Published : 22 Jan 2020 12:40 PM
Last Updated : 22 Jan 2020 12:40 PM

கதை: குரங்கின் விஷமம்!

நத்தம் எஸ்.சுரேஷ்பாபு

செண்பக வனத்திலுள்ள ஒரு மரத்தில் சிட்டுக்குருவி கூடுகட்டி வசித்து வந்தது. அழகான நீரோடையும் இனிக்கும் பழங்களும் அது வசித்துவந்த மரத்தின் அருகிலேயே இருந்தன. அதனால் உணவுக்குப் பஞ்சமில்லாமல் இருந்தது. அந்தப் பகுதியில் ஏராளமான பறவைகள் வசித்ததால் குருவி மிகவும் பாதுகாப்பாகவும் உணர்ந்தது.

திடீரென்று குருவி வசித்த மரத்துக்கு ஒரு குரங்குக் கூட்டம் குடிவந்தது.

சிட்டுக் குருவிக்குப் பயமாக இருந்தது. ’இந்தக் குரங்குகள் சும்மா இருக்காதே. நம் நிம்மதி பறிபோய்விடுமே’ என்று சிட்டுக்குருவி நினைத்தது.

பயத்தில் ’கீச்கீச்’ என்று கத்தியபடியே தன்னுடைய கூட்டை விட்டு பறந்து, மற்ற பறவைகளுக்குக் குரங்குகள் வந்த செய்தியைச் சொன்னது.

தலைவர் குரங்கு சிட்டுக்குருவி கத்தியபடியே பறந்ததைப் பார்த்தது. “நண்பர்களே, நாம் புதிய இடத்துக்கு வந்துள்ளோம். இங்கு வசிப்பவர்கள் நம்மைக் கண்டு பயந்து கத்தியபடியே ஓடுகிறார்கள். இத்தனை நாள் இது அவர்களின் இருப்பிடமாக இருந்தது. அதை நாம் பறித்துக்கொண்டு அவர்களைத் துன்புறுத்தக் கூடாது. யாருக்கும் தொந்தரவு செய்யாமல் நாம் இங்கே தங்கியிருக்க வேண்டும்” என்றது.

எல்லாக் குரங்குகளும் தலையசைத்து ஒப்புக்கொண்டன. ஆனால், ஒரு குட்டிக் குரங்கு மட்டும் இதை ஏற்கவில்லை. ”இந்தக் காடு அவர்களுக்கு மட்டும் சொந்தமா என்ன? இங்கு என் இஷ்டம்போலத்தான் நடந்து கொள்வேன்” என்று மனதுக்குள் சொல்லிக்கொண்டது. அது மிகவும் விஷமம் பிடித்த குரங்கு. மற்ற குரங்குகள் சொல்வதைக் கேட்காது.

சிட்டுக்குருவி வசித்த கூட்டுக்கு விஷமக் குரங்கு சென்றது. குருவி வெளியில் சென்று இருந்ததால் உடனே கூட்டைப் பிரித்துப் போட்டது. பின்னர் அங்கிருந்து கிளம்பிச் சென்றது.

சிட்டுக்குருவி மாலையில் கூட்டுக்கு வந்தது. கலைந்து போயிருந்த கூட்டைப் பார்த்து அதிர்ச்சியடைந்தது. யார் இவ்வாறு செய்து இருப்பார்கள் என்று யோசித்தது. ஒன்றும் புரியவில்லை. மீண்டும் கூட்டைக் கட்டியது.

மறுநாள் சிட்டுக்குருவி இரை தேடிச் சென்றது. குரங்கு வந்து குருவியின் கூட்டைப் பிரித்துப் போட்டது. இப்படித் தினம் ஒரு கூட்டைச் சிட்டுக்குருவி கட்டுவதும் குரங்கு பிய்த்துப் போடுவதுமாக இருந்தது.

அன்று சிட்டுக்குருவி இரை தேடிச் செல்வதுபோல் கிளம்பியது. ஆனால், பக்கத்து மரத்தில் அமர்ந்து, கூட்டைக் கவனித்தது.

விஷமக் குரங்கு சந்தோஷமாகச் சிட்டுக்குருவியின் கூட்டுக்கு வந்தது. பாடிக்கொண்டே கூட்டைப் பிய்த்து எறிந்தது.

பதறிய சிட்டுக்குருவி, “ஏய் குரங்கே, என்ன செய்கிறாய்? என் கூட்டை ஏன் கலைக்கிறாய்?” என்று கேட்டது.

“வந்துவிட்டாயா? எனக்கு இது விளையாட்டு. இப்படிக் கூட்டைப் பிரித்துப் போட்டு விளையாடுவது என்றால் ரொம்பப் பிடிக்கும்” என்று சொன்னது குரங்கு.

“ஓ... கூட்டைக் கலைத்துப் போடும் உனக்கு அதை உருவாக்கத் தெரியுமா?”

“அது என் கவலை இல்லை. இது மாதிரி எத்தனை கூடுகள் இருந்தாலும் அதை நான் கலைப்பேன். என்னை உன்னால் ஒன்றும் செய்ய முடியாது” என்றது குரங்கு.

“இது என் கூடு. மரியாதையாகப் போய்விடு.”

“உன்னால் என்னை என்ன செய்துவிட முடியும்?”

சிட்டுக்குருவி யோசித்தது. இதைத் தந்திரத்தால்தான் வெல்ல முடியும் என்று நினைத்தது.

“குரங்கே, என்னுடைய கூட்டைக் கலைத்துவிட்டாய். என் தங்கை ஒருத்தி இருக்கிறாள். அவளிடம் ஆயிரம் வேலைக்காரர்கள் இருக்கிறார்கள். அவர்கள் கூட்டை உன்னால் பிரிக்க முடியுமா?” என்று ஏளனமாகக் கேட்டது சிட்டுக்குருவி.

குரங்குக்கு ஆத்திரமாக வந்தது. ”ஏய், உன் தங்கை என்ன பெரிய ஆளா? இப்போதே அந்தக் கூட்டைக்கூட கலைத்துப் போடுவேன். உன்னால் என்ன செய்ய முடியும்? எங்கே கூடு?” என்று கத்தியது.

“நீ ரொம்பத் தூரம் போக வேண்டாம். இரண்டு மரம் தள்ளிதான் இருக்கிறது அவள் கூடு. உன்னால் அந்த மரத்தில் ஏற முடியுமா?” என்று கேட்டது சிட்டுக்குருவி.

“ஏன் முடியாமல்? உன் கண் எதிரிலேயே பிய்த்துப் போடுகிறேன் பார்” என்று அந்தப் பெரிய மரத்தில் வேகமாக ஏறியது குரங்கு.

கூட்டை நெருங்கியது குரங்கு. அந்தக் கூட்டை ஆயிரம் தேனீக்கள் பாதுகாத்துக்கொண்டிருந்தன. எதிரி நெருங்குவதை அறிந்துகொண்டதும், அவை உஷாராகிவிட்டன.

குரங்கு கிளையைப் பிடித்தவுடன் தேனீக்கள் பறந்துவந்து கொட்ட ஆரம்பித்தன. அப்போதுதான் தான் கைவைத்தது ஒரு தேன் கூடு என்று குரங்குக்குப் புரிந்தது.

தேனீக்களின் தாக்குதலில் தப்பிக்க முடியாமல் அங்கிருந்து ஓடியது குரங்கு.

“குரங்கே, இது போதுமா? இல்லை இன்னொரு தம்பி வீட்டுக்குப் போகிறாயா?” என்று கேட்டது சிட்டுக்குருவி.

“ஐயோ, போதும் போதும். இனி விஷமமே செய்ய மாட்டேன். என்னை மன்னித்துவிடு” என்று அலறியபடியே ஓடியது குரங்கு.

சிட்டுக்குருவி மீண்டும் கூட்டைக் கட்ட ஆரம்பித்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x