Published : 18 Jan 2020 10:56 AM
Last Updated : 18 Jan 2020 10:56 AM

கீட்டோ டயட் நல்லதா?

கி.ச.திலீபன்

உலக அளவில் உடல் எடையைக் குறைப்பதற் காகப் பின்பற்றப்படும் உணவுத் திட்டங்களில் (Diet) கீட்டோ (Ketogenic Diet) முக்கிய இடத்தை வகிக்கிறது. உணவில் மிக மிகக் குறைந்த அளவில் மாவுச்சத்தை (carbohydrate) எடுத்துக்கொண்டு அதிக அளவில் கொழுப்பையும், அதற்கும் கொஞ்சம் குறைவாகப் புரதத்தையும் எடுத்துக்கொள்வதுதான் கீட்டோ உணவுத் திட்டம்.

இந்தியாவில் வீகன், பேலியோ போன்ற உணவுத் திட்டங்கள் அளவுக்கு அதிகமானோர் கீட்டோ உணவுத் திட்டத்தைப் பின்பற்றுவதில்லை என்றாலும், இதைப் பின்தொடர்பவர்கள் கணிசமான அளவில் உள்ளனர். இந்த உணவுத் திட்டம் பற்றிய விளக்கத்தையும் இதன் சாதக பாதகங்கள் பற்றியும் ஊட்டச்சத்து நிபுணர் ஷைனி சுரேந்திரனிடம் கேட்டோம்.

கீட்டோ என்பது என்ன?

“Epilepsy என்று சொல்லக்கூடிய நரம்பு மண்டலப் பிரச்சினைக்கு ஆளாகிய குழந்தைகளுக்காகத்தான் இந்த உணவுத் திட்டம் முதலில் உருவாக்கப்பட்டது.

இதைப் பின்தொடரும்போது உடல் எடை குறைவதைக் கண்டறிந்த தும் உடல் எடை குறைவதற்காக இந்த உணவுத் திட்டம் பின்பற்றப்பட்டது. கீட்டோ உணவுத் திட்டம் என்பது 70-80 சதவீதக் கொழுப்பு, 20 சதவீதப் புரதம் மற்றும் 5 சதவீத மாவுச்சத்து என்ற விகிதத்தில் உணவு எடுத்துக்கொள்வதாகும்.

இந்த உணவுத் திட்டத்தைப் பின்பற்று வதில் உள்ள முக்கிய சவால் என்னவென்றால் நாளொன்றுக்கு 50 கிராமுக்கும் குறைவாக மாவுச்சத்தை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதுதான். மாவுச் சத்துதான் ரத்தச் சர்க்கரை அளவை அதிகரித்து உடலுக்கான ஆற்றலை வழங்குகிறது. மாவுச்சத்தை மிகக் குறைந்த அளவில் எடுத்துக்கொண்டு கொழுப்பிலிருந்தும் புரதத்திலிருந்தும் உடலுக்கான ஆற்றலை உருவாக்குவது தான் இந்த உணவுத் திட்டத்தின் நோக்கம்.

கீட்டோ ஃப்ளூ, கீட்டோசிஸ் என்றால் என்ன?

மாவுச்சத்துக்கு மாற்றாகக் கொழுப்பு மற்றும் புரதத்திலிருந்து உடலுக்குத் தேவையான ஆற்றலை உற்பத்திசெய்யும் அளவுக்கு உடல் தயாராக நான்கைந்து நாட்கள் தேவைப்படும். கீட்டோ உணவுத் திட்டத்தைப் பின்பற்றத் தொடங்கியதும் மாவுச்சத்து இல்லாததால் உடலில் உள்ள ரத்தச் சர்க்கரை அளவு மிகவும் குறைந்துவிடும். இதனால் உடல் இயக்கத்துக்கான ஆற்றல் இல்லாமல் மிகவும் சோர்வடைய நேரிடும். அதை கீட்டோ ஃப்ளூ என்போம். ஆகவே, கீட்டோ உணவுத் திட்டத்தைப் பின்தொடர்பவர்கள் முதல் நான்கைந்து நாட்கள் ஓய்வில் இருக்க அறிவுறுத்துவோம்.

கீட்டோ ஃப்ளூவைக் கடந்த பின், மாவுச்சத்துக்கு மாற்றாகக் கொழுப்பு மற்றும் புரதத்தை ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு உடல் தயாராகிவிடும். இதை கீட்டோசிஸ் என்போம். அந்நிலைக்கு வந்த பிறகுதான் இந்த உணவுத்திட்டத்தைச் சரிவரப் பின்பற்ற முடியும்.

உடல் எடை குறையுமா?

இந்த உணவுத் திட்டத்தைப் பின்பற்றும்போது மாவுச்சத்துக்குப் பதிலாக உடலின் ஆற்றலுக்காகக் கொழுப்பு எரிக்கப்படுகிறது. இதனால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் நீக்கப்பட்டு நல்ல கொழுப்பின் அளவு அதிகரிக்கிறது. தேவையற்ற கொழுப்புகள் கரைந்து தசைகள் கூடுகின்றன. உடற்பயிற்சி செய்பவர்களுக்கும் தடகளப் பயிற்சி செய்பவர்களுக்கும் இது உதவியாக இருக்கும். நீரும் கெட்ட கொழுப்புகளும் நீங்குவதால் உடல் எடை குறைவதற்கான வாய்ப்பு இந்த உணவுத் திட்டத்தில் அதிக அளவில் இருக்கிறது.

என்னவெல்லாம் சாப்பிடலாம்? என்னவெல்லாம் சாப்பிடக் கூடாது?

* இந்த உணவுத் திட்டத்தைப் பொறுத்தவரை அசைவ உணவுகளுக்கென எந்தக் கட்டுப்பாடும் இல்லை. முட்டை, மீன், இறைச்சி ஆகியவற்றை அதிக அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
* சைவ உணவுகளில்தான் அதிகக் கட்டுப்பாடுகள் இருக்கின்றன. மாவுச் சத்துள்ள பொருட்களை மிக மிகக் குறைந்த அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
* அரிசி, காய்கறிகள், பழங்கள், தானியங்கள், பருப்பு வகைகள் என அனைத்திலுமே மாவுச்சத்து அதிக அளவில் இருப்பதால் அவற்றைத் தவிர்க்க வேண்டும்.
* கீரை வகைகள், காளி ஃப்ளவர், சோயா, வெள்ளரி, தக்காளி, வெங்காயம் போன்ற குறைந்த அளவிலான மாவுச் சத்துள்ள பொருட்களைச் சாப்பிடலாம்.
* கொழுப்புச் சத்து அதிகம் உள்ள பாதாம், முந்திரி, வால்நட் போன்ற கொட்டை வகைகளையும், அதிகக் கொழுப்புள்ள பால், பனீர், சீஸ், வெண்ணெய் ஆகியவற்றை எடுத்துக்கொள்ளலாம்.

கீட்டோவால் என்ன விளைவுகள் ஏற்படும்?

பேலியோ உணவுத் திட்டத்தை விடவும் மாவுச்சத்தின் பயன்பாடு கீட்டோ உணவுத் திட்டத்தில் குறைவு. இந்திய உணவுப் பண்பாடு அதிக அளவிலான மாவுச்சத்தை அடிப்படையாகக் கொண்டது என்பதால் இந்த உணவுத் திட்டம் இந்தியச் சூழலுக்கு உகந்ததல்ல. கொழுப்பும் புரதமும் கொண்ட பொருட்களை மட்டுமே தொடர்ச்சியாக உண்ண முடியாது என்பதால் இந்த உணவுத் திட்டத்தை நீண்ட காலத்துக்குத் தொடர முடியாது.

மாவுச்சத்தை உட்கொள்ளும் அளவு குறைவதால் உடல் எடை குறைவதோடு, ரத்தச் சர்க்கரை அளவும் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். ஆனால், அதிக அளவில் கொழுப்பை எடுத்துக் கொள்வதால் இந்த உணவுத் திட்டத்தை நீண்ட காலம் பின்பற்றும்போது இதயம் தொடர்பான பிரச்சினைகள் வருவதற்கான சாத்தியம் உள்ளது.
சைவ உணவுப் பழக்கம் உள்ளவர்களுக்கு இந்த உணவுத் திட்டம் அவ்வளவு ஏற்புடையதாக இருக்காது. ஏனென்றால், இந்த உணவுத் திட்டம் அசைவத்தை அடிப்படையாகக் கொண்டது. சைவ உணவு உண்பவர்கள் அதிக கொழுப்புள்ள பனீர், சீஸ், வெண்ணெய் போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம் என்றாலும் அதைத் தொடர்வதில் சலிப்பு ஏற்படலாம்.

* மற்ற உணவுத் திட்டங்களைக் காட்டிலும் கீட்டோவைப் பின்பற்ற அதிகச் செலவாகும். க்ரில் சிக்கன், சிக்கன் கபாப் போன்று அதிக அளவில் அசைவ உணவை எடுக்க வேண்டியிருப்பதால் அதிக செலவும் ஆகும்.
* காய்கறிகளையும் பழங்களையும் தவிர்ப்பதால் விட்டமின் / தாது அளவு மிகவும் குறையும். விட்டமின் / தாதுப் பற்றாக்குறை காரணமான உடல்நலப் பிரச்சினைகளுக்கு ஆளாக நேரிடும்.
* புரத அளவு குறைவதற்கும், சிறுநீரில் புரதம் வெளியேறுவதற்கும் வாய்ப்புகள் உள்ளன.
* கீட்டோ உணவுத் திட்டத்தை நீண்ட நாட்கள் பின்பற்றுபவர்களுக்குச் சிறுநீரகக் கல் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் உள்ளன.

கீட்டோவை யாரெல்லாம் பின்பற்றலாம்?

* இந்த உணவுத் திட்டத்தை அனைவராலும் பின்பற்ற முடியாது. இதைப் பின்பற்ற விரும்புபவர்கள் முறையான மருத்துவ ஆலோசனைக்குப் பிறகுதான் தொடங்க வேண்டும்.
* சிறுநீரகப் பிரச்சினை இருப்பவர்கள் இந்த உணவுத் திட்டத்தைப் பின்பற்றக் கூடாது. கீட்டோவில் அதிக அளவிலான புரதம் வெளியாவதால் அதில் உள்ள அம்மோனியாவைச் சிறுநீரகத்தால் கிரகித்துக் கொள்ள முடியாது.
* பிறப்பிலேயே கொழுப்பை ஜீரணிக்கும் திறனற்றவர்கள் இதைத் தொடர முடியாது.
* ரத்தச் சர்க்கரை அளவு குறைவாக உள்ளவர்கள் மருத்துவரது கண்காணிப்பில்தான் இதைப் பின்பற்ற வேண்டும். ஏனென்றால், ஆரம்பத்தில் மாவுச்சத்து இல்லாததால் ரத்தச் சர்க்கரை அளவு மிகவும் குறைந்துபோகும்.
* உடற்பயிற்சிகள் மூலம் உடலை வலுப்படுத்துபவர்களுக்கு இது உதவிகரமாக இருக்கும். ஆனால், உடற்பயிற்சி செய்வதற்கு அதிக அளவிலான ஆற்றல் தேவை என்பதால் பயிற்சிக்கு முன்னும் பின்னும் மாவுச்சத்துள்ள பொருட்களை எடுத்துக்கொள்ள வேண்டி வரும்.

உடலுக்கு ஏற்ற உணவே முக்கியம்

கீட்டோ உணவுத் திட்டத்தை ஒருவர் பின் தொடர விரும்பினால் முதலில் அவரது உடல் உறுப்புகளின் அளவு கணக்கிட வேண்டும். இரண்டாவதாக உயரத்துக்கேற்ற எடையை வகுக்கும் BMI (Body Mass Index) கணக்கிட வேண்டும், அடுத்ததாக, BIA (Bioelectric Impedance Analysis) மற்றும் DEXA (Dual Energy X-ray Absorptiometry) ஆகியவற்றைக் கொண்டு உடலில் எவ்வளவு கொழுப்பு இருக்கிறது? எவ்வளவு நீர் இருக்கிறது? தசைகளின் அளவு எவ்வளவு இருக்கிறது என்பதைக் கண்டறிந்து அதற்கேற்றபடி உணவுத் திட்டத்தை வகுக்க வேண்டும். உலக அளவில் நிறைய உணவுத் திட்டங்கள் வழக்கில் இருக்கின்றன என்றாலும், சூழலுக்கும் உடலுக்கும் எது பொருந்துகிறதோ அதைத் தேர்வு செய்து பின்பற்றுவதே நமது நலனுக்கு நல்லது என்கிறார் ஷைனி சுரேந்திரன்.

கட்டுரையாளர் தொடர்புக்கு: kisadhileepan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x