Published : 18 Jan 2020 12:22 PM
Last Updated : 18 Jan 2020 12:22 PM

கரும்புப் பயிரில் தண்டுத் துளைப்பான் தாக்குதல்

த.சத்தியசீலன்

கரும்புப் பயிர், தமிழகத்தில் பரவலாகச் சாகுபடி செய்யப்படுகிறது. தேசிய அளவில் கரும்பு உற்பத்தியில் தமிழகம் இரண்டாம் இடம் வகிக்கிறது. கரும்புப் பயிர், வளர்ச்சிப் பருவத்தில் பூச்சி, புழு தாக்குதலுக்கு உட்படுவதால் விளைச்சல் குறைந்து சர்க்கரை உற்பத்தி வெகுவாகப் பாதிக்கப்படுகிறது.

அந்த வகையில் தண்டுத் துளைப்பான் புழுத் தாக்குதல் கரும்பு உற்பத்திக்கு ஊறு விளைவிக்கிறது. இந்தப் புழுக்களின் தாக்குதல் குறித்தும் அதைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்தும் கோவை மாவட்ட வேளாண்மை அலுவலர் எஸ்.சம்பத்குமார் பகிர்ந்துகொள்கிறார்:

தண்டுத் துளைப்பான் புழு

தண்டுத் துளைப்பான் புழு, புழுப்பருவத்தில் மட்டுமே கரும்புப் பயிரைத் தாக்கிச் சேதம் ஏற்படுத்துகிறது. முட்டையில் இருந்து வெளிவரும் இளம்புழுக்கள் பயிரின் வளர்ச்சி நிலையைப் பொறுத்து குருத்து, தண்டுப் பகுதிகளில் துளையிட்டுத் திசுக்களை உண்ண ஆரம்பிக்கும்.

அதனால் பயிரில் நீர், உணவு ஆகியவற்றைக் கடத்தும் திறன் பாதிக்கப்பட்டு, குருத்தழுகி அல்லது அடித்தண்டு அழுகி, பாதிக்கப்பட்ட பகுதிகள் மடிந்துவிடும். இப்புழுக்கள் தண்டினுள் நுழைந்தவுடன், நுழைவுப் பாதையைத் தம் எச்சத்தால் அடைத்து விடுகின்றன. தமிழகத்தைப் பொறுத்தவரை 3 பருவத் தண்டுத் துளைப்பான் புழுக்கள் கரும்புப் பயிரைத் தாக்கி, விவசாயிகளுக்கு அதிகப் பொருளாதாரச் சேதத்தை ஏற்படுத்துகின்றன.

இளங்குருத்துப் புழு

இளங்குருத்துத் தண்டுத் துளைப்பான் புழு, கரும்பு நடவுசெய்ததிலிருந்து 3 முதல் 4 மாதங்கள் வரை மட்டுமே இருந்து கரும்புப் பயிரில் சேதத்தை ஏற்படுத்தும். பயிரில் குருத்து அழுகுவதை, இளங்குருத்துப் புழுத் தாக்குதலின் அறிகுறியாகக் கொள்ளலாம். தூர்களைப் பிடித்து இழுத்தால் எளிதாக வந்துவிடும்.

அவற்றில் இருந்து துர்நாற்றம் வீசும். இதனால் 10-30 சதவீதம் வரை சேதம் ஏற்படும். ஏப்ரல் முதல் ஜூலை மாதம் வரையிலான அதிக வெப்பநிலையால் மண்ணில் ஏற்படும் குறைந்த ஈரப்பதம், இப்புழுக்கள் பெருகுவதை ஊக்குவிக்கிறது. இவற்றைக் கட்டுப்படுத்த வழக்கமாகப் பயிரிடும் ரகங்களுக்குப் பதிலாக இப்புழுக்களுக்கான எதிரான ரகங்களாகக் கண்டறியப்பட்டுள்ள கோ-853, கோ-987, கோ-1007 ஆகியவற்றைப் பயிரிலாம்.

கரும்பு நடவு செய்த பின், இப்புழுக்களால் பாதிக்கப்பட்ட வயல்வெளிகளில் மண் அணைத்தல், ஸ்டர்மியாப்ஸிஸ் இன்பரன்ஸ் எனப்படும் புழு ஒட்டுண்ணியை ஏக்கருக்கு 125 என்ற எண்ணிக்கையில் வயலில்விட்டு, புழுக்களைக் கட்டுப்படுத்தலாம். மேலும் கார்போபியூரான் குருணை மருந்தை 3 சதவீதம் என்ற அளவில், 33 கிலோ மணலுடன் கலந்து கரும்புப் பயிரின் தோகை, தண்டுகளுக்கிடையே தூவலாம்.

இடைக்கணுப்புழு

இடைக்கணுத் தண்டு துளைப்பான் புழு, கரும்பு நடவு செய்த 3 அல்லது 4 மாதங்களுக்குப் பின்னர் தாக்குதல் ஏற்படுத்தும். இளம் புழுக்கள் தோகையை உண்ண ஆரம்பிக்கும். தண்டின் கணுவிடைப் பகுதியில் துளையிட்டு உள்ளிருந்து திசுக்களை உண்டு வாழும்.

இதனால் தோகை, கணுவிடைப் பகுதிகள் சிவப்பு நிறமாக மாறிவிடும்.
முதலில் முதிர்ந்த தோகைகளைச் சேகரித்து அழித்துவிட வேண்டும். கோ-285, கோ-453, கோ-617, கோ-853, கோ-853, கோ-915, கோ-1007, கோ-6806 ஆகிய இடைக்கணுத் தண்டுத் துளைப்பான் புழுக்களுக்கு எதிரான ரகங்களைத் தேர்வுசெய்து பயிரிடலாம்.

அதிகமாகத் தாக்குதலுக்குட்பட்ட பயிர்களைச் சேகரித்து அழித்துவிட வேண்டும். மேலும், டீரைக்கோகிராமா கைலோனிஸ் என்ற முட்டை ஒட்டுண்ணிகளை ஹெக்டேருக்கு 15 வீதம், நடவுசெய்த 4 மாதங்களில் 15 நாட்கள் இடைவெளியில், கரும்புப் பயிரின் தோகைகளின் கீழ்ப்பகுதியில் விடுவதன் மூலம், இப்புழுக்களை முட்டைப் பருவத்திலேயே கட்டுப்படுத்தலாம்.

நுனி குருத்துப் புழு

நுனி குருத்துத் தண்டுப்புழு, இடைக்கணுப் புழுக்களைப் போலவே 4 மாதங்களுக்குப் பின்னர் தாக்குதலை ஆரம்பிக்கும். தண்டின் நுனிப்பகுதி முதல் நடுப்பகுதி வரை மட்டுமே தாக்கும். இப்புழுக்கள் கணுவிடைப் பகுதியில் துளையிட்டு திசுக்களை உண்ணும். இதனால் கணுவின் பக்கவாட்டில் புதிதாகத் தூர்கள் முளைக்க ஆரம்பித்து, தனிப் பயிர்களாக வளரும். இது முடிக்கொத்து எனவும் அழைக்கப்படுகிறது. தண்டுகள் முற்றிலும் அழுகி மடிந்துவிடும். இதனால் மகசூல் இழப்பும் ஏற்படும். எனவே, பாதிக்கப்பட்ட பகுதிகளை வெட்டி எடுத்து அழித்துவிட வேண்டும்.

இப்புழுவின் எதிர் ரகங்களான கோ-419, கோ-767, கோ-1158, ஆகிய ரகங்களை விவசாயிகள் தேர்ந்தெடுத்து நடவு செய்யலாம். மேலும், ஐசோடிமா ஜவான்சிஸ் எனப்படும் கூட்டுப்புழு ஒட்டுண்ணியை வயல்களில் விடுவதால், புழுக்களின் எண்ணிக்கையைக் குறைக்கலாம். கார்போபியூரான் குருணை மருந்தை 70 கிலோ அல்லது போரேட் மருந்தை 10 கிலோ என்ற அளவில் தெளித்து இப்புழுக்களைக் கட்டுப்படுத்தலாம்.

பொதுவான பரிந்துரைகள்

கரும்புப் பயிர் நீண்ட வாழ்நாளையும், கடினமான அமைப்பையும் கொண்டிருப்பதால், மற்ற பயிர்களைப் போல் வளர்ச்சிப் பருவம் முழுவதிலும் மேலாண்மை முறைகளை மேற்கொள்வது சற்றுக் கடினமானது. சாகுபடி செய்யப்பட்டுள்ள வயல்வெளிகளில் நிலவும் சீரான தட்பவெப்ப சூழல், பெரும்பாலான உயிரியல் பூச்சி, நோய்க் கட்டுப்பாட்டு முறைகளைப் பின்பற்ற வேண்டும். இதனால் ரசாயனப் பூச்சிக்கொல்லிகளின் பயன்பாட்டைக் குறைக்க முடியும்.

பயிரின் தன்மைக்கு ஏற்ப தழைச்சத்து இடுவதன் மூலமும், பரிந்துரைக்கப்பட்ட அளவில் சாம்பல்சத்து இடுவதாலும் பூச்சி, நோய்த் தாக்குதலுக்கு எதிர்ப்புத்திறன் இயற்கையிலேயே உருவாகும். ஹெக்டேருக்கு 2 அளவில் மாலை நேரங்களில் விளக்குப்பொறிகள் வைப்பதன் மூலம், தண்டுத் துளைப்பான் அந்துப்புழுக்களைக் கவர்ந்து அழிக்கலாம்.

கரும்பிலிருந்து உரிக்கப்பட்ட முதிர்ந்த தோகைகளைக் கொண்டு வயலில் மூடாக்கு போடுதல், ஏப்ரல், மே மாதங்களில் கரும்பு நடவைத் தவிர்த்தல், தேவைக்கேற்ப சிக்கனமாக நீர்பாய்ச்சுதல் போன்றவற்றால் தண்டுத் துளைப்பான் புழுக்களின் தாக்குதலைக் கணிசமாகக் கட்டுப்படுத்தலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x