Published : 24 Jan 2020 01:07 PM
Last Updated : 24 Jan 2020 01:07 PM

கோடம்பாக்கம் சந்திப்பு: கின்னஸுக்காக மட்டுமல்ல!

படச்சுருள் இருந்த காலகட்டத்தில் 24 கலைப் பிரிவுகள் திரையுலகில் இருந்ததாகக் கூறுவார்கள். தற்போதைய டிஜிட்டல் யுகத்தில் ஒவ்வொரு கலைப் பிரிவும், மேலும் பல பிரிவுகளாக விரிவடைந்து விட்டன. இப்படிப்பட்ட நிலையில் ‘வங்காள விரிகுடா’ என்ற படத்தின் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இசை, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு தொடங்கி நாயகனாக நடித்து, தயாரித்து இயக்கியிருப்பது வரை 21 கலைப் பிரிவுகளை தனியொரு ஆளாகக் கையாண்டிருக்கிறார் குகன் சக்கரவர்த்தியார். கடந்த 20 ஆண்டுகளாக டி.ராஜேந்தரின் நண்பராக அவரது படத் தயாரிப்புகளில் அருகிருந்து கவனித்தவர்.

அஜித் நடித்த ‘அமராவதி’ தொடங்கி இருபதுக்கும் அதிகமான படங்களில் கதாநாயகர்களின் நண்பனாகவும் துணை வேடங்களிலும் நடித்திருக்கும் இவர், கின்னஸ் சாதனைக்காக ‘வங்காள விரிகுடா’ படமுயற்சியை அனுப்பியிருக்கிறார். அதேநேரம் ‘இது வெறும் கின்னஸ் சாதனைக்காக மட்டுமே அல்ல’ என்கிறார். “பணமில்லை என்பதற்காகக் காதலியால் உதறப்பட்டவன், பணம் சேர்த்து ஒருகுறுநில மன்னனைப்போல் ஆகிறான். அப்படிப்பட்டவனை, வங்கக் கடலோரம், ஒரு சின்ன ஊரில் பிறந்து, சாதித்த அப்துல் கலாமின் இறப்பு தலைகீழாக எப்படி மாற்றுகிறது என்பதுதான் கதை” என்கிறார். இத்தனை கலைகளைக் கையாண்டதுடன் முதல் படத்திலேயே தனது ஜோடியாக மூன்று கதாநாயகிகளை நடிக்க வைத்திருக்கிறார் குகன்.

அமீரின் ஆதங்கம்

அசோக் தியாகராஜன் இயக்கத்தில், அபி சரவணன், வெண்பா, நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘மாயநதி'. முகில் பிலிம்ஸ் தயாரிப்பில் பவதாரிணி இசையமைத்திருக்கும் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. அப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய அமீர், தனது கனவுப் படம் என்று கூறி தொடக்கவிழா நடத்திய ‘சந்தனத்தேவன்' படம் தொடங்கப்படாமல் இருப்பதற்கான காரணத்தை தன் பேச்சில் குறிப்பிட்டுள்ளார் அமீர்.

“ ‘சந்தனத்தேவன்' ஒரு பிரீயட் ஃபிலிம். கிட்டத்தட்ட 35 நாட்கள் படப்பிடிப்பு முடிந்து, இப்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நான்தான் அந்தப் படத்துக்குத் தயாரிப்பாளர். அதற்கு ஒரு ஃபைனான்சியர்தான் பணம் கொடுத்தார். படத்தை முடிக்க தேவைப்பட்ட நிதிக்காக பத்து பைனான்சியர்கள்வரை அணுகினேன். அவர்கள் அனைவருமே எனக்குப் போட்ட நிபந்தனை, 'நீங்கள் பொதுவெளியில் அரசியலை எதிர்த்து கருத்துச் சொல்லவே கூடாது, மத்திய, மாநில அரசுகளை ரொம்பவே பேசுகிறீர்கள். அதனால் சிக்கல் இருக்கிறது. இதற்கு நீங்கள் உத்தரவாதம் அளித்தால் ஃபைனான்ஸ் தருகிறோம்’ என்றார்கள். என்னை விற்று சினிமா எடுப்பது பைத்தியக்காரத்தனம் என நினைத்துக் கொள்வேன். அப்படியொரு சினிமாவை என்னால் செய்ய முடியாது. நான் நானாகவே இருப்பேன்” என்று பேசினார்.

அஜித்துக்கு புதிய ஜோடி

‘நேர்கொண்ட பார்வை' படத்தைத் தொடர்ந்து, அதன் இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிக்கும் புதிய படம் ‘வலிமை’. இப்படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்தது. தற்போது சென்னையில் தொடர்ந்து படமாக்கி வருகிறார்கள். இதனிடையே, இதில் அஜித்துடன் நடிக்கும் சக நடிகர்கள் பற்றி படக்குழுவினர் இதுவரை அறிவிக்கவில்லை. அஜித்துக்கு ஜோடியாக முதலில் யாமி கவுதம் ஒப்பந்தமாகி பின்னர் விலகிவிட்டதால் அவருக்கு பதிலாக ஹியூமா குரோஷி நாயகியாக நடித்து வருவது உறுதியாகியுள்ளது. பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்த ‘காலா' படத்தில் ரஜினியின் முன்னாள் காதலி கதாபாத்திரத்தில் ஹியூமா குரோஷி நடித்திருந்தார். அவரது இரண்டாவது தமிழ்ப் படமாக 'வலிமை' அமைந்திருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x