

அமெரிக்காவைச் சேர்ந்த ரிச்சர்ட் என்ற இளைஞர் நிர்வகித்துவரும் யூடியூப் அலைவரிசை, ‘இம்ப்ரூவ்மென்ட் பில்’ (Improvement Pill). 2015-லிருந்து இயங்கிவரும் இந்த அலைவரிசை, தனிநபர் மேம்பாடு குறித்து சுவாரசியமான அனிமேஷன் காணொலிகள் மூலம் விளக்குகிறது. ‘பயத்தை வெல்வது எப்படி?’, ‘50 வாழ்க்கைப் பாடங்கள்,’ ‘மூளையை எப்படிப் பயன்படுத்துவது?’, ‘பழக்கங்களை மாற்றுவது எப்படி?’, ‘நம்மை நாமே நேசிப்பது எப்படி?’, ‘புத்தகங்களை எப்படி வாசிக்கலாம்?’ எனப் பல்வேறு தலைப்புகளில் ஆர்வத்தைத் தூண்டும் வகையிலான காணொலிகள் இடம்பெற்றுள்ளன. மனத்தை மேம்படுத்துவதற்கான ‘மல்டிவைட்டமி’னாக இந்த அலைவரிசையைத் தொடங்கியதாக ரிச்சர்ட் சொல்கிறார்.
அலைவரிசையைப் பார்க்க: http://bit.ly/ImprovePill
நுட்பத் தீர்வு: வலைப்பூக்களை இணைக்கலாம்
கூகுள் ப்ளாக்கரில் இரண்டு தனித்தனி வலைப்பூக்களைப் பராமரித்துவரும் நீங்கள் அவற்றை ஒன்றாக இணைக்க விரும்பினால் கூகுளில் அதற்கு வழி இருக்கிறது. முதலில் உங்கள் கணக்கில் சென்று முதல் வலைப்பூவின் செட்டிங் பகுதிக்குச் சென்று Other என்பதைச் சொடுக்குங்கள். பின்னர், Back up Content என்பதைச் சொடுக்கினால் அந்த வலைப்பூவில் உள்ள அனைத்துக் கட்டுரைகளையும் html கோப்பாகப் பதிவிறக்கிவைத்துக்கொள்ளலாம். பின்னர், இரண்டாம் வலைப்பூவின் செட்டிங் பகுதிக்குச் சென்று Other என்பதைச் சொடுக்குங்கள். இப்போது, import content என்பதைச் சொடுக்கி ஏற்கெனவே பதிவிறக்கி வைத்துள்ள html கோப்பைத் தேர்ந்தெடுத்துப் பதிவேற்றுங்கள். இப்போது முதல் வலைப்பூவின் அனைத்துக் கட்டுரைகளூம் இரண்டாம் வலைப் பூவில் பதிவேற்றப் பட்டிருப்பதைக் காணலாம்.
- ரிஷி
செயலி புதிது: NewsOnAir PrasarBharati
இது இந்தியாவின் பொது ஒலிபரப்பு நிறுவனமான பிரசார் பாரதியின் அதிகாரபூர்வ செயலி. பிரசார் பாரதியின்கீழ் இயங்கும் அனைத்திந்திய வானொலி உள்ளிட்ட 230 வானொலி அலைவரிசைகள் (உலக சேவைகள் 25 உட்பட); தூர்தர்ஷன் தொலைக்காட்சிச் செய்தி அலைவரிசைகளின் நேரலைச் செய்திகள்; தூர்தர்ஷன் அலைவரிசைகளின் நெடுந்தொடர்கள், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் உள்ளிட்ட அனைத்தையும் பார்க்கவும் கேட்கவும் முடியும். இந்தியாவின் முக்கிய மாநில மொழிகள் அனைத்திலும் உள்ள
இந்த அலைவரிசைகளை எளிதாகத் தேட ஜியோ மேப்பிங் வசதியும் உண்டு.
- நந்து