Published : 21 Jan 2020 12:12 PM
Last Updated : 21 Jan 2020 12:12 PM

அறிவியல், தொழில்நுட்பம்: 2020-ல் எப்படி இருக்கும்?

செவ்வாய்க்குப் படையெடுப்பு

செவ்வாய்க் கோள் ஆய்வில் 2020 முக்கியத்துவம் வாய்ந்த ஆண்டாக இருக்கப்போகிறது. செவ்வாயின் பாறை மாதிரிகளை எடுத்து அனுப்பும் நாசாவின் ‘மார்ஸ் 2020 ரோவர்’; செவ்வாய்க் கோளுக்குச் சீனாவின் முதல் விண்கலமான ஹுவோஸிங்-1 தரையிறங்கி (lander); தரையிறங்குவதில் ஏதும் சிக்கல்கள் எழுந்தால் பாராசூட் உதவியுடன் தரையிறங்க வழியுள்ள, ரஷ்யாவின் உதவியோடு ஐரோப்பிய விண்வெளி முகமை ஏவ இருக்கும் உலாவி (Rover); அரபு நாடுகளில் இருந்து முதன்முறையாக ஐக்கிய அரபு அமீரகம் செவ்வாய்க்கு அனுப்பவிருக்கும் சுற்றுக்கலன் (Orbiter) உள்ளிட்ட செவ்வாயின் தரையில் இறங்கி ஆய்வு மேற்கொள்ள இருக்கும் மூன்று தரையிறங்கிகளுடன் பல்வேறு விண்கலன்கள் இந்த ஆண்டு ஏவப்பட இருக்கின்றன.

பால்வெளியின் கருந்துளை படம்?

கருந்துளையின் ஒளிப்படம் கடந்த ஆண்டு முதன்முதலாக வெளியிடப்பட்டது, வானியல் ஆய்வின் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. மெஸ்ஸியர் 87 என்ற விண்மீன் பேரடை (galaxy) மையத்தில் உள்ள கருந்துளையின் அந்த ஒளிப்படம் நிகழ்வெல்லைத் தொலைநோக்கிக் குழுவினரால் எடுக்கப்பட்டது.

இதே குழு பால்வெளி மண்டலத்தின் மையத்தில் இருக்கும் கருந்துளை குறித்த புதிய ஆராய்ச்சி முடிவுகளை இந்த ஆண்டு வெளியிடும் என்ற எதிர்பார்ப்பு அறிவியல் உலகில் நிலவுகிறது. மேலும், பால்வெளி மண்டலத்தின் அமைப்பு - பரிணாமம் ஆகியவற்றை அறிவியலாளர்கள் புரிந்துகொள்ள உதவிய நிகழ்வெல்லைத் தொலைநோக்கி எடுத்த முப்பரிமாண வரைபடத்தின் மேம்படுத்தப்பட்ட வடிவமும் இந்த ஆண்டின் பிற்பகுதியில் வெளியிடப்பட உள்ளது.

நான்கு நாள் பணி வாரம்

குறைந்த நேரம் பணியாற்றுவது, வேலையை அதிகமாக முடிப்பதற்கு வழிவகுக்கும் என்ற கருதுகோள் பல்வேறு ஆய்வு முடிவுகள் மூலம் உண்மை என்பது நிரூபணமாகியுள்ளது. குறைந்த நேரம் பணியாற்றும்போது, நேரத்தை வீணடிப்பது; பணிக்கு விடுப்பு எடுப்பது குறைந்து செயல்திறன் அதிகமாகி உற்பத்தியும் பெருகுவது போன்றவை அதிகரிப்பதாக அந்த ஆய்வு முடிவுகள் மூலம் தெரியவந்துள்ளன.

பணியாளர்கள் நிறுவனத்தில் நீண்ட நாள் தொடர்வது, அனைத்து வகையிலும் உலகளாவிய கரியமில வாயு வெளியேற்றம் குறிப்பிட்ட அளவுக்குக் குறையும் சாத்தியம் போன்ற பல்வேறு காரணங்களை முன்னிறுத்தி இந்த நான்கு-நாள் பணி வாரம் முறையைச் சோதித்துப் பார்க்கும் பரிசீலனையில் பல நிறுவங்களும் நாடுகளும் ஈடுபட்டுள்ளன.

காக்கப்படுமா காலநிலை?

காலநிலை நெருக்கடியை எதிர்கொள்ள, புவிபொறியியல் சார்ந்த அறிவியல் - தொழில்நுட்ப அம்சங்களை உள்ளடக்கிய ஆய்வு அறிக்கை ஒன்றை ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்டம் ஆகஸ்ட் மாதம் வெளியிட இருக்கிறது. வளிமண்டலத்தில் உள்ள கரியமில வாயுவைப் பிரித்தல், இதன் முக்கியச் செயல்பாடாகக் கருதப்படுகிறது.

பிரிட்டனின் கிளாஸ்கோவில் நவம்பர் மாதம் நடைபெறவிருக்கும் காப் 26 காலநிலை மாநாட்டில், பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்தை உலக நாடுகள் எந்த அளவுக்குச் செயல்படுத்தியுள்ளன என்பது குறித்த சீராய்வு நடைபெற இருக்கிறது. உலக சராசரி வெப்பநிலை அதிகரிப்பை 2 டிகிரி செல்சியஸ் அளவுக்குள் வைத்திருக்க, கரியமில வாயு வெளியேற்ற அளவைக் கட்டுப்படுத்தும் மேம்படுத்தப்பட்ட இலக்குகளை நாடுகள் எட்ட வேண்டும் என்பது அந்த ஒப்பந்தத்தின் அடிப்படை அம்சம்.

ஆனால், எந்த நாடும் அதைத் தீவிரமாக எடுத்துக்கொள்ளாத நிலையில் பாரிஸ் ஒப்பந்தத்தின் எதிர்காலம் அந்தரத்தில் தொங்குகிறது; அமெரிக்கா இந்த ஒப்பந்தத்தில் இருந்து 2020 நவம்பர் மாதம் அதிகாரபூர்வமாக வெளியேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடலின் அடிமட்டத்தில் சுரங்க வேலைகளை அனுமதிக்கும் வரைமுறைகளைச் சர்வதேசக் கடல்படுகை ஆணையம் இந்த ஆண்டு வெளியிட உள்ளது. ஏற்கெனவே அழுத்தத்துக்கு உள்ளாகி, சீரழிந்துகொண்டிருக்கும் சுற்றுச்சூழலை இந்தச் சுரங்க வேலை மேலும் சீர்குலைத்து கடல் சூழலியலை அழிவுக்குத் தள்ளலாம்.

5ஜி அசுரவேகம்!

5ஜி கைபேசி இணைய வலைப்பின்னல் கடந்த ஆண்டு குறிப்பிட்ட சில பெருநகரங்களில் மட்டும் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்பாட்டில் இருக்கிறது. நிலையான இணைப்புகளோடு அதிவேகப் பதிவேற்றம், பதிவிறக்கம் ஆகியவற்றுக்கு வழிவகுக்கும் 5ஜி இணைய சேவை இந்த ஆண்டில் பரவலாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பயணத்திலும்கூட அதி உயர்ந்த தரத்தில் பாடல்களையும் காணொலிகளையும் கேட்க, பார்க்க அதிவேக 5ஜி இணைய சேவை வழிசெய்கிறது; வீடு, அலுவலகம் ஆகிய இடங்களில் நிறுவப்பட்டுள்ள இணைப்பு வலைப்பின்னல்களைவிடவும் இந்த 5ஜி செல்பேசி இணைய சேவை அதிவேகமானது. மேம்படுத்தப்பட்ட இந்த அலைவரிசை இயந்திரம், எந்திரன், தானியங்கி வாகனம் ஆகியவற்றில் முன்பைவிடவும் அதிகத் தரவுகளைச் சேகரித்து, பொருட்களின் இணையம் (Internet of Things - IoT) எனப்படும் அமைப்பில் மேலும் துல்லியத்துடன் செயலாற்ற வழிவகுக்கிறது.

புவி நாள்: 50-ம் ஆண்டு

நச்சுக் கழிவுகளில் இருந்து உயிரினப் பேரழிவுவரை புவியின் சூழலியலை அச்சுறுத்தும் அனைத்துக்கும் எதிராக 1970-ம் ஆண்டு ஏப்ரல் 22 அன்று அமெரிக்க வீதிகளில் சுமார் 2 கோடிப் பேர் திரண்டு போராடினார்கள். அடுத்தடுத்த ஆண்டுகளில் இந்தப் போராட்டம் உலகம் முழுக்கப் பரவியதன் விளைவாக சுற்றுச்சூழல் இயக்கம் பிறந்தது. புவி நாள் போராட்டங்களை ஒருங்கிணைக்கும் புவி நாள் வலைப்பின்னல் அமைப்பு 50-ம் ஆண்டையொட்டி சிட்டிசன்-சயின்ஸ் செயலி, புவியால் ஊக்கம் பெற்ற ஓவியம், நாடகம், நடனம், திரைப்படம் உள்ளிட்ட பல்வேறு தொடர் நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு: http://bit.ly/EDFifty

ஹிரோஷிமா - நாகசாகி: 75-ம் ஆண்டு

20-ம் நூற்றாண்டின் மிக மோசமான நிகழ்வுகளில் ஒன்றான இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் மீது அமெரிக்க முதலும் கடைசியுமாக அணுகுண்டு வீசியதன் 75-ம் ஆண்டு இது. ஒரு வகையில் நவீன உலக வரலாற்றை 1945-க்கு முன் - பின் என்று இரண்டாகப் பகுக்கக்கூடிய வகையில் இந்த அணுகுண்டு வீச்சு பார்க்கப்படுகிறது. மனிதர்களின் ஆதிக்கம் புவியின் சுற்றுச்சூழலைச் சீர்குலைக்கத் தொடங்கி இருக்கும் இந்தக் காலகட்டத்துக்கு ‘ஆந்த்ரோபொசீன் யுகம்’ என்ற பெயரிடுவது குறித்துப் புவியியலாளர்கள் பரிசீலித்துவருகின்றனர். இந்த யுகத்தின் தொடக்கமாக முன்மொழியப்பட்டுள்ள மூன்று நிகழ்வுகளில் இந்த அணுகுண்டு வீச்சும் ஒன்று. 2020 ஒலிம்பிக் போட்டிகள் டோக்கியோவில் நடைபெற இருக்கும் நிலையில், ஒலிம்பிக் தீபம் ஹிரோஷிமா அமைதி நினைவிடத்தில் இருந்து தொடங்குகிறது.

அறிவியல் இதழ்கள் இரண்டு

நாட்டிலஸ்

‘அறிவியல், பண்பாடு, தத்துவம்’ ஆகிய மூன்று துறைகள் இணைந்த கட்டுரைகளை வெளியிட்டுவருகிறது அச்சு - இணைய இதழ் ‘நாட்டிலஸ்’ (Nautilus - Science Connected). ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட ஒரு தலைப்பு சார்ந்த கட்டுரைகளை வியாழக்கிழமைதோறும் அதன் இணையதளத்தில் வெளியிடும் நாட்டிலஸில் உலகின் முன்னணி அறிவியலாளர்கள், சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள் ஆகியோர் தொடர்ந்து பங்களித்துவருகின்றனர். காலம், வளிமண்டலம், மொழி, எல்லைகள், தேடல்கள் உள்ளிட்ட தலைப்புகளில் இதுவரை இதழ்கள் வெளியாகியுள்ளன. இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை என ஆண்டுக்கு 6 அச்சு இதழ்களையும் நாட்டிலஸ் வெளியிடுகிறது.

குவாண்டா மேகஸின்

இயற்பியல், கணிதவியல், உயிரியல், கணினி அறிவியல் சார்ந்த கட்டுரைகளை வெளியிட்டுவரும் இணைய அறிவியல் இதழ் குவாண்டா மேகஸின் (Quanta Magazine – Illuminating Science). அறிவியல் குறித்த பொதுமக்களின் புரிதலை மேம்படுத்தும் நோக்கில் சைமன்ஸ் ஃபவுண்டேஷன் அமைப்பால் அக்டோபர் 2012-ல் இது தொடங்கப்பட்டது. இதில் வெளியாகும் கட்டுரைகள் சயின்டிஃபிக் அமெரிக்கன், வயர்டு, தி அட்லாண்டிக், தி வாஷிங்டன் போஸ்ட் உள்ளிட்ட சர்வதேச இதழ்களில் மறுபதிப்பு செய்யப்படுகின்றன. மேலும் ஜெர்மன், ஸ்பானிஷ், பிரெஞ்சு, சீனம், இத்தாலியன், ஜப்பானீஸ், போலிஷ் ஆகிய மொழிகளிலும் குவாண்டா-வில் வெளியாகும் கட்டுரைகள் மொழிபெயர்க்கப்பட்டு வெளியாகின்றன.

சு. அருண் பிரசாத்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x