Published : 14 Jan 2020 11:11 AM
Last Updated : 14 Jan 2020 11:11 AM

சாணை ஊர்!

இரா.நாகராஜன்

நவீன இயந்திரங்கள் குவிந்து கிடக்கும் இந்தக் காலத்தில் சாணை தீட்டும் தொழிலை ஒரு கிராமமே செய்துவருவது ஆச்சரியத்தின் உச்சிக்கே அழைத்துச் செல்கிறது.

சென்னையிலிருந்து 60 கி.மீ. தொலைவில் திருவள்ளூர் மாவட்டத்துக்கு உட்பட்ட திருவாலங்காடு ரயில் நிலையம் அருகே உள்ளது அரிச்சந்திராபுரம். இந்த ஊரில் பெரும்பாலானோர் சாணை பிடிக்கும் தொழிலையே செய்துவருகிறார்கள்.

இந்த ஊருக்குள் சென்றபோது முதலில் தென்பட்டவர் அல்லா பகத். “அரிச்சந்திராபுரத்தில் உள்ள ஆயிரம் குடும்பங்களில், 600 குடும்பங்கள் இஸ்லாமியக் குடும்பங்கள். இந்த இஸ்லாமியக் குடும்பங்களைச் சேர்ந்தவர்களில் பெரும்பாலானோர், 80 ஆண்டுகளுக்கும் மேலாகப் பாரம்பரியமாக அரிவாள், கத்தி, அரிவாள்மனைக்குச் சாணை தீட்டும் தொழிலைச் செய்துவருகிறோம். படித்து முடித்த பிறகும் வேலை கிடைக்காததால், பலர் இந்தத் தொழிலுக்கே வந்துவிட்டனர்” என்றார் அல்லா பகத்.

திருவாலங்காட்டிலிருந்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர்,திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களுக்கு மட்டுமல்ல, ஆந்திரம், கேரளம், கர்நாடகம் உள்ளிட்ட மற்ற மாநிலங்களுக்குச் சென்றும் சாணை தீட்டும் தொழிலை இந்தக் கிராமத்தினர் செய்துவருகின்றனர்.

சிலர் அந்தமானுக்குக்கூடச் செல்கின்றனராம். சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு நாள்தோறும் அதிகாலையில் சென்றுவிட்டு, மதியம் வீடு திரும்பிவிடுகிறார்கள். விடுமுறை நாட்களில் பகல் முழுவதும் தொழில் செய்கிறார்கள். வெளியூர் செல்லும்போது விடுதி அல்லது வாடகை வீடுகளில் தங்கி தொழில் செய்துவிட்டுத் திரும்புவார்களாம்.

இந்தக் காலத்தில் இத்தொழிலுக்கு மவுசு உள்ளதா? “காய்கறிகளை அரிவாள்மனையைவிட கத்தியால் நறுக்கினால் வேகமாக நறுக்க முடியும் இன்று அரிவாள்மனைகளைப் பலரும் பயன்படுத்துவதில்லை. கத்தி மழுங்கினால், புதிய கத்திகளை வாங்குகிறார்கள்.

உணவு விடுதிகளில் பயன்படுத்தப்படும் அரிவாள்மனை, கத்தியை மட்டும் 2 அல்லது 3 மாதங்களுக்கு ஒரு முறை சாணை தீட்டுகிறார்கள்” என்றும் முன்புபோல் வாடிக்கையாளர்கள் கிடைப்பதில்லை என்றும் அவர் குறிப்பிடுகிறார்கள்.

கத்தியைத் தீட்டிப் பளபளப்பாகவும் கூர்மையாகவும் மாற்றும் எங்களின் வாழ்க்கைத் தரமும் அதேபோல் பளபளப்பாக மாறும் நாளே மகிழ்ச்சி கிடைக்கும் நாள் என்கிறார்கள் இத்தொழிலைச் செய்யும் தொழிலாளர்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x