Published : 24 Jan 2020 12:27 PM
Last Updated : 24 Jan 2020 12:27 PM

திரைக்குப் பின்னால்: அன்புடன் அலெக்ஸா.!

டோட்டோ

கூகுள் மேப்பும் ஸ்கைப்பும் இல்லாத காலத்தில், வத்சலா (சாவித்திரி) அபிமன்யுவைக் (ஜெமினி கணேசன்) காணொலியில் காணும் அதிசயத்தை ‘மாயா பஜார்’ படத்தில் கண்டோம்.

‘லொக்கேஷன்’ பகிர்ந்து கொள்ளாமலேயே மந்திரவாதிகள் மை தடவிப் பார்த்து இடத்தைக் கண்டுபிடிப்பது, அரக்கனின் உயிர் கிளிக்குள் ஒளிந்திருப்பது, எழுத்தாளர் எஸ்.ரா. குறிப்பிட்டது போல ‘உலகின் முதல் பாஸ்வேர்ட் வைத்துக் குகைக் கதவை மூடியது’ எனக் காவியக் காலத்தின் புராணப் படங்களில் பல மாயங்களைக் காட்சிகளாகக் கண்டு பேருவகை கொண்டிருக்கிறோம்.

திரைப்படங்கள் சமூகக் கதைக் களங்களை நோக்கி நகர்ந்தபோது நவீனக் கருவிகள் கதையில் இடம்பெறத் தொடங்கின. வில்லன் அல்லது போலீஸ் கையில் ஏந்தியிருக்கும் கைத் துப்பாக்கியும், இத்தனை நேரமும் இந்த உருவத்துக்குள் இருந்தவர் இவரா என அதிசயிக்க வைத்த முகம் மாற்றும் ரப்பர் மாஸ்க் முகமூடிகளும் அப்போது கவர்ந்தன.

எல்லாத் தொலைபேசி எண்களும் முகவரிகளும் எழுதப்பட்ட ஒரே ஒரு ஒரிஜினல் ரகசிய டைரி என்று கொஞ்சம் காலம் ஓடியது. ஹாலிவுட்டில், இன்னமும் ‘மிஷன் இம்பாசிபிள்’ படங்களில் இந்த ரப்பர் மாஸ்க் பயன்படுத்தப்படுகிறது. ரகசிய டைரி கொஞ்சம் கொஞ்சமாக உருமாறி குறுந்தகடு, ஹார்டு டிஸ்க், பென் ட்ரைவ் எனத் தொழில்நுட்ப ‘அப்கிரேட்’ மாற்றங்களோடு கதை சொல்லப்படுகிறது.

சீனுவின் செல்ஃபி

பார்க்காமலே காதலித்த சூர்யா-கமலி (காதல் கோட்டை), தன் கூட்டத்தில் தனுஷ் யாரென்று திணறும் பத்ரி (குருதிப்புனல்), தேவியும் ராஜுவும் சேர்ந்து கண்டுபிடிக்கும் தொடர் கொலைகள் (நூறாவது நாள்) என நம்மைக் கவர்ந்த இதுபோன்ற காட்சிகள் இப்போது சித்தரிக்கப்பட்டால் குறைந்தது நூறு தொழில் நுட்பக் கேள்விகளாவது எழும்.

அதில் தலையாயது செல்போன். இப்போதைய செல்போனைப் பழைய கதைகளில் பொருத்திவிட்டால் அந்தப் படங் களின் ஆதார சுவாரசியத்தையே அது கேள்விக்குள்ளாக்கிவிடும். ‘மூன்றாம் பிறை’ நாயகன் சீனு, ‘கண்ணே கலைமானே’ பாடலில் எடுத்த செல்ஃபியைப் பின்னாளில் விஜியிடம் காட்டி கதையை முடித்துவிடலாம்.

வெறும் செல்போன் சிக்னல்கள், சி.சி.டி.வி கேமராக்கள், அந்த வட்டாரத்தில் இருக்கும் செல்போன் டவர்கள் என எப்பேர்பட்ட குற்றத்தையும் அதிகபட்சம் ஒரு வாரத்துக்குள்ளாகவே கண்டுபிடிக்க முடிந்துவிடும் தொழில்நுட்பத்தால் குற்றவியல் படங்களுக்குத் திரைக்கதை எழுதுவது இன்னும் சவாலாக ஆகியிருக்கிறது.

இன்னும் சொல்லப்போனால், செல்போனுக்கு முன், பின் என கதைகளின் காலகட்டங்களை இருவேறு காலகட்டங்களாகவே பிரிக்கலாம். நமக்கு மிகவும் பிடித்த ‘சுப்ரமணியபுரம்’ தொழில் நுட்பங்களிலிருந்து விலகி 80-களில் படமாக்கப்பட்டதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கக்கூடும். இந்தத் தொழில்நுட்ப வளர்ச்சியைத் தடையாக எண்ணாமல், அதையே ஒரு உத்தியாக வைத்துச் சொல்லப்பட்ட கதைகளும் களமும் பெருகியிருப்பது தமிழ்த் திரைக்கதை யின் வளர்ச்சி என்றே கொள்ள வேண்டும்.

ஓடவும் ஒளியவும் முடியாது

‘எந்திரன்’, ‘2.0’ போன்ற நேரடி அறிவியல் புனைவுக் கதைக் களத்தைத் தாண்டி, முற்றிலும் புதிய அனுபவம் தந்தவை பல. ஒரு தனி நபரின் நினைவுகளையெல்லாம் ஒரு கணினியில் சேமித்து வைத்து, மற்றொரு மனிதருக்கு அதை நானோ ட்ரான்ஸ்மிட்டர்கள் மூலம் மூளைக்குள் செலுத்திக் குற்றம் புரிவது, பழைய நினைவுகளை மொத்தமாக அழிப்பது (மாயவன்), ‘டார்க் வெப்’ நெட்வொர்க் மூலம் மற்றவர்களின் தகவல்களைத் திருடி, வங்கிக் கணக்கிலிருந்து பணம், தனிப்பட்ட தகவல்களைத் திருடி மோசடி செய்து ஏமாற்றும் ‘ஒயிட் டெவில்’ (இரும்புத் திரை), அலைபேசிகளை ஒட்டுக்கேட்டுப் பணம் பறிக்கும் மோசமான காவல் அதிகாரி (திருட்டுப் பயலே 2), அலைபேசி சிக்னலைப் பின் தொடர்ந்து, ஒட்டுமொத்தக் காவல் துறையையும் நகரின் ஒரு பக்கத்தில் கவனம் முழுவதைக் குவிக்க வைத்துவிட்டு, குற்றவாளிகள் எதிர்த் திசையில் தப்புவது (அஞ்சாதே), காவல் அதிகாரி மித்ரன் உடம்பில் ஒரு ஜி.பி.எஸ். டிரான்ஸ்மிட்டர் பொருத்தி அவரது நடவடிக்கைகளைக் கண்காணிப்பது (தனி ஒருவன்) என ஓடவும் முடியாமல் ஒளியவும் முடியாமல் கதாபாத்திரங்கள் தொழில்நுட்பப் பொறியில் சிக்கிக்கொள்ளும் படங்களையும் திரில்லுடன் ரசித்து வந்திருக்கிறோம்.

அடடே ‘அலெக்ஸா’

இந்தத் தொழில்நுட்ப வளர்ச்சி யின் அடுத்தகட்டமாக இருப்பது செயற்கை நுண்ணறிவு. அதைக் கதைக்குள் உணர்வுபூர்வமாகக் கொண்டு வருவது சென்ற ஆண்டின் இறுதியில் வெளியான ‘சில்லுக்கருப்பட்டி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நிகழ்ந்துவிட்டது. ஒரு மத்தியதர வர்க்க குடும்பத் தலைவியான அமுதினியின் வாழ்வில் செயற்கை நுண்ணறிவு கொண்டு பேசும் இயந்திரமாக வரும் அலெக்ஸா, நாயகி கேட்கும் எல்லாக் கேள்விகளுக்கும் பதில் தருகிறது.

அவளுடைய கணவர் தனபாலுக்குத் தூய்மை குறித்த சின்ன மனக்கோளாறு இருப்பதைக் கண்டுபிடித்துச் சொல்கிறது, ஒரு நல்ல பேச்சுத் துணையாக இருப்பது என்று குமுதினியின் மொத்த வாழ்வும் அலெக்ஸாவால் மாறுகிறது. நாயகியின் எல்லாப் பேச்சுக்களும் அதில் பதிந்து போக, அது ஒரு நாள் கணவன் தனபாலுக்குத் தெரிய வர, கதையின் போக்கையே மாற்றும் கதாபாத்திரமாகவே மாறிவிடுகிறது அலெக்ஸா. இதுவே பழைய படமாக இருந்தால், அவள் அதிக பட்சமாக ஒரு டைரியில் எழுதி வைத்திருப்பாள் எனக் கதை வெறும் தட்டையாக நிறுவப்பட்டிருக்கும்.

இயந்திர மனிதன், கால இயந்திரம், வேற்றுக் கிரக மனிதர்கள் என அறிவியல் புனைவின் பாதுகாப்பான வட்டத்துக்குள் மட்டும் இருந்து விடாமல், அலைபேசி, கணினியின் பரவலான உபயோகம், செயற்கை நுண்ணறிவுக் கருவி போல இனிவரும் எல்லாக் கதைகளுக்குள்ளும் வளரும் தொழில்நுட்பங்கள் சுவாரசியம் கூட்டும் காலம் தமிழ்த் திரைக்கதை உலகில் அரும்பியிருப்பதை வரவேற்போம்.

தொடர்புக்கு:tottokv@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x