Published : 23 Jan 2020 02:31 PM
Last Updated : 23 Jan 2020 02:31 PM

கலைக் கூடம்: வரலாற்றை மாற்றியமைத்த முத்தம்!

ஜெயந்தன்

தொடக்கக் கால சென்னையின் ஒரு பகுதியாகிய புரசைவாக்கத்தில் பிரிக்ளின் சாலையில் இருக்கிறது அந்த ஓவியக் கூடம். உள்ளே நுழையும்போதே, நம்மை இழுத்து நிறுத்தியது இயேசுவுக்கு யூதாஸ் முத்தமிடும் குளோஸ்-அப் ஓவியம். அதற்கு ‘தி கிஸ்’ என்று ஆங்கிலத்தில் தலைப்பிட்டிருந்ததும், அதன் கீழே இருந்த புதிய ஏற்பாட்டு விவிலிய வசனமும் அசரவைத்தது.
“உண்மையில் அற்பமான முப்பது வெள்ளிக் காசுகளுக்காக தன் குருவை யூதாஸ் காட்டிக்கொடுக்கவில்லை. அவர் ஒரு செல்வந்தர்.

கடவுளின் கருவியாக அவர் செயல்பட்டார். அதை இந்த ஓவியத்திலிருக்கும் கபடமற்ற யூதாஸின் பார்வை சொல்லிவிடும். மனித வரலாற்றை மாற்றி அமைத்த இந்த முத்தத்தை, ஒரு பழமையான ஓவியத்திலிருந்து மீள் உருவாக்கம் செய்திருக்கிறேன்.” என்று நம் காதருகே வந்து சொன்னார் ஜோசப் மோகன்ராஜ். அவர்தான் ‘கிறிஸ்டியன் ஆர்ட் கேலரி’ என்ற அந்த ஓவியக் கூடத்தை நடத்தி வரும் ஓவியர் மற்றும் வடிவமைப்பாளர்.

ஓவியக் கூடத்தின் நாற்புறச் சுவர்கள், நடுவிலிருந்த தூண்கள் என எங்கும் விவிலிய வாசகங்களைத் தாங்கிய ஓவியங்கள். எளிமையும் நவீனமும் இணைந்திருந்த இந்த ஓவியங்களில் ஒரு சிறந்த வடிவமைப்பாளரின் கலை மனம் மட்டுமல்ல; விவிலியத்தை ஆழமாக நேசித்து உள்வாங்கியிருக்கும் பக்தி மனத்தினையும் வெளிக் காட்டின.‘கடவுள் வழியே எல்லாம் கூடும்’ என்ற மத்தேயூவின் வசனம், ‘பயப்படாதே நான் உனக்குத் துணை நிற்கிறேன்’ என்ற ஏசாயா புத்தகத்தின் புகழ்பெற்ற வசனம், ‘ஹேண்ட்’ என்ற தலைப்பில் அதே வசனம் ஆங்கிலத்திலும் இருக்க, தொலைந்துபோய் கண்டுபிடித்த ஆட்டுக்குட்டியை இயேசு கிறிஸ்து வாஞ்சையுடன் தன் தோளில் அணைத்திருக்கும் ஓவியம், ‘நான் உன்னை நேசிப்பதுபோல் நீ ஒவ்வொருவரையும் நேசிப்பாயாக’ என்ற கிறிஸ்துவின் நேயம்மிக்க வார்த்தைகள், அவர் சிலுவையில் தொங்கிக்கொண்டிருக்கும் நவீன ஓவியத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த விதம் என அங்கிருந்த ஒவ்வொரு ஓவியமும் நவீன டிஜிட்டல் வரைகலையின் வழியாகப் பக்தி உணர்வை தூண்டிப் புத்துணர்வு தரும் விதத்தில் வடிவமைக்கப்பட்டிருந்தன.

ஓவியக் கூடத்தின் உள்ளே செல்லச் செல்ல இன்னும் இன்னும் என்று சொல்லும்விதமாக பழைய, புதிய ஏற்பாட்டு விவிலிய காலத்துக்குள் சென்றுவிட்டோமோ என்று எண்ணும் விதமாக பிரம்மாண்ட ஓவியங்களும் காட்சிக்கும் விற்பனைக்கும் வைக்கப்பட்டிருந்தன. ‘மோசேயின் நாட்கள்’, ‘நல்ல சமாரியன்’, ‘காணாவூர்க் கல்யாணம்’ தொடங்கி, உயிரோட்டம் குறையாத பல ஓவியங்கள் அவற்றுக்குரிய விளக்கங்களுடன் வடிவமைக்கப்பட்டிருந்தன.

அவற்றில் இயேசு பாஸ்கா பண்டிகையைச் சீடர்களுடன் ‘இரவு போஜனம்’ என்ற ஓவியம் மட்டுமே இருபது விதமான வடிவமைப்பில் கவர்கிறது. இப்படியொரு ஓவியக் கூடம் தொடங்கவேண்டும் என ஜோசப் மோகன்ராஜுக்கு ஏன் தோன்றியது? “ சிறு வயது முதலே ஓவியங்கள் மீது ஈடுபாடு. பள்ளிப்படிப்பு முடிந்ததும் சென்னையில் உள்ள புனித டான் போஸ்கோ மையத்தில் அச்சுத் தொழில் படித்தேன். மிகப்பெரிய நிறுவனங்களுக்கு சுமார் 20 ஆண்டு காலம் வடிவமைப்பு, அச்சாக்காம் ஆகிய துறைகளில் பணிபுரிந்தேன். ஆனால் மன நிறைவு பெறவில்லை.

இன்றைய வேகமான வாழ்க்கையில் ஆன்மிகம் மறந்து ஓடிக்கொண்டிருக்கும் இளைய தலைமுறைக்கு விவிலிய வசனங்களை, அவற்றின் காட்சிகளை ஈர்க்கும்விதமான நவீன வடிவமைப்புகளில் எடுத்துச் செல்ல வேண்டும் என்று தோன்றியது. திருச்சபைகளில் குருமார்களும் சகோதரர்களும் போதிக்கையில் மனதில் பதிவது ஒருவகை என்றால், காட்சி வழியாக உருவாகும் தாக்கம் இன்னும் அதிக வலுவானதாக இருக்கும். அதை மனத்தில்கொண்டே இந்த ஓவியக் கூடத்தை தொடங்கினேன். தொடங்கும்போது இரண்டு விஷயங்களில் உறுதியான முடிவுடன் இறங்கினேன்.

எல்லா கிறிஸ்தவ மதப் பிரிவுகளைச் சேர்ந்தவர்களை ஈர்க்கும் விதமாக நவீனமும் பொதுத்தன்மையும் கொண்டதாக ஓவியங்கள் இருக்க வேண்டும். வாங்கக்கூடிய குறைந்த விலையில் தயாரித்துத் தரவேண்டும். இறைவனின் கருணையால் அனைத்து பிரிவு கிறிஸ்தவ மக்கள் மட்டுமல்ல; பொதுமக்களும் இந்த ஓவியங்களைக் காண வந்து, தங்களுக்குப் பிடித்தவற்றை வாங்கிச் செல்கிறார்கள். இப்போது என் வாழ்க்கைக்கு அர்த்தம் கிடைத்துவிட்டதாக உணர்கிறேன்.” எனும் ஜோசப் மோகன் ராஜ், தமிழ், ஆங்கிலத்தில் மட்டுமல்ல, மலையாளம், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் வடிவமைத்துக் கொடுக்கிறார். விவிலிய வசனங்கள், காட்சிகள் வழியாக இதயத்தையும் இல்லங்களையும் தூய்மையாக அலங்கரிக்கின்றன அவருடைய படைப்புகள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x