Published : 21 Jan 2020 01:04 PM
Last Updated : 21 Jan 2020 01:04 PM

காதல் உறவு - 2020: டேட்டிங் போக்குகள்!

கடந்த 10 ஆண்டுகளில் ‘டேட்டிங்’ என்ற விஷயம் பலவிதமான மாற்றங்களை அடைந்துள்ளது. ‘ஆன்லைன்’ தளங்களிலிருந்து செயலிகள்வரை பல மாற்றங்களை ‘டேட்டிங்’ எதிர்கொண்டுள்ளது. ‘டிண்டர்’, ‘பம்பிள்’, கிரின்டர்’ போன்ற டேட்டிங் செயலிகள் தொடர்ந்து இளைஞர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கின்றன.

‘புத்தாயிர’ இளைஞர்கள் உறவுகளைக் கண்டுபிடிக்கத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது சமீப ஆண்டுகளில் அதிகரித்துள்ளது. அதேநேரத்தில், அவர்களில் ஒரு பகுதியினர் நேரடியான தனிப்பட்ட உறவுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். நேர்மை, முகத்துக்கு முகம் பார்த்து நேரடியாகப் பழகுதல், நேர்மறையான உறவு ஆகிய தலைப்புகள், இந்த ஆண்டின் டேட்டிங் போக்குகளாக இருக்கப்போகின்றன. இந்தப் புத்தாண்டில், டேட்டிங், காதல் உறவு, பிரிவு (பிரேக் அப்) ஆகியவற்றில் புதிய போக்குகள் உருவாக இருப்பதாகக் கணிக்கப்பட்டிருக்கின்றன. இந்தப் புத்தாண்டில் புதிய டேட்டிங் சொற்களைத் தெரிந்து வைத்துக்கொள்வது நல்லது.

காரணத்தை முன்னிட்டு அணுகுதல்

முன்னாள் காதலருடன் ஒரு காரணத்தை முன்னிட்டுப் பழகுவது (Cause-Playing) இந்த ஆண்டின் புதிய டேட்டிங் போக்காக இருக்கும் என்கிறார்கள். ஏதொவொரு விதத்தில், ஒரு பொதுவான நல்ல காரியத்துக்கோ தனக்கோ அல்லது நண்பர்களுக்கு உதவுவதற்காகவோ உறவு முறிந்தபிறகும் முன்னாள் காதலருடன் நட்புப் பாராட்டும் போக்கு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ‘பிளென்ட்டி ஆஃப் ஃபிஷ்’ (Plenty of Fish) என்ற சர்வதேச டேட்டிங் செயலி, இந்தப் புதிய போக்கால் தனித்து வாழும் நாற்பதுகளின் தொடக்கத்தில் இருப்பவர்கள் அதிகமாகப் பாதிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளது.

தொலைபேசி சிக்னல்

அலைபேசி எண்ணை உங்களுக்குக் கொடுத்த பிறகும், எந்தவொரு காரணத்துக்காகவும் பதிலளிக்காதவர்களைக் குறிப்பதற்கு இந்தத் ‘தொலைபேசி சிக்னல்’ (Dial-toning) பதம் பயன்படுத்தப் படுகிறது. தொண்ணூறுகளில் உருவான ‘தொலைபேசி சிக்னல்’ பதத்தால் இந்தப் போக்குக்குப் பெயரிடப்பட்டுள்ளது.

‘ஃப்ளீபேக்கிங்’

புகழ்பெற்ற பிரித்தானிய நகைச்சுவைத் தொடரான ‘ஃப்ளீபேக்’கின் முக்கியக் கதாபாத்திரத்தின் பெயரிலிருந்து ‘ஃப்ளீபேக்கிங்’ (Fleabagging) என்ற இந்தப் பதம் உருவாக்கப்பட்டுள்ளது. நமக்கேற்ற சரியான நபர் கிடையாது எனத் தெரிந்தே அவருடன் பழகுவதை இந்தப் பதம் விளக்குகிறது. இந்தப் போக்கால் ஆண்களைவிட பெண்கள் அதிகமாகப் பாதிக்கப்படுகிறார்கள். ‘பிளன்ட்டி ஆஃப் ஃபிஷ்’ செயலியின் கருத்துக்கணிப்பின்படி, பெண்களில் 63 சதவீதத்தினர் இந்தப் போக்கால் பாதிக்கப்பட்டதாகச் சொல்லியிருக்கிறார்கள்.

மீண்டும் மீண்டும்

ஜோதிடம், காதல் மொழித் தேர்வுகளின் அடிப்படையில் காதலரைத் தேர்ந்தெடுப்பதை ‘டைப்-கேஸ்டிங்’ (Type-Casting) என்ற பதத்தால் குறிப்படுகிறார்கள். ராசி, காதல் தேர்வுகளின் அடிப்படையில் காதலரைத் தேர்ந்தெடுப்பது இப்போதைய புதிய போக்காக இருக்கிறது.

ஏமாற்றம்

‘பேம்பூஸ்ல்ட்’ (Bamboozled)என்றால் ஏமாறுதல் என்று அர்த்தம். இந்தப் பதத்திலிருந்து ‘கிளாம்பூஸ்ல்ட்’ (Glamboozled) என்ற பதம் உருவாக்கப்பட்டுள்ளது. ‘டேட்டிங்’ செல்வதற்காகப் பல மணிநேரம் தயாராகி, கடைசி நிமிடத்தில் அது நடக்காமல் போவதை ‘கிளாம்பூஸ்ல்ட்’ என்ற பதத்தால் குறிப்பிடுகிறார்கள். பாதிக்கும் மேற்பட்ட தனித்து வாழும் இளைஞர்கள் இந்தப் போக்கால் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார்கள்.

மஞ்சள் சிக்னல்

உறவுகளில் நேர்மையைக் கடைப்பிடிப்பதில் ‘புத்தாயிர இளைஞர்கள்’ வெளிப்படையாகப் பேசத் தொடங்கியிருக்கிறார்கள். ‘டேட்டிங்’கில் சிக்கலை எதிர் கொள்ளும்போது அதை வெளிப்படுத்த அவர்கள் தயங்குவதில்லை. இந்தப் போக்கு இந்த ஆண்டு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் புத்தாண்டில் புதிய உறவுப் போக்குகள் உருவாகியிருந்தாலும், கடந்த ஆண்டின் சில போக்குகளும் தொடரும் என்று தெரிகிறது. நேர்மை, அதிகரிக்கும் வெளிப்படைத்தன்மை, உரையாடல் என நேர்மறைப் போக்குகள் இந்த ஆண்டு அறிமுகமாயிருந்தாலும் பழைய ஆரோக்கியமற்ற உறவுப் போக்குகளும் தொடரவே செய்கின்றன. ஆரோக்கியமான, மகிழ்ச்சியான காதல் உறவுகளின் வளர்ச்சிக்கு 2020 உதவியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- கனி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x