Published : 21 Jan 2020 12:48 pm

Updated : 21 Jan 2020 12:48 pm

 

Published : 21 Jan 2020 12:48 PM
Last Updated : 21 Jan 2020 12:48 PM

விசில் போடு15: செல்போன் அலப்பறைகள்!

whistle-podu

ஆறடி கூந்தல் உள்ள பெண்ணோட தலையில இருக்கிற பேன் தொல்லையோட பெரிய தொல்லைன்னா, அது ஆறு இன்ச் சைஸ்ல இருக்கிற செல்போன் தொல்லைதான். எதிர்பார்க்கிறது எருமைல வரத்துக்குள்ள, எதிர்பார்க்காதது ஏரோப்ளேன் ஏறி வர மாதிரி, எதுக்காக கண்டுபிடிக்கப்பட்டதோ அதுல வண்டியோட்டாம, அதைத் தவிர எல்லாத்துலயும் நொண்டியடிச்சுக்கிட்டு இருக்கு மொபைல் போன். நாட்டுல குடிக்கிற நீர் வத்திப்போச்சுன்னு கிணறு தோண்டறப்பகூட செல்போனை நோண்டாம இருக்க முடியாத நிலைமைதான்.

ஆத்தோரம் நின்னா வெள்ளத்துல தள்ளி விடுறவங்க மத்தியில, காட்டோரம் நின்னா பள்ளத்துல தள்ளி விடுறவங்க மத்தியில, வீட்டோரம் வரச்சொல்லி விருந்து வைக்கிற தமிழ் மக்கள், செல்போனுல பல வகையான பண்பாட்டை உருவாக்கி இருக்காங்க. ‘பிக் பேங்’ தியரியைக்கூடப் புரிஞ்சுக்கலாம். ஆனா, இதுவரை மொபைலில் அழைப்பு வந்தால், பசங்க வெளியே போய் ஏன் பேசறாங்க, பொண்ணுங்க ரூம்குள்ள போய் ஏன் பேசறாங்கன்னு இதுவரைக்கும் புரியல. வீட்டுக்கு நாலு பக்கம் சுவரு இருக்கோ இல்லையோ, வீதிக்கு நாலு டவரு இருக்கு, அப்படி இருந்தும் நம்மாளுங்க இப்படித்தான் இருக்காங்க.

இதுல சின்ன வயசுல, டிடிஎஸ் சிஸ்டத்த முழுங்குன மாதிரி, ரயில்வே ஸ்டேஷன், ரேடியோ ஸ்டேஷன், ஏன் போலீஸ் ஸ்டேஷன்னா இருந்தாலும் சரி, சில பேரு செல்போன்ல அந்தக் கத்து கத்துவாங்க. ‘யப்பா யானை வாயா, வீராணம் குழாய வாயில வச்சுதான் நீயெல்லாம் ஃப்ரெஷ் ஜூஸ் குடிப்பியா? செல்போனை ஆப் பண்ணிட்டு நீங்க பேசினாக்கூட எதிர்முனையில இருக்கிறவனுக்குக் கேட்கும்டா, ஏன்யா கிட்ட இருக்கிறவன் காதுக்குள்ள வந்து கரண்ட் ஒயரை விடுறீங்க.’

ரயில் ஹாரன்

என்னைக்காவது பொண்ணுங்க போன் பேசறது எவனுக்காவது கேட்டு இருக்கா? சத்தமே இல்லாம பூமியிலேர்ந்து புற்கள் மொளைக்கிற மாதிரி, பொண்ணுங்க வாயில இருந்து வர சொற்கள் அந்த செல்லுக்கே கேட்காது. டாக்கிங்தான் சாஃப்டா இருக்கும், அதுவே பொண்ணுங்க டைப்பிங் டெரரா இருக்கும். ஒலி, ஒளியைவிட வேகமானது பொண்ணுங்க மெசேஜ் டைப் பண்ற வேகம். மெசேஜ் டைப்புவது மட்டும் ஒலிம்பிக்கில் இருந்தால், இந்தியப் பெண்கள் நாலஞ்சு தங்கப் பதக்கம் வாங்குவது நிச்சயம்.

ரயில் ஹாரன், பஸ் ஹாரன், ஏரோப்ளேன் சத்தம், இவை எல்லாத்தையும்விட டார்ச்சரான சவுண்ட் தருவது எது தெரியுமா மக்களே, அது கொரியன் மேக் செல்போனின் ரிங்டோன்தான். 'நான்தாண்டா இனிமேலு, வந்து நின்னா தர்பாரு, உன்னோட கேங்கு, நான்தாண்டா லீடு'ன்னு அது ரிங் அடிக்கிறப்பவே, பக்கத்துல நிற்காத தூரமா ஓடுன்னு நமக்கு சங்கு அடிச்சிடும். இதுல வைப்ரேஷன் மோடுல போன் அதிரும்போது, போன் அதிருதா, இல்ல 8.4 ரிக்டர் அளவுல பூமி அதிருதான்னு கண்டுபிடிக்க நமக்கு ஐந்து நிமிஷம் ஆயிடும். ஆடி மாசம் அம்மனுக்குக் கூழ் ஊத்தறப்ப, தெருவுல மைக்செட்டு கட்டுறதுக்குப் பதிலா, மின்சாரக் கம்பத்துல இவங்க மொபைல் போனுங்களைத் தொங்க விட்டுடலாம்.

பாட்சா காலர் டியூன்

ரிங்டோனோட மோசம், காலர் டோன். காலர் டோனா இளையராஜா, ரஹ்மான் பாட்ட வச்சாகூட பரவாயில்லை, கோவத்துல கூப்பிடுறவன்கூட சாந்தமாவான், கவலைல கூப்பிடுறவன்கூட பாந்தமாவான். ஒருத்தன் காலர்டோனா 'ஹா ஹ ஹா, போடா ஆண்டவனே நம்ம பக்கம் இருக்கான்'னு ‘பாட்சா’ பட டயலாக்கை வச்சிருக்கான். ‘ஏன்பா, உன்கூட ஆண்டவன் இருந்தா, எங்ககூட என்ன அமிதாப்பச்சனா இருக்காரு?’

வள்ளுவர் இன்னைக்கு இருந்திருந்தால் 'மிஸ்டு கால் கொடுத்து வாழ்வாரே வாழ்வார், மற்றவரெல்லாம் கால் பண்ணி காசு அழித்தே சாவார்'ன்னு குறள் எழுதியிருப்பார். 5 ரூபாயிலேர்ந்து ஐயாயிரம் ரூபா வரைக்கும் ரீசார்ஜ் ஆப்ஷன்கள் இருந்தும், பயபுள்ளைங்க செல் வாங்கி மொதல்ல கத்துக்கிறதே மிஸ்டு கால் கொடுக்கத்தான். வெங்காயமே கிலோ நூறு ரூபாய்க்கு விக்கிற நாட்டுல இன்னமுமாய்யா மிஸ்டு கால்னு பழைய பேப்பர்ல படகு விட்டுக்கிட்டு இருப்பீங்க?

பேட்டர்ன் லாக்

ஒரு நோட்டிஸ 500 பிரதி எடுத்து, 1000 பேருக்குக் கொடுத்தா அங்காளபரமேஸ்வரி அருள்பாலிப்பான்னு சொல்லிக்கிட்டு திரிஞ்ச அதே கும்தலக்கா கொய்யாப்பழ குரூப்புதான், இன்னைக்கு தொழில்நுட்பப் புரட்சியால் ஒரு ஐதலக்கா மெசேஜை அம்பது பேருக்கு அனுப்பினால் ஆஞ்சநேயர் அருள் தருவாருன்னு கிளப்பிவிட்டு திரியுறாங்க.

கோடி ரூவா கடன் கேட்டாலும் கொடுப்பாங்க, ஆனா, செல்போன பாத்துட்டுத் தரேன்னு சொன்னா போதும், 2 நிமிஷம் நோண்டிட்டு, எதையாவது அழிச்சுட்டு அப்புறம்தான் தருவாங்க. இதுல இன்னொரு கும்பல் ஒண்ணு நம்மளை ரொம்ப டிஸ்டர்ப் பண்ணுது. ஹோட்டல்ல சாப்பிடுறப்ப, தன்னோட இலைல தங்கமே இருந்தாலும், அடுத்தவங்க இலையில இருக்கிற ஈயத்தைப் பார்க்கிற குரூப்தான் அது. பார்க்கிறதுக்கு எட்டுத் திசை இருந்தாலும், நம்ம செல்போன் ஸ்க்ரீனைத்தான் பார்ப்பாங்க. சில பேரு மொபைலை பாஸ்வேர்ட், பேட்டர்ன் லாக்னு போட்டு வச்சிருப்பாங்க. அசம்பாவிதமா ஆக்சிடென்ட் ஆயிட்டா அவசரத்துக்குக் கூப்பிட காப்பாத்த வந்தவன் என்னய்யா செய்வான்? சின்ன புள்ளைங்க சுவத்துல கிறுக்கிற மாதிரி இவங்க போடுற பேட்டர்ன் லாக்கெல்லாம் பத்தாயிரம் தடவை பார்த்தாலும் புரியாது.

வுமன், எமன்

இந்தியாவில் பொய்களின் எண்ணிக்கையை அதிகரித்தது செல்தான். ‘எங்க வரேன்னு யாரையாவது கேளுங்க, முப்பது தடவை கேட்டாலும், "டர்னிங்ல இருக்கேன் மாப்ள', சிக்னல்ல இருக்கேன் மச்சான்'ன்னே சொல்லுவான். இந்த கம்ப்யூட்டர் ரெக்கார்டட் வாய்ஸ நிஜமுன்னு நம்புறவங்க எல்லாம் இன்னமும் உண்டு, "நீங்கள் தொடர்புகொண்ட வாடிக்கையாளர் அழைப்பை எடுக்கவில்லை'ன்னா, இவனுங்க 'சின்ன சண்டைதான், பரவாயில்லை பேசித் தீர்த்துக்கிறோம், கோவிச்சுக்காம எடுக்க சொல்லுங்க'ம்பானுங்க!

ரோட்டுல நாலு பேர பாத்தா, அதுல மூணு பேரு பெவிகால் போட்டு ஒட்டுன மாதிரி தலையைத் தோள்பட்டை மேல சாய்ச்சு வச்சிட்டுப் போறாங்க. என்னடா இது, புது வகையான எலும்புருக்கி நோயான்னு பார்த்தா, வண்டி ஓட்டிக்கிட்டே செல்போன்ல பேசிக்கிட்டு போறாங்க. ‘அடேய்களா, வண்டி ஓட்டுறப்ப ரொம்ப பிடிச்ச ‘வும’னே கூப்பிட்டாலும் எடுக்காதீங்க, அவங்களே உனக்கு எமனாகிடுவாங்க.’

கழுத தேயலாம், சிறுத்தை?

சாப்பிடறப்போ, தூங்கறப்போ, ஏன் பாத்ரூம் போறப்பகூட செல்லோடையே அலையுறாங்க. இவங்க பொண்டாட்டி புள்ளைங்களோட இருந்ததைவிட செல்போனோட இருந்ததுதான் அதிகம். முன்னாடி எல்லாம் மலேரியானால பாதிக்கப்படுவோம். இப்ப நாட்டுல பல பேரு, அழைப்பு வராட்டியும் அடிக்கடி எடுத்து பார்க்கும் செலேரியா என்னும் நோயினால் பாதிக்கப்பட்டு இருக்காங்க.

வரும் ஆண்டுகளில் கிட்னி, லிவர், நுரையீரல் போல செல்போனும் மனிதர்களின் உடல் உறுப்புகளில் ஒன்றாக மாறிவிடும் என ஒரு கடுப்புக்கணிப்பு சொல்கிறது. செல்போன் என்பது வேகமாகத் தகவல் பரிமாறவும், தூரங்களைக் கடந்து விரைந்து பேசுவதற்காகவும் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு கருவி. இன்னைக்கு அதை வச்சு பேசுவதைத் தவிர எல்லாத்தையும் பண்ணிக்கிட்டு இருக்கோம். ஒருவர் கையில் செல்போன் இருக்கும் வரைக்கும் யாரும் அநாதை இல்லைதான். ஆனா, அதுவே செல்போனை மட்டுமே நோண்டிக்கிட்டு இருந்தா, ஆட்கள் இருந்தும் ஆதரவற்றோர் ஆகிடுவோம்.

கழுத தேய்ஞ்சு கட்டெறும்பாகலாம், ஆனா சிறுத்தை தேய்ஞ்சு சித்தெறும்பா ஆகக் கூடாது. நமக்குதான் டெக்னாலஜி அடிமையா இருக்கணுமே தவிர, நாம டெக்னாலஜிக்கு அடிமையா இருக்கக் கூடாது. மொபைல் ஆப்களில் வாழ்வதை விட்டா மட்டும்தான், வாழ்க்கைல ஹேப்பியா வாழ முடியும்.

‘தோட்டா’ ஜெகன்
(சத்தம் கேட்கும்)
கட்டுரையாளர் தொடர்புக்கு: thinkthoatta@gmail.com


செல்போன் அலப்பறைகள்விசில் போடுWhistle Poduரயில் ஹாரன்பாட்சா காலர்பேட்டர்ன் லாக்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like


More From This Category

surf-the-web

இணைய உலா: தனி இருவர்!

இணைப்பிதழ்கள்

More From this Author