Published : 14 Jan 2020 11:02 AM
Last Updated : 14 Jan 2020 11:02 AM

விசில் போடு 14: தண்டச்சோறு கெட்டுப் போகுமா?

‘தோட்டா’ ஜெகன்

இந்தியா முழுக்க கடை விரிக்கிற அம்பானிலேர்ந்து, இட்லி கடை நடத்துற அருக்காணி வரைக்கும் எல்லோருக்கும் 24 மணி நேரம்தான் என்றாலும், இருக்கிற நேரத்துல உயிரைக் கொடுத்து உழைக்கிறோமா, இல்லை தூங்கியே பாயைத் துடைக்கிறோமா என்பது அவரவருக்குக் கிடைத்த வேலையையும் வாழ்க்கையையும் பொறுத்தது. நகத்தை வெட்டுற நகவெட்டியா இருக்கலாம், களத்தை வெட்டுற மண்வெட்டியாகூட இருக்கலாம். ஆனா, வேலையில்லாம வெட்டியா மட்டும் இருக்கக் கூடாதுன்னு பெரியவங்க சொல்வாங்க.

செங்கல்லை மெல்லும் பார்ட்டி

இதை வாசிச்சு பார்த்தாலும், வாசித்து விட்டு விட்டத்தைப் பார்த்து யோசிச்சு பார்த்தாலும் உண்மைன்னு தோணுது. ஆனா, யாருமே இஷ்டப்பட்டு வெட்டியா இல்ல, ரொம்பவே கஷ்டப்பட்டுதான் வெட்டியா இருக்காங்க. கறந்த பாலுல கலந்த தண்ணியைப் பிரிக்கிறதைவிடக் கஷ்டமானது காலைலேர்ந்து வேலையே இல்லாம வெட்டியா நாளைக் கடத்துறது.

வேலைன்னா, டீ அடிக்கிற வேலைலேர்ந்து டெஸ்டுக்குப் படிக்கிறது வரை எல்லாமே வேலைதான். சமைக்கிறது மாமியார் வேலைன்னா, துவைக்கிறது மாமனார் வேலை; படிக்கிறது மாணவர்கள் வேலைன்னா, நடிக்கிறது நடிகர்கள் வேலை; கட்டுறது கொத்தனார் வேலைன்னா, ஒட்டுறது கார்பெண்டர் வேலை; வெட்டுறது கட்டிங்பிளேயர் வேலைன்னா, தட்டுறது கிரிக்கெட் பிளேயர் வேலைன்னு, வேலைகளால்தான் உலகமே உருண்டுக்கிட்டு இருக்கு.

ஆனா, செய்யறதுக்கு வேலை இல்லாம நேரத்தைத் தள்ளுறது இருக்கே, அது வெத்தலைக்குப் பதிலா வெங்கச்சாங்கல்லை மெல்லுற மாதிரி. பொங்கலை மெல்லுற உங்களுக்கு எப்படித் தெரியும் செங்கல்லை மெல்லுற எங்களோட கஷ்டம்? வேலையில்லாம ஒரு பகலை நகர்த்தறதுக்குள்ள, கன்னிமாரா நூலகத்து மொத்தப் புத்தகங்களை நகலெடுத்துடலாம் ப்ரோ.

வெள்ளாடு மாதிரி

காலையில எந்திரிக்கிறப்ப, இன்னைக்கு இந்தந்த வேலைகளை முடிக்கணும்னு சலிப்போட எந்திரிச்சாகூடப் பரவாயில்லை. வேலைகளை முடித்த சாயந்திரமாவது மனசு கொஞ்சம் களிப்போட இருக்கும். ஆனா, செய்யறதுக்கு வேலையே இல்லாம காலையில எந்திரிக்கிற வாழ்க்கை, விளக்காத வாய் போல புளிப்பாதான் இருக்கும். வெட்டியா இருக்கிறதெல்லாம் வரம்னு நினைக்கிறாங்க பல பேரு, வாழ்க்கை தந்த சுகம்னு நினைக்கிறாங்க சில பேரு, உண்மைல வெட்டியா இருக்கிறதெல்லாம் ரத்தம் வராத ரணம், அதை நாங்க அனுபவிக்கிறோம் தினம்.

தலைப்பு செய்தியைக்கூடச் சலிப்போடு பார்த்துட்டு, ரூம்மேட்ஸ் எல்லோரும், டைமாயிடுச்சேன்னு தறிகெட்டு பைக் ஓட்டி, வெறிகொண்டு ஆபீஸ் போறப்ப, நல்லி எலும்போட நாய்கிட்ட கிடைச்ச வெள்ளாட்டுக் கறி மாதிரி, நாளிதழ்ல ஒரு வரிகூட விடாம படிச்சு முடிக்கிறது எவ்வளவு கஷ்டம் தெரியுமா? ‘பெருசா பேசறீங்க பேச்சு, பொங்கலுக்கு பூஜை பண்ண எத்தனை கரும்பு வாங்கனுன்னுகூடத் தெரியாத உங்களுக்கு மத்தியில், பொழுது போகலைன்னா, ஈபிள் டவர்ல மொத்தம் எத்தனை இரும்பு இருக்குன்னு எண்ணுறவங்கய்யா நாங்க.

காண்டான மிருகம்

திரையில நூறு நாள் ஓடுன படத்தைக் கூடத் திரும்ப ஒரு தடவை பார்க்கலாம். ஆனா, டிவில நூறு நாள் ஓடுன படங்களைத் திரும்ப பார்க்கிறது எவ்வளவு பெரிய கொடுமை தெரியுமா? கிட்டத்தட்ட வாளி நிறைய வெந்நீர் எடுத்து வாய்க்குள்ள ஊத்துற மாதிரியானது அந்த வலி. இப்பவெல்லாம் வர படங்களை முதல் தடவை பார்க்கிறபோதே நாம காண்டாமிருகமா மாறிடுவோம், இதுல ரெண்டாவது தடவை பார்த்தா காண்டான மிருகமாவே ஆகிடுவோம்.

ஆனாலும், சேனல்காரங்க, ஓட்டைக் குடங்கள் ஒழுகுற மாதிரி, போட்ட படங்களையே திரும்பப் போடுறதே, எங்களை மாதிரி வெட்டி ஆபீசருங்களை நம்பித்தான். ஏற்கெனவே பார்த்த பேய்ப் படமா இருந்தாலும், பேய் எப்ப வரும்னு தெரிஞ்சாலும், அந்த பேய்க்கு ஒரு மரியாதை கொடுத்து, திரும்ப பயப்படுவோம் நாங்க.

ஆனா, பத்து செகண்டுக்கு ஒரு தடவை சேனல் மாத்துவீங்க நீங்க. வீட்டுல வெட்டியா இருக்க போய் டெலிபோன் பில்ல கட்டு, வீட்டுல சும்மா தானே இருக்க போய் கரண்ட் பில்ல கட்டுன்னு, நீங்க ஏணி ஏறி ஆணி அடிக்கிறதெல்லாம் எங்க முதுகுலதான்.

பாட்டிய பெருமாள் கோவில்ல விடுறதுலேர்ந்து, ஆண்ட்டியை அனுமார் கோவில்ல விடுறவரைக்கும் நீங்க காலண்டர் மாட்டுறதெல்லாம் எங்க செவுத்துலதான். டிவில கண்ணு இருந்தாலும், எத்தனை விசிலடிக்குதுன்னு குக்கர் மேல காது வச்சிருப்போம் நாங்க; பெட்ஷீட் மூடி படுத்திருந்தாலும் மொட்டை மாடி டேங்க் வழியுதான்னு கவனம் வச்சிருப்போம் நாங்க.

மெசேஜுக்கு மரியாதை

'ஓம் பல்டி பக்குற டர்ல வுடனும் பல்தே, மித்ரோன் ஹமாரா தேஷ் அதிபாதாளம் சல்தே, மக்கரு குக்கரும்மா டாப் டக்காரும்மா, இது பழைய நிக்கரும்மா' இந்த மந்திரத்தைப் பதினைந்து பேருக்கு ஃபார்வேர்ட் செய்தால் பத்தே நாளில் குபேரன் கப்பல்ல வந்து காலிங் பெல் அடிப்பான்னு, செத்தவன் பேருல சொத்தை எழுதி வச்ச மாதிரி ஒரு லாஜிக்கும் இல்லாம வர மொக்கை ஃபார்வேர்ட் மெசேஜுகளை என்னைக்காவது நீங்க எல்லோருக்கும் ஃபார்வேர்ட் பண்ணியிருக்கீங்களா? அத்தையே முட்டி வலியில நத்தை மாதிரி நடக்கிறாங்களாம், இதுல மாமாவுக்கு மெத்தை செஞ்சு தரணுமாம்னு நக்கல் பண்ணிட்டு நீங்க போயிடுவீங்க. ஆனா, அனுப்புனவனும் நம்மளை மாதிரி வெட்டியா இருக்கிற ஒரு தாய் மக்கள் தானேன்னு அதையும் அம்பது பேருக்கு அனுப்பி விட்டுட்டுதான் குப்புறப் படுப்போம்.

வெட்டியா இருக்கிற எங்களுக்கு வேலைக்குப் போற அருமை தெரியும். ஆனா, வேலைக்குப் போற உங்களுக்கு வெட்டியா இருக்கறதோட பெருமை தெரியாது. வாட்சப் குரூப்ல வர மொக்கை ஜோக்குக்கோ ஃபேஸ்புக்ல வர குப்பை ஸ்டேட்டஸுக்கோ எத்தனை பேரு இங்க லைக் போடுறீங்க? இல்ல பதில் சொல்றீங்க? பொணத்துக்கு பேசியல் பண்ணச் சொன்ன மாதிரி, எஸ்கேப்தானே ஆகுறீங்க? ஆனா, மெசேஜ் அனுப்புனவனை அரசனா நினைச்சு மரியாதைக்கு ஒரு ஸ்மைலி போடுற எங்களை, ரொம்ப வெட்டியா இருக்கான் போல அதான் எல்லாத்துக்கும் ரிப்ளை பண்றான்னு மனுஷனாகூட மதிக்க மாட்டக்கிறீங்க.

கொதிக்காம பால் குக்கர்ல வடியாது, கல்கண்டு தூக்கி போட்டு கார் கண்ணாடி உடையாது, வேலைக்குப் போய் நோகறதைவிட வெட்டியா இருந்து வாழுறதே மேல்னு நினைப்பு வராதவங்க கிடையாது. வெட்டியா இருக்கிறதெல்லாம் ரொம்ப சுலபம்னு நினைக்கிறாங்க நாட்டுல. ஆனா, அது வேலைக்கு போறவங்க படுறதைவிட பெரிய அவலம்.

ஒரு ஞாயிற்றுக்கிழமை நாளை எந்த வேலையும் செய்யாம உங்களால உருட்ட முடியாதப்ப, ஏழு நாளுமே ஞாயிற்றுக்கிழமைன்னு வாரம் எங்களை மிரட்டுதே, இப்பவாவது புரிஞ்சுக்குங்க மக்களே. வெட்டியா இருக்கிறவங்களை தண்டசோறுன்னு திட்டுறதை முதல நிறுத்துங்க. தக்காளி சோறும் தேங்காய் சோறும் கெட்டுப்போனாலும் தண்டசோறு என்னைக்கும் கெட்டு போகாதுன்னு புரிஞ்சுக்குங்க.

(சத்தம் கேட்கும்)
கட்டுரையாளர் தொடர்புக்கு:
thinkthoatta@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x