மணிரத்னம் - ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் வெளிவந்த ‘கடல்’ படத்தில் இடம்பெற்ற ‘அடியே’ பாடலின் மூலம் பாடகராக அறிமுகமானார் சித் ஸ்ரீராம். கோலிவுட் மெச்சும் உச்ச ஸ்தாயி பாடகர்களில் ஒருவர். இளையராஜா இசையில் ஊரெங்கும் ஒலித்துக்கொண்டிருக்கும் ‘உன்ன நெனச்சு... நெனச்சு...’ என்ற ‘சைக்கோ’ பட பாடல், மெலடியின் காதலனாகவும் தற்போது அவரை அடையாளம் காட்டியிருக்கிறது.

தனித்துவமான குரல்வளம், வலுவான கர்னாடக சங்கீதப் பின்னணி ஆகியவற்றுடன் உச்ச குரலிலும் உருகும் இவர், குறுகிய காலத்தில் வெகுவான ரசிகர்களை வென்றிருக்கிறார். தமிழகத்தில் பிறந்து அமெரிக்காவில் வளர்ந்த இவர், அமெரிக்கத் தனியிசை உலகின் தாக்கத்துடன் சுயாதீன இசையிலும் தனது கம்போஸிங் திறமைகளை வெளிப்படுத்தி வருபவர். தற்போது மணிரத்னம் தயாரிப்பில் வெளியாகவிருக்கும் ‘வானம் கொட்டட்டும்’ படத்தின் மூலம் இசையமைப்பாளராகவும் அறிமுகமாகிறார்.

இதுவொருபுறம் இருக்க, முதன்முறையாகத் தென்னிந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்து ‘ஆல் லவ்... நோ ஹேட்’ என்ற தலைப்பில் நேரடி இசை நிகழ்ச்சிகளில் பாடவிருக்கிறார். பிப்ரவரி மாதம் 8-ம் தேதி சென்னையிலிருந்து தொடங்கவிருக்கும் அவருடைய இசைச் சுற்றுப் பயணத்துக்கு முன் அவரைச் சந்தித்து உரையாடியதிலிருந்து…

‘அடியே’, ‘என்னோடு நீ இருந்தால்’, ‘தள்ளிப்போகாதே’, ‘மறுவார்த்தை பேசாதே’, ‘குறும்பா’, ‘கண்ணான கண்ணே’, இப்போது ‘உன்ன நெனச்சு...நெனச்சு...’ என உங்கள் குரலுக்காகவே இசையமைக்கப்பட்ட மெட்டுக்கள்போல பாடல்கள் உங்களைத் தேடி வருகின்றனவே..

என் கையில் ஏதுமில்லை. ஏ.ஆர்.ரஹ்மான் எனும் மகா ஆளுமைக்கு இதுபோன்ற தருணங்களில் மீண்டும் மீண்டும் நன்றி கூறிக்கொண்டே இருக்க விரும்புகிறேன். இவ்வளவு குறைந்த ஆண்டுகளில் எனது வாழ்க்கை இப்படி மாறிவிடும் என்று நான் கனவிலும் நினைத்திருக்கவில்லை.

அதை மாற்றி அமைத்தவை இந்தப் பாடல்கள்தாம். சினிமாவில் பாடல்கள் குறைந்துகொண்டுவரும் நேரத்தில் உனது குரல் பாடல்களை மீண்டும் இடம்பெறச் செய்துவிடுகிறது என்று ஒரு பத்திரிகையாளர் எனது அபிமானியாக மாறிச் சொன்னார். அவரது அவதானிப்பு சரியா என எனக்குத் தெரியவில்லை. ஆனால், அத்தனை பாராட்டுகளுக்கும் என்னை உரியவனாக ஆக்கியது எனக்கு வாய்ப்பளித்த அனைத்து இசையமைப்பாளர்களும்தான். தமிழைத் தாண்டி தெலுங்கு, மலையாளம், கன்னடம் என என் பயணம் விரிந்திருக்கிறது.

போகும் இடங்களில் எல்லாம், ‘உங்கள் குரல்வளத்தைப் பெற ‘டிப்ஸ்’ தாருங்கள், என்று கேட்பவர்களும் இருக்கிறார்கள். அப்படி என்னிடம் கேட்கும்போதெல்லாம் கூச்சப்படுகிறேன். குரல் மட்டுமல்ல; ஒவ்வொரு மனிதருடைய தனித்த திறன்களும் இயற்கை நமக்கு அளித்தது. எனது குரல் இப்படி இருப்பதற்கு நான் பொறுப்பேற்க முடியாது. ஆனால், எனது குரலின் சாத்தியங்களை நல்ல பயிற்சியின் மூலம் நான் கண்டுகொண்டேன்.

அதையேதான் நான் அவர்களுக்கும் சொன்னேன். தொடர் பயிற்சியின் மூலம் நமக்கு அளிக்கப்பட்ட குரலையும் திறன்களை மேலும் ஸ்திரப்படுத்திக்கொள்ள முடியும். அதற்கு நான் உதாரணம் என்று வளரும் பாடகர்களுக்குச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். இன்னொரு ஆசீர்வாதம், எல்லா வயதுக்குரியவர்களின் உணர்வுகளையும் பிரதிபலிக்கும் விதவிதமான பாடல்கள் அமைந்திருப்பதைக் கூற வேண்டும். ‘ஆல் லவ்... நோ ஹேட்’ போன்ற இசை நிகழ்ச்சிகளில் பாடும்போது ஒட்டுமொத்தக் குடும்பங்களையும் மகிழ்விக்க முடிகிறது. அவர்களுடைய ஆயிரக்கணக்கான குரல்களும் என்னோடு இணைந்து பாடும்போது மனம் நிறைந்துபோகிறது.

காவியக் காலத் தமிழ் சினிமாவின் உச்ச ஸ்தாயி பாடகர்களில் உங்களைக் கவர்ந்தவர் என்று யாரைச் சொல்வீர்கள்?

தியாகராஜ பாகவதர், எஸ்.ஜி.கிட்டப்பா. அதன்பிறகு சீர்காழி கோவிந்தராஜன். அவரது ‘உள்ளத்தில் நல்ல உள்ளம்’ பாடலைப் பாடி பயிற்சி எடுக்காத பாடகர்களே இருக்க முடியாது.

தற்போது இசையமைப்பாளராகப் புதிய பரிமாணம் எடுத்திருப்பது எப்படியிருக்கிறது?

இசையமைப்பது எனக்குப் புதிதல்ல. சுயாதீன இசையில் எனது செயல்பாடுகளைப் பல வருடங்களுக்கு முன்பே தொடங்கிவிட்டேன். அதேசமயம் மணிரத்னம் தயாரிப்பில் முதல் படத்துக்கு இசையமைப்பதை மிகவும் முக்கியமாகப் பார்க்கிறேன். ‘வானம் கொட்டட்டும்’ கதைக்கு என்ன தேவைப்பட்டதோ அதை இயக்குநரின் பக்கம் நின்று கொடுத்திருக்கிறேன். படம் விரைவில் வெளியாவதால் ரசிகர்களின் தீர்ப்புக்காகக் காத்திருக்கிறேன்.

அமெரிக்காவில் இசை சார்ந்து படித்தவராகவும், அங்கு நிலவும் பலவகை சுயாதீன இசை வடிவங்களில் பரிச்சயம் பெற்றவராகவும் இருக்கிறீர்கள். ஆனால், தமிழகத்தில் சுயாதீன இசை வளரவில்லையே?

அதற்கான காலம் தற்போது கனிந்துவிட்டதாகவே நினைக்கிறேன். சுயாதீன இசையைப் பொறுத்தவரை, மொழியோ வடிவமோ வகையோ பிரச்சினையில்லை. அது இயற்கையாக, இயல்பாக ரசிகர்களின் மனத்தைத் தொட வேண்டும். அதை நீங்கள் வலிந்து பிரபலப்படுத்த முடியாது. அது மக்களின் வாழ்க்கையுடன் தொடர்புகொள்ள வேண்டும். அதுதான் மிக முக்கியம். திரையிசையை அது மிஞ்சும் காலம் கண்டிப்பாக வரும்.

‘கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்’ போன்று தற்போது கவனம் பெற்றிருக்கும் சாமானியர்களின் இசையை எந்த வகை இசையில் வைப்பீர்கள்?

நிச்சயமாக அது சுயாதீன இசைதான். அந்தக் குழுவில் இருக்கும் அறிவு எனக்கு நல்ல நண்பன். ‘கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்’ கலைஞர்களிடம் சொல்லும் செய்தி நமக்குத் தேவைப்படுகிறது. அதனால்தான் அது கவனம் பெறுகிறது. அவர்களுடைய இசை என்னை வெகுவாகக் கவர்ந்திருக்கிறது.

உங்கள் வளர்ச்சியில் அம்மாவின் பங்கு என்ன?

நான் சென்னையில் பிறந்தவன். என்னை ஒரு வயதுக் குழந்தையாக அமெரிக்காவுக்கு அழைத்துச் சென்றுவிட்டார்கள். 1992-ல் அம்மா அங்கே ஒரு கர்னாடக சங்கீதப் பள்ளியைத் தொடங்கினார். மூன்று வயதில் எனக்கு சங்கீதம் சொல்லிக் கொடுக்கத் தொடங்கிவிட்டார். இசையின் மீது அம்மாவுக்கு இருந்த காதலால் நான் உங்கள் முன்னால் நின்றுகொண்டிருக்கிறேன்! அவரது குரலாகத்தான் நான் ஒலித்துக்கொண்டிருக்கிறேன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x