Published : 20 Jan 2020 02:36 PM
Last Updated : 20 Jan 2020 02:36 PM

இந்தியப் பொருளாதாரம் மோசமான நிலையில் இல்லை என்றாலும் மந்தமான நிலையில் உள்ளதை மறுக்க முடியாது

ஆடிட்டர் ஜி கார்த்திகேயன் 

karthikeyan.auditor@gmail.com

இந்தியப் பொருளாதாரம் மோசமான நிலையில் இல்லை என்றாலும் மந்தமான நிலையில் உள்ளதை மறுக்க முடியாது. இதற்கான அறிகுறிகளைத் தொடர்ச்சியாகப் பார்த்துவருகிறோம். இந்தியப் பொருளாதார வளர்ச்சி 4.5% (இரண்டாம் காலாண்டில்), 45 ஆண்டுகளில் இல்லாத அளவு வேலையின்மை, 16 ஆண்டுகளில் இல்லாத அளவு குறைந்த அளவு தனியார் முதலீடு போன்ற சவால்கள். மாதம் ரூ.1 லட்சம் கோடிக்கும் குறைவாக வசூலாகும் ஜிஎஸ்டி என அடுக்கிக்கொண்டே போகலாம்.

இத்தகைய பல நெருக்கடியான சவால்கள் நிறைந்த சூழ்நிலையில் இன்னும் சில நாட்களில் தாக்கல் செய்யப்படவிருக்கும் மத்திய பட்ஜெட் எப்படி இருக்கப் போகிறது என்று பரபரப்புடன் எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக தொழில் நிறுவனங்கள், தொழிலில் நம்பிக்கை ஏற்படும் விதமான மாற்றங்களை அரசு செயல்படுத்த வேண்டும் என்று விரும்புகின்றன. மேலும் இந்த பட்ஜெட் 12 மாதங்களில் தாக்கல் செய்யப்படவிருக்கும் மூன்றாவது பட்ஜெட் என்பதும் கூடுதல் சிறப்பு வாய்ந்தது.

கம்பெனி வரியும் தனிநபர் வரி குறைப்பும்

சமீபத்தில் நிதி அமைச்சர் வருமான வரி விகிதங்களை அதிரடியாக 30%-ல் இருந்து 22%-ஆக குறைத்தது, பங்கு விலைகள் உடனடியாக உயரக் காரணமாக இருந்ததுடன் மந்த நிலையிலிருந்து பங்குச்சந்தை முடுக்கப்பட்டு வெளிநாட்டு முதலீடுகள் வெளியேறாமல் இந்தியாவிலேயே தக்கவைக்கும் வாய்ப்பாக அமைந்தது. உள்நாட்டளவிலும் தொய்வு நிலையிலிருந்த பங்குச்சந்தை உத்வேகப்படுத்தப்பட்டு உற்சாகம் அடைய வைத்தது.

தவிர புதிதாக துவங்கும் உற்பத்தி கம்பெனிகளுக்கு 15% வருமான வரி என்பது உலக அளவிலேயே முன்னணி நாடுகளில் மிகக்குறைந்த கம்பெனி வரியாக கருதப்படுகிறது. இருப்பினும் தற்போது அதிகம் பேசப்படும் தனிநபர் வருமான வரி குறைப்பை முதலிலேயே செய்திருந்தால் வரி செலுத்துவோர் கைகளில் உபரி வருமானம் இருந்து பண்டிகை காலங்களில் நுகர்வை அதிகரிக்க வாய்ப்பாக இருந்திருக்கும். தனிநபர் வருமான வரியைக் குறைப்பது தொடர்பான எதிர்பார்ப்பு மக்களிடையே பரவலாக உள்ளது.

இந்திய மக்கள் தொகையான 137 கோடியில் சுமார் 5 கோடி மக்கள்தான் வருமான வரி செலுத்தி வருகின்றனர். அவர்களுக்கு கொடுக்கும் வருமான வரி குறைப்பால் பெரிய அளவுநுகர்வு ஏற்படாது என்றும் ஒரு கருத்து நிலவுகிறது. பெருவாரியான மக்களின் கையில் செலவு செய்ய பணம் இருந்தால் அது நுகர்வை அதிகரிக்க செய்யும்.

பொதுவாக இரண்டு பருவ மழைகள் அடுத்தடுத்து வரும்பட்சத்தில் நாடு சுபிட்சம் பெறும் என்பது அந்தக் காலத்து நம்பிக்கை.கடந்த 2 பருவ மழைகள் சாதகமாக அமைந்ததால் விவசாயிகளின் கையில் பணம்புழங்க ஆரம்பிக்கும். இதனால் அவர்களின் நுகர்வும் நிச்சயம் அதிகரிக்கும். வரும் பட்ஜெட்டிலும் மக்கள் கையில் பணம் அதிகம் புரள வைக்கும் வகையிலான திட்டங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

அமெரிக்காவில் 2008-ம் ஆண்டு அப்போதைய பொருளாதார மந்த நிலையை நீக்கஅரசாங்கம் சில நிபந்தனைகளுடன் வீட்டுக்கடன்களுக்கு வட்டியை தள்ளுபடி செய்ததோடு மட்டுமல்லாமல் ஆட்டோமொபைல் துறையில் அதிக முதலீடுகள் செய்தது. மேலும் திவால் சட்டத்தை தளர்வு செய்தது. இதுபோன்ற திட்டங்கள் இந்தியாவின் தற்போதைய மந்த நிலையைப் போக்கவும் எடுக்கப்படலாம்.

ஜிஎஸ்டி வரியில் மாற்றமா?

பட்ஜெட்டில் ஜிஎஸ்டி வரி மாற்றங்கள் ஏதும் செய்ய முடியாது என்றாலும் ஜிஎஸ்டி கவுன்சில் கிட்டத்தட்ட மாதமொருமுறை கூடும்போது செய்ய வேண்டிய மாற்றங்களைத் திட்டமிடலாம். தற்போது இந்தியாவில் ஐந்து அடுக்கு ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறை இருக்கிறது.

0%, 5%, 12%, 18%, 28% என்கிற விகிதங்களில் தற்போது வரிவிதிப்புகள் உள்ளன. இதை குறைந்தபட்சம் இரண்டு அடுக்காக மாற்ற வேண்டும் என்பது தொழிலமைப்புகளின் கருத்தாக உள்ளது. உலகின் பெரும்பான்மையான நாடுகளில் ஓரடுக்கு விகிதமே இருந்து வருகிறது உதாரணமாக ஆஸ்திரேலியா 10%, இங்கிலாந்து 20%, சிங்கப்பூர் 7%, மெக்சிகோ 16%, ஜெர்மனி 19%, ஜப்பான் 10%.

சீனாவில் மட்டும் 6%, 11%, 17% என மூன்றடுக்காக வரி விதிப்பு உள்ளது. ஜிஎஸ்டி நடைமுறையிலும் ஏராளமான படிவங்கள் தாக்கல் செய்வது தொழில் நிறுவனங்களுக்கு மிகுந்த சிரமமாக உள்ளது. அதிலும் குறிப்பாக சிறு மற்றும் நடுத்தர தொழிலமைப்புகளுக்கு இது பெரும் சவாலாகவே இருக்கிறது என்றால் மிகையாகாது. தொழில்களின் நிதி நிலை முறையாகத் தாக்கல் செய்யப்பட வேண்டியது எந்த அளவுக்கு அவசியமோ, அதே அளவுக்கு தாக்கல் செய்யும் முறைகள் எளிமையாக இருக்க வேண்டியதும் அவசியம்.

தொழில் செய்ய ஏற்ற சூழல்

எளிமையாக வியாபாரம் செய்ய உகந்த 190 நாடுகளின் பட்டியலில் 77-வது இடத்தில் இருந்த இந்தியா 14 படிகள் முன்னேறி 63-வது இடத்தை பிடித்துள்ளது. என்னதான் ஆன்லைன் பதிவு, மின்னணு முறையில் சமர்ப்பித்தல் என தொழில்நுட்ப வசதிகள் மேம்பாடு அடைந்தாலும் இன்றளவும் கூட்டு நிறுவனம் (Partnership Firm) பதிவு, அரசு நிர்வாக சட்ட நடைமுறைகள், தொழிலாளர் சட்டம், அமலாக்க ஒப்பந்தம், சொத்துதொடர்பான நடைமுறைகள், வரி நோட்டீஸ்கள், ஜிஎஸ்டி நிர்வாக நடைமுறைகள் போன்றவற்றுக்கு அரசு அலுவலகங்களுக்கு சென்று கொண்டுதான் இருக்கிறோம். இதை சீர்படுத்த முயற்சிமேற்கொள்வது அவசியம். தொழில் செய்வோருக்கு எந்த அளவுக்கு அரசு தரப்பிலிருந்து ஆதரவும் வசதிகளும் கிடைக்கிறதோ அது பொருளாதாரத்துக்கும் வேலைவாய்ப்பு உருவாக்கத்துக்கும் உதவியாக இருக்கும்.

“அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது” என்கிற முதுமொழிக்கேற்ப ஒரு நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு அச்சாணி வங்கிகள்தான் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. வங்கிகளே இந்தியத் தொழில் அமைப்புகளின் நிதி முதுகெலும்பு. சமீபகாலமாக சிமென்ட், ஸ்டீல், டெக்ஸ்டைல் ஆகிய துறைகளுக்கு சில வங்கிகளில் கடன் ஏதும் கொடுக்காமல் இருப்பது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. பெரும்பான்மையான தொழில் நிறுவனங்களுக்கு குறிப்பாக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு வங்கிகள் உரிய நேரத்தில் தேவையான கடனை வழங்குவதில்லை என்கிறபுகார் இன்னும் அதிகரித்து வருகிறது.

பல பெரிய கடன்கள் வாராக்கடன் ஆனதால், வங்கி மேலதிகாரிகள் பலர், சிபிஐ அலுவலகத்துக்கு பதவிக் காலம் முடிந்த பிறகும் சென்றுவருவதை பார்க்கும் இப்போதைய வங்கி மேலாளர்கள், சிறுதொழில் அமைப்புகளுக்கு சி.ஜி.டி.எம்.எஸ்.சி(CGTMSE), முத்ரா, கடன் இணைக்கப்பட்ட மானிய திட்டம் (CLSI) போன்றநல்ல திட்டங்களில் கூட கடன் கொடுக்க முன்வருவதில்லை. இத்தகைய சூழலில் சில பெரும் தொழிலதிபர்களும் இனிமேல் கடன் வேண்டாம் என்கிற பாணியிலும் யோசிக்க ஆரம்பித்துள்ளனர். சமீபத்தில் முகேஷ் அம்பானியின் கம்பெனியை 2020-21ம் ஆண்டுகளில் பூஜ்ய கடன் உள்ள கம்பெனியாக மாற்றுவோம் என்று கூறியிருப்பது குறிப்பிடதக்கது.

தொழில் நிறுவனங்கள் கடன் வாங்கி வியாபாரத்தை அபிவிருத்தி செய்வதில் எந்தவிதமான தவறும் இல்லை. மேலும் உலக நாடுகளில் தொழில் அபிவிருத்திக்காக கடன் வாங்குவது என்பது மிக சாதாரணமான ஒன்று. நல்ல வாடிக்கையாளர்களுக்கு கடன் கொடுக்க வங்கிகளுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துவது அரசின் முக்கிய கடமை. தவிர திவால் சட்டமசோதா (Insolvency and Bankruptcy code) நிச்சயமாக ஒரு வரவேற்கத்தக்க அம்சம் என்றாலும் அதிலுள்ள நடைமுறை சிக்கல்களால் சிறு தொழிலதிபர்கள் முதல் பெரிய கம்பெனிகள் வரை சற்று பயத்துடன் செயல்பட்டு வருகின்றனர்.

இந்த அரசில் அமைச்சகங்களுக்கு இடையே ஒருங்கிணைப்பு இல்லை என்கிற ஒரு குற்றச்சாட்டும் இருக்கிறது. தற்போதைய அரசு பொருளாதாரம் சார்ந்த நோக்கத்தில் இருந்து விலகி அரசியல் நோக்கத்தில் கவனம் செலுத்த தொடங்கிவிட்டதால் இந்தியாவில் முதலீடு செய்ய வெளிநாட்டு நிறுவனங்கள் அச்சம் கொள்கின்றன என்கிற ஒரு கருத்து இருந்தாலும், உலக மக்கள் தொகையில் (7.75 பில்லியன்) இந்தியா (1.37 பில்லியன்) 18% பங்கு வைத்துள்ளதால் அவ்வளவு சீக்கிரம் இந்தியாவை உலக வணிக நிறுவனங்கள் புறக்கணிக்க முடியாது என்பதும் ஏற்றுக்கொள்ள வேண்டிய ஒன்று. அதேசமயம் ஆர்வமுடன் முதலீடு செய்ய வரும் நிறுவனங்களுக்கு நம்பிக்கையளித்து அவர்களுக்கான வாய்ப்புகளை உருவாக்கித்தர வேண்டிய கடமையும் அரசுக்கு உள்ளது. மேலும் கிராமப்புற பொருளாதார வளர்ச்சிக்கும் அரசு கவனம் செலுத்த வேண்டும்.

அரசுக்கு வெளிப்படைத்தன்மை தேவையில்லையா?

பாஜக அரசின் மீது வைக்கப்படும் மிக முக்கியமான விமர்சனமாக வெளிப்படைத்தன்மை உள்ளது. நிர்வாக அமைப்புகளான ரிசர்வ்வங்கி, ஒழுங்கு முறை ஆணையங்கள் போன்றவற்றையெல்லாம் வெளிப்படைத் தன்மையுடன்இருக்க வேண்டும் என அறிவுறுத்திவரும் அரசு தன்னளவில் வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுகிறதா என்பதையும் பார்க்க வேண்டும்.

பட்ஜெட் தொடர்பான நடவடிக்கைகளாக இருக்கட்டும், பொருளாதாரம் சார்ந்த புள்ளிவிவரங்களாக இருக்கட்டும் அரசுவெளியிடும் பல புள்ளிவிவரங்களும் தகவல்களும் தொடர்ச்சியாக கேள்விக்குள்ளாக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது. அரசின் செலவினம்,வருவாய் மற்றும் முதலீடு தொடர்பான விவரங்களை வெளிப்படையாக மக்களுக்குத் தெரிவிப்பது தலையாய கடமை. அதேபோல் நாட்டின் உண்மை நிலவரம் என்ன என்பதையும் அரசு வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும்.

இந்தியா 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கி வெற்றிகரமாக செல்ல அரசின் முயற்சிகளும் நடவடிக்கைகளும்தான் அவசியத் தேவையாக உள்ளன. தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட்டில் அத்தகைய அறிவிப்புகளை எதிர்பார்க்கலாம். வரும் நிதி ஆண்டில் நாட்டின் பொருளாதாரம் சிறப்பான நிலைக்கு மாறும் என நம்புவோம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x