Published : 19 Jan 2020 11:37 AM
Last Updated : 19 Jan 2020 11:37 AM

வாழ்வு இனிது: கிருஷியின் நினைவலைகள்

சுகந்தி கண்ணன்

திருநெல்வேலியில் அரசியல், அரசு ஊழியர்கள் கூட்டத்தைத் தவிர மற்ற எல்லாக் கூட்டங்களிலும் சோல்னா பையைத் தோளில் போட்டுக்கொண்டு மேடையெல்லாம் ஏறாமல் கூட்டத்தின் ஒரத்தில் நிற்பார் அவர். திடீரென்று முக்கியமானவர் யாராவது தாமதமாக வந்தால் அவர்கள் மேடையேற உதவுவார். கூட்டத்தில் யார் பேசினாலும் இவரது பெயரைத் தவறாமல் சொல்வார்கள். சில நேரம் இவரோடு சாதாரணமாகப் பழகியவர்களைக் கூட கூட்டத்தில் பேசவைத்துவிடுவார்.

கூட்டம் முடிந்தவுடன் சிறப்பு விருந்தினருடன் சென்றுவிடுவார். அவருடைய இந்த அணுகுமுறையை கடந்த 5 வருடங்களாகத்தான் பார்க்கிறேன். ஒருநாள் அவரிடம் கேட்டேன். முதலில் வெடிச் சிரிப்பைத்தான் பதிலாகத் தந்தார். ஒய்வு பெற்ற அரசுப் பள்ளி ஆசிரியர் ராமகிருஷ்ணன்.

அவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது இடையில் ஒரு போன் வந்தது. பேட்டி தடைபட்டுவிடக்கூடாது என்பதற்காக என்னைப் பார்த்தார்‌. எடுத்துப் பேசுங்க என்றேன். “சரி சார். அரைமணிநேரத்தில ஜானகிராம் ஹோட்டல்கிட்ட வந்துடுவேன்.” என்றார். ஆர்வம் தாங்காமல் யார் சார் என்றேன். பேராசிரியர் அக்னிபுத்திரன் எனக்காகக் காத்திருக்கிறார். அவரோடு போகணும் சீக்கிரம் பேசிவிடுவோமா என்று அவசரப்படுத்தினார். இவர் ராம் இயக்கிய “தங்கமீன்கள்” படத்தில் நடித்திருக்கிறார்

“உப்புக்குச் சப்பாணி ஊருக்கு மாங்கொட்டை. வேறயாருமில்லை என்னைப் பற்றி சுருக்கமாக நானே அப்பப்ப சொல்லிக்கொள்வதுதான். திருநெல்வேலியில் இலக்கியக் கூட்டத்தை விட அஞ்சலிக் கூட்டம்தான் அதிகமாக நடத்தியிருக்கிறேன். தொமுசி, திகசி, சுரா, ஆர்எம்கேவி விஸ்வநாதன், பிரபஞ்சன், தோப்பில் முகமது மீரான் இப்படி நிறையபேரைச் சொல்லிக்கொண்டு போகலாம். என்னய்யா எழுத்தாளர் கூட்டம் நடத்துகிறீர்களா அஞ்சலிக் கூட்டம் நடத்துகிறீர்களா என்று என்னிடம் கேட்டவர்கள் உண்டு. கடந்த 50 வருடங்களாக எழுத்தாளர்களோடு தொடர்பில் இருக்கிறேன். எனக்கு ஒரு குணம் இருப்பதாக நம்புகிறேன். என்னைத்தேடி வந்த எழுத்தாளர்களுக்கும் எனக்குப் பிடித்த எழுத்தாளர்களுக்கும் பலவிதங்களில் அவர்களின் வாழ்க்கைப் பயணங்களில் அவர்களோடு கூட நானும் பிரயாணித்திருக்கிறேன். அந்தப் பயணத்தைத்தான் கிருஷின் அடையாளமாகப் பார்க்கிறேன். நானும் அந்திம காலத்துக்கு வந்துவிட்டேன் என் கைகளில் பத்து விரலைத் தவிர ஒன்றுமில்லை. ஆசிரியர் பணியில் இருந்து தற்போது இலக்கியக் கூட்டப்பணிகள் வரை என்னுடைய காலத்தை நினைத்துப் பார்த்தால் ஓஷோ சொன்ன வாக்கியம்தான் நினைவுக்கு வருகிறது. இறப்பவர்கள் உண்மையில் இறந்து போகிறார்களா?

1970-ல் எழுத்தாளர் வண்ணதாசனுடைய எழுத்தின் மீதுள்ள ஈர்ப்பினால் இரவில் கோவில்பட்டியில் இருந்து அவரைப் பார்க்க வந்தேன். டவுன் சுடலைமாடன் கோயில் தெருவில் இருந்த அவரது மாடி வீட்டில் பேசிக் கொண்டிருந்துவிட்டு எங்களை வழியனுப்ப வந்தார். இவ்வளவு துாரம் வந்திருக்கீங்க என்று சொல்லி அவரது தெரு முனையில் உள்ள அல்வா கடையில் அல்வா வாங்கிக் கொடுத்தார். பேருந்து வரும் வரை கூடவே இருந்தார். சார் நாங்க போய்விடுவோம் என்று சொன்னேன். என்னோடு நண்பன் கௌரிசங்கர் வந்திருந்தான். ரொம்ப துாரத்தில் இருந்து வந்துருக்கீங்க, வழியனுப்பும் போது உங்களோடு இருக்க வேண்டாமா? யாராக இருந்தாலும் வழியனுப்பிவிட்டுத்தான் போவேன் என்று அவர் அன்று பேசிய அந்த வார்த்தைகள் எனக்குள் விதையாக விழுந்தன.

80-களில் வல்லிக்கண்ணன் எப்போது வருவதாக இருந்தாலும். இத்தனை மணிக்கு இந்த ரயிலில் வருகிறேன் என்று எனக்குத் தபால் போட்டுவிடுவார். வல்லிக்கண்ணன் திருநெல்வேலி வந்துவிட்டால் தாயைக்கண்ட பிள்ளை மாதிரி எப்போதுமே தாமிரபரணி ஆற்றை நோக்கித்தான் ஒடுவார். நாம் ரயில் நிலையத்தில் ஒரு வாசலில் பார்த்துக் கொண்டிருந்தால் வேறு வழியாக ஆற்றுக்குப் போய்விடுவார். எனக்கு முதலில் இது தெரியாது. சிந்துபூந்துறை ஆற்றுக்குத் தேடிச் சென்றாலும் ஆற்றில் குளித்துவிட்டு ஈர வேட்டியில் எதிரில் வந்துவிடுவார். பிறகு நேராக திகசி வீட்டுக்குப் போவார். அதேபோல் எழுத்தாளர் தோப்பில் முகமது மீரானின் சாய்வு நாற்காலி நாவலுக்கு விருது கிடைத்தவுடன் வல்லிக்கண்ணனைத்தான் சிறப்புரையாற்ற கூப்பிட்டோம். கூட்டம் நடப்பதற்கு முதல்நாள் மாலையில்தான் நாவலைப் படிக்கக் கொடுத்தேன் ஐயா படித்துவிடுவீர்களா என்று சந்தேகத்தில்தான் கேட்டேன். ஆனால், மறுநாள் அத்தனை கதாப்பாத்திரங்கள் குறித்தும் விலாவாரியாகப் பேசியததை இன்று நினைக்கையில்கூட வியப்பாகத்தான் இருக்கிறது.

சாய்வு நாற்காலி கூட்டம் முடிந்தவுடன் வல்லிக்கண்ணணை வழியனுப்பப் போயிருந்தேன். ஆறு மணிக்கு ரயில் என்றால் நாம் வழக்கமாக ஐந்தரைக்குப் போவோம். ஆனால், வல்லிகண்ணன் ஐந்து மணிக்கே உட்கார்ந்திருப்பார். இந்தக் குணம் திகசிக்கும் உண்டு. சரியாகத் தன்னுடைய இருப்பிடம் எது என்று தெரிந்து அதற்குத் தோதாக உட்கார்ந்திருப்பார்கள். அது ஏன் ஒரு மணி நேரத்துக்கு முன்னால் போகிறார்கள் என்றே தெரியவில்லை. ஆனால், நமக்கு ரயில் வந்த பிறகு ஒடுகிற ஆட்களைத்தான் தெரியும்.

வல்லிக்கண்ணன் திருநெல்வேலி வரும்போதெல்லாம் திகசி வீட்டில்தான் தங்குவார். அப்போது நானும் கூடப் போய்விடுவேன். அப்படித்தான் எழுத்தாளர் திகசி எனக்கு பழக்கமானார். திகசியுடனும் பல இடங்களுக்குப் பயணம் சென்றிருக்கிறேன். அவர் பல நண்பர்களை அறிமுகம் செய்து வைத்திருக்கிறார். அவரோடு கூட சண்டையும் போட்டுருக்கிறேன். திகசியுடனான பின் காலத்து அனுபவங்களை மட்டும் சொல்கிறேன்.

திகசியை ஓவியர் வள்ளி ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு கூட்டத்துக்கு அழைத்து வருவார். அவருக்கு சிலநேரம் ஏதாவது வேலை இருந்தால் சார்வாள் திகசி வந்திருக்கிறார். பார்த்துகோங்க என்பார். சிலநேரம் கூட்டம் ரொம்பநேரம் ஆகிவிட்டால் பசி தாங்க மாட்டார். அந்தக் காலத்து ஆட்களிடம் இருக்கும் நல்ல குணம். இப்போது கெட்ட குணம். உடனே அவருடன் கடையில் சாப்பிட்டு பத்திரமாக வீட்டில் விட்டுட்டுத்தான் வீடு திரும்புவேன். இது வண்ணதாசனுக்கும் தெரியும்.

ஒருமுறை, எழுத்தாளர் செல்வராஜ் மகளின் திருமணத்துக்கு திகசியும் நானும் போனோம். திகசியை கொஞ்சம் பாத்துக்கோங்க நல்லா சாப்பிடுவார். வயதான காலம் என்று என் காதில் ரகசியமாக அக்கறையுடன் சொன்னார் செல்வராஜ். ஒரு சப்பாத்தி சாப்பிட்டவுடன் இன்னொன்று என்பார் ஐயா போதும் என்று நான் சொல்வேன். இனிப்பும் இரண்டு கேட்பார். இருந்தாலும் அவரை மட்டுப்படுத்தி சாப்பிடவைத்து வீட்டுக்கு அழைத்துப் போவேன்.

அதேபோல பதிப்பாளர் காவ்யா சண்முகசுந்தரம் நடத்திய கூட்டத்தில் கலந்துவிட்டு தோழர் ராஜகோபால் திகசி மூவரும் ராத்திரி 11 மணிக்கு டிசம்பர் மாத பனியில் உட்கார்ந்து சாப்பிட்டோம். சாப்பிட்டு முடித்தவுடன் ஐஸ்கீரிம் வந்தது. எங்களுக்கு முன்னால் ஐஸ்கீரிம் இருக்கிறது. அவர் ஐஸ்கீரிம் சாப்பிட்டால் உடலுக்கு ஏதாவது ஆகிவிடக்கூடாதே என்று பயந்துகொண்டு இருந்தோம்.அவர் திடீரென்று ராஜகோபாலைப் பார்த்து ஐஸ்கீரிம் சாப்பிடப்போகிறீர்களா என்று கேட்டார். ராஜகோபால் பதறிப்போய் கொடுத்துவிட்டார். எங்களுக்கு இரவெல்லாம் பயம்தான் ஆனால், ஒன்றும் செய்யவில்லை.

1996- ல் திருநெல்வேலி டவுனில் ஒரு எழுத்தாளர் இருக்கிறார். அவர் மூன்று நாவல்கள் எழுதியிருக்கிறார் என்று தோப்பில் முகமது மீரானைப் பற்றி அரசல்புரசலாகக் கேள்விப்பட்டோம். அப்போது த.மு.எ.க.ச. சார்பில் ஒரு இலக்கியக் கூட்டத்திற்கு அவரைத் தலைமை ஏற்கக் கேட்டு நானும் எழுத்தாளர் நாறும்பூநாதனும் அவரது வத்தல் மண்டிக்குச் சென்றோம். அந்தக் கூட்டம் அவரது நாவல் சார்ந்த கூட்டம் கிடையாது. அந்த நேரத்தில் யாரும் அவரது நாவலைப் படிக்கவும் இல்லை. எங்களிடம் அவரது நாவலும் கிடையாது. ஆனால், அவர் கூட்டத்திற்கு வரச் சம்மதித்தார். கூட்டத்தில் மொத்தமே 15 பேருக்குள்தான் இருந்தோம். இருந்தாலும் அவர் எனக்கு எண்ணிக்கை முக்கியமில்லை. நான் பேசும் விசயத்தை இரண்டு பேர் கேட்டாலே போதும். ஒரு எழுத்தாளனுக்கு மகிழ்ச்சிதான் என்றார். இலக்கியக் கூட்டச் சந்திப்பின் காரணமாக தோப்பிலோடு மிக நெருக்கமாகப் பழகும் சூழல் உருவானது. அவரைப் பற்றி ஏதாவது குறிப்பு இதழ்களில் வந்திருந்தால் உடனே அவரிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு உங்களைப்பற்றி எழுதியிருக்காங்க. நானே நேரில் வந்து தருகிறேன் என்று சொல்வேன்.

ஒருநாள் வழக்கமாக நாங்கள் சந்திக்கும் நெல்லை பேருந்து நிலையம் பின்புறம் உள்ள பிள்ளையார் கோவிலுக்கு எம் 80 வண்டியில் வந்தார். ஒரு நாவல் எழுதிக்கிட்டு இருக்கேன். வாரத்திற்கு இரண்டு அத்தியாயம் எழுதிவிடுவேன். இந்தத்தடவை நீங்கதான் எனக்குத் திருத்திக் கொடுக்கணும் என்று சொன்னார். நான் அவரை ஆச்சாரியத்துடன் பார்த்துத் தயங்காமல் சரியென்றேன். அதன்பிறகு வாரத்திற்கு ஒரு முறை மாலைநேரத்தில் தான் எழுதியதை என்னிடம் வந்து கொடுப்பார் அதே இடத்தில் வைத்தே படித்துத் திருத்தம் சொல்வேன் சரி செய்வார். சில நேரம் நான் எழுத்துப் பிழையை மட்டும் பார்க்காமல் வாக்கிய அமைப்புகளையும் சரிசெய்தேன். நாவலைப்பற்றிய அபிப்பிராயமும் சொன்னேன். அதற்கு அவர் அனுமதி கொடுத்திருந்தார். நாவல் முடியும் தரறுவாயில் ஒருநாள் தோப்பிலிடம் இந்த நாவலில் ஒரு 40 பக்கத்தை வெட்ட‌ வேண்டும், அதை எடுத்துவிட்டால் இந்த நாவல் கச்சிதமாக இருக்கும் என்று சொன்னேன். தயங்காமல் 40 பக்கத்தையும் வெட்டினார். அந்த நாவலை முழுவதுமாகப் படித்துவிட்டு ஒருவித யோசனையுடன் அவர் வீட்டடுக்குச் சென்றேன். பொதுவாக நான் போனாலே விருந்துதான். அன்று சாப்பிட்டு முடித்தவுடன் சாயா வந்தது. நிதானமாகக் குடித்துக்கொண்டே இந்த நாவலைப் பற்றி என் மனத்துக்கு ஒன்று தோன்றுகிறது. சொல்லவா என்றேன்.

அமைதியாக பார்த்துக்கொண்டிருந்தார். இந்த முறை சரியான நபர்கள் சாகித்ய அகடமியில் இருந்தால் உங்கள் நாவலுக்குத்தான் விருது கிடைக்கும் அதற்கான எல்லா அம்சங்களும் நாவலில் பொருந்தி வந்திருக்கு. உயிரோட்டமாகவும் இருக்கிறது என்று நான் சொல்லும்போது தோப்பில் மெலிதாகச் சிரித்தார். அவரது மகன்களும் அருகில் இருந்தனர். இந்த நாவலுக்கு விருது கிடைக்கவில்லையென்றால் உங்களுடைய வேறு எந்த நாவலுக்கும் விருது கிடைக்காது. என்று உணர்ச்சிவசப்பட்டு சத்தமாகப் பேசினேன். அப்போதும் அவரிடம் அதே புன்னகைதான். பொதுவாக நாம் என்ன பேசினாலும் அவர் குறுக்கே பேசாமல் அமைதியாக சிரிக்க மட்டுமே செய்வார். அந்த வருடம் (1997) சாய்வு நாற்காலி நாவலுக்கு விருது அறிவிக்கப்பட்டது.

நெல்லையில் தோப்பிலைப் பார்க்கவேண்டுமென்றால் முதலில் கிருஷியை பார்க்கவேண்டும் என்கிற அளவுக்கு என்னை பலர் கேலி செய்வார்கள். எழுத்தாளர் கோமல்சுவாமிநாதன், நடிகர் நாசர் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களோடு போயிருக்கிறேன். உபசரிப்பதில் எழுத்தாளர் கிராவிற்குப் பிறகு தோப்பில்தான்.

கிராமத்திலுள்ள இளம் பெண்களின் மனநிலையில் சிறு தடுமாற்றம் ஏற்படும்போதுதுாத்துக்குடி மாவட்டம் புளியம்பட்டி கோயிலுக்குக்கூட்டிட்டு வருவார்கள். குணமாகும்வரை சில நாட்கள் தங்கியிருப்பார்கள். சிலரைச் சங்கிலி போட்டு க் கட்டிவைத்திருப்பார்கள். அந்தப் பெண்களைச் சந்தித்து ஆய்வு செய்வதற்காக 1970-களில் பெண் எழுத்தாளர் அம்பை வந்திருந்தார். நானும் அவரோடு கூடச் சென்றேன். அப்போதே அவர்கள் நவீன உடையில் தலைமுடியை கிராப் செய்திருந்தார்கள். பாப்கட்டிங் செய்த பெண்ணோடு 25 வயது பையன் கோவில்பட்டி கிராமத்தில் நடந்துபோனதை ஊர்க்காரா்கள் வேடிக்கை பார்த்தனர்.

ஒருநாள் புளியம்பட்டி பேருந்தில் ஏறினோம். அன்று அம்பைக்கு உட்காருவதற்குஇடம் இருந்தது. எனக்கு இடம் இல்லை. அம்பை பக்கத்தில் ஓர் இடம் காலியாக இருந்தது. நான் நின்று கொண்டு இருந்தேன். “ராமகிருஷ்ணன் ஏன் நின்னுகிட்டு வர்றீங்க உட்காருங்க” என்று அவர் அருகில் உட்கார கை காட்டினார். “சும்மா உட்காருங்க” என்று அழுத்திச் சொன்னார்.

70-களில் முதல்தடவையாகராமகிருஷ்ணன் வாழ்க்கையில்ஒரு பெண்ணோடு அருகில் அமர்ந்து பயணம் செய்தது தமிழ்ச்சமூகத்தில் கலகம்தானே! எனச் சிரிக்கிறார் கிருஷி என்கிற ராமகிருஷ்ணன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x