Published : 24 Jan 2020 01:21 PM
Last Updated : 24 Jan 2020 01:21 PM

பாம்பே வெல்வெட் 19: அழகனைச் செதுக்கிய பெண்கள்

எஸ்.எஸ்.லெனின்

இன்றுபோல் இணைய வசதியோ, தொலைக்காட்சிகளோ இல்லாத எழுபதுகளின் தொடக்கம் அது. சினிமா மட்டுமே மக்களின் ஏகோபித்த காட்சி ஊடகமாகத் திகழ்ந்த காலம். அப்போது ‘உலகின் டாப் 10 அழகு ஆண்கள்’ என்ற தலைப்பில் சர்வதேச அளவிலான வாக்கெடுப்பு நடந்தது.

பரிசீலனையாகி வெற்றி பெற்றவர்களில் பலரும் திரை நடிகர்கள். அவர்களில் இந்தியாவிலிருந்து ஒரு நடிகர் தேர்வானார். அவர்தான் அறுபதுகளில் தொடங்கி அடுத்த 30 ஆண்டுகளுக்கு இந்தி சினிமாவைத் தனது அழகால் வசீகரித்திருந்த, இந்தியாவின் ‘ ஹீ மேன்’ (He-man) என்று வர்ணிக்கப்படும் தர்மேந்திரா.

பாலிவுட்டின் அழகான நடிகர்களைக் கணக்கெடுத்தால் தர்மேந்திரா முதல் வரிசையில் இடம் பிடிப்பார். அந்த அழகனைப் படிப்படியாகச் செதுக்கிய பெண்களின் வாயிலாக அறிய முயல்வது சரியான தரிசனமாக இருக்கும்.

தொடங்கி வைத்த கனவுக்கன்னி

பஞ்சாபின் குக்கிராமம் ஒன்றில் ‘தர்மைந்தர் சிங் தியோல்’ ஆகப் பிறந்தார் தர்மேந்திரா. அவருடைய தந்தை கண்டிப்பான ஆசிரியர். எட்டாம் வகுப்பு படித்தபோது சிறுவன் தியோலுக்கு சினிமா பித்துப் பிடித்தது. அதிலும் அப்போதைய கனவுக்கன்னி சுரையா என்றால் கொள்ளைப் பிரியம். சுரையா நடித்த ‘தில்லஹி’ (1949) திரைப்படத்தை பல மைல்கள் நடந்து சென்று 40 முறைக்கு மேல் ரசித்திருக்கிறார்.

பம்பாய்க்குச் செல்ல வேண்டும் சுரையாவை நேரில் தரிசிக்க வேண்டும் என்பது தர்மேந்திராவின் ரகசிய ஆசை. ‘அதற்கு நீ திலீப்குமார் போல் ஸ்டைலான ஹீரோவாக வேண்டும்’ என ‘தோஸ்துகள்’ ஏற்றிவிட்டனர். பெற்றோரோ மகனின் சினிமா மோகத்தைக் கட்டுப்படுத்த அவரது 19 வயதில் கால்கட்டு போட்டார்கள். ஆனால், திருமண வாழ்க்கையையும் மீறி பம்பாய்க்கு இழுத்தது சினிமா.

அமைதி காத்த மனைவி

அந்நாளின் பத்திரிகை ஒன்று நடத்திய புதுமுகங்களைக் கண்டறியும் போட்டியில் கலந்துகொள்ள மனைவி, குழந்தைகளைப் பிரிந்து மும்பைக்கு ரயிலேறினார் தர்மேந்திரா. மனைவி பிரகாஷ் கௌர் பரம சாதுவான பஞ்சாபி. கிராமத்து ஆண்கள் மத்தியில் தனித்துவமாய் ஜொலித்த கணவனின் அழகு கண்டு அவருக்கு உள்ளூரப் பெருமை உண்டு. ஆனால், அதுவே அவரது கவலைக்கும் காரணமானது. குழந்தைகள், குடும்பத்தைவிட சினிமாவை கணவர் அதிகம் நேசித்ததை ஒருவாறாகப் புரிந்துகொண்டபோதும் அமைதி காத்தார். மனைவியின் அமைதியை தர்மேந்திரா அனுமதியாக எடுத்துக்கொண்டார். அப்போது மட்டுமல்ல முன்னணி நடிகராக வளர்ந்த பின்னாளில், சக நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்ட போதும் அவரின் கிராமத்து மனைவி விசித்திர அமைதி காத்தார்.

ஆசை வளர்த்த தோழி

புதுமுகப் போட்டியில் தர்மேந்திராவின் தோற்றப்பொலிவுக்கு வெற்றிகிட்ட, ஒரே நேரத்தில் பல படங்களில் நடிக்கும் வாய்ப்புகளைப் பெற்றார் . அவர் நடித்தவற்றுள், தேவ் ஆனந்தின் அண்ணன் சேத்தன் ஆனந்தின் ‘ஹாகீகத்’ (1964) வெற்றிப்படமாக, ‘ஃபூல் ஔர் பதார்’ (1966) தர்மேந்திராவைத் தனி நாயகனாக்கியது. அறுபதுகளின் இறுதியில் சொந்தப் படம் தயாரித்து நடிக்குமளவுக்கு தர்மேந்திராவுக்கான காலம் கனிந்தது. மீனாகுமாரி, நந்தா, சாய்ராபானு ஆகியோரின் ஜோடியாக வெற்றிகரமான காதல் நாயகனாக வலம் வந்தார்.

இவர்களில் திரைக்கு அப்பாலும் நடிகை மீனாகுமாரியுடன் தர்மேந்திரா வளர்த்த நெருக்கம், அவரது திரை வாழ்வுக்கும் ஏணியானது. ஏழு படங்களில் இணைந்து நடித்த மீனாகுமாரி, தர்மேந்திராவின் தனி வசீகரத்தை அவருக்கே அடையாளம் காட்டினார். பெயருக்குச் சில திரைப்படங்களில் நடிப்பதைவிட பிரத்யேக பாணியை உருவாக்க உந்துதல் தந்தார். மீனாகுமாரி உதவியால் அப்போதைய கதாநாயகர்கள் எவருக்கும் இல்லாத ஆணழகன் பிம்பம் தர்மேந்திராவுக்கு வளர்ந்தது.

வெற்றிகளின் வரைபடம்

சக நட்சத்திரங்களால் ‘அழகின் கடவுள்’ ஆக புகழப்பட்ட தர்மேந்திராவுக்கு ரசிகர்களின் மனதிலும் ‘ஆணழகன்’ பிம்பம் அபரிமிதமாய் வளர்ந்தது. காதல் நாயகன், ஆக்ஷன் ஹீரோ, காமெடி தர்பார் என சகல வேடங்களிலும் தர்மேந்திரா வெளுத்துக்கட்டினார்.

அனைத்தையும் ரசிகையர் ஆராதித்து வரவேற்றனர். அழகுப் பொம்மையான ராஜேஷ் கன்னாவின் திரை பிம்பம், புஜபலம் காட்டிய தர்மேந்திராவின் கட்டழகின் முன்பாகச் சரிந்தது. ‘அனுபமா’, ‘சத்யாகமம்’, ‘சுப்கே சுப்கே’ திரைப்படங்கள் அந்த வகையில் வெற்றியடைந்தன. எழுபதுகளில் காமெடியில் தோய்ந்த ஆக்ஷன் ஹீரோவாக ‘மேரா கான் மேரா தேஷ்’ (1971), ‘சாரஸ்’ (1976), ‘ஷோலே’ (1975) திரைப்படங்கள் வரவேற்பைப் பெற்றன. ‘தரம் வீர்’ (1977) ஆண்டின் அதிக வருவாய் ஈட்டிய திரைப்படமானது.

அரவணைத்த ஹேமமாலினி

தனது சிறுபிராயத்து கனவுக்கன்னியான சுரையாவிடம் தொடங்கிய தர்மேந்திராவின் திரைப்பயணம், இந்தியாவின் கனவுக்கன்னியான ஹேமமாலினியின் கரம் பற்றுமளவுக்கு உச்சம் தொட்டது. ‘முதல் அறிமுகத்திலேயே வாழ்நாளில் சந்தித்திராத அழகனைக் கண்டுகொண்டேன்’ என்று தன் பங்குக்கு உருகி இருக்கிறார் ஹேமமாலினி. ‘ஷோலே’, ‘சீதா ஔர் கீதா’, ‘ட்ரீம் கேர்ள்’ உட்பட 30-க்கும் மேற்பட்ட படங்களில் இருவரும் இணைந்து நடித்தனர்.

நிஜக் காதலின் கெமிஸ்ட்ரி திரையிலும் பிரதிபலிக்கும் என்ற நம்பிக்கையில் இருவரையும் சேர்த்து வளைக்க இயக்குநர்கள் காத்திருந்தனர். ஆனால், திரையில் திகட்டாத அவர்களின் டூயட், நிஜத்தில் கைகூடாது தள்ளிப்போனது. தனது 4 குழந்தைகளுக்குத் தந்தையான தர்மேந்திராவுக்கு விவாகரத்து அளிக்க மறுத்து பிரகாஷ் கவுர் மவுனம் காத்தார்.

இந்து திருமணச் சட்டம் இடம்கொடாததால், மாற்று மதத்துக்கு மாறி தர்மேந்திரா -ஹேமமாலினி திருமணம் ஈடேறியது என்பார்கள். இந்த ஜோடி பின்னாளில் அரசியலில் குதித்து பாஜக எம்பியானதில், மதம் மாறியதான செய்தியை மறுத்தனர். மனைவியின் அரவணைப்பால் திருமணத்துக்குப் பின்னர் தர்மேந்திராவின் திரைவாழ்க்கையில் அடுத்த பாய்ச்சல் நிகழ்ந்தது. நகைச்சுவை, வில்லன் என பன்முகம் காட்ட ஆரம்பித்தவர், 30 ஆண்டுகளுக்குத் தனது ஆணழகன் பிம்பத்தைச் சரியாது பராமரித்தார். எண்பதுகளில் தன் மகன்கள் சன்னி தியோல், பாபி தியோலின் கதாநாயகிகளுடன் ஜோடி சேர்ந்தும் வெற்றிப் படங்களைத் தந்தார்.

அனைத்துக்மான மகள்கள்

தர்மேந்திரா-ஹேமமாலினி ஜோடிக்கு ஈஷா தியோல், அஹனா தியோல் என இரு மகள்கள். அவர்களின் விருப்பத்துக்காக பஞ்சாபிய படங்களில் தலைகாட்டியவர், தொண்ணூறுகளில் தொடர்ந்து தாய்மொழித் திரைப்படங்களில் நடித்துத் தள்ளினார். படங்கள் பலவற்றைத் தயாரித்தும் பஞ்சாபிய திரையுலக வளர்ச்சிக்கு உதவினார்.

கூடவே மகள்கள் முன்னெடுத்த பாரம்பரிய விவசாயப் பண்ணையை பஞ்சாபில் தாம் பிறந்த மண்ணில் செயல்படுத்தி வருகிறார். பாலிவுட்டிலும் தனியிடமாக, 2014 வரை அவரது தனி பாணியான நகைச்சுவை கலந்த திரைப்படங்கள் வரவேற்பு குறையாதிருந்தன. மகள்களின் உதவியுடன் இன்ஸ்டாகிராம் கணக்கைத் தொடங்கி இளம் தலைமுறையினருடன் இப்போதும் தொடர்பில் இருக்கிறார்.

பழம்பெரும் நடிகை சுரையா மறைந்தபோது பாலிவுட் நட்சத்திரங்கள் பலரும் பாராமுகமிருக்க, முதல் நபராக விரைந்து அஞ்சலி செலுத்திய தர்மேந்திரா வெகுநேரம் அங்கிருந்தார். கனவுக் கன்னிக்காகத் திரைப்பயணத்தைத் தொடங்கிய தர்மேந்திரா தற்போது 85 வயதிலும் சலிக்காது தனது கனவுகளைத் துரத்திக்கொண்டிருக்கிறார்.

தொடர்புக்கு: leninsuman4k@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x