Published : 18 Jan 2020 11:47 AM
Last Updated : 18 Jan 2020 11:47 AM

புத்தகத் திருவிழா 2020: சமூகம், பண்பாட்டைப் புரிந்துகொள்ள தாவரங்களைப் படிக்க வேண்டும்! - பேராசிரியர் ஆ. சிவசுப்பிரமணியன் நேர்காணல்

ஆதி வள்ளியப்பன்

தமிழக நாட்டார் வழக்காற்றியல் ஆய்வுகளின் முன்னோடியும் மார்க்சிய அறிஞருமான நா. வானமாமலையின் மாணாக்கர்களில் ஒருவர் பேராசிரியர் ஆ. சிவசுப்பிரமணியன். தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றிய சிவசுப்பிரமணியன், மார்க்சியக் கோட்பாடுகளின் அடிப்படையில் தமிழ்ச் சமூகம், பண்பாடு, நாட்டார் வழக்காறு ஆகியவை சார்ந்து ஆய்வுமேற்கொண்டு, அத்துறைகளில் புது வெளிச்சம் பாய்ச்சிக்கொண்டிருப்பவர்; கோட்பாடுகளின் பெயரைச் சொல்லி அச்சுறுத்தாமல், தான் கண்டடைந்த மக்கள் வரலாற்றை எளிமையான மொழியில் சொல்லிச் செல்பவர். 78 வயதைத் தொட்டிருக்கும் பேராசிரியர், ஆய்விலும் எழுத்திலும் இப்போதும் மூழ்கித் திளைத்துக்கொண்டிருக்கிறார்.

தமிழர் வாழ்வின் முக்கிய அங்கமான பனை மரத்தின் சமூகப் பண்பாட்டுக் கூறுகளை அவருடைய ‘பனை மரமே! பனை மரமே!' (காலச்சுவடு வெளியீடு) நூல் விரிவாக ஆராய்ந்திருந்தது. தாவரங்களை உயிரியல்ரீதியில் மட்டுமல்ல, சமூகரீதியிலும் பகுப்பாய்வு செய்ய வேண்டியதன் அவசியத்தை ஆராய்ந்திருக்கும் பேராசிரியரின் புதிய நூலான ‘தமிழரின் தாவர வழக்காறுகள்' உயிர் பதிப்பக வெளியீடாக இந்த ஆண்டு சென்னைப் புத்தகக் காட்சியில் வெளியாகியிருக்கிறது.

நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகளில் பருத்தி, ஓட்டப்பிடாரம் கத்தரிக்காய், தமிழர் வரலாற்றில் தாவர எண்ணெய் ஆகிய மூன்றும் நூல் பகுத்துக் காட்டும் பல்வேறு பரிணாமங்களுக்குச் சில பதங்கள். பேராசிரியரின் இந்த இரண்டு நூல்களும் தமிழில் பொருள்சார் பண்பாட்டு ஆய்வு என்ற துறை சார்ந்த முன்னோடி முயற்சிகள். இந்தப் பின்னணியில் பேராசிரியருடன் உரையாடியதிலிருந்து:

சமூகம், பண்பாட்டில் தாவர வழக்காறு ஏற்படுத்திய தாக்கங்கள் தொடர்பாகத் தமிழில் போதிய கவனம் செலுத்தப்பட்டிருக்கிறதா? உங்களுக்கு இந்த நூல் சார்ந்த தூண்டல் எப்படிக் கிடைத்தது?

உணவு, மருத்துவம் சார்ந்து தமிழகத் தாவரங்கள் குறித்துப் பேசப்பட்டுள்ள அளவுக்குத் தாவரங்களின் சமூகத் தாக்கம் குறித்து அதிகம் பேசப்படவில்லை. தாவரங்களின் சமூகப் பண்பாட்டுத் தொடர்பு குறித்து பேராசிரியர் தொ. பரமசிவன் கவனப்படுத்தத் தொடங்கினார். இந்தக் கட்டுரைகளை எழுத எனக்கு உத்வேகம் அளித்தது Sidney Mintz எழுதிய Sweetness and Power என்ற நூல்.

அதிக சர்க்கரையைத் தந்த கரும்புப் பயிரிடுதல் மூலம் எப்படி காலனி ஆதிக்கவாதிகள் செயல்பட்டார்கள், ஒரு தொழிற்சாலைபோல் கரும்புப் பயிரிடலை அவர்கள் முன்னெடுத்தார்கள், அதையொட்டி தமிழகம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து சென்றவர்களை எப்படி அடிமைப் படுத்தினார்கள் என்று பொருளாதார, அரசியல் பின்னணியில் அந்த நூல் ஆராய்ந்துள்ளது.

தமிழகத்தில் சைவ சமய வழிபாட்டில் ஒரு காலத்தில் கருப்பட்டி ஏற்றுக்கொள்ளப் பட்டிருந்தது. பிறகு பெருமதம் ஆனவுடன் கருப்பட்டி விலக்கப்பட்ட-தடைசெய்யப்பட்ட பொருளாகிவிட்டது. இன்றைக்கு நாட்டார் தெய்வங்களுக்கு மட்டுமே கருப்பட்டி படைக்கப்படுகிறது. இதன் பின்னணியில் உள்ள சமூக அரசியலைப் ‘பனை மரமே’ நூலில் பேசியிருந்தேன்.

இதேபோல் நாம் இழிவாகக் கருதும் துடைப்பத்தின் பின்னால் உள்ள வரலாறு, காலனி ஆதிக்கத்துக்கும் பருத்திக்கும் இடையிலான தொடர்பு, ஓட்டப்பிடாரம் என்ற ஊரின் சமூக உறவில் கத்தரிக்காய் பயிரிடுதல் ஏற்படுத்திய தாக்கம், செக்கில் எண்ணெய் ஆட்டியவர்களுக்குச் சமூகத்தில் அதிகரித்த மதிப்பு - பிறகு மதிப்பு குறைந்து சாதிய மதிப்பீடுகளிலும் செலுத்தப்பட்ட தாக்கம் உள்ளிட்டவற்றை ‘தமிழரின் தாவர வழக்காறுகள்’ நூலில் கவனப்படுத்தியிருக்கிறேன். சமூக, வரலாறு சார்ந்த என்னுடைய கள ஆய்வுகளின்போது சேகரித்த தகவல்களின் அடிப்படையில், இந்தக் கட்டுரைகளுக்கான அடித்தளம் கிடைத்தது.

சமூகவியல், நாட்டார் வழக்காற்றியல் ஆய்வுகளில் சுற்றுச்சூழல், தாவரங்கள் ஆகியவை குறித்து எந்த அளவுக்குப் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது?

தமிழ் நாட்டார் வழக்காற்றியல் ஆய்வுகளில் கதைகள், பாடல்கள், கதைப்பாடல்கள், பழமொழிகள், நிகழ்த்துகலைகள், வழிபாடு-சடங்குகள் ஆகியவை சார்ந்த ஆய்வுகளே அதிக அளவில் முன்னெடுக்கப்பட்டுள்ளன. சமூக வரலாறு அதிகம் கவனம் செலுத்தப்படாத துறையாக இருக்கிறது. சமூக வரலாற்றை ஆராய்வது மிகவும் சிரமமான வேலை. வரலாற்றைத் தேடுவது மட்டுமல்லாமல், ஒரு அம்சத்தைச் சான்றுகாட்டி நிலைநாட்டுவதும் (Corroborate) மிகக் கடினமானது.

என்னுடைய காலத்தில் நான் கடந்துவந்த தாவரம்-அவற்றின் பயன்பாடு சார்ந்த பல நம்பிக்கைகள் இப்போது மறைந்துவிட்டன. இதுபோலத் தேடினால் தாவர வழக்காறு சார்ந்து நிறைய பதிவுசெய்ய முடியும். உழவர்களின் கடனை அடைக்க உதவியதால் நிலக்கடலைக்குச் ‘சீட்டுக்கிழிச்சான் கொட்டை' என்ற பட்டப்பெயர் சூட்டப்பட்டது தொடர்பாக மூத்த இதழாளர் சிவக்குமார் எழுதிய பதிவு குறித்து, என்னுடைய நூலில் குறிப்பிட்டுள்ளேன். பயிர் ஒன்று வளத்தைத் தரும்போது எப்படிப்பட்ட அடையாளத்தைப் பெறுகிறது என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு. இதுபோல் பதிவுசெய்யப்படாத, பேசப்படாத வழக்காறுகள் நிச்சயம் எத்தனையோ இருக்கும்.

நான் பதிவுசெய்திருப்பவை பெரும்பாலும் தமிழகத்தின் தென்பகுதி வழக்காறுகள்தாம். ஒவ்வொரு பகுதியிலும் இப்படித் தேட முடியும். எடுத்துக்காட்டாக தர்மபுரி-கிருஷ்ணகிரி பகுதிகளில் கேழ்வரகுதான் முதன்மை உணவு. அது சார்ந்த சமூகப் பண்பாட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

வேளாண்மை என்பது ஓர் மரபின் - இனத்தின் வளம், அறிவியல் அறிவின் அடையாளம். அதன் மரபறிவு அழிவது பற்றிப் போதிய கவனம் செலுத்தப்பட்டுள்ளதா? ஓட்டப்பிடாரத்தில் நீங்கள் வேளாண்மை மேற்கொண்டதன் பின்னணியில் இதைப் பற்றிக் கூற முடியுமா?

வேளாண் அறிவியலாளர்கள் பயிரிடுதல், அதிலிருந்து கிடைக்கும் லாபம், பயிர்ப் பாதுகாப்பு போன்ற அம்சங்களுடன் தங்கள் வேலையை நிறுத்திக்கொண்டுவிட்டார்கள். உள்ளூர் தாவர வகைகள், விதைகள் போன்றவற்றின் முக்கியத்துவம் குறித்து அவர்கள் போதுமான கவனம் செலுத்தவில்லை. பயிரை வளர்ப்பதில் மட்டுமே அரசு வேளாண் துறை கவனம் செலுத்திவந்திருக்கிறது. அந்தப் பயிர்கள் சமூகத்தில் என்ன விதமான விளைவுகளை ஏற்படுத்துகின்றன என்ற புரிதல் அடிப்படையிலேயே இல்லை.

காலனி ஆதிக்கம் தந்த பாடத்திட்ட அமைப்பை நாம் இன்றுவரை பின்பற்றிக்கொண்டிருப்பதும் இதற்கு ஓர் காரணம். பயிர் ஊக்கிகளைப் பூச்சிக்கொல்லியுடன் கலந்து பயிர்களின் மேல் தெளிக்கிறார்கள். மண்ணுக்குள் நஞ்சைச் செலுத்திக்கொண்டிருக்கிறோம். இந்த வேதிப்பொருட்களின் பின்விளைவுகள் குறித்து முழுமையாகப் பரிசோதனைகள் நடத்தப்பட்டிருக்கின்றனவா என்ற கேள்வி எழுகிறது.

உழவில் ஏற்படும் ஒவ்வொரு நெருக்கடியின்போதும் எளிய உழவர்களில் சிலர் புதிய வழிமுறைகள், பரிசோதனைகள் சிலவற்றை முயன்று பார்த்திருப்பார்கள். பல்லாண்டு காலமாகத் தங்கள் பட்டறிவால் தெரிந்துகொண்ட வழிமுறைகளைச் செயல்படுத்திப் பார்ப்பார்கள். இன்றைக்கு அந்த முறைகளில் பல வழக்கொழிந்துவிட்டன. வேளாண் துறை அதிகாரிகள் எளிய உழவர்களுடன் நேரடித் தொடர்பில் இல்லாததாலும், மரபு சார்ந்த அறிவை மதிக்கத் தவறியதாலும் உள்ளூர் தாவர வகைகள், விதைகள், மரபறிவு, பட்டறிவு ஆகியவற்றின் முக்கியத்துவம் உணரப்படவோ பரவலாக்கப்படவோ இல்லை. அந்த நிலைமை தற்போது ஓரளவு மாறிவருவதாக நம்புகிறேன்.

ஆங்கிலேயர் ஆட்சியின்போது அவுரி, பருத்தி வேளாண்மை மூலமாகவும் அடிமைத்தனம் செயல்பட்டுள்ளது. நம்முடைய வளத்தை அவர்கள் சார்ந்திருந்தது மாறி, தாவரங்களே நம்மை அடிமைப்படுத்தத் காரணமாக இருந்துள்ளன. இன்றைக்கு இந்த முறை மாறியிருக்கிறதா?

தாவரங்கள் இன்றைக்கும் நவீன அடிமைத்தனத்தை நம்மிடையே செயல்படுத்திக்கொண்டுதான் உள்ளன. என்னுடைய மாணவர் ஒருவர் மக்காச்சோளம் பயிரிட்டார். முதலில் களத்துக்கே வந்து வாங்கிக்கொண்டிருந்த வியாபாரிகள், ஒரு முறை கைவிரித்துவிட்டார்கள். எனவே, முன் ஒப்பந்த முறையில் ஐரோப்பாவுக்கு ஏற்றுமதியாகும் ஒரு வகை வெள்ளரியை அவர் பயிரிட்டார். குளிர் பிரதேசமான ஐரோப்பாவில் வெள்ளரியை விளைவிக்க முடியாததால், வெப்ப மண்டலப் பகுதிக்கு வருகிறார்கள். ஆனால், பயிரிடுவதற்கு முன்பே வெள்ளரிக்கான விலையை நிர்ணயித்து ஒப்பந்தம் இட்டுவிடுகிறார்கள்; அத்துடன் ஒவ்வொரு கட்டத்தையும் கண்காணிக்கிறார்கள். கண்காணிப்பில் தவறு ஒன்றைக் கண்டறிந்துவிட்டால் மொத்த விளைச்சலும் நிராகரிக்கப்படும். இந்த ஒப்பந்த வேளாண்மைக்குள் நுழைந்துவிட்ட பிறகு அவர்கள் வைத்ததுதான் சட்டம். இது நவீன அடிமைத்தனம்தானே!

ஏற்றத்தாழ்வைக் களைதல், அனைவருக்கும் உணவு உள்ளிட்ட அடிப்படை உரிமைகள் கிடைத்தல் போன்றவற்றுக்குக் கூடுதல் முக்கியத்துவம் அளித்த இடதுசாரிக் கோட்பாடுகள், இந்தியப் பின்னணியில் தாவரங்கள், சுற்றுச்சூழல் பேணல் உள்ளிட்டவற்றில் போதிய கவனம் செலுத்தியுள்ளனவா?

இப்படிக் கருதுவது பழைய சிந்தனைப்போக்கு. உலகம் இன்றைக்கு நிறைய மாறிவிட்டது. பொதுவுடைமைவாதிகள் இடையேயும் மாற்றங்கள் நிகழ்ந்துவருகின்றன. வரலாற்றுப் பொருள்முதல்வாதம் குறித்து எழுதும்போது இயற்கையுடன் மனித இனம் போராடுவது குறித்து ஏங்கெல்ஸ் எழுதியிருக்கிறார். அதேநேரம் அது எல்லைக்கு உட்பட்ட போராட்டம்தான் என்பதை அவரே சுட்டிக்காட்டியிருக்கிறார்.

இன்றைக்கு நம் நாட்டில் சூழலியல் மார்க்சியம் நேரடியாகப் பேசப்படாவிட்டாலும், சூழலியல் பிரச்சினைகளைப் பொதுவுடைமைவாதிகள் அதிக அளவில் பேசத் தொடங்கியிருக்கிறார்கள். விளைநிலங்களில் எண்ணெய்க் குழாய் பதித்தல், உயரழுத்த மின்கோபுரங்கள் நடுதல், வயல்களை விரைவுச் சாலைகளாக மாற்றுதல், மணற்கொள்ளை, காடழிப்பு, ஆறுகளை அசுத்தப்படுத்துதல், வேதி உரம்-பூச்சிக்கொல்லிப் பயன்பாடு, மரபணு மாற்றப்பட்ட பயிர் போன்றவற்றை எளிய மக்கள் எதிர்ப்பதைப் போலவே அமைப்பு சார்ந்து பொதுவுடைமைவாதிகளும் எதிர்க்கிறார்கள். மக்களிடம் இருந்து கற்றுக்கொள்வோம் என்று லெனின் இதைத்தான் கூறினார். இது காலத்தின் தேவை.

தாவரவியலாளர்கள் தாவரங்களை ஆராய்வதைத் தாண்டி சமூகவியல் ஆய்வாளர்களும் முற்போக்காளர்களும் தாவரங்கள் குறித்து ஆராய வேண்டிய அவசியம் உள்ளது. அது வெறுமனே தாவரம் சார்ந்த புரிதலைத் தாண்டி நம்முடைய சமூகம், பண்பாட்டை இன்னும் ஆழமாகப் புரிந்துகொள்ள நிச்சயம் கைகொடுக்கும்.

தொடர்புக்கு: valliappan.k@hindutamil.co.in

தமிழரின் தாவர வழக்காறுகள், பேராசிரியர் ஆ. சிவசுப்பிரமணியன், உயிர் பதிப்பகம் வெளியீடு, தொடர்புக்கு: 98403 64783, 98412 04400

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x